கர்த்தரை விட்டு விலகாதே!
தியானம்: 2026 செப்டம்பர் 26 சனி | வேத வாசிப்பு: எரேமியா 17:5-10

அவன் அந்தரவெளியில் கறளையாய்ப்போன செடியைப் போலிருந்து, நன்மை வருகிறதைக் காணாமல் … (எரேமியா 17:6).
ஒரு செடியோ எந்தத் தாவரமோ செழிப்பாய் வளரவேண்டுமென்றால் நீர், காற்று, வெளிச்சம், கனியுப்புகள் மிகவும் அவசியம். அதிலும் தண்ணீர் இல்லாமல் நிலம் வறண்டுபோகுமானால் மற்றெல்லாக் காரியங்கள் இருந்தாலும் தாவரம் காய்ந்துபோய் விடும். ஆகவே ஒன்றில் தினமும் அதற்கு நீர்ப்பாய்ச்சவேண்டும், அல்லது அதன் வேர்கள் நீர்நிலைகளுடன் தொடர்புகொள்ளும்படி அந்தத் தாவரம் நாட்டப்பட வேண்டும். தண்ணீர்கள் அண்டையில் நாட்டப்பட்ட மரங்கள் செடிகள் பார்க்கவே அழகாக செழிப்பாக இருக்கும். இப்படியேதான் கர்த்தரில் நம்பிக்கை வைத்து அவரை சார்ந்திருக்கும் மனிதனின் வாழ்வும் செழித்திருக்கும் என்று எரேமியா கூறுகிறார்.
அப்படியே, கர்த்தரை விட்டுப் பின்வாங்கிப் போகிற மனுஷனின் வாழ்க்கையோ, அந்தரவெளியில் சுறளையாய்ப்போன செடியைப்போல காணப்படும் என்றும் நம்மைக் கர்த்தர் எச்சரிக்கிறார். கறளையாய்ப்போன செடி என்றால் என்ன? வளர்ச்சி குன்றி, சிறுத்து, பார்வைக்கு அழகற்றதாய்க் காணப்படும். ஏனெனில் அது, வாழ்வுதரும் நீரூற்றில் இணைந்திருக்காது. இதனால் அது வாடிப்போய்விடும். எந்த நன்மையும் அதனால் கிடையாது. இப்படியேதான் கர்த்தரை விட்டவனுடைய வாழ்வும் இருக்கும்.
தன் தகப்பனிடம் தன் ஆஸ்திகளெல்லாவற்றையும் கேட்டுப் பெற்றுக்கொண்டு, தன் இஷ்டப்படி தூர தேசத்துக்குப் புறப்பட்டுப்போன இளைய குமாரனின் வாழ்வைப் பற்றி இயேசு சொன்ன உவமை லூக்கா15ஆம் அதிகாரம் 11-32 வசனங்களில் வாசிக்கிறோம், தன் தகப்பனின் வீட்டிலிருக் கும்போது அவனுக்கு எந்தவித குறைவுமேயில்லை. ஆனால் அவன் தகப்பனை விட்டுவிலகி, தன் ஆஸ்திகள்மீது நம்பிக்கை வைத்து, வீட்டை விட்டுத் தூரமாகச் சென்று தன்னிஷ்டப்படி வாழ்ந்தபோது, அவன் வாழ்வு தள்ளாட ஆரம்பித்தது. பன்றிகள் தின்கிற தவிட்டினால் தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தும் ஒருவனும் அதைக்கூட அவனுக்குக் கொடுக்கவில்லை. அவனின் வாழ்க்கை கறளையாய்ப்போன செடியைப்போலானது. எந்தவித நன்மையையும் அவனால் அனுபவிக்க முடியவில்லை, அவனால் நன்மையைக் கொடுக்கவும் முடியவில்லை.
இளைய குமாரனைப்போல நாமும் நம் ஆஸ்திகள், சொத்துக்கள்மேல் நம்பிக்கை வைத்து பரம தகப்பனாகிய கர்த்தரைவிட்டுத் தூரமாகச் சென்றுவிடாதபடி மிகவும் ஜாக்கிரதையாக இருப்போமாக. கர்த்தரையே சார்ந்திருப்போம். அவர் நமது வாழ்வில் அதிக பலன்களைத் தோற்றுவிப்பார். அந்தப் பலன்களினால் நாம் நமக்கும் பிறருக்கும் உபயோகமாக வாழலாம்.
ஜெபம்: அன்பின் ஆண்டவரே, இவ்வுலக ஆஸ்திகள்மேலும் உறவுகள்மேலும் நம்பிக்கை வைத்து, உம்மைவிட்டு தூரம் விலகிபோய்விடாதபடி நீர் எங்களை கிருபையாய் காத்தருளும். ஆமென்.