இரட்சிப்பின் பாத்திரம்

தியானம்: 2026 செப்டம்பர் 13 ஞாயிறு | வேத வாசிப்பு: சங்கீதம் 116:7-15

YouTube video

இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுவேன் (சங்.116:13).

நமது வாழ்வில் மிகுந்த விலைமதிப்புள்ளது எது? உலகத்தில் எதனுடன் ஒப்பிட முடியாததும், நம்மால் சம்பாதிக்க முடியாததும், யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாததும், நித்தியத்திற்கு நேராக நம்மை வழிநடத்துவதுமான அந்த ஒப்பற்ற விஷயம் எது? கர்த்தர் நமக்கு ஏராளமான நன்மைகளைச் செய்திருக்கிறார்; அந்த நன்மைகளுக்கெல்லாம் மகுடமாயிருக்கிற ஈவுதான் எது? இப்பொக்கிஷத்தைப் பெற்றிருந்தால், நம்மால் அதை இழக்கமுடியாது. அந்த மேன்மையான காரியம்தான் “இரட்சிப்பு”

தாவீது, கர்த்தர் செய்த எல்லா நன்மைகளையும் நினைத்து களிகூர்ந்து, “கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும் அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்?” (சங்.116:12) என்று தானே தன் ஆத்துமாவோடு பேசுகிறார். தாவீது ராஜாவாக இருந்தபடியால் கர்த்தர் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் எதை எதையோவெல்லாம் அள்ளி அள்ளி கர்த்தருக்குக் கொடுத்திருக்கமுடியும். ஆனால் இந்த உலகத்தில் உள்ள சகல சம்பத்தையும் ஒன்று திரட்டிக் கொடுத்தாலும் அவை ஒன்றும் கர்த்தரைப் பிரியப்படுத்த மாட்டாது என்பதை தாவீது உணர்ந்திருந்தார். அப்படியானால் கர்த்தருக்கு எதைக் கொடுக்கமுடியும் என்ற கேள்வியை எழுப்பிய தாவீதே அதற்கான பதிலையும் கண்டுகொண்டார். “இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்” என்கிறார் தாவீது. இந்த இரட்சிப்பு அல்லது மீட்புக்கு ஒப்பானது எதுவுமே இவ்வுலகில் இல்லை.

“மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்கு சொல்லுகிறேன்” (லூக்.15:7) என்றார் இயேசு. பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் தரக்கூடிய ஒரு சம்பவம் இருக்கு மென்றால், அது ஒரு பாவியின் மனந்திரும்புதல்தான். ஒரு ஆத்துமாதான் கர்த்தரின் பார்வையில் விலையேறப்பெற்றது. கர்த்தர் எங்களுக்குக் கொடுக்கின்ற சரீர சுகம், ஞானம், வேலை, பதவி, அந்தஸ்து இவையெல்லாம் நல்லது, தேவையானது. ஆனால் நாளைக்கு அவை மாறக்கூடும். ஆனால் இவை யாவுக்கும் மேலாக, அவர் நமக்கு அருளின இரட்சிப்புக்கு எதுவும் ஈடாகமுடியாது.

உலக இரட்சகராகிய இயேசு, என் சொந்த இரட்சகரா? அவர் கிருபையாக அருளிய இரட்சிப்பை விசுவாசத்தினால் நான் பெற்றது மெய்யானால், அந்த இரட்சிப்பின் பாத்திரம் ஒருபோதும் அழுக்குறாவண்ணம் நான் எச்சரிக்கையாயிருப்பேனாக. அழுக்கு இருந்தால் அதை உணர்ந்து, இயேசுவின் திரு இரத்தத்தால் கழுவப்பட என்னை இன்றே ஒப்புக்கொடுப்பேனாக. கர்த்தரைப் பிரியப்படுத்துகின்ற என் இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அவரைப் பிரஸ்தாபப்படுத்துவேனாக.

ஜெபம்: “கர்த்தாவே, எங்களுக்குத் தந்த இரட்சிப்புக்காக ஸ்தோத்திரம். அதைக் காத்துக்கொள்ளவும், சுவிசேஷமாய் மற்றவர்களுக்கு அறிவிக்கவும் எங்களுக்குதவும். ஆமென்”.