சுகதூக்கமா? பலன்தரும் சாவா?
தியானம்: 2026 செப்டம்பர் 27 ஞாயிறு | வேத வாசிப்பு: யோவான் 12:23-33

கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும் (யோவான் 12:24).
சந்தோஷம், ஆசீர்வாதம், சுகம் என்று செழித்து வாழ்வதுதான் கிறிஸ்தவ வாழ்வு என்பது பலரின் எண்ணம். மறுபக்கத்தில் சிலர், எதையும் அனுபவிக்கக்கூடாத, அனுபவிக்கமுடியாத ஒடுக்கமான வாழ்வு என்று இவ்வுலகில் சலிப்படைந்த மனதுடன் தம்மையே ஒடுக்கிக்கொள்கிறார்கள். ஆனால் ஆண்டவரோ இந்த இரண்டையுமே சமப்படுத்தி வாழ்ந்து காட்டியுள்ளார். துன்பம், இழப்பு, சாவு யாவும் ஒரு கிறிஸ்தவனுக்கு உண்டு. அதேசமயம் கிறிஸ்துவுக்குள் அந்தச் சாவைச் சந்திக்கும் ஒருவனுடைய வாழ்வு அதிக பலனைக் கொடுப்பதும் நிச்சயம். அன்றைக்கு ஆண்டவர் தம்முடைய ஜீவனை நேசித்து சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டிராவிட்டால், பாவத்தின் கிரயம் செலுத்தப்பட்டிருக்குமா? உயிர்த்தெழுதலைக் கண்டிருக்க முடியுமா? உயிர்த்தெழுந்திராவிட்டால் நித்தியவாழ்வின் நிச்சயம் நமக்குக் கிடைத்திருக்குமா?
நமது வாழ்வு, இழப்பு, நித்தியவாழ்வு இவற்றைக்குறித்து நமது மனநிலை என்ன? கிறிஸ்து செய்துமுடித்ததை யாரும் செய்யமுடியாது. அது அவர் ஒருவராலே மாத்திரமே முடியும். ஆனால் கிறிஸ்துவுக்காக வாழ நமது வாழ்வுகள் அர்ப்பணிக்கப்படவேண்டும். இந்த அர்ப்பணமானது வாழ்வை வெறுத்துவிடல் என்பதோடு ஒப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளது. அதற்காக நாம் செத்துப்போகவேண்டுமா? அல்லது கடவுள் தந்த அழகிய வாழ்வை அழித்துப் போடவேண்டுமா? அதுவல்ல; சாவுதான் நேரிடத்தக்க சூழ்நிலை வந்தாலும் என் இயேசுவுக்காகவே நிற்பேன் என்ற தெளிவான சிந்தை நமக்கு வேண்டும். நம்மை நாமே ஆளுகிற சுயஆளுகை ஆண்டவரிடம் கையளிக்கப்படவேண்டும். நாம் விடுதலையோடு ஆண்டவரை சேவிக்கவேண்டும். நமக்காக அழிந்துபோன கோதுமை மணியான இயேசுவையும் அவர் சம்பாதித்துத் தந்த ஒப்பற்ற நித்தியபலனையும் விசுவாசித்து அனுபவிக்க முன்வரும் ஒருவனால் மாத்திரமே அந்த வாழ்வின் சந்தோஷத்தை அனுபவிக்கமுடியும், அவனுடைய வாழ்வின் பலன் இன்னும் பலருக்கு அதே சந்தோஷத்தைக் கொடுக்கும்.
அப்படியானால் நமக்கென்று ஒரு மனவிருப்பம் இருப்பது தவறா? பதிலை நாமேதான் தெரிந்தெடுக்கவேண்டும். பரணில் சுகமாகத் தூங்கும் கோதுமை மணியா? அல்லது தானே செத்து, மிகுந்த பலன் தரும் கோதுமை மணியா? சுயசந்தோஷமா? கிறிஸ்துவின் சித்தத்தை செய்வதினால் உண்டாகும் பரமசந்தோஷமா? இதோ, நான் உங்கள் முன்னே ஜீவவழியையும் மரணவழியையும் வைக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமியா 21:8).
ஜெபம்: அன்பின் இயேசுவே, பிதாவின் சித்தத்தை நாங்கள் நிறைவேற்றி நீர் அருளும் பரமசந்தோஷத்தை பெற்று, மற்றவர்களுக்கும் அதை பகிர்ந்தளிக்கத் தக்கதாக எங்களுக்கு கிருபை செய்யும். ஆமென்.