(ஜூலை-ஆகஸ்டு 2014)

trinityகடவுள் ஒருவரே என்று வெகு கண்டிப்பாக நாம் போதிக்கப்பட்டிருக்க திரித்துவ உபதேசம் எங்கேயிருந்து வந்தது என்று கேட்கக்கூடும். திரித்துவம் என்கிற வார்த்தை வேதத்தில் இல்லை. ஆனால் திரித்துவ தேவன் வேதத்தில் இருக்கிறார். திரித்துவ உபதேசத்தை விளக்கிக் காட்டும்படி அப்போஸ்தலர் பிரயாசப்படவில்லை. ஆனால் திரித்துவ கடவுளை அவர்கள் ஆராதித்து வந்தார்கள் என்று பார்க்கிறோம். திரித்துவம் என்றால் மூன்று. திரியேகத்துவம் என்றால் மூன்றில் ஒன்று.

திரித்துவ உபதேசம் வேத வெளிப்படுத்தல். கடவுள் ஒருவரே என்று போதிப்பதும் வேதமே. அவர் மூவரென்று போதிப்பதும் வேதமே. திரித்துவ உபதேசம் நமது புத்திக்கு குழப்பமாயிருப்பது மெய்தான். திரித்துவ தேவனுக்கு அது குழப்பமில்லை. தேவனை அறிய வேண்டியது மகா முக்கியம். தேவன் தம்மைப் பற்றி எவ்வாறு வெளிப்படுத்துகிறாரோ, அவ்வாறு வெளிப்படுவதற்கு ஒரு நோக்கம் இருக்கவேண்டும். அந்த வெளிப்படுத்தலை நாம் ஏற்றுக்கொள்ளாவிட்டால் நம் ஆத்துமா சேதப்படும்.

திரித்துவ உபதேசம் சொல்லுகிறதினால் மாத்திரம் அறியக்கூடியதல்ல, அதை விளக்கிக் காட்ட மனுஷனுடைய அறிவும் போதாது. வாக்கும் போதாது. அப்போஸ்தலர்களும் பரிசுத்தவான்களும் இந்த பெரிய இரகசியத்தைத் தங்கள் புத்தியால் அறியாவிட்டாலும் ஆவிக்குரிய தங்கள் அனுபவத்தால் அறிந்து திரியேக தேவனை ஆராதித்து வந்தார்கள். அப்போஸ்தலர்கள் தங்கள் நிருபங்களில் பிதா, குமாரன், பரிசுத்தஆவி என்னும் பதங்களை உபயோகித்திருந்தும், திரித்துவத்தைப் பற்றிய வியாக்கியானத்தை அங்கே காணோம். அவர்களுக்கு “கடவுள் ஒருவரே”! அந்த கடவுளுக்குள் மூவரையும் கண்டார்கள்.

தேவன் தமது குமாரனை அனுப்பி நம்மை இரட்சிக்கும்படி சித்தங்கொள்ளாதிருந்தால் திரித்துவ உபதேசத்திற்கு இடமிராது. பிதா, குமாரன், ஆவி என்பது நமது இரட்சிப்பின் சம்பந்தமாகவே வெளிப்பட்டது. எந்த வழியாக திரித்துவம் வெளிப்பட்டதோ அந்த வழியாகவே திரித்துவ இரகசியத்தை அறிய வேண்டும். இரட்சிக்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகளுக்கு திரித்துவம் இடறலாயிருப்பதில்லை. கிறிஸ்துவைத் தங்கள் இரட்சகராக சொந்தமாக்கிக் கொள்ளாதவர்கள் திரித்துவ உபதேசத்தில் இடறுவதில் ஆச்சரியமில்லை. இது ஆவிக்குரிய வெளிப்படுத்தலேயன்றி புத்தியினால் மாத்திரம் கிரகிக்கக் கூடியதல்ல.

பிதாவைக் கடவுள் என்று எல்லாரும் ஒப்புக் கொள்வதால் அவருடைய தெய்வீகத்தை ரூபிக்க வேண்டியதில்லை. ஆகையால் கிறிஸ்துவினுடைய தெய்வீகத்தை ஒருவன் ஒப்புக்கொண்டால், ஆவியானவரின் தெய்வீகம் தானாக ரூபிக்கப்படும். உடனே திரித்துவ உபதேசம் ஸ்தாபிக்கப்படும்.

