வேதாகமத்தில் எப்படிப் பல பதிப்புகள் நமக்குக் கிடைத்தன!

வேதாகமம் உருவானது எப்படி? (மே – ஜுன் 2026)
Dr.உட்ரோ குரோல்

வேதாகமத்தில் எப்படி இத்தனை பதிப்புகள் வெளிவந்தன? என்று எப்போதாவது நீங்கள் ஆச்சரியப்பட்டதுண்டா? ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள வேதாகமப் பதிப்புகளைப் பாருங்கள்.

  1. King James Version
  2. The New American Standard Bible
  3. The New king James Version
  4. The Revised standard Version
  5. The New International Version
  6. Today’s English Version

மற்றும் இன்னும் பல.

தமிழ் மொழியில் வேதாகமம் வெளியிடப்பட்ட பதிப்புகளையும் வருஷங்களையும் பார்ப்போம்.

  1. பப்ரீசியூஸ் பதிப்பு 1796
  2. பெர்சீவல் பதிப்பு 1850
  3. பவர் பதிப்பு 1871
  4. லார்சன் பதிப்பு 1936
  5. மோனகன் பதிப்பு 1949
  6. தமிழக ஆயர்பேரவை 1973
    (R.C) வெளியிட்ட பதிப்பு
  7. பொது மொழிபெயர்ப்பு 1995
  8. நிறைவாழ்வு ஆய்வுவேதாகமம் 2005
  9. வாழ்வியல் விளக்க வேதாகமம் 2007

இவைகளெல்லாம் எங்கிருந்து வந்தன? இவைகளெல்லாம் நமக்குத் தேவையா? ஏன்? இவற்றில் உங்களுக்கு மிகவும் பிரியமானது எது? இவற்றில் சிறந்த பதிப்பு எது?

பழைய ஏற்பாட்டின் பல்வேறு மொழி பெயர்ப்புகள் இயேசுவின் காலத்திலும் கூட இருந்தன. சவக்கடல் சுருள்கள் கி.மு. 100 முதல் கி.பி.100 வரை கண்டுபிடித்து எடுக்கப்பட்டன. செப்துவ ஜிந்து வேதாகமம் கிரேக்கமொழி பேசும் யூதர்களுக்காக கி.மு.280இல் மொழிபெயர்க்கப்பட்டது.

அதன்பின் புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்கள் தோன்றினர். ஒவ்வொருவரும் எழுதியதில் மூல நகல் என்று மட்டுமே இருந்தன. அவைகள் தேவனுடைய ஆவியினால் ஏவப்பட்டு, எழுதப்பட்டிருந்தன. இந்த மூலப்பிரதிகள் ஒன்றும் இன்று இல்லை. நமக்குக் கிடைத்திருப்பவைகளெல்லாம் நகல்களே. பெரும்பாலும் நகல்களின் நகல்கள்தான் கிடைத்துள்ளன.

கீழ்க்கண்ட ஐந்து கையெழுத்துப் பிரதிகளும் புதிய ஏற்பாட்டு நூல்களுடையவை. இவை கிறிஸ்து பிறப்பு முதல் உள்ள 500 வருஷங்களில் எழுதப்பட்டவை.

1. பாப்பிரை:

1895 இல் மத்திய எகிப்துப் பகுதியில் நூற்றுக்கணக்கான பாப்பிரை எழுத்துத் தகடுகள் கிடைத்தன. அவற்றில் பெரும் பாலானவை மம்மிகளின் கட்டுகளிலும், பதப்படுத்தப்பட்ட முதலைகளின் உடல் களிலும் திணித்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று யோவான் 18ஆம் அதிகாரத்தின் ஒரு துண்டு. இதன் காலம் கி.பி.125 என்று தெரிகிறது.

2. இலத்தீன் வல்கேட்:

கி.பி.382 இல் ரோமாபுரியிலுள்ள பிஷப் சிறந்த இறையியல் அறிஞரான ஜெரோமிடம் நமக்கு நற்செய்தி நூல்களின் பழைய லத்தீன் மொழி பெயர்ப்பைத் திருத்தும்படி கேட்டுக்கொண்டார். ஜெரோம் நான்கு நற்செய்தி நூல்களை மட்டுமல்ல, லத்தீன் புதிய ஏற்பாட்டையே திருத்த முற்பட்டார். இந்தப் பணியில் பல எபிரேய கையெழுத்துப் பிரதிகளைப் பயன்படுத்தினார். ஒப்பிட்டு சரிபார்த்தார். மேலும் எபிரெய மொழியிலிருந்து நேரடியாக லத்தீன் மொழியில் வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டுப் பகுதியை மொழி பெயர்த்தார். இந்தப் பணிக்காக ஜெரோம் 25 ஆண்டுகள் செலவிட்டார்.

வல்கேட் என்பது ஒரு லத்தீன் சொல் இதன் பொருள் பொதுவான என்பதாகும். இது வல்கேட் வேதாகமம் என்று அழைக்கப்பட்டது. 1228 இல் இந்த வல்கேட் வேதாகமம் ஸ்டீபன் லாங்டன் என்பவரால் அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டது. இவர் கேண்டர்பரியின் ஆர்ச் பிஷப் ஆக இருந்தார்.

பின்னர் ஸ்டீபானாஸ் என்று அழைக் கப்படும் இராபர்ட் ஸ்டீபன்ஸ் இந்த அதிகாரங்களை வசனங்களாகப் பிரித்தார். இது 1551 இல் செய்யப்பட்டது. சுமார் 1571இல் மெரன்டானஸ் என்பவர் இந்த வசனங்களுக்கு எண் இட்டார்.

ஜான் குட்டென்பர்க் என்பவர் 1455இல் இந்த வல்கேட் வேதாகமத்தை முதல்முதல் அச்சிட்டார்.

