நாம் கடனாளிகள்

தியானம்: 2026 அக்டோபர் 19 திங்கள் | வேத வாசிப்பு: ரோமர் 1:14-17

YouTube video

கிரேக்கருக்கும், மற்ற அந்நியர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடருக்கும் நான் கடனாளியாயிருக்கிறேன் (ரோமர் 1:14).

ஒருவர் நம்மிடம் ஒரு தொகைப் பணத்தைக் கொடுத்து, அவற்றை சிலரிடம் பகிர்ந்தளிக்கும்படி கூறினால், அதனை அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டல்லவா? அதனைக் கொடுக்கும் வரைக்கும் ஒருவிதத்தில் நாம் அவர்களுக்குக் கடனாளிகள்தான். தேவன் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி பவுலை நம்பிப் பொறுப்புக் கொடுத்திருந்தார். எனவேதான், பவுல் தான் இவர்களுக்குக் கடனாளி என்கிறார். இவர்களுக்குப் பவுல் கொடுக்கவேண்டியது பணமோ, பொருளோ அல்ல; மிகவும் அவசியமான ஆண்டவருடைய சுவிசேஷ வார்த்தைகளே அவை.

இந்த வகையில் நாம் ஒவ்வொருவருமே கடனாளிகளாக இருக்கின்றோம் என்பதை உணருகிறோமா! பல மொழிகளைப் பேசக்கூடிய பல இன மக்கள், யார்மேல் நம்பிக்கையை வைப்பது என அறியாத பிற மதத்தைச் சார்ந்தவர்கள் இதுபோன்ற யாவருக்கும் நாம் கடனாளிகளாக இருக்கிறோம். இன்றைய கிறிஸ்தவர்களில் அநேகர் பிற மக்களுடைய இரட்சிப்பைக் குறித்து பாரமற்றவர்களாக இருக்கின்றனர். மதவைராக்கியம் பிடித்தவர்கள், சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றெல்லாம் சாக்குச்சொல்லி, சுவிசேஷத்தைப் பிற மக்களுக்கு அறிவிக்கத் தவறுகின்றனர். இந்த மனப்பான்மை மாறவேண்டும். நம்மை சுற்றியுள்ள யாவரும் இரட்சிக்கப்படவேண்டும். எனவே, அவர்களுக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்படவேண்டும். அதனை நாமேதான் செய்யவேண்டும்.

பிற மக்களுக்குச் சுவிசேஷத்தை அறிவித்து அவர்கள் இரட்சிக்கப்பட்டுவிட்டால், அடுத்தபடியாக, உடனடியாகவே அவர்களை அவர்களது கலாச்சாரத்திலிருந்து வெளியே எடுக்க முயற்சிப்பது தவறு. இனங்களும், இனங்களுக்கான கலாச்சாரமும் இருக்கத்தான் செய்யும். கிறிஸ்துவை அறியும்போது, அவர்களது நம்பிக்கைதான் மாறுகிறது. ஆனால், அவர்களது இனத்தையோ கலாச்சாரத்தையோ (பழக்கவழக்கம், பேசுகின்ற, உடுத்துகின்ற விதங்கள்) நாம் மாற்ற முற்படக்கூடாது. அவரவருடைய கலாச்சாரத்தைவிட்டு வெளியே எடுக்க முற்படுவது அவர்களது கழுத்தை வெட்டுவது போன்றது. சுவிசேஷத்தை அறிவிப்பது எமது பொறுப்பு.

சுவிசேஷத்தை அறிவிக்கும் நாம், பிறருடைய மதத்தையோ, கலாச்சாரத்தையோ தாக்குவது நல்லதல்ல. அவரவருக்கு ஏற்றபடி கவனமாக நாம் சுவிசேஷசெய்தியைக் கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் நாம் அவர்களுக்குக் கடனாளிகளாகுவோம். அவர்களுக்கு உரியதை அவர்களுக்குக் கொடுக்கும்போது, அவர்களும் மனரம்மியத்துடன் அவற்றை ஏற்றுக்கொள்வார்கள். சுவிசேஷத்தை அறிவிக்கும்பணியில் நமது நடவடிக்கைகளிலே கவனமாக இருப்போமாக.

ஜெபம்: அன்பின் தேவனே, சுவிசேஷத்தை அறிவிக்கும்போது ஞானத்தோடும் கவனத்தோடும் நாங்கள் செய்வதற்கு உமதாவியின் பெலனைத் தந்தருளும். ஆமென்.