“கிறிஸ்துவைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று ஆண்டவர் பரிசேயரைப் பார்த்து மட்டுமல்ல, எக்காலத்திலுமுள்ள எல்லா மனுஷரைப் பார்த்தும் கேட்கிறார். வேதத்தில் குமாரனாகிய கிறிஸ்து தேவனுக்கு மாத்திரமே உரிய நாமங்கள், லட்சணங்கள், கிரியைகள் உடையவராகவும், வணக்கங்களுக்குரியவராகவும் எழுதப்பட்டிருக்கிறது என்று பார்க்கிறோம்.

நாமங்கள்
பிதா தமது குமாரனை தேவன் என்று அழைக்கிறார் (எபி.1:8), அவர் வானத்திலிருந்து வந்த கர்த்தர் (1கொரி.15:47), அவர் அல்பா ஓமெகா ஆதியும் அந்தமுமானவர், அவர் சர்வவல்லமையுள்ள கர்த்தர் (வெளி.1:8), மெய்யான தேவன் (1யோவான் 5:20), பிதாவும் குமாரனும் ஒன்று (யோவான் 10:30), குமாரனைக் கண்டவன் பிதாவைக் கண்டவன் (யோவான் 14:9), பிதாவின் நாமமும், குமாரனின் நாமமும் ஒன்று (மத்.28:19).

தெய்வீக லட்சணங்கள்
குமாரன் நித்தியர் (யோவான் 8:35,56), அவர் சர்வ வல்லவர் (மத்.18:18; எபி.1:3), அவர் சர்வஞானமுள்ளவர் (யோவான் 2:25; கொரி.2:3).

கிரியைகள்
குமாரன் சிருஷ்டிகர் (யோவான் 1:3), அவர் சர்வத்தையும் தாங்கி நடத்தும் தேவன் (எபி.1:3), அவர் பாவங்களை மன்னித்து மனிதருக்கு சமாதானத்தையும் ஆத்தும இளைப்பாறுதலையும் தருகிறவர் (லூக்.5:24; மத்.16:27). இதைத் தவிர “என்னை ஏற்றுக்கொள்ளாதவன் என்னை அனுப்பின பிதாவை ஏற்றுக் கொள்ளாதவனாயிருக்கிறான். என்னை யாரென்று அறியாதவன் என் பிதாவையும் அறியமாட்டான்” என்று வாசிக்கிறோம். ஆகையால், பிதாவை நம்புகிறவர்கள் அவர் தம்மைக் குமாரன் மூலமாய் நமக்கு வெளிப்படுத்தினது உண்மை என்று கண்டு கொள்ளலாம்.

ஆவியானவருடைய தெய்வீகத்தையும் வேத வசனங்களால் ரூபிக்கக்கூடும். கிறிஸ்துவின் தெய்வீகத்தை ஒப்புக்கொள்ளும்போது ஆவியானவர் தேவன் என்பது தானாக வெளிப்படும். ஆவியானவர் வேதத்தில் அறிவும் உணர்வுமற்ற ஒரு சக்திபோல பேசப்படாமல் ஒரு நபராகவே பேசப்படுகிறார். அவர் அறிவுள்ளவர் (1கொரி.2:10), அவர் இருதயங்களை ஆளுகிறவர், நமக்காக பரிந்து பேசுகிறவர் (ரோம.8:27), அவர் அன்புள்ளவர் (ரோம.15:32). அவர் துக்கப்படக்கூடியவர் (எபேசி.4:30), அவர் போதிக்கிறவர், உணர்த்துகிறவர், வெளிப்படுத்துகிறவர், சகல சத்தியத்திலும் நடத்துகிறவர் (யோவா.14:26, 16:13), தேவ ஊழியத்திற்கு ஆட்களைத் தெரிந்து ஏற்படுத்துகிறவர் (அப்.20:22), வரங்களைப் பகிர்ந்து கொடுக்கிறவர் (1கொரி. 12:11), ஆவியானவர் நித்தியர் (எபி.9:14), அவர் எங்கும் இருக்கிறவர் (சங்.139:7), அவர் சர்வவல்லவர் (லூக்.12:5), ஆவியானவர் சிருஷ்டிகர் (யோபு 33:4; சங்.104:30), ஜீவனை அருளுகிறவர் (ரோமர் 8:11), தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பேசுகிறவர் (2பேதுரு 1:21). பேதுரு அனனியாவைப் பார்த்து நீ பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பொய் சொன்னாய் என்றார். சற்று பொறுத்து நீ மனுஷனிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய் சொன்னாய் என ஆவியானவரைப் பேதுரு தேவன் என்று அழைத்திருக்கிறார். இவ்வாறு தேவனுக்கு மாத்திரம் உரிய நாமங்கள், லட்சணங்கள், கிரியைகள் ஆவியானவருக்கு இருப்பதனால் ஆவியானவரை தேவன் என்கிறோம்.

