கிறிஸ்தவ அன்பு!

தியானம்: 2026 செப்டம்பர் 28 திங்கள் | வேத வாசிப்பு: 1யோவான் 2:3-11

YouTube video

நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார் (யோவான் 13:35).

பலவித அன்பின் உறவுகள் மனிதருக்குள்ளே உண்டு. நன்மைக்கு மட்டுமன்றி தீமையான காரியங்களுக்கு அன்பாயிருப்பவர்களும் அநேகர். சுயநல நோக்கத்திற்காக தம் அன்பைக் காட்டுகிறவர்களும் உண்டு. ஆனால் கிறிஸ்துவின் அன்பு, அது கிறிஸ்தவனின் உன்னத பண்பு. பிறமதத்திலிருந்து கிறிஸ்துவை புதிதாய் ஏற்றுக்கொண்ட ஒருவரை மணமுடித்த ஒரு சகோதரி தன் கணவனுடன் ஆலயத்திற்குச் சென்றாள். ஆராதனை முடிந்ததும், எல்லோரும் இந்த புதுமணத் தம்பதிகளை வாழ்த்தினார்கள். ஆனால் கணவனையோ விசேஷித்த விதமாக அணைத்து வாழ்த்தி, தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள். வீட்டுக்கு வந்த கணவன், “நான் கிறிஸ்தவனாய் வந்ததில் இவர்களுக்கு என்ன லாபம். ஏன் இவர்களுக்கு இவ்வளவு சந்தோஷம்? இது என்ன அன்பு?” என்று கேட்டார். அதற்கு மனைவி, “இதுதான் கிறிஸ்துவின் அன்பு” என்று சொன்னாள்.

கைமாறு கருதாமல் அன்பு பாராட்டுகிறோமா? வசதியில்லாதபோதும் பிறருக்கு உதவி செய்கிறோமா? நமக்கு இல்லாதபோதும் இருக்கிறதில் அடுத்தவர் தேவையை சந்திக்கிறோமா? நமது வசதி சுகம் ஆடம்பரம் என்று பாராமல், பிறனுடைய நலனுக்காக நமது சக்தியையும் நேரத்தையும் செல்வத்தையும் செலவு செய்கிறோமா? முறுமுறுப்பின்றி, எதிர்ப்பின்றி நமக்கு வரும் நிந்தைகளையும் மனவேதனைகளையும் மென்று விழுங்கி விடுகிறோமா? நம்மிடம் உதவி பெற்றுக்கொண்டவர்கள் நம்மை மதிக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பின்றி மனமார மற்றவர்களைத் தாங்குகிறோமா? இதுதான் கிறிஸ்தவ அன்பு. இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த அன்பில் நடக்கும்போது உலகம் நம்மைக் கவனிக்கிறது. நம்மை ஆட்கொண்டிருக்கும் காரியம் என்ன என்று சிந்திக்கிறது. தேவனுடைய நாமம் மகிமைப்படுகிறது.

சத்துருவையும் நேசி என்று இயேசு போதித்த இந்த வழி கடின வழிதான். இது சாத்தியமா? “அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்.” இது சத்தியம். “பூரணம்” என்ற வார்த்தையைக் கவனியுங்கள். வசனம் நம்மிடம் இருந்தால் நாம் அவருக்குள் இருக்கிறோம். அவருக்குள் நாம் இருந்தால் அவர் நடந்தபடியே நாமும் நடக்கவேண்டும். கிறிஸ்தவ அன்பு அது கிறிஸ்துவின் அன்பு. அது வெறும் உணர்வு அல்ல. கிறிஸ்துவின் சிந்தையோடு மெய்யான கிரியையில் வெளிப்படும் அன்பு. இந்த அன்பு நம்மிடம் உண்டா? இந்த அன்பினால் நிரப்பப்பட்டவர்களிடத்தில் தேவனும் பிரியமாயிருக்கிறார்.

ஜெபம்: அன்பே உருவாய் எங்களைத் தேடிவந்த இயேசுவே, உம்மிடம் ஊற்றெடுத்த அந்த அன்பின் ஊற்றில் பருகி, நீர் எங்களிடம் காட்டிய அன்பை உணர்ந்து, நாங்களும் உமக்குள் பிறரை நேசிக்க எங்களுக்குக் கிருபை தாரும். ஆமென்.