தேவ வழிநடத்துதலைவிட்டு…

தியானம்: 2026 நவம்பர் 10 செவ்வாய் | வேத வாசிப்பு: ரூத் 1:1-7

YouTube video

கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று கேள்விப்பட்டு … மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்தாள் (ரூத் 1:6).

வாழ்க்கையிலே பலவித நெருக்கடிகளைச் சந்திக்கும்போது, அவசரப்பட்டு சில முடிவுகளை நாம் எடுத்துவிடுவதுண்டு. அந்த நேரத்தில் தேவனுடைய வழிநடத்துதலுக்காகக் காத்துக் கிடப்பது குறைவு. ஆனால் வேதாகமத்திலே பல இடங்களிலும் ஆண்டவரின் வழிநடத்துதலுக்காகக் காத்திருக்கும்படிக்கே வலியுறுத்தப்படுகிறதைக் காண்கிறோம்.

இங்கே எலிமலேக்கின் குடும்பம் பஞ்சம் காரணமாக பெத்லகேமிலிருந்து மோவாப் தேசத்துக்குப் பயணித்தனர். அதாவது பஞ்சம் என்ற நெருக்கடி வந்ததும் அதனை சந்திக்கத் திராணி அற்றவர்களாய், பஞ்சம் இல்லாத தேசத்தை நோக்கி இவர்கள் புறப்பட்டனர். பஞ்சம் வந்தால் என்ன நடக்கும்? ஆகாரம் இல்லாமல் பெலவீனப்பட்டு ஒருவேளை மரணமும் நேரிடலாம். இவர்கள் அதற்குத் தப்பி மோவாப் தேசத்திற்கு ஓடினாலும் அங்கேயும் மரணம் வந்தது. ஆனால் பஞ்சத்தினால் அல்ல வியாதியினால். இப்போது தனது கணவனையும், தனது இரண்டு மகன்மாரையும் இழந்த நகோமி தனது மருமக்களோடுகூட திரும்பவும் பெத்லகேமுக்குப் புறப்படுகிறாள். அதுவும் கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று கேள்விப்பட்டே புறப்பட்டாள். இந்தச் சம்பவத்திலிருந்து நாம் எதை காண்கிறோம்? நெருக்கடியில் இருந்தும், பிரச்சனைகளில் இருந்தும் தப்பி நாம் எங்குமே ஓடிவிடமுடியாது. எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும், தேவனுடைய சமுகத்தைவிட்டு ஓடிவிடாமல், தேவனோடுகூட இருந்து, வருகின்ற நெருக்கடிளை தேவபெலத்தோடு சந்திப்பதே சாலச் சிறந்தது.

“உலகத்திலே உங்களுக்கு உபத்திரவம் உண்டு. ஆனாலும் திடன் கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன்” என்றார் இயேசு. நீங்கள் என்னை விசுவாசித்தால் உங்களுக்கு உபத்திரவமே வராது என்று இயேசு சொல்லவில்லை. திடன்கொண்டு, தாம் உலகத்தை ஜெயித்ததுபோல உங்களாலும் உலகத்தை ஜெயித்து வாழ முடியும் என்ற நம்பிக்கையையே இயேசு கொடுத்தார்.

ஆகையால் பிரியமானவர்களே, பிரச்சனையைக் கண்டு பயந்துவிட வேண்டாம். பிரச்சனைகளும், நெருக்கடிகளும் வரும்போது, தேவனோடு, அவருடைய பாதுகாப்பில், அவருடைய வழிநடத்துதலுக்குள் இருக்கிறோமா என்பதை மாத்திரம் ஆராய்ந்து பார்ப்போம். அப்படி இருந்தால் நாம் யாருக்கும் எதற்கும் பயப்படத் தேவையில்லை. “இவைகளைக் குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாய் இருப்பவன் யார்?” என்று பவுல் சவாலிட்டதுபோல நாமும் சவாலிடலாமே! (ரோமர் 8:31).

ஜெபம்: ஜீவனுள்ள தேவனே, நாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் அவற்றை ஞானமாய் கையாண்டு உமது நாமத்தினாலே ஜெயத்தைப் பெற்றுக்கொள்ள தயைசெய்தருள வேண்டுமென்று ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.