தேவன் ஒருவரே என்று சொல்லும்பொழுது அவர் பிதா மாத்திரமல்ல, குமாரனும் ஆவியானவரும் தேவன் என்பதை வேத வாக்கியங்களால் பார்த்தோம். அப்படியானால் மூன்று தேவர்களா என்கிற கேள்வி உடனே ஏற்படுகிறது. ஆனால் உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் என்றும், “என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாமென்றும்” தேவன் ஆதிமுதல் கண்டிப்பாய் கட்டளையிட்டிருக்கிறாரே. நம் ஆண்டவரும் கர்த்தர் ஒருவரே என்று சொன்னதை மத்.4:10, மத்.19:17, மாற்.12:29இல் வாசிக்கிறோம். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியைப்பற்றி திரும்பத் திரும்ப பேசியிருக்கிற பவுல் அப்போஸ் தலனும், “தேவன் ஒருவரே” என்று எழுதினார் (1தீமோ.2:5). ஏனைய அப்போஸ்தலர்களும் ஆதிசபையும் ஒரே தேவனை வணங்கினார்களேயன்றி மூன்று தேவர்களை வணங்கவில்லை. ஆகையால் இது ஒரு தேவ இரகசியமாகும். அதை பூரணமாய் அறிந்துகொள்ளக் கூடுமானால் அவர் தேவன் அல்ல. அற்ப அறிவுடையவர்கள் அளவில்லாத அறிவை பூரணமாக அறிந்துகொள்வது கடினம்.

பழைய ஏற்பாட்டிலே கடவுள் ஒருவரே என்பது கண்டிப்பான போதனை. அப்படியிருந்தும் அந்த ஒரே கடவுள் பன்மையில் பேசப்பட்டிருப்பதைக் காணலாம் (ஆதி.1:26; ஆதி.11:7; ஏசா.6:8). ஆனால் அந்த பன்மை நான்கு, அல்லது ஐந்தாக இராமல் மூன்று என்று சேராபீன்கள் மூன்றுமுறை போற்றுவதாலும் (ஏசா.6:3) மோசே இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஆசீர்வாதம் கூறும்பொழுது கர்த்தர், கர்த்தர், கர்த்தர் என்று மூன்று விதமாய் கூறினதாலும் (எண்.6:24-26) எடுத்துக் கொள்ளலாம்.

பழைய ஏற்பாட்டில் மங்கலாக மறைந்திருந்த திரித்துவம் புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவின் மூலமாகத் தெளிவு பெற்றது. உலகத்தை இரட்சிக்கும்படி தேவகுமாரன் மாம்சத்தில் வராதிருந்தால் திரித்துவ உபதேசத்திற்கு இடம் இராது. திரித்துவ உபதேசம் நமது இரட்சிப்பின் வழியாக வந்தது. எந்த வழியாக திரித்துவம் வெளிப்பட்டதோ அந்த வழியாகவே திரித்துவத்தை அறிய வேண்டும். பழைய ஏற்பாட்டில் குமாரன் கர்த்தருடைய தூதனானவர் என்னும் பெயரால் வெளிப்பட்டிருக்கிறார். ஆவியானவரும் பக்தருக்குள் கிரியை செய்திருக்கிறார். ஆகிலும் தேவன் மூவர் என்னும் எண்ணம் யூதருக்கு வரவேயில்லை. குமாரன் மாம்சத்தில் வந்த பின்புதான் அம்மூவருடைய சம்பந்தம் விசுவாசிகளுக்கு பிரத்தியட்சமாயிற்று. அவர் ஞானஸ்நானம் பெற்றபோது குமாரன் ஜெபிக்க, பிதா அவரோடு பேச, ஆவியானவர் குமாரன் மீதிறங்கக் காண்கிறோம்.