3. கோடக்ஸ் சினைட்டிக்கஸ்

கி.பி. 330 இல் எழுதப்பட்ட கிரேக்க செப்துவ ஜிந்து வேதாகமத்தின் பழைய கையெழுத்துப் பிரதி கிடைத்தது. இது ஜெர்மனியில் உள்ள வேதாகம அறிஞரான டிஸ்கென்டோர்ப் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. 1844 இல் சீனாய் மலையில் இருந்த தூய காதரீன் துறவியர் மடத்தில் கிடைத்தது. இது அங்கு குப்பைக்கூடையில் இருந்ததைக் கவனித்தார். இவர் அதைக் கண்டெடுக்காவிட்டால் இந்த அரிய பொக்கிஷம் குப்பையோடு குப்பையாகப் போட்டு எரித்து அழிக்கப்பட்டிருக்கும். இதில் பழைய ஏற்பாட்டின் 199 தகடுகளும் புதிய ஏற்பாடு முழுவதும் கிடைத்தது.

4. கோடக்ஸ் வாட்டிக்கானஸ்

இதுவும் கி.பி.330 இல் எழுதப்பட்டதே. இது ரோமாபுரியில் உள்ள வாட்டிக்கன் நூலகத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்தது. இது 1481 இல் கண்டுபிடித்து எடுக்கப்பட்டது. ஆனால் இந்த கையெழுத்துப் பிரதி 19ஆம் நூற்றாண்டு வரை திறமையான வேத அறிஞர்களுக்குக் காட்டப்படவில்லை. 312 இல் ரோம சக்கரவர்த்தியாகக் கான்ஸ்டன்டைன் வந்தபோது, அவர் வேதாகமத்துக்கு 50 நகல்கள் எடுக்கச் செய்தார். கோடக்ஸ் சினைட்டிக்கஸ், கோடகஸ் வாட்டிக்கானஸ் என்பவை இந்த 50 பிரதிகளில் உட்பட்டவை என்று நம்பப்படுகிறது.

(தொடரும்)

மொழியாக்கம்: ஜி.வில்சன்

வேதாகமம் பற்பல மொழிகளில் எழுதப்பட்டன!

வேதாகமம் உருவானது எப்படி? (மார்ச் – ஏப்ரல் 2026)
Dr.உட்ரோ குரோல்

ஜெரோம் லத்தீன் வில்கேட் வேதாக மத்தை மொழிபெயர்த்தவர். இன்று உலகெங்கும் உள்ள ரோமர் கத்தோலிக்கர்களால் பயன்படுத்தப்படும் வேதாகமம் இதுவே. இவர் தள்ளுபடியாகம நூல்களை வேதாகமத்துடன் சேர்க்கக்கூடாது. அவற்றுக்கு அதற்குத் தகுதியில்லை என்றார். ஆனால், ரோமாபுரியில் இருந்த ரோமர் கத்தோலிக்க பிஷப்புகள் தள்ளுபடியாகம நூல்களை வேதாகமத்துடன் சேர்க்கவேண்டும் என்று கூறினார்.

கி.பி.முதல் நான்கு நூற்றாண்டுகளில் தொகுக்கப்பட்ட வேதாகம நூல்களுடன் இந்தத் தள்ளுபடியாகம நூல்கள் சேர்க்கப்படவில்லை.

1546இல் டிரெண்டில் நடந்த ரோமன் கத்தோலிக்கர்களின் மாநாட்டில், இந்தத் தள்ளுபடியாகம நூல்கள் வேதாகம நூல்களுடன் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. எனவே, அவர்களுக்காக அச்சிடப்பட்ட வேதாகமங்களில் பழைய ஏற்பாட்டுக்கும், புதிய ஏற்பாட்டுக்கும் நடுவே இந்தத் தள்ளுபடியாகம நூல்கள் சேர்க்கப் பட்டிருப்பதைக் காணலாம். இந்த வேதாகமத்தைச் சீர்திருத்த மரபினரோ, வேறு சபைப்பிரிவினரோ ஏற்றுக்கொள்வதில்லை.

66 புத்தகங்கள் புனித நூல்களாகத் தெரிந்தெடுக்கப்பட்டன. இவையனைத் தும் ஆதித்திருச்சபையினரால் தேவனுடைய ஆவியினால் தூண்டப்பட்டு எழுதப்பட்டுள்ளவை என அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த 66 புனித நூல்களும் நாம் வேதாகமம் என்று அழைக்கும் நூலகத்தில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன.

பழைய ஏற்பாட்டு நூல்கள் யாவும் கி.மு நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்டன. புதிய ஏற்பாட்டு நூல்கள் அனைத்தும் முதல் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதப்பட்டன.

கி.பி.397 இல் கார்த்தேஜ் என்னும் இடத்தில் நடைபெற்ற மூன்றாம் கிறிஸ்தவ மாநாட்டில் 27 புதிய ஏற்பாட்டு நூல்களும் புனிதமானவை, வேதாகமத்தில் சேர்த்துக்கொள்ளத் தகுதியானவை என்று முடிவு செய்யப்பட்டது. அந்த நூற்றாண்டிலேயே வேதாகமத்தில் சேர்க்கப்பட வேண்டிய 66 பரிசுத்த நூல்களும் தெரிந்தெடுக்கப்பட்டு முடிக்கப்பட்டன. அந்த நாள் முதல் வேதாகமத்தில் எதுவும் கூட்டப்படவும் இல்லை, குறைக்கப்படவும் இல்லை.

நாம் ஒரு காரியத்தை நினைவுகூர வேண்டும்.

வேதாகமம் அதிகாரபூர்வமான ஒரு புத்தகத் தொகுதி அல்ல.

வேதாகமம் அதிகாரபூர்வமான புத்தகங்களின் ஒரு தொகுதியாகும்.

வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது என்று மனிதர் சொல்லுவதால் அது அப்படி ஆக்கப்பட்டதல்ல. வேதாகமம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. எனவே மக்கள் அப்படிக் கூறுகிறார்கள்.

