மிஷனரி இயக்கம்

தியானம்: 2026 அக்டோபர் 7 புதன் | வேத வாசிப்பு: அப்போஸ்தலர் 13:1-4

YouTube video

அவர்கள் கர்த்தருக்கு ஆராதனை செய்து, உபவாசித்துக் கொண்டிருக்கிறபோது … ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்து விடுங்கள் என்று …ஆவியானவர் திருவுளம் பற்றினர் (அப். 13:2).

சிறிய ஜெபக்கூட்டத்திலிருந்து ஒரு மிகப் பெரிய மிஷனரி இயக்கமே ஆரம்பமாவதை இங்கே காண்கிறோம். பவுலின் மிஷனரிப் பிரயாணங்கள், தலைவர்களின் பெரிதான திட்டமிடல் கூட்டத்தில் அல்ல; ஒரு சிறிய ஜெபக்கூட்டத்திலேதான் பரிசுத்த ஆவியானவரால் ஆரம்பிக்கப்பட்டது. வேறு பட்ட பின்னணியைச் சேர்ந்தவர்கள் ஒருமனம் ஐக்கியமாக உபவாசித்து தேவனை ஆராதித்துக்கொண்டிருக்கையில், முக்கியமான இரு தலைவர்களை மிஷனரி ஊழியத்திற்காகப் பிரித்துவிடும்படி பரிசுத்தாவியானவர் திருவுளம் பற்றினார். மிஷனரி ஊழியத்தில் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதல் இன்றியமையாதது. ஒருபுறத்தில், சபை அவர்களை அனுப்பியது (அப்.13:3). மறுபுறத்தில், பரிசுத்த ஆவியானவரால் அவர்கள் அனுப்பப்பட்டார்கள் (அப்.3:4).

புதிய இடங்களில் நற்செய்தியை அறிவித்து தேவராஜ்யத்தைக் கட்டி எழுப்ப வேண்டுமானால், இன்றைய சபைகள் தங்களுக்குள்ள சிறப்பான தலைவர்களை அனுப்ப சாதாரணமாக முன்வருவதில்லை. இவர்கள் போய்விட்டால் தமது நிலைமை என்னாவது என எண்ணி அவர்களை அனுப்புவதற்குப் பின் நிற்பார்கள். ஆனால், அந்தியோகியா சபை ஆவியானவருக்குக் கீழ்ப்படிந்து, தங்களுக்குள் இருந்த மிகச் சிறப்பான தலைவர்களை அனுப்புவதற்கு முன்வந்தார்கள். அந்தியோகியா சபையானது, ‘ஐயோ! இவர்கள் போய்விட்டால் இவர்கள் செய்த பொறுப்புக்களை இனி யார் செய்வார்கள்? இவர்களை அனுப்பமுடியாது’ என்று கூறவில்லை. இன்று நமது சபைகளிலும் முக்கியமான சிலரை மிஷனரி ஊழியத்துக்குத் தேவன் அழைத்தால், சபை அவர்களைத் தடைபண்ணக்கூடாது. அந்த அழைப்பை உறுதிசெய்து, ஜெபித்து, அவர்களை வழியனுப்பவேண்டும். பவுலும், பர்னபாவும் அப்படிப் பிரித்து அனுப்பப்பட்டதால்தான் பல இடங்களுக்கும் சுவிசேஷம் பரவியது.

முதலாவது சபைகளில் ஒருமனம், ஒற்றுமை, உபவாச ஜெபம் மிக அவசியம். அங்கே தான் பரிசுத்த ஆவியானவரின் சத்தத்தை உணரமுடியும். ஒவ்வொரு சபையும் தூய ஆவியானவரின் சத்தத்துக்குச் செவிகொடுக்க ஆயத்தமாக இருக்கவேண்டும். மிஷனரி இயக்கம் சபைகளிலிருந்து உருவாகவேண்டும். விசேஷமாக சபைக் குழுக்களில் இதற்கு அஸ்திபாரமிடப் படவேண்டும். ஒவ்வொரு சபையும் மிஷனரி தரிசனத்துடன் செயல்படவேண்டும். இதற்கு நாம் அங்கம் வகிக்கும் சபை முன்வருமா? இந்தப் பாரம் நமக்கு உண்டா? பரிசுத்த ஆவியானவரின் சத்தத்தை நம்மால் உணரமுடிகின்றதா? பரிசுத்த ஆவியானவரின் சத்தத்தைக் கேட்கவும், நமது சபை மிஷனரி சபையாக மாறவும் முதலில் நாம் ஜெபித்து, மற்றவர்களையும் ஊக்கப்படுத்த முடியுமா?

ஜெபம்: அன்பின் பிதாவே, திருச்சபையில் உபவாசித்து ஜெபிக்கிற ஜெபக்குழுக்களில் அழைப்பு பெற்றோர் மிஷனரியாக புறப்பட்டுச் செல்வதற்கு உள்ள தடைகள் நீங்கவும், ஆவியானவரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கவும் ஜெபிக்கிறோம். ஆமென்.