ஆண்டவர் தமது சீஷர்களைப் பார்த்து, “நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்” (யோவா.14:16) என்றார். இந்த வசனத்திலும், மத்.28:19லும், அப்போஸ்தலருடைய ஆசீர்வாதத்திலும் பிதாவையும், குமாரனையும், ஆவியானவரையும் காண்கிறோம். தேவன் ஒருவர் என்பது மாறாத சத்தியமானாலும் அந்த ஒரே தேவனுக்குள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்னும் மூவருண்டு என்கிற விஷயம், குமாரன் மாம்சத்தில் வந்தபின்தான் வெளிப்பட்டது. ‘நாம்’ என்று தேவன் முற்காலத்தில் பன்மையில் பேசினது இம்மூவரைக் குறித்தே. அப்படியிருந்தும் கிறிஸ்து ஒரே கடவுளென்று போதித்தாரேயன்றி மூன்று கடவுள்கள் உண்டென்று போதிக்கவில்லை.

அப்படியானால் திரித்துவத்தின் அமைப்பென்ன? தேவன் என்று சொல்லும்பொழுது பிதா மாத்திரமல்ல. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி மூன்றையும் நினைக்கவேண்டும். தேவன் என்பதற்குள் இந்த மூன்றும் சேர்ந்திருப்பதால் மூன்றுக்கும் தெய்வீகம் உண்டு. ஆனால் அவர்கள் வெவ்வேறான மூன்று தேவர்கள் அல்ல. அந்தக் கருத்தின்படி மாத்திரம் நாம் அவர்களைத் தனித்தனியே கடவுள் என்று பேசுகிறோம்.

தேவ அமைப்பில் பிதா உள்ளபோதே குமாரனும் இருக்கிறார். பிதா குமாரனிலும், குமாரன் பிதாவிலும் இருக்கிறார். ஆவியானவரும் ஆதிமுதல் கூடவே இருக்கிறார். ஆவியானவர் பிதாவையும், குமாரனையும் இணைக்கிற அன்பின் கட்டாயிருக்கிறார். ஆகையால் அவர் பிதாவிலிருந்து மாத்திரமல்ல, பிதாவிலும் குமாரனிலிருந்தும் புறப்படுகிறவரென்று வேதம் கூறுகிறது. இவ்வாறு முப்புரி நூல்போல் இணைக்கப்பட்டிருப்பவரே கடவுள்.

மூவரென்று சொன்னபோதிலும் ஒரே தன்மை, ஒரே அன்பு, ஒரே வல்லமை, ஒரே சித்தம், ஒரே யோசனை, ஒரே ஞானம், ஒரே மகிமை, ஒரே நித்தியம், ஒரே இரட்சிப்பு, ஒரே பாதுகாப்பு – இவ்வாறு தேவதன்மையிலும், தேவ லட்சணங்களிலும் தேவ கிரியைகளிலும் யாதொரு பேதமில்லாமல் என்றென்றும் ஜீவித்து அரசாள்கின்ற ஆவியான கடவுள் ஒருவரே. இந்த இரகசியத்தை அனுபவத்தால் கண்ட அப்போஸ்தலன், “வரங்களில் வித்தியாசம் உண்டு, ஆவியானவர் ஒருவரே. ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே. கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே” என்றார். (1கொரி.12:4-6).

ஆகையால் “நமது தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்” என்னும் பழைய ஏற்பாட்டு சத்தியத்தையும், நமது இரட்சிப்பின் சம்பந்தமாய் அவர் தம்மைப் பிதா, குமாரன், ஆவியாக வெளிப்படுத்தின புதிய ஏற்பாட்டு சத்தியத்தையும் நாம் முழு இருதயத்தோடும், நன்றி யோடும் ஏற்றுக்கொள்கிறோம்.

திரித்துவ உபதேசம் நியாயத்தால் ரூபிக்கப்படுவதல்ல, விசுவாசத்தால் ஏற்றுக்கொள்ளப் பட வேண்டிய ஒன்றாகும்.

(திரு.பாபிங்டன் அவர்களால் தொகுத்து எழுதப்பட்டது)