கார்த்தேஜில் நடந்த மூன்றாவது உலகமாநாட்டில் 27 புதிய ஏற்பாட்டு நூல்களையும், தேவ ஆவியினால் தூண்டப்பட்டு எழுதப்பட்டவை என்று தீர்மானித்தார்கள். அங்கீகரித்தார்கள். அதனால்தான் அந்த 27 புத்தகங்களும் தேவ ஆவியினால் தூண்டப்பட்டு எழுதப்பட்டவை. இதை எந்த மாநாடு கூடி அங்கீகரித்தாலும், அங்கீகரிக்காவிட்டாலும் அவை அப்படியே இருக்கும். அவற்றுக்கு மனிதனுடைய சான்றிதழ் தேவையில்லை. ஆவியினால் தூண்டப்பட்டதால் தான் கார்த்தேஜில் நடந்த மூன்றாவது உலக மாநாட்டினர் இந்த 27 புத்தகங்களும் ஆவியினால் தூண்டப்பட்டு எழுதப்பட்டவை என்று கூறினர்.

கர்த்தருடைய வார்த்தைகள் அடங்கிய வேதாகமத்தை நாம் முழு நம்பிக்கையுடன் வாசிக்கலாம். நாம் அதில் தேவனுடைய உள்ளத்தை வாசிக்கிறோம். தேவனுடைய உள்ளமும், சித்தமும் மனுக்குலத்துக்கு வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கற்பனை செய்து பாருங்கள்! உங்களுக்கு தேவனுடைய வார்த்தை நேரடியாகக் கிடைக்கிறது. தேவனுடைய வார்த்தையை வாசிக்கிறீர்கள். தேவனுடைய சத்தத்தைக் கேட்கிறீர்கள். தேவன் தம் வசனத்தின் மூலம் உங்களுடனே பேசுகிறார்.

பயப்படாதே! நான் உன்னுடனே இருக்கிறேன். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.

இவை யார் கூறியது?

உங்களுடைய தலையில், மூளையில் இதை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் இருதயத்தில் பதித்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் அதைச் செயல்படுத்திக் காட்டுங்கள். உலகமெங்கும் அதை விதைப்பாயாக!

(தொடரும்)

மொழியாக்கம்: ஜி.வில்சன்

வேதாகமம் பற்பல மொழிகளில் எழுதப்பட்டன!

வேதாகமம் உருவானது எப்படி? (ஜனவரி – பிப்ரவரி 2026)
Dr.உட்ரோ குரோல்

வேதாகமத்தில் எந்தெந்த நூல்கள் சேர்க்கப்படவேண்டும் என்று தீர்மானித்து. ஐந்து அளவுகோல்கள் பயன்படுத்தப்பட்டன.

1. எழுதியவர்

புத்தகத்தை அல்லது நிருபத்தை எழுதியவர் யார்? அது ஒரு அப்போஸ்தலனா? புகழ்பெற்ற சபை உறுப்பினரா? அல்லது அறியப்படாத ஒருவரா?

2. சபைமக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா?

முதல் நூற்றாண்டுத் திருச்சபை மக்கள் இந்த நூல் அல்லது நிருபம் குறித்து என்ன கருத்து கொண்டிருந்தார்கள்? அதைச் சரியானது என்று ஏற்றுக்கொண்டார்களா? அது அவர்களது அனுபவங்களோடு ஒத்துப்போனதா?

3. சபைக்குருக்கள் இந்தப் புத்தகங்களை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டார்களா?

இரண்டாம் நூற்றாண்டில் சபைக் குருக்கள் இப்புத்தகங்களை ஏற்றுக்கொண்டார்களா? இந்தக் குருக்கள் இயேசுவின் சீஷர்களின் சீஷர்கள். உதாரணமாக, போலிகார்ப் என்பவர் அப்போஸ்தலனாகிய யோவானின் சீஷனாய் இருந்தவர். இந்த நூல்களைக் குறித்துப் பரிசீலிக்கும்போது “இந்தப் புத்தகத்தைக் குறித்துப் போலிகார்ப் என்ன நினைத்தார்?” என்று கேட்பார்கள்.

4. புத்தகத்தின் பொருளடக்கம்

அந்தப் புத்தகம் அல்லது நிருபம் எதைப் பற்றியது? அதில் கூறப்பட்டிருக்கும் கொள்கைகள் நல்லவைகளா? சரியான வைகளா? ஏற்றுக்கொள்ளக் கூடியவைகளா? வாழ்க்கைக்குப் பொருத்தமானவைகளா? பின்பற்றக் கூடியவைகளா? இது வேறுபுத்தகங்களின் கருத்துக்களோடு முரண்பட்டதா? இப்புத்தகத்தில் உள்ள கதைகள் பண்பற்றதாகவும், கற்பனையானதாகவும் இருக்கின்றனவா?

5. தனிநபர் பக்திவிருத்திக்கேதுவானதா?

சபைமக்களுக்கும், தனிநபர்களுக்கும் நம்பிக்கை ஊட்டக்கூடிய, அகத்தூண்டுதல் தரக்கூடிய, பக்திவிருத்தி ஏற்படுத்தக்கூடியதாய் இருக்கிறதா?

இந்த நெறிமுறைகளில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு சரியாய் இருந்தால் போதாது. எல்லா அம்சங்களும் சரியாய் பொருந்தியிருக்க வேண்டும்.

புத்தகத்தின் காலம் அது அதிகார பூர்வமானது என்று சான்றளித்து விடுவதில்லை. பல பழைய புத்தகங்கள் வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. உதாரணமாக எண்ணாகமம் 21:5இல் கர்த்தருடைய புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது என்று உள்ளது.

யோசுவா 10:13 இல் இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது என்று உள்ளது. இந்தப் புத்தகங்கள் வேதாகமத்தில் சேர்க்கப்படத் தகுதியானவை என்று காணப்படவில்லை என்று தெரிகிறது.

வேதாகமப் புத்தகங்கள் எழுதப்பட்ட மொழி அடிப்படையில் புத்தகங்கள் தெரிந்தெடுக்கப்படவில்லை.

தோபித்து என்னும் புத்தகம் எபிரெயமொழியில் எழுதப்பட்டது. ஆனால் அது பழையஏற்பாட்டு நூல்களுடன் சேர்க்கப்படவில்லை. ஆனால் அதே வேளையில் தானியேல் புத்தகத்தின் ஒரு பகுதி அரமேய மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. அது பழைய ஏற்பாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.

