மிஷன்பணியில் ஆவியானவர்
தியானம்: 2026 அக்டோபர் 20 செவ்வாய் | வேத வாசிப்பு: அப்போஸ்தலர் 16:4-12

அவர்கள் மீசியாதேசமட்டும் வந்து, பித்தினியா நாட்டுக்குப் போகப் பிரயத்தனம் பண்ணினார்கள் ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார் (அப்.16:7).
அருட்பணி ஊழியத்தில் பரிசுத்த ஆவியானவரின் பங்கு இன்றியமையாதது. அவரே நம்மை அழைத்து, நம்மை அனுப்பி, இப் பணியை நிறைவேற்றவேண்டிய உந்துதலையும், பலத்தையும், வழிநடத்துதலையும் கொடுப்பவராவார். பவுலும் சீலாவும் ஆவியானவராலேயே வழிநடத்தப்பட்டனர். சில இடங்களுக்குப் போகாதபடி அவர்களைத் தடைபண்ணி, போகவேண்டிய இடத்திற்கு அவர்களை வழிநடத்தினவரும் அதே பரிசுத்த ஆவியானவரே ஆகும்.
சாமுவேல் என்பவர் பிரான்ஸ் நாட்டுக்கு மிஷனரியாகப் போக எண்ணுகையில், அவருடைய சகோதரி, ‘பிரான்ஸ் தேசத்தில் அநேக மக்கள் உண்டு. தேவையுள்ள மக்கள் யார் என்று நீ எப்படி அறிவாய்? அது வைக்கோல் குவியலில் ஒரு ஊசியைத் தேடுவதுபோலவே இருக்கும்’ என்று கூறினாள். அதற்கு அவர் சிறிது நேரம் யோசித்துவிட்டு, அமைதியாக, “பரிசுத்த ஆவியானவருக்கு ஊசி எங்கே இருக்கிறது என்பது தெரியும்” என்றார். ஆம், ஆவியானவர் உங்களை அழைத்தால் உங்களை சரியான இடத்திற்கு வழிநடத்துவார் என்பது நிச்சயம்.
மிஷனரிப் பணிக்குத் தன்னை அர்ப்பணிக்கிறவர் வேதவசனத்தாலும், தேவ ஆவியினாலும் நிறைந்திருக்கவேண்டியது மிக மிக அவசியம். எந்த இடத்திற்குப் போக வேண்டும், எந்த இடத்திற்குப் போகக்கூடாது, என்னத்தைப் பேசவேண்டும், எதைப் பேசக்கூடாது என்பதையெல்லாம் நமக்கு உணர்த்துகிறவர் பரிசுத்த ஆவியானவரே.
மிஷனரிப் பணி சொகுசானது அல்ல. அது பல பாடுகளையும் இன்னல்களையும் சந்திக்கவேண்டிய ஒரு பயணம். அந்த வேளைகளில், சோர்வுகளினால் அமிழ்த்தப்பட்டுப் போகையில், அவரே நம்மைப் பெலப்படுத்தி புதுப்பிக்கிறவர். சுவிசேஷத்தைக்கொண்டு செல்லுகின்ற நம்மால் அல்ல; பரிசுத்த ஆவியானவரின் கிரியையினாலேயே மக்கள் இரட்சிக்கப்படுகின்றனர். அவருடைய வல்லமை ஒவ்வொரு ஊழியருக்கும் அவசியம். மிஷனரி ஊழியம் என்பது, மனிதர்கள் பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு செய்யும் ஊழியம் அல்ல. மாறாக, அது பரிசுத்த ஆவியானவரே மனிதரைக்கொண்டு செய்யும் காரியமாயிருக்கின்றது.
ஆகவே, இந்த நாளிலே பரிசுத்த ஆவியானவரின் கரத்திலே நம்மை ஒப்புவிப்போமாக. அவர் நம்மைப் பொறுப்பெடுக்கட்டும். எவ்விதத்தில் அவர் நம்மைப் பயன்படுத்தச் சித்தம்கொள்கிறாரோ, அந்த வகையில் அவர் நம்மை உருவாக்கவும் வழிநடத்தவும் நம்மைத் தாழ்த்துவோமாக. நிச்சயமாகவே நமது வாழ்வில் அவர் பெரிய காரியம் செய்வார்.
ஜெபம்: அன்பின் ஆவியானவரே, அருட்பணியில் உமக்குச் சித்தமில்லாத இடங்களுக்கு எங்களை போகவொட்டாமல், உமக்குச் சித்தமான இடத்தில் பணி செய்வதற்கு அனுகூலங்களை தந்து வழிநடத்த எங்களை ஒப்புவிக்கிறோம். ஆமென்.