அருட்பணியில் பெற்றோர்

தியானம்: 2026 அக்டோபர் 2 வெள்ளி | வேத வாசிப்பு: ஆதியாகமம் 22:1-18

YouTube video

நீ உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் … இந்தக் காரியத்தைச் செய்தபடியால்; நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து… (ஆதி. 22:16,17).

ஏமி கார்மைக்கேல் அம்மையார், தனது அழைப்பைப்பற்றி தன் தாய்க்கு எழுதிய கடிதத்திற்கு, அவரின் தாய் எழுதிய பதில் உள்ளத்தை உருக்குகிறது. “கண்ணே ஏமி, ஆண்டவர் இத்தனை ஆண்டுகளாக உன்னை எனக்குக் கடனாகக் கொடுத்திருந்தார். நீ எனக்கு எவ்வளவு பெரிய பக்கபலமாகவும், ஆறுதலாகவும், மகிழ்ச்சியின் ஊற்றாகவும் இருந்தாய். …நீ எனக்கு ஊன்றுகோலாய் இருந்தாய். நான் தனிமையில் வாடிய துயர நாட்களில் நீ குழந்தையாக இருந்தபோதிலும், பெரியவள் போலன்றோ என்னைத் தாங்கிப் பிடித்தாய். என் கண்ணே, எனக்கு எட்டாத தூரத்துக்குப்போக வேண்டுமென்று கடவுள் உனக்குக் கட்டளையிடுகையில் நான் முடியாதென்று சொல்வேனோ? என் கண்ணே, அவர் உன்னுடையவர். நீ அவருடையவள். எனவே, தமக்குப் பிரியமான இடத்திற்கு அவர் உன்னை அழைத்துச் செல்லட்டும். என் முழு நம்பிக்கையுடன் நான் உன்னை அவரிடம் ஒப்படைக்கின்றேன். நான் அவரை முழுமையாக நம்புகின்றேன். நீ அவரது குரலைக் கேட்க உனக்கு அருள் செய்தாரே. அவருக்கு எப்படித்தான் நன்றி சொல்வேன்?” என்றார்.

தனது தனிமை, குடும்ப பொறுப்பு மத்தியில், கர்த்தர் அழைத்த அழைப்புக்கு கீழ்ப்படிய இந்தத் தாயார், தனது மகளை அனுப்பிவைத்தாள். இன்று மிஷனரிகளைப் பெரிதாக மதிக்கும் எத்தனையோ பெற்றோர், தமது பிள்ளைகள் மிஷனரிகளாகப்போக விரும்பும்போது தடைவிதிக்கின்றார்கள். ஏமி கார்மைக்கேல் மிஷனரியாகப் புறப்பட்டு இந்தியா வந்தபடியினால், டோனாவூர் ஐக்கியம் உருவானது. அநேக தேவதாசிகள், காப்பாற்றப்பட்டு தேவனை அறிந்து கொண்டார்கள். அவளது கீழ்ப்படிதலும், தாயின் தியாகமும் அநேகர் கிறிஸ்துவண்டை வழிநடத்தப்பட ஏதுவானது.

‘உன் புத்திரனைப் பலியிடு’ என்று கர்த்தர் சொன்னபோது, அன்று ஆபிரகாம் மறுக்கவில்லை. மனைவியுடன் ஆலோசிக்கவில்லை. முழுமையான கீழ்ப்படிதலோடு மகனை அழைத்து சென்றார். இன்று, கர்த்தர் பலிக்காக அல்ல; தமது பணிக்கென்றே உங்களை பிள்ளைகளை அழைக்கிறார். பிள்ளைகள் படித்து, நன்றாக உழைத்து, சமூகத்திலே நன்மதிப்பு பெறுவதில் தவறில்லை. ஆனால், கர்த்தருடைய பணிக்காக அவர் அழைக்கையில் உங்கள் பதில் என்ன? அவர்களை உற்சாகப்படுத்துவீர்களா? தடைசெய்வீர்களா? பிள்ளைகள் தேவனால் உங்களுக்குக் கொடுக்கப்பட்டவர்கள். உண்மையில் அவர்கள் முற்றிலும் தேவனுக்குச் சொந்தமானவர்கள். அவர் தமக்குச் சொந்தமான வர்களை அழைத்து அவர்களைப் பயன்படுத்த நீங்கள் ஒரு தடையாக இருக்க வேண்டாம். ஏமியின் தாயைப்போல, “கடவுள் உனக்குக் கட்டளையிடுகையில், அதைச் செய்துமுடி” என்று அவரது அழைப்பை ஆமோதிப்பீர்களா?

ஜெபம்: அன்பின் பிதாவே, “நீர் எங்களுக்குத் தந்த பிள்ளையை உமக்கே ஒப்புக் கொடுக்கக்கூடிய மனதையும் பெலத்தையும் எனக்குத் தந்தருளும்.” ஆமென்.