தள்ளுபடியாகம நூல்கள்

சில வேதாகமங்களில் பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் இடையே 14 நூல்கள் இருப்பதைக் காணலாம். இவற்றைத்தான் தள்ளுபடியாகம நூல்கள் (APOCRYPHA) என்கிறோம். இந்த நூல்களில் பல முக்கியமான தகவல்கள் உள்ளன. எனினும் அவை பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் எழுதப்படவில்லை என்று கணிக்கப்பட்டு, வேதாகம பரிசுத்த நூல்களுடன் சேர்க்கப்படவில்லை. ஏன்? பெரும்பாலும் அவற்றின் பொருளடக்கமே அதற்குக் காரணம்.

தோபித்து ஒரு தள்ளுபடியாகம நூல். இது தோபித்து என்னும் ஒரு தெய்வபக்தியுள்ள யூதனின் கதை. ஒருநாள் தற்செயலாக ஒரு சிட்டுக் குருவியின் எச்சம் இவனுடைய கண்ணில் பட்டு, கண் பார்வை போய்விட்டது. பின்னர் ரபேல் என்னும் தேவதூதன் வந்து, மீனின் இருதயம், ஈரல், பித்தப்பை இவற்றினால் ஒரு கஷாயம் தயாரித்து தோபித்துவின் கண்களில் விட்டான். உடனே அவனுக்கு கண்பார்வை கிடைத்துவிட்டது. பரிசுத்த நூல்களைத் தெரிந்தெடுத்த மக்களுக்கு இது ஒரு நீண்ட கதையாகத் தெரிந்தது. இதைச் சேர்த்துக்கொள்ளவில்லை.

இன்னொரு தள்ளுபடியாகம நூலின் பெயர் பேலும், பேயும் என்பது. இதில் இரண்டு கதைகள் உள்ளன. இதில் உள்ள இரண்டாவது கதையில் வரும் பேய், பாபிலோனியரால் கடவுளாக நினைத்துத் தொழப்பட்டது. இந்தக் கதையில் இதைப் பணிந்துகொள்ளும் படியாகத் தானியேல் அழைக்கப்பட்டான். தானியேல் அதை வணங்குவதற்குப் பதிலாக அதற்கு கீல், முடி, கொழுப்பு கலந்த கலவையைச் சாப்பிடக் கொடுத்தான். அது அதைச் சாப்பிட்டு அதன் வயிற்றின் உள் சென்றதுமே அது வெடித்துச் சிதறியது. இந்தப் புத்தகம் பரிசுத்த நூல்களுடன் சேர்க்கப்படாததன் காரணம் புரிகிறதல்லவா?

தேவஆவியினால் தூண்டப்பட்டு எழுதப்பட்ட பரிசுத்த நூல்களோடு இந்தத் தள்ளுபடியாக நூல்கள் சேர்க்கப்படாததற்குத் தகுந்த காரணங்கள் உண்டு. பரிசேயர்கள் இந்த நூல்களை பழைய ஏற்பாட்டுடன் சேர்க்கவில்லை. இந்த நூல்களிலிருந்து எந்த மேற்கோளும் எடுத்துக்காட்டப்படவும் இல்லை. யூதர்களோ, புதிய ஏற்பாட்டு நூலாசிரியர்களோ, இந்த தள்ளுபடியாகம நூல்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவும் இல்லை. தாங்கள் எழுதும்போது இவற்றிலிருந்து எந்த மேற்கோளையும் எடுத்துக் காட்டவும் இல்லை. அதற்கு அவை தகுதியானவை அல்ல.

யூத வரலாற்றாசிரியரான ஜோச பாஷீம் இந்தநூல்களைத் தள்ளிவிட்டார். புகழ்பெற்ற யூத தத்துவ ஞானியாகிய பைலோ என்பவர் இந்த நூல்களை அங்கீகரிக்கவே இல்லை. ஆதித்திருச்சபையின் சபைக்குருக்களில் ஒருவரும் இந்த நூல்களில் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

(தொடரும்)

மொழியாக்கம்: ஜி.வில்சன்

வேதாகம நூல்கள் எவ்வாறு தொகுக்கப்பட்டன?

வேதாகமம் உருவானது எப்படி? (நவம்பர் – டிசம்பர் 2025)
Dr.உட்ரோ குரோல்

வேதாகமத்தில் 66 புத்தகங்கள் உண்டு. அவற்றில் 39 புத்தகங்கள் பழைய ஏற்பாடு என்றும் 27 புத்தகங்கள் புதிய ஏற்பாடு என்றும் அழைக்கப்படும், பழைய ஏற்பாட்டில் 929 அதிகாரங்களும், புதிய ஏற்பாட்டில் 260 அதிகாரங்களும் உள்ளன.

பழைய ஏற்பாட்டில் எப்போதும் 39 புத்தகங்கள் இருந்ததில்லை. யூத ஜெப ஆலயங்களில் பயன்படுத்தப்பட்ட வேதாக மங்களில் 24புத்தகங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் அவற்றில் 39 புத்தகங்களிலும் இருந்த பொருள் இருந்தது.

இந்த எபிரெய வேதாகமத்தில் இருந்த 24 புத்தகங்களும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன அவை;

1. சட்டப்புத்தகங்கள் அல்லது தோரா

இவை ஐந்தாகமங்கள் என்று அழைக்கப்படுகிறது ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் ஆகியவை.

2. தீர்க்கதரிசன புத்தகங்கள்

ஏசாயா, எரேமியா போன்ற பெரிய தீர்க்கதரிசிகள் முதல் மல்கியா வரை உள்ள சின்ன தீர்க்கதரிசிகள் வரை எழுதிய புத்தகங்கள்.

3. பிறநூல்கள்

இதில் வரலாற்று நூல்களும் (இராஜாக்கள், நாளாகமம், போன்றவை) செய்யுள் நூல்களும் (சங்கீதம், நீதிமொழிகள், யோபு, ரூத், பிரசங்கி, எஸ்தர் போன்றவை) அடங்கும்.

