எரிந்து ஒளி கொடுத்தல்
தியானம்: 2026 அக்டோபர் 18 ஞாயிறு | வேத வாசிப்பு: 1தீமோத்தேயு 2:4-7

ஏனென்றால், நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப் போகிறேன் (2தீமோத்தேயு 4:6).
டேவிட் பிரேனார்ட் 1718 ஏப்ரல் 2 ல் அமெரிக்காவில் பிறந்தார். தகப்பனை 9ம் வயதிலும், தாயை 14ம் வயதிலும் இழந்தார். 21ம் வயதில் மறுபிறப்பின் அனுபவம் பெற்றவர், செவ்விந்தியர் மத்தியில் மிஷனரி ஊழியத்தைச் செய்யும்படி அழைக்கப்பட்டார். காசநோயினால் பாதிக்கப்பட்ட பலவீனமான சரீரத்தை உடையவரான போதிலும், அவர் தேவனின் அழைப்பை ஏற்று, செவ்விந்தியர் மத்தியில் சுவிசேஷத்தை அறிவிக்கச் சென்றார். 29 வயதுவரை மட்டுமே வாழ்ந்த அவரது வாழ்வும் ஊழியமும், அநேக செவ்விந்தியர்கள் கிறிஸ்துவை அறிய வழிவகுத்தது.
அவர் தனது நாட்குறிப்புப் புத்தகத்தில் (மே 1746) “எவ்வித தயக்கமுமின்றி என்னை முழுவதுமாய் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்துவிட்டேன். நான் ஆண்டவரிடம் கேட்பதெல்லாம், ‘தேவனே, இதோ அடியேன் இருக்கின்றேன். என்னை அனுப்பும். கரடுமுரடான காட்டுமிராண்டிகளிடம் போக ஆயத்தமாக இருக்கின்றேன். உலகத்தின் சகல வசதிகளையும் விட்டுப்போகவும் – ஏன்! மரணத்தினூடாகச் செல்லவும் ஆயத்தம், உம்முடைய இராஜ்யத்தைக் கட்டுவதற்காக எங்குவேண்டுமானாலும் போகச் சித்தமாக இருக்கிறேன்.’ இவ்விதமாகக் கூறி என் நண்பர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டேன். எனக்குப் புத்துயிர் அளிக்கப்பட்டது. என்னுடைய சிறு மந்தைக்காக ஆண்டவரிடம் போராடினேன்… தேவனுக்கு எக்காலமும் எரிந்துகொண்டிருக்கும் அக்கினி ஜுவாலையைப்போல என் சாவுவேளை வரையில் பிரகாசித்துக் கொண்டிருக்க வாஞ்சிக்கின்றேன்” என்பதாக எழுதியிருந்தார்.
பலமுறை காசநோயினால் துடித்த அவரது பலவீனமான உடலையும் தேவன் உபயோகித்தார். உண்மையாகவே அவர் மரணபரியந்தமும் எரிந்து பிரகாசித்தார். அவரது குறுகிய வாழ்வு அநேகருக்கு ஜீவ ஒளியை வெளிப்படுத்தியது. இவரது வாழ்க்கையே பின்னர் வில்லியம் கேரி, ஹென்றி மாட்டின் போன்றவர்களின் வாழ்க்கையில் பெரிதான தாக்கத்தை ஏற்படுத்தி, அவர்களையும் மிஷனரி ஊழியத்திற்கு உந்தித் தள்ளியது. அன்றைய பவுலடியாரின் வழியினைப் பின்பற்றி எத்தனையோ அடியார்கள் எரிந்து பிரகாசித்தார்கள். கடந்து சென்றுவிட்ட அவர் களுடைய ஜீவியம் இன்றும் நம் மத்தியில் பிரகாசித்துக் கொண்டே இருக்கிறது.
அருமையானவர்களே, வியாதியின் வேளையிலும் தேவனுக்காக எரிந்து பிரகாசித்த டேவிட் பிரேனார்ட்டின் வாழ்க்கை இன்று நமக்கு ஒரு சவாலாக அமையட்டும். அந்தவிதமான அர்ப்பணிப்பைச் செய்ய இன்று என்னால் முடியுமா? ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்காக எரிந்து பிரகாசித்து ஒளி கொடுக்க நம்மைத் தருவோமாக.
ஜெபம்: அன்பின் தேவனே, எரிந்துகொண்டேயிருப்பேன், எப்போதுமே உமக்காய்; என் ஜீவன் பிரியும்வரை எரிந்துகொண்டேயிருப்பேன் என்ற பாடுகிற நாங்கள் அதை வாழ்வில் செயல்படுத்தி உம்மை மகிமைப்படுத்த உதவி செய்யும். ஆமென்.