பாத்திரத்தைத் தீட்டுப்படுத்தாதே!

தியானம்: 2026 செப்டம்பர் 14 திங்கள் | வேத வாசிப்பு: தானியேல் 5:1-9; 25-31

YouTube video

அப்பொழுது எருசலேமிலுள்ள தேவனுடைய வீடாகிய ஆலயத்திலிருந்து எடுக்கப்பட்ட பொற்பாத்திரங்களைக் கொண்டு வந்தார்கள் (தானியேல் 5:3).

பாபிலோன் ராஜாவாகிய பெல்ஷாத்சார் பெரிய விருந்து கொண்டாடினான். அவன் திராட்சரசத்தை ருசித்துக் குடித்துக்கொண்டிருக்கையில், தன் பிரபுக்களும், மனைவிகளும், வைப்பாட்டிகளும் குடிக்கிறதற்காக, தன் தகப்பனாகிய நேபுகாத்நேச்சார் எருசலேம் தேவாலயத்திலிருந்து கொண்டுவந்த பொன், வெள்ளி பாத்திரங்களைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டான் (தானி.5:2). பெல்ஷாத்சார் உணர்வற்றவனாக கர்த்தருடைய ஆலயத்தில் பரிசுத்தமாகக் காக்கப்பட்டிருந்த பலவகையான பாத்திரங்களில் துணிகரமாக திராட்சரசம் பருகி, அவற்றைத் தீட்டுப்படுத்தினான்; தன் மனைவிகளோடும், வைப்பாட்டிகளோடும் குடித்து குதூகலித்தான். அதுமாத்திரமல்ல, குடித்து வெறித்து பொன்னும் வெள்ளியும், வெண்கலமும், இரும்பும், மரமும், கல்லுமாகிய தேவர்களைப் புகழ்ந்தார்கள். இதனால் அவன் மெய்த்தேவனாகிய கர்த்தரையே அவமதித்தான். அப்போது சம்பவித்தது என்ன?

மனுஷகை விரல்கள் தோன்றி, விளக்குக்கு எதிராக, தெளிவாகத் தெரியும்படி, அரண்மனையின் சாந்து பூசப்பட்ட சுவரிலே எழுதிற்று. அதைக் கண்ட ராஜா கலங்கினான். அந்த எழுத்துக்களை வாசிக்கவும் முடியவில்லை, அவற்றின் அர்த்தமும் புரியவில்லை. கல்தேயரில் ஜோசியர்கள் குறிசொல்கிறவர்கள் யாவரையும் அழைப்பித்தான். யாராலும் அர்த்தம்காண முடியவில்லை. எழுதப்பட்ட எழுத்து என்னவென்றால், “மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின்” என்பதே. இதன் அர்த்தம்: “தேவன் உன் ராஜ்யத்தை மட்டிட்டு அதற்கு முடிவுண்டாக்கினர். நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய். உன் ராஜ்யம் பிரிக்கப்பட்டு, மேதியருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது” என்பதாகும் (தானி. 5:25-28). பெல்ஷாத்சார் குடித்து தன்னையே மறந்திருந்தபோது, எதிர்பாராத வேளையிலே அவனுக்கு எதிரான நியாயத் தீர்ப்பு எழுதப்பட்டுவிட்டது. தேவன் தன் செய்கைகளைக் காணவில்லை என்று அவன் துணிகரமாக தேவாலய பாத்திரங்களைத் தீட்டுப்படுத்தினான். ஆனால், அவன் நினையாத வேளையில் ராஜ்யபாரம் அவனைவிட்டு அகற்றப்பட்டுவிட்டது. அன்று இராத்திரியிலேயே அவன் கொலை செய்யப்பட்டான்.

நம்முடைய சரீரமும் கர்த்தரின் கரங்களில் அவர் உபயோகிக்கும் பாத்திரமாகவே விளங்குகிறது. குடித்து, புகைத்து, உலகப் பிரகாரமான சந்தோஷத்தினால் அதைத் தீட்டுப்படுத்தக்கூடாது. தவறான காரியங்களுக்கு நம் சரீரங்களை ஈடுபடுத்தக்கூடாது. நம் கிரியைகளை மனுஷர் காணாவிட்டாலும், கர்த்தர் காண்கிறார். கர்த்தரின் நியாயத்தீர்ப்பு ஒருநாள் நம்மீது வரும். ஆகவே மண்பாண்டமாகிய நமது சரீரத்தை அற்ப காரியங்களால் தீட்டுப்படுத்தாதபடி காத்துக்கொள்வோமாக.

ஜெபம்: “நல்ல ஆண்டவரே, எங்களது சரீரமாகிய ஆலயத்தை தவறான காரியங்களினாலே தீட்டுப்படுத்திடாதபடி பரிசுத்தமாய் காத்துக்கொள்ள கிருபை செய்யும். ஆமென்.