பல வேத அறிஞர்கள் யோபு புஸ்தகம்தான் முதலில் எழுதப்பட்டது என்று நம்புகிறார்கள், கி.மு 2150 இல் எழுதப்பட்டிருக்கலாம். அதற்கு அடுத்தபடியாக ஐந்தாகமங்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும். தீர்ககதரிசன நூல்கள் கி.மு 700, 600 இல் தொடங்கி கி.மு 400வரை எழுதப்பட்டிருக்கலாம். கடைசியில் எழுதப்பட்ட எஸ்றா, நெகேமியா, மல்கியா போன்றவை பழைய ஏற்பாட்டு நூல்கள் 1700 ஆண்டு காலத்தில் எழுதப்பட்டவை.

புதியஏற்பாட்டின் நூல்கள் குறுகிய காலத்தில் எழுதப்பட்டவை. கி.பி 50 முதல் கி.பி 100 ஆண்டுக்குள் எழுதி முடிக்கப்பட்டவை. பலர் யாக்கோபு எழுதிய நிருபம் முதன்முதலில் கி.பி 49ல் எழுதப்பட்டது என்று நம்புகிறார்கள். இதைத் தொடர்ந்து தெசலோனிக்கேயருக்கு எழுதப்பட்ட நிருபங்களும் பவுலின் ஆரம்ப நிருபங்களும் எழுதப்பட்டன. அதன்பின் நற்செய்தி நூல்கள் எழுதப்பட்டன. (மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்). கடைசியாக யோவான் எழுதிய மூன்று நிருபங்களும் வெளிப்படுத்தின விசேஷங்களும் எழுதப்பட்டன.

அநேக புதிய ஏற்பாட்டு நூல்களில் அவற்றை எழுதியவர்களின் பெயர்கள் உள்ளன. யாக்கோபு, மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான், பேதுரு, யூதா என்பன, அப்போஸ்தலனாகிய பவுல், எழுதிய நிருபங்கள் அவை எந்த நகரத்தாருக்கு எழுதப்பட்டதோ, அந்த நகரத்தின் பெயரைத் தாங்கி உள்ளன. ரோமர், கொரிந்தியர், கலாத்தியர், எபேசியர், பிலிப்பியர், கொலோசெயர், சில புத்தகங்கள் பவுலினால் தனிப்பட்ட நபர்களுக்கு எழுதப்பட்டன. அவை தீமோத்தேயு, தீத்து, பிலேமோன்,

பழைய ஏற்பாட்டுக் காலத்திலும், புதிய ஏற்பாட்டு காலத்திலும் வேதாகமத்தில் சேர்க்கப்பட்டிருக்கிற நூல்கள் தவிர இன்னும் ஏராளமான நூல்கள் எழுதப்பட்டிருந்தன. மக்கபேயர்1, மக்கபேயர்2, தோபித், பாருக், என்ற பெயர்களில் உள்ள புத்தகங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பேதுருவின் நடபடிகள், பவுலின் நடபடிகள் பற்றித் தெரியுமா? நீங்கள் எஸ்தரின் சரித்திரம் பற்றி அறிந்திருப்பீர்கள். ஆனால் யூடித் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எஸ்றாவின் புத்தகம் பற்றி அறிந்திருப்பீர்கள். ஆனால் 1, 2 – எஸ்திராவின் புஸ்தகங்கள் பற்றி கேள்விப்ட்டிருக்கிறீர்களா?

பிரசங்கி என்ற புத்தகம் தெரியும். அதுபோல இன்னொரு புத்தகம் உள்ளது தெரியுமா? 12 வயதில் இயேசு தேவாலயத்தில் ஞானிகளின் கேள்விகளுக்கு விடை கூறியதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இயேசு களிமண்ணால் சிறுபறவைகள் செய்து அவற்றுக்கு உயிர்கொடுத்து, அவை பறந்து செல்வதைக் கண்டு ரசித்து விளையாடியதைப்பற்றி அறிந்ததுண்டா? இன்னும் இவைபோன்ற பல நூல்களும் பரிசீலனை செய்யப்பட்டு, வேதாகமத்தில் சேர்க்கப்படாத தகுதியற்றவை என முடிவு செய்யப்பட்டது. தள்ளுபடியாகம நூல்கள் என்று இந்த நூல்கள் விற்கப்படுகின்றன. இவற்றை வாங்கிப் பணத்தை வீணாக்காதீர்கள். வேதாகமத்தின் எந்த நூலும் இழக்கப்படவில்லை.

எப்படி சில புத்தகங்கள் மாத்திரம் வேதாகமத்தின் பகுதியாக இணைக்கப்பட்டுள்ளது. எந்த தேர்வு செயல்முறை பயன்படுத்தப்பட்டது? இதற்கான அளவு கோல்கள் எவை? வேண்டும், வேண்டாம் என்று தீர்மானங்கள் செய்தது யார்? இவையனைத்தும் முக்கியமான கேள்விகள்.

நூல்களின் தரத்தை அறிவதற்கு நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. புத்தகங்களில் கீழ்க்கண்ட அம்சங்கள் உள்ளனவா? என்று பரிசோதிக்கப்பட்டது.

1. அதிகாரம் உடையதாய் இருக்க வேண்டும்.

2. தெய்வீகமானதாய் இருக்க வேண்டும்.

3. விசுவாசிக்கக் கூடியதாய் இருக்க வேண்டும்.

4. சபையில் செயல்படுத்தத்தக்கதாய் இருக்க வேண்டும்.

தெரிந்தெடுக்கப்பட்ட நூல்கள், “CANON” என்று அழைக்கப்பட்டன. இதற்கு அளவுகோல் என்று பொருள். வேதாகமத்தில் உள்ள 66 நூல்களும் “பரிசுத்த நூல்கள்” என்றே அழைக்கப்படும். இராஜாவின் கையில் செங்கோல் இருந்து நீதியாய் அரசாளுவது போல, இந்த நூல்கள் செங்கோல் போலக் கிரியை செய்யும்.

(தொடரும்)

மொழியாக்கம்: ஜி.வில்சன்

வேதாகமம் பற்பல மொழிகளில் எழுதப்பட்டன!

