மண்பாண்டம்

தியானம்: 2026 செப்டம்பர் 12 சனி | வேத வாசிப்பு: 2கொரிந்தியர் 4:6-7

YouTube video

இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம் (2கொரிந்தியர் 4:7).

கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளியாகிய இரட்சிப்பு என்ற பொக்கிஷத்தை நம் சரீரமாகிய மண்பாண்டங்களிலே நாம் பெற்றிருக்கிறோம் என்று பவுல் கூறுகிறார். இரட்சிப்பு என்ற பொக்கிஷத்தைப் பெற்றுக்கொண்ட நாம், மண்பாண்டமாகிய நமது சரீரத்தை எவ்வளவு தூய்மையாகக் காத்துக்கொள்ள வேண்டியவர்கள்!

அன்றாடம் வீடுகளில் பாத்திரங்களை உபயோகிப்பதற்குமுன்பு அவற்றை உள்ளும், புறமுமாகக் கழுவிச் சுத்தம் செய்வோம். அசுத்தமான பாத்திரத்திற்குள் உணவு வகைகளைப் பரிமாறமாட்டோம், ஏன்? பாத்திரத்தினுள் இருக்கும் அசுத்தம் அதற்குள் போடப்படும் உணவையும் அசுத்தமாக்கிவிடும் என்பதற்காகத்தானே. இவ்விதமாகவே, நமக்கு அருளப்பட்டுள்ள இரட்சிப்பை நமது சரீரத்தில் பெற்றுக்கொண்டாலும், நமது ஆத்துமாவும் அதில் பங்களிப்பு செய்கிறதல்லவா! சரீர சுத்திகரிப்பானது வெளிப்புற சுத்தத்தை மாத்திரமே காட்டும்; ஆனால் நமது ஆத்தும சுத்திகரிப்பு மிக மிக முக்கியம். ஆனால், அதை நமது சுயபெலத்தால் செய்யமுடியாது. ஆகவே அனுதினமும் நமது இருதயத்தை உள்ளும் புறமுமாக கழுவிச் சுத்தம்செய்து, கர்த்தரால் பயன்படுத்தப்படும் பாத்திரங்களாக விளங்கும்படி நம்மை அவருடைய கரங்களிலேயே ஒப்படைத்துவிடுவோமாக.

“நீ உன்னை உவர் மண்ணாலே கழுவி, அதிக சவுக்காரத்தைக் கையாடினாலும் உன் அக்கிரமத்தின் கறைகள் எனக்கு முன்பாக இருக்குமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்” (எரே.2:22) இப்படியிருக்க நம்மில் பலர் உள்ளான வாழ்வின் அசுத்தங்களோடு போராடிக்கொண்டிருப்பதை மறுக்க முடியாது. யார் என்னை சுத்திகரிப்பார்? யார் என்னை மாற்றுவார்? என் பாவங்கள் என்னை அரிக்கின்றனவே என்று பலர் தங்களுக்குள் தவித்திருக்கிறார்கள். இதற்குரிய ஒரே பதில்: இயேசு கிறிஸ்துவின் இரத்தம் மாத்திரமே, நம் ஒவ்வொருவரின் பாவங்களையும் கழுவி சுத்திகரித்து, பிதாவுக்கு ஏற்ற பாத்திரங்களாக நம்மை மாற்றமுடியும். அவர் கரங்களில் நம்மைத் தருவோமாக.

சரீரமாகிய இந்த மண்பாண்டத்தில் மகிமையான இரட்சிப்பைப் பெற்றுக் கொண்ட நாம் எப்போதும் அதைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். நமக்குள் பாவ அசுத்தங்கள் நிரம்பிக் காணப்படுமானால் கர்த்தரால் ஆசீர்வாதங்களைப் பொழியமுடியாது. ஆகவே அனு தினமும் ஆண்டவர் பாதம் அமர்ந்து, நம்மைச் சுத்திகரிக்கும்படி ஒப்புக் கொடுத்து, கர்த்தர் அருளும் ஆசிகளை விசுவாசத்துடன் பெற்றுக்கொள்வோமாக. பரிசுத்தமில்லாமல் நாம் தேவனை ஒரு போதும் தரிசிக்கவே முடியாது (எபி.12:14).

ஜெபம்: “அன்பின் தேவனே, எல்லா பாவஅசுத்தங்களும் நீங்க உமது விலையேறப் பெற்ற திருஇரத்தத்தால் எங்கள் இருதயத்தை சுத்தமாக்கும். ஆமென்.”