வல்லமையுள்ள தேவன்!
தியானம்: 2026 செப்டம்பர் 18 வெள்ளி | வேத வாசிப்பு: சங்கீதம் 68:33-35

தேவனுடைய வல்லமையைப் பிரசித்தப்படுத்துங்கள்; அவருடைய மகிமை இஸ்ரவேலின்மேலும், அவருடைய வல்லமை மேகமண்டலங்களிலும் உள்ளது (சங்.68:34).
தேவாதி தேவன் தமது வல்லமையை விளங்கப்பண்ண இனியும் ஒரு விநோதமான புதிய காரியத்தைச் செய்யவேண்டிய அவசியமில்லை. “எப்படியெனில், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது முதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்.” இனியொருதரம் கர்த்தர் தமது வல்லமையை விளங்கவைக்க வேண்டிய அவசியமில்லை. நாம் கண் திறந்து பார்க்கின்ற யாவற்றிலும் கர்த்தருடைய வல்லமையை காணவில்லையெனில், நமது கண்களின் பார்வையைத்தான் சரிசெய்ய வேண்டும். பவுல் தொடருகிறார்: “ஆதலால், அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை” (ரோமர் 1:20).
தானியேலின் நண்பர்கள் அக்கினியிலிருந்து எந்தவித பாதிப்புமின்றி வெளிவந்ததைக் கண்ட ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், “கர்த்தருடைய அடையாளங்கள் எவ்வளவு மகத்துவமும், அவருடைய அற்புதங்கள் எவ்வளவு வல்லமையுமாயிருக்கிறது” என்று புகழ்ந்தான் (தானி.4:3). ஆனால் நாட்கள் சென்றன, ஒருநாள் பாபிலோன் ராஜ்யத்தின் அரண்மனையின்மேல் அவன் உலாவிக்கொண்டிருந்தபோது, அதன் நிறைவு அவனை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. அப்போது, அதை ஏற்படுத்திய தேவனை மறந்து, “இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரண்மனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா?” (தானி.4:30) என்றான். பரிதாபம்! அவன் இவ்வார்த்தைகளைச் சொல்லும்போதே, ராஜ்ய பாரம் அவனைவிட்டு நீங்கிப்போனது என்ற சத்தம் கேட்டது. கர்த்தரின் வல்லமை என்று கூறி அவரை மகிமைப்படுத்தியவன், அந்த மகிமையைத் தனக்காகத் திருப்பியபோது எல்லாம் பறிபோய்விட்டது.
தாவீது எந்த நிலையிலும் கர்த்தருடைய வல்லமையைச் சார்ந்து வாழ்ந்ததுமன்றி, அவருடைய வல்லமையைப் போற்றித் துதிக்க தவறவில்லை. இன்று நம்மில் எத்தனை பேர், கர்த்தரின் வல்லமையைப் போற்றி, அவரைச் சார்ந்து நின்று பணியாற்றுகிறோம்? காரியங்கள் செழித்தோங்கும்போது நம்மையும் அறியாமல் ஒரு பெருமை நமக்குள் வரக்கூடும், இதற்கு நாம் இடமளிக்கக்கூடாது. எந்த நிலையிலும் நான் அல்ல, “எனக்குள் வாசம் பண்ணும் கர்த்தரின் வல்லமையே” என்று சொல்லி கர்த்தருக்கு மகிமை செலுத்த தவறக்கூடாது. நமது வளர்ச்சி தேவனுடைய வல்லமையினாலும், பெலத்தினாலும் உண்டானது. அவை நமது பெலத்தால் உண்டானதல்ல. நேபுகாத்நேச்சாருக்கு ஏற்பட்ட நிலைமை நமக்கு வேண்டாமே. ஜாக்கிரதை!
ஜெபம்: “கர்த்தாவே, உம்முடைய அற்புதங்களெல்லாம் எவ்வளவு வல்லமை யானவைகள். உமது நாம பிரஸ்தாபத்திற்காகவே நாங்கள் உம்முடைய வல்லமையை பாடிக் கீர்த்தனம் பண்ணுவோம். ஆமென்.