வேதாகமம் உருவானது எப்படி? (செப்டம்பர் – அக்டோபர் 2025)
Dr.உட்ரோ குரோல்

வேதாகமம் மூன்று மொழிகளில் எழுதப்பட்டன. அவை:

1.எபிரேயம், 2.அரமேய மொழி, 3.கிரேக்க மொழி

பழைய ஏற்பாட்டில் பெரும்பகுதி எபி ரேய மொழியில் எழுதப்பட்டது. சில பகுதி கள்மட்டும் அரமேய மொழியில் எழுதப்பட்டன அவை:

1. எஸ்றா 4 முதல் 8 வரை உள்ள அதிகாரங்கள்.

2. தானியேல் 2 முதல் 7 வரை உள்ள அதிகாரங்கள்.

3. எரேமியா 10:11.

எபிரேயமொழி அழகிய சித்திர வடிவான மொழி. எபிரேயர்கள் சித்திரங்களாய் சிந்தித்தார்கள். எனவே பெயர்ச் சொற்கள் உறுதியாகவும், தெளிவாகவும் இருந்தன. அவர்கள் தெளிவாக, உவமை, உருவகங்களுடன் பேசினார்கள், ஒவ்வொன்றும் “ஜீவன்” உள்ளதாக துடிப்புள்ளதாகவும் கருதப்பட்டது. பால் வேறுபாடு காட்டாத பால் இம்மொழியில் இல்லை (Neuter). எபிரேய மொழியில் ஒரு கதையை நாடகமாக்குவது எளிது, தேவனுடைய மக்களாகிய இஸ்ரவேலரின் செயல்பாடுகளை வர்ணிக்க இம்மொழி மிகவும் ஏற்றது.

எபிரேய மொழி தனிப்பட்ட நபருக்குரிய மொழியாகும். இது இருதயத்திற்கும் உணர்ச்சிகளுக்கும் கிளர்ச்சியூட்டுவது; உள்ளத்துக்கு அல்ல.

எபிரேய மொழி பேசுகிறவர்கள் எபிரேயர்கள். எபிரேயர்களும் இஸ்ரவேலரும் ஒன்றே. இஸ்ரவேலரின் நாட்டில் எபிரேய மொழி இருந்தது. தேவன்தாம் நேசிக்கும் மக்களை இஸ்ரவேல் நாட்டில் தழைத்தோங்கச் செய்வார். அவர் சொல்லுவதைப் பாருங்கள்: “நான் உங்களைச் சிநேகித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அதற்கு நீங்கள்: எங்களை எப்படிச் சிநேகித்தீர் என்கிறீர்கள்; கர்த்தர் சொல்லுகிறார்: ஏசா யாக்கோபுக்குச் சகோதரன் அல்லவோ? ஆகிலும் யாக்கோபை நான் சிநேகித்தேன். ஏசாவையோ நான் வெறுத்தேன்; அவனுடைய மலைகளைப் பாழும், அவனுடைய சுதந்தரத்தை வனாந்தரத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தாவும் ஆக்கினேன்” (மல்கியா 1:2,3). தேவன் இஸ்ரவேல் தேசத்தை யாக்கோபுவுக்காக நேசித்திருக்கிறார்.

புதிய ஏற்பாடு முழுவதும் கிரேக்க மொழி யில் எழுதப்பட்டுள்ளது. கிரேக்க மொழி எபிரேய மொழியைக் காட்டிலும் முற்றிலும் வித்தியாசமானது. இது ஒரு அறிவுப்பூர்வமான மொழி! இது உள்ளத்துக்கும் பிரியமான மொழி; இருதயத்துக்கு அல்ல. கிரேக்க மொழியில் ஒரு காரியத்தை அறிவுபூர்வமாக்குவது எளிது; ஒரு கருத்தை எளிதாக வெளிப்படுத்தலாம். எனவே இறையியல் கருத்துக்களை கிரேக்க மொழியில் வெளிப்படுத்த முடியும். எபிரேய மொழியில் இல்லாத ஒரு மொழித் தெளிவு கிரேக்க மொழியில் உள்ளது.

எபிரேய மொழியைப் போலல்லாமல், கிரேக்க மொழி உலகமெங்கும் நாகரீகம் மிகுந்த நாடுகளில் புதிய ஏற்பாட்டு காலத்தில் பேசப்பட்டது.

கிறிஸ்துவின் நற்செய்தி உலகெங் கும் எல்லாத் தேசங்களுக்கும் பிரசங்கிக்கப்பட வேண்டும் (லூக்கா 24:47). எனவே இந்த நற்செய்தி கிரேக்க மொழியில் கூறப்பட வேண்டும் என்று தேவன் விரும்பினார். கிரேக்க மொழி இயற்கையாகவே எல்லோராலும் சாதாரணமாகப் பேசப்பட்ட மொழி. தெருவில் போகும் எல்லோரும் கிரேக்க மொழி பேசுவார்கள்.

புதிய ஏற்பாட்டில் உள்ள கொள்கைகள், நற்செய்தி, இவற்றை வெளிப்படுத்தவும் மற்றவர்களுக்குக் கூறவும் கிரேக்க மொழி மிகவும் வசதியாக இருந்தது.

வேதாகமம் ஏன் எழுதப்பட்டது?

வேதாகமம் எழுதிவைக்கப்பட்டி ருப் பதில் அநேக நன்மைகள் உண்டு.

1. முதலாவது தெளிவு

பேசுவதைக் காட்டிலும் எழுதுவது மிகவும் தெளிவாக ஒரு காரியத்தை பதிவு செய்ய உதவும்.

