பெத்லகேம்!
தியானம்: 2026 செப்டம்பர் 22 செவ்வாய் | வேத வாசிப்பு: லூக்கா 2:8-19

மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், … நடந்ததாகக் கர்த்தரால் அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் (லூக்கா 2:15).
மார்கழி மாதத்திற்கு சில மாதங்கள் இருக்கும்போது, இப் பகுதியை இன்று தியானிப்பது என்ன என்று நீங்கள் நினைக்கலாம். நாம் காலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறவர்கள் அல்ல; ஆண்டவர் நம்மை எல்லா நாட்களிலும் நிறைவாகப் போஷிக்கிறவராக இருக்கிறார். ஒரு மேய்ப்பன் தன் ஆடுகளின் மேய்ச்சலுக்காக நல்ல புல்தரையும், தண்ணீரும் உள்ள இடத்தைத் தெரிந்துகொண்டு, தன் ஆடுகளை நடத்திச் சென்று இளைப்பாற பண்ணுவான். புல்தரை செழித்துள்ள ஒரு இடம் பெத்லகேம் பட்டணம். பெத்லகேம் என்றால் “அப்பத்தின் வீடு” என்றும் பொருள்படும். ஆம், இங்கே மந்தைகளின் மேய்ச்சலுக்கான உணவு மாத்திரமல்ல, நமக்கு ஜீவன் தருகின்ற “ஜீவ அப்பமும்” இங்கேதான் பிறந்தார்.
இரவிலே, வயல்வெளியில் மந்தையை மேய்த்த மேய்ப்பருக்கு முன்பாக கர்த்தருடைய தூதன் தோன்றி ஒரு அற்புத செய்தியைச் (2:10-12) சொல்கிறான். அதைக் கேட்ட மேய்ப்பர்கள் பயந்து ஓடவில்லை; ஆச்சரியப்பட்டு இது எப்படியாகும் என்று சந்தேகிக்கவில்லை. அவர்கள் ஒருபோதும் காணாத காட்சி, ஒருபோதும் கேட்காத சத்தம், ஒருபோதும் அறியாத நற்செய்தி, ஒருபோதும் அனுபவிக்காத திரள் தூதர்களின் பாட்டு. சும்மா இருக்கமுடியுமா? தேவ தூதர்கள் பரலோகத்திற்குப் போன பின்பு, அவர்கள் பேசிக்கொண்ட முதற் காரியம்: “வாருங்கள், தாவீதின் ஊராகிய பெத்லகேமுக்குப் போவோம்” என்பதுதான். போனவர்கள் தங்களுக்கு அறிவிக்கப்பட்டபடியே பிள்ளையைக் கண்டு, சும்மா இருந்தார்களா? தாங்கள் பெற்றுக்கொண்ட அப்பத்தின் நிறைவை பிறருக்கும் பிரசித்தம் பண்ணினார்கள். மற்றவர்களும் அந்த சந்தோஷத்தைப் பெற்றுக்கொள்ளும்படி அந்த நற்செய்தியைப் பரப்பினார்கள்.
இன்றும் ஜீவ வார்த்தை என்ற அப்பத்தினால் நிறைந்த வேதாகமம் நமது கரங்களில் இருக்கிறது. நமக்குச் சொல்லப்பட்டதை விசுவாசித்ததால், மீட்கப்பட்ட மகிழ்ச்சி நமது மனதை நிறைத்திருந்தால், நம்மால் சும்மா இருக்க முடியாதல்லவா? முதலில் மக்களை நோக்கி, “அப்பத்தின் வீடாகிய பெத்லகேமுக்குப் போவோம் வாருங்கள்” என்று அழைப்பு விடுப்போம். இது பூகோள ரீதியான பெத்லகேம் அல்ல; நமக்கு பரலோக மன்னாவை அருளு கின்ற பெத்லகேம். நாம் அனுபவித்த விடுதலையைப் பிரஸ்தாபப்படுத்துவோம். சத்தியத்தை அறிந்து ஏற்றுக்கொள்கிறவர்களை சத்தியமே விடுதலையாக்கும். நமது ஆவி, ஆத்துமா, சரீரத்திற்கு வேண்டிய நிறைவான உணவு ஆகாரம் நம் இயேசுவிடம் உண்டு. இன்றே எழுந்து பெத்லகேமாகிய அப்பத்தின் வீட்டுக்கு, அதாவது தேவனுடைய வார்த்தைக்கு மக்களை அழைப்போமாக!
ஜெபம்: “அன்பின் கர்த்தாவே, அனுதினமும் பரலோக மன்னாவால் போஷிக்கப்படுகிற நாங்கள் அநேகரை அப்பத்தின் வீட்டுக்கு அழைத்துவரவும், அவர்களும் இயேசுகிறிஸ்து வினால் உண்டாகும் நித்தியஜீவனை அடைந்துகொள்ளவும் அருள் செய்யும். ஆமென்.”