பிரதான கட்டளை
தியானம்: 2026 அக்டோபர் 3 சனி | வேத வாசிப்பு: மத்தேயு 28:16-20

… சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து …. (மத்தேயு 28:19).
இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, உயிர்த்த இயேசுவை சந்திக்கும்படி, சீஷர்கள் கலிலேயாவிலே இயேசு குறிப்பிட்ட மலைக்குப் போனார்கள். அங்கே சிலர் அவரை ஆராதித்தார்கள். சிலரோ சந்தேகித்தார்கள். இந்த சூழ்நிலையில்தான் கீழ்ப்படிய, ஆராதிக்க, சீஷர்களுக்குப் பிரதான கட்டளைக் கொடுக்கப்பட்டது.
இன்றைய காலகட்டத்தில் அநேக சபைகளில் இந்த பிரதான கட்டளையானது ஏன் முக்கியத்துவம் இழந்து காணப்படுகின்றது? சுவிசேஷஊழியத்தில் ஈடுபடுகின்ற சிலர் குட்டையில் மீன்பிடிப்பதுபோல ஒரே இடத்திலிருக்கின்றனர். அவர்களது ஊழியம் சபையின் சுற்றுப்புறங்களுக்குள் மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சுவிசேஷம் இலங்கையின் மூலை முடுக்கெல்லாம், உலகின் மூலை முடுக்கெல்லாம் எடுத்துச் செல்லவேண்டும். இந்தப் பிரதான கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, மிஷனரி ஊழியத்தை நிறைவேற்றத் தவறினால், அது தேவனது பிரதான கட்டளையை மீறுகிறதாயிருக்கும். ஒவ்வொரு சபையும் மிஷனரி சிந்தையுடன் செயற்படவேண்டும். மிஷனரி ஊழியத்தில் பார்வையாளர்களுக்கு இடமில்லை. மிஷனரி ஊழியத்தில் இரண்டு விதமானவர்கள் மாத்திரமே இருக்கிறார்கள். 1.அனுப்புகிறவர்கள். 2.போகிறவர்கள்.
மிஷனரிகளை பணத்தாலும் ஜெபத்தாலும் தாங்கி அவர்களை அனுப்புகிறவர்களும், மிஷனரிகளாய்ப் போய் அனுப்பப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றுகிறவர்களுமாகிய இரு சாராரே சபையில் இருக்கவேண்டும். ஆகவே, ஒவ்வொரு விசுவாசியும் மிஷனரி சிந்தையுடன் இருக்கவேண்டும். எல்லா விசுவாசிகளும் மிஷனரியாகப் போகமுடியாது. மிஷனரி ஊழியத்திற்கு நிச்சயமாகவே அழைப்பு வேண்டும். ஆனால், ஒவ்வொரு விசுவாசியும் தங்கள் பணத்தாலும், ஜெபத்தாலும், ஊக்கமூட்டும் கடிதங்களாலும் மிஷன் ஊழியத்தில் ஈடுபடமுடியும். அப்படி ஈடுபடுவது அவசியம். பள்ளத்திற்குள் ஒருவனை கயிற்றில் இறங்கவிட்டு, கயிற்றை இறுகப் பிடித்திருப்பதுபோல, சபைகள் மிஷனரிகளை அனுப்புவதோடு, ஒவ்வொரு விசுவாசியும் ஜெபமும் பணமுமாகிய கயிற்றை விட்டுவிடாதிருக்க வேண்டும். இன்று அனுப்பப்பட்ட மிஷனரி ஊழியர்கள் தங்களைத் தாங்கியவர்கள் பின்வாங்கியதால், பணித் தளங்களில் பெரிய சவால்களை எதிர்நோக்குகின்றனர். பலர் பின்வாங்கியும் இருக்கின்றனர்.
நீங்கள் இதுவரை மிஷன் ஊழியத்தைக் குறித்து சிந்தித்திராவிட்டால் இன்றே மிஷனரிகளுக்காக ஜெபிக்கவும், பணஉதவி செய்யவும் தொடங்குவீர்களா? உங்கள் சபையிலுமிருந்து மிஷனரிகளை அனுப்பப் பிரயாசப்படுவீர்களா? ஏனெனில், கிறிஸ்து நமக்கிட்ட பிரதான கட்டளை இது. அதை நாம் மீறலாமா? நிறைவேற்றலாமே!
ஜெபம்: ஆண்டவரே, இந்த பிரதான கட்டளையை நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லவும், மிஷனரிபணியில் ஊக்கப்படுத்தவும் எங்களுக்குக் கிருபை செய்யும். ஆமென்.