2. இரண்டாவதாக பரவச்செய்தல்

மனிதர்கள் இறந்துபோகிறார்கள். நினைவுகள் மறந்துபோக வாய்ப்புண்டு. ஆனால், தேவனுடைய சத்தியங்களையும், வார்த்தைகளையும் எழுதி வைத்திருந்தால் அவை எவ்வளவு காலத்துக்கும் அழியாமல் இருக்கும். நற்செய்திப் பணி யாளர்கள் தங்கள் ஊழியத்தின் மூலமாக ஆதாயப்படுத்தப்படும் புதிய விசுவாசிகளி டம் தேவனுடைய வார்த்தைகள் அடங் கிய வேதாகமத்தைக் கொடுக்கலாம். அவர்கள் அதைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம். தேவஊழியர்கள் வேதாகமத்தைக் கொடுத்துவிட்டு வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டாலும் புதிய விசுவாசிகள் அதைப்படித்து, ஆவியில் வளரவும், கள்ளப்போதனைகளை எதிர்த்து வெறுக்கவும் வாய்ப்பு உண்டாகும். உலகில் துன்பங்களால் ஆட்கள் இறந்துபோனாலும் வேதாகமம் அழியாமல் இருக்கும்.

வேதாகம நூல்களை எழுதிய ஆதி எழுத்தாளர்களை தேவன் அழைத்து, அபிஷேகம் பண்ணி, ஆசீர்வதித்து எழுதும்படி அகத்தூண்டுதல் கொடுத்து, ஆவியானவரின் நடத்துதல் எப்போதும் அவர்களுடன் இருக்கச்செய்தார். தேவன் கூறியதை, இயேசுவின் போதனைகளை அப்படியே தவறில்லாமல் எழுதும்படி அனுக்கிரகம் பண்ணினார்.

இதில் மிகவும் சிறப்பான அம்சம் என்னவென்றால், எழுதப்பட்ட வேதநூல்களில் தேவன் தம்மை வெளிப்படுத்தினார். கற்பனை செய்துபாருங்கள். தேவன் தமது உள்ளத்தில் இருப்பதை நமக்குத் தெரிவிக்கும் அளவுக்கு நம்மை நேசித்திருக்கிறார். இந்த 21ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் நாம் நம்பி, விசுவாசிப்பதற்கு ஏதாவது வேண்டும் என்று தேவன் அறிந்திருந்தார். இந்தக் கடைசிக்காலத்தில் தோன்றி இயங்கிக்கொண்டிருக்கும் இயக்கங்கள், ஊழியங்கள், ஊழியர்கள். பேச்சாளர்கள் இவர்களை நடுநிலையில் நின்று மதிப்பீடு செய்யத் தெரியவேண்டும், அதற்கு நமக்கு அறிவும், பயிற்சியும், திறமையும் வேண்டும்.

கர்த்தருடைய பரிசுத்த வேதாகமம் தான் நமக்குத் திட்டமான உரைகல், அவர் நம்மை நேசித்தபடியால் நம்மை யூகித்துக்கொண்டும், அனுமானித்துக்கொண்டும் இருக்கச் சொல்லவில்லை. நாம் அறியவேண்டிய அனைத்துக் காரியங்களையும் அவர் வேதாகமத்தில் எழுதச்செய்திருக்கிறார். நாம் தேவையானவற்றை அதிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்.

(தொடரும்)

மொழியாக்கம்: ஜி.வில்சன்

1. வேதாகமம் எப்படி எழுதப்பட்டது?

வேதாகமம் உருவானது எப்படி? (ஜூலை – ஆகஸ்டு 2025)
Dr.உட்ரோ குரோல்

வேதாகமப் புத்தகங்களை எழுதியவர்கள் இன்று எழுதுவார்களானால் கீழ்க் கண்ட நவீன கருவிகளைப் பயன்படுத்தியிருப்பார்கள்:

WORD PROCESSOR
IBM SELECTRIC II தட்டச்சுஇயந்திரம்
AN ELECTRIC SMITH CORONA
AN OLD MANUAL OLYMPIC

இவை புத்தகங்களை எழுதவும், அச்சிடவும் பயன்படும் புதிய கருவிகள்.

காலங்கள் மாறுகின்றன. பொருட்களும் மாறுகின்றன, வேதாகமம் எதில் எழுதப்பட்டது என்பது முக்கியமல்ல, தேவனுடைய ஆவியானவர் தங்களுக்குக் கிடைத்த எதன் மேலும் எழுதுங்கள் என்று எழுத்தாளர்களுக்கு கட்டளையிட்டார். எவ்வளவு தாழ்மை பாருங்கள்!

அநேக பொருட்களின்மேல் வேதாகமம் எழுதப்பட்டது.

வேதாகமம் மிகப்பழைய காலத்தில் எழுதப்பட்டதால் அக்காலத்தில் நடை முறையில் எழுதுவதற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களின்மேல் கர்த்தருடைய வார்த்தைகள் எழுதி வைக்கப்பட்டன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

1.களிமண்:

களிமண்ணில் கூரை ஓடுகள் செய்யப்பட்டு, அவற்றில் எழுத்துக்கள் பதிக்கப்பட்டிருப்பதை இன்று காண்கிறோம். பண்டைய காலத்தில் சாதாரணமாக எங்கும் கிடைக்கக்கூடியது களிமண். களிமண்ணால் தகடுகள் செய்யப்பட்டு, அதில் STYLUS என்னும் முக்கோண வடிவ எழுதும் கருவியால் எழுத்துக்கள் எழுதப்பட்டன. அவை உலர்ந்தபின் செங்கல் சூளையில் வைத்து சுடப்படுவதுபோல், இந்தத் தகடுகள் சுடப்பட்டு உறுதி செய்யப்படும்.

எசேக்கியேல் 4:1 இல் மனுபுத்திரனே, நீ ஒரு செங்கல்லை எடுத்து, அதை உன் முன்வைத்து, அதின்மேல் எருசலேம் நகரத்தை வரைந்து, என்று உள்ளது. ஆங்கில வேதாகமத்தில் மண் ஓடு என்று உள்ளது. இதுதான் களிமண் தகடு. இப்படிக் களிமண் தகட்டில் எருசலேம் நகரத்தை வரைந்து காட்டுவதன் மூலம் தேவன் எரேமியாவுக்கு எருசலேம் நகரம் பாபிலோனுக்கு அடிமைப்பட்டுப் போகும் என்று உணர்த்த விரும்பினார்.

வேதாகமம் சார்ந்த புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் இப்படி அக்காலத்தில் எழுதப்பட்ட களிமண் ஓடுகள் பலவற்றை தங்கள் ஆராய்ச்சியின்போது கண்டெடுத்துள்ளார்கள், அவற்றில் சித்திர எழுத்துகளும், குறியீடுகளும் உள்ளன.

