ஆசிரியரிடமிருந்து…

சத்தியவசனம் பங்காளர் மடல்

ஜூலை-ஆகஸ்டு 2013

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள பங்காளர்களுக்கு,

தவனமுள்ள ஆத்துமாவை திருப்தியாக்குகிற அன்பின் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இதுவரையிலும் தேவன் நம்மை வழிநடத்தி வந்த எல்லா பாதைகளுக்காகவும் சத்தியவசன ஊழியப்பணி வாயிலாக தேவன் செய்த மகத்தான கிரியைகளுக்காகவும் அவரை ஸ்தோத்தரிக்கிறோம். வானொலி நிகழ்ச்சி, தொலைகாட்சி நிகழ்ச்சி, பத்திரிக்கை மற்றும் இணையதள ஊழியங்கள் வாயிலாக தாங்கள் பெற்ற ஆசீர்வாதங்களையும் கருத்துக்களையும் எங்களுக்குத் தெரிவிக்க மறவாதீர்கள்.

அஞ்சல் வழி வேத பாடத்தில் பங்காளர்கள் இணைந்து பயிலும்படி அழைக்கிறோம். ஏற்கனவே இதில் இணைந்து முதல் பாடத்தை பெற்றவர்கள் அதற்கான தேர்வுத் தாளை பூர்த்தி செய்து அனுப்பி இரண்டாவது பாடத்தைப் பெற்றுக்கொள்ளவும். டாக்டர் உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய “இயேசு உங்களை விசாரிக்கிறவர்” என்ற புத்தக வெளியீடு அச்சுப் பணியில் உள்ளது. கூடிய விரைவில் பங்காளர்களுக்கு அனுப்பி வைப்போம். இவ்வருடத்தில் தங்கள் சந்தாவைப் புதுப்பித்துக்கொள்ளாத பங்காளர்கள் சந்தாவைப் புதுப்பித்துக்கொள்ள அன்புடன் நினைவூட்டுகிறோம்.

இவ்விதழில் தேவனை வாஞ்சித்தலைக் குறித்து டாக்டர் உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய சிறப்பு செய்தி இடம்பெற்றுள்ளது. இச்செய்தி தேவன் நமது ஆத்ம தாகத்தை எவ்வாறு தீர்க்கிறார் என்பதை விளக்கிக் காட்டுகிறது. சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதிய “தேவனுடைய வழியில் நானா? என் வழியில் தேவனா?” என்ற செய்தி நமது வழிகளை ஆராய்ந்துபார்க்க உதவிகரமாக இருக்கிறது. துர் உபதேசங்கள் உருவாவது எப்படி? என்பதைக் குறித்து டாக்டர் புஷ்பராஜ் அவர்கள் எழுதியுள்ள செய்தி இக்கடைசி காலத்தில் வாழ்கின்ற நமக்கு விழிப்புணர்வை உண்டாக்குகிறதாய் உள்ளது. தொடர் செய்திகளான இயேசுகிறிஸ்து அருளிய உவமைகள், நிலத்தினில் விழுந்த கோதுமை மணிகள், வேத ஆராய்ச்சியாளர் வசந்தகுமார் அவர்கள் எழுதிய “யோசுவா”வை குறித்த செய்திகள் வழக்கம் போல இடம்பெற்றுள்ளது. பழைய ஏற்பாட்டு வேதபாடமான “ஆசரிப்புக் கூடாரத்தில் கிறிஸ்துவின் சாயல்” அடுத்த இதழிலிருந்து வெளிவரும்.

இவ்விதழில் இடம்பெற்றுள்ள செய்திகள் அனைத்தும் உங்கள் ஆத்மீக வாழ்விற்கு பிரயோஜனமாக இருக்க வேண்டுதல் செய்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்
சத்தியவசனம்