கிறிஸ்தவ ஐசுவரியவான்
தியானம்: 2026 அக்டோபர் 31 சனி | வேத வாசிப்பு: 1தீமோத்தேயு 6:17-19

… ஐசுவரியமுள்ளவர்கள் … சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன் மேல் நம்பிக்கை வைக்கவும் (1தீமோத்.6:17).
முன்பெல்லாம் ஒரு மனிதன் தேசம், குலம், கல்வி இப்படிப்பட்டவைகளால்தான் சமூகத்தில் அவன் இனங்காணப்பட்டான். ஆனால் இன்று அது மாறிவிட்டது. ஒருவன் தனக்கென எவ்வளவு அதிகமாய் பொருட்களை வாங்கிக்கொள்ள வல்லமைப் படைத்தவனாய் இருக்கிறானோ, அதுவே அறிமுகப்படுத்தும் ஒரு முக்கிய காரணியாகிவிட்டது. அப்படிப்பட்டவனுக்கு வருவாயும் தாராளமாகக் கிடைக்கும். அவன் தனது பணத்தை பல இடங்களில் முதலீடும் செய்திருப்பான். அவனுடைய நம்பிக்கை, இந்த முதலீடுகளிலும், வருவாய் அதிகரிப்பிலுமே தங்கியிருக்கும்.
இப்படியான ஐசுவரியம் கிறிஸ்தவ ஐசுவரியம் அல்ல. அதற்காக கிறிஸ்தவர்கள் பணக்காரர்களாக இருக்கமுடியாது என்பதல்ல அர்த்தம். ஒரு கிறிஸ்தவ பணக்காரனுக்கு, அடிப்படையிலே அவனுடைய நம்பிக்கை தனது செல்வத்தில் அல்ல. அதைக் கொடுத்த தேவன்மீதே இருக்கும். அவன் தனக்கென எவ்வளவைச் சேர்த்துக்கொள்ளமுடியும் என்பதில் அல்ல; மாறாக எவ்வளவு தாராளமாய் கொடுக்கமுடியும், நன்மை செய்யமுடியும், எவ்வளவு நற்கிரியைகள் செய்யமுடியும் என்பவைகள் தான் அவனுடைய பலமாக இருக்கும். தனக்கென சேர்த்துக்கொள்கிறவனை உலகம் “ஐசுவரியவான்” என்கிறது. இதில் லட்சாதிபதி, கோடீசுவரர் என ஒவ்வொரு படிநிலைகள் உண்டு. அதேபோலவே, கிறிஸ்தவ வாழ்விலும், அவர்கள் எவ்வளவாய் நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகக் காணப்பட முடியும் என்ற ஒவ்வொரு நிலைகள் உண்டு. “நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காக தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கும்” அளவுக்கு, அவர்களுக்கு உயர்வுப் படிநிலைகள் உண்டு. இவ்வுலகில் ஐசுவரியவானாக, தேவன் தந்த நல்ல சந்தர்ப்பதை இழந்துபோகாமல், நற்கிரியைகளில் ஐசுவரியவானாக உயர்த்தப்பட்டு, நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படியான மகா பெரிய முதலீட்டை வைக்க நாம் முயற்சிக்கவேண்டும்.
நற்செய்தி சென்றடையாத நாடுகளுக்கு நற்செய்தியைக் கொண்டு செல்வதற்காக, தமது ஐசுவரியங்களை முதலிட்டு, பல இழப்புகளைச் சந்தித்த பல செல்வந்தர்கள் இருந்தார்கள். உதாரணமாக சி.டி.ஸ்டட் என்பவர் பிறப்பாலே செல்வந்தர். சீனாவிற்கு மிஷனரியாகச் சென்ற அவர், அங்கிருந்தபடியே 1887 இல், தனது ஆஸ்தி முழுவதையும் விற்று மூடி, ஜார்ஜ் முல்லர், இரட்சண்ய சேனை போன்ற ஊழியங்களுக்கு அனுப்பிவைத்தார். இது செலவு அல்ல; முதலீடு. நீங்கள் உங்கள் ஐசுவரியங்களை யாருக்காக முதலீடு செய்திருக்கிறீர்கள் ?
ஜெபம்: ”கர்த்தாவே, நீர் எனக்களித்த இவ்வுலகத்து ஐசுவரியங்களை உமக்கென்றும் உமது ஊழியத்துக்கென்றும் முதலீடு செய்ய எனக்கு மனதைத் தாரும். ஆமென்.”