2.கல்

பத்துக்கற்பனைகளை எழுதக் கற்பலகைள் பயன்படுத்தப்பட்டன. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு; நான் உனக்குக் கற்பலகைகளையும், நீ அவர்களுக்கு உபதேசிக்கிறதற்கு, நான் எழுதின நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுப்பேன் என்றார் (யாத். 24:12)

சீனாய்மலையில் கர்த்தர் மோசேயோடே பேசி முடிந்தபின், தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார் (யாத்.31:18).

தேவனிடத்தில் பெற்ற கற்பனைப் பலகைகளைச் சுமந்துகொண்டு மோசே இறங்கிவரும்போது, கீழே இஸ்ரவேல் புத்திரர் பொன் கன்றுக்குட்டியைச் செய்து அதை வணங்கி, ஆடிப்பாடிக்கொண்டிருப்பதைக் கண்டு, கோபங்கொண்டு, தன் கையில் இருந்த இரண்டு கற்பலகைகளையும் கீழே போட்டு உடைத்துவிட்டான். அப்பொழுது தேவன் மோசேயிடம் வேறு இரண்டு கற்பலகைகளைச் செய்து கொண்டு தம்மிடம் ஏறிவரச் சொன்னார்.

கர்த்தர் மோசேயை நோக்கி: முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்துக்கொள்; நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை அவைகளில் எழுதுவேன் (யாத்34:1) என்றார்.

பின்னால் யோசுவாவின் காலத்தில் கர்த்தருடைய கற்பனைகள் வேறு கற்களில் எழுதப்பட்டன. தேவனுக்குத் தகன பலிகளைச் செலுத்தும்படி யோசுவா ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக மோசே எழுதியிருந்த நியாயப்பிரமாணத்தை அவன் அங்கே கற்களில் பேர்த்தெழுதினான் (யோசு.8:32). அகழ்வாராய்ச்சியில் எகிப்தில் கல் தூண்களிலும், கல் பலகைகளிலும் எழுதப்பட்ட பல எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

3.பாப்பிரஸ்

உங்களுக்கு எழுதவேண்டிய காரியங்கள் அநேகமுண்டு; காகிதத்தினலும் மையினாலும் அவைகளை எழுத எனக்கு மனதில்லை. உங்களுடைய சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கு உங்களிடத்தில் வந்து, முகமுகமாய்ப் பேசலாமென்று நம்பியிருக்கிறேன் (2 யோவான் 12). இங்கே காகிதம் என்று யோவான் குறிப்பிடுவது பாப்பிரஸ் என்று அறியப்படுகிறது.

அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகள் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலது கரத்திலே கண்டேன் (வெளி.5:1). இந்தப் புத்தகம் பாப்பிரஸினால் செய்யப்பட்டது.

VELLUM – கன்றுக்குட்டியின் தோல்
PARCHMENT – ஆட்டுக்குட்டியின் தோல்
LEATHER – பசுவின் தோல்

2 தீமோ.4:13இல் இவற்றில் இரண்டு குறிப்பிடப்பட்டுள்ளன. துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவன் வசத்தில் நான் வைத்துவந்த மேலங்கியையும், புஸ்தகங்களையும், விசேஷமாய்த் தோற்சுருள்களையும், நீ வருகிறபோது எடுத்துக்கொண்டுவா.

புஸ்தகங்கள் அல்லது சுருள்கள் எனப்படுவது நீண்ட, பரப்பான பொருட்கள். அவற்றின்மீது செய்திகள் எழுதப்பட்டிருக்கும். மிருகங்களின் தோல்கள் பக்குவப்படுத்தப்பட்டு, நீண்ட சுருளாகச் செய்யப்பட்டு அவற்றில் செய்திகள் எழுதி, சுருட்டி வைக்கப்பட்டிருக்கும்.

பாப்பிரஸ் என்பது தண்ணீரில் வளரும் ஒரு செடி. இது 15 அடிவரை வளரும். இதன் உச்சியில் மிருதுவான பூக்கள் காணப்படும். இதன் தண்டு முக்கோண வடிவமானது. இதன் உட்பகுதியில் (Pith) சோறு, மிருதுவாக இருக்கும். இதுதான் எடுக்கப்பட்டு பேப்பர் செய்யப்படும். ஆரம்பத்தில் நீள அகலமான தகடுகள் போலச் செய்யப்பட்டு, பலப்படுத்தும்படியாக அதன் மேல் பிசின் பூசிக் காயவைப்பார்கள். பின்னர் பேனாவில் மை தொட்டு அதில் எழுதுவார்கள்.இக்காலத்தில் காகிதம் செய்வதற்கு வேறெந்தப் பொருளையும்விடப் பாப்பிரஸ்தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

4.உலோகம்

பசும்பொன்னினால் ஒரு பட்டத்தைப் பண்ணி, கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று அதிலே முத்திரை வெட்டாக வெட்டி, அது பாகையிலிருக்கும்படி அதை இளநீல நாடாவினால் பாகையின் முகப்பிலே கட்டுவாயாக (யாத்.28:36) இதை இஸ்ரவேலரிடம் கூறும்படி தேவன் மோசேயிடம் கட்டளையிட்டார்.

யோபு பெருமூச்சு விட்டுக்கொண்டு இவ்வாறு கூறினான்: ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்; அவைகள் ஒரு புஸ்தகத்தில் வரையப்பட்டு, அல்லது என்றைக்கும் நிலைக்க அவைகள் கருங்கல்லிலே உளிவெட்டாகவும் ஈய எழுத்தாகவும் பதித்தால் நலமாயிருக்கும் (யோபு 19:23,24).

வேதாகம எழுத்தாளர்கள் பொன்னை மாத்திரம் உபயோகிக்கவில்லை. அவர்கள் தங்களுக்குக் கிடைத்த சாதாரணப் பொருட்களிலும் எழுதினார்கள்.

(தொடரும்)

மொழியாக்கம்: ஜி.வில்சன்