• சகோதரி சாந்தி பொன்னு •
(நவம்பர் – டிசம்பர் 2023)

நாம் புத்திர சுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக, காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப் பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார் (கலா.4:5).

சகோதரி சாந்தி பொன்னு

“இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவ வேதனைப்படுகிறது. அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திர சுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து நமக்குள்ளே தவிக்கிறோம்” (ரோமர் 8:22,23) என்கிறார் பவுலடியார். அப்படியே, இன்று உலகம் முழுவதிலும் ஒருவித தவிப்பும், மக்கள் மத்தியில் அவர்களையும் மீறிய ஒருவித பதட்டநிலையும் உருவாகியிருப்பதை மறுக்கமுடியாது. சீக்கிரம் ஒரு முடிவு வராதா என்று ஒரு சாரார் அங்கலாய்ப்பதையும், சீக்கிரம் முடிவு வந்துவிடுமோ என்று இன்னொரு சாரார் கலங்குவதையும், இன்னொரு சாரார் எதைக் குறித்தும் கரிசனை அற்றவர்களாய் சுய நலத்தோடு வாழுவதையும் காண்கிறோம். எப்படியிருந்தாலும் இரட்சகராகிய இயேசு நமக்காகவே உலகில் வந்துதித்தார் என்பதை நினைவுகூருவது கலக்கங்கள் மத்தியிலும் நமக்கு ஆறுதல் தரும் அருமருந்தாக நிச்சயம் அமையும்.

முன்குறிக்கப்பட்ட ஒரு இரட்சகர் பிறந்தார்

இந்தப் பிரபஞ்சத்தின் படைப்பாளராகிய தேவாதி தேவன் ஒரு மனுஷனாக மாத்திரமல்ல, ஒரு இரட்சகராக உலகில் வந்துதித்தது ஒரு சரித்திர நிகழ்வு. அவருடைய பிறப்பு தீர்க்கதரிசிகள் மூலமாக முன்னறிவிக்கப்பட்ட ஒன்று. வந்தவர் பிதாவின் சித்தத்தைச் செய்து முடித்ததும், அதற்காக சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டு தம்மை ஏகபலியாக செலுத்தியதும், மரித்து உயிர்த்தெழுந்து பரத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதும் சத்தியம். இதையெல்லாம் எதற்காகச் செய்து முடித்தார்? தேவனுடைய உறவிலிருந்தும் அவரது சந்நிதியிலிருந்தும் மனிதன் பிரிந்துபோனதால், மனிதனால் சரிசெய்ய முடியாததுமான அந்தக் கோரப்பாவத்தின் தண்டனையைத் தம்மேல் ஏற்றுக்கொண்டு, தேவகோபத்திற்கு ஆளான மனுக்குலத்தை மீண்டும் பிதாவுடன் சேர்த்துக்கொள்ள, அந்தப் பாவத்திற்கான கிரயமாக தமது பரிசுத்த இரத்தத்தைச் சிந்தி ஜீவனைக் கொடுக்க, பிரிந்துபோன மனுக்குலத்தைப் பிதாவுடன் ஒப்புரவாக்க, மனுக்குலத்துக்கு நித்திய வாழ்வை நிச்சயப்படுத்தவுமே இயேசு வந்து பிறந்தார்.

ஆனால், இயேசு ஒரு இரட்சகராக, மனுக் குலத்தை மீட்கும் பலியாக வருவார் என்பது மனிதன் பாவத்தில் விழுந்தபிற்பாடு எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல; மாறாக, “அவர் உலகத் தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய்த் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக் காலங்களில் வெளிப்பட்டார் (1பேதுரு 1:20) என்று பேதுரு தெளிவுபடுத்தியுள்ளார். இந்த வார்த்தை தேவன் யாவையும் முன்னறிந்தவர் என்பதையும், அவர் நம்மீது அநாதியாய் வைத்திருக்கின்ற விபரிக்கமுடியாத அன்பையும் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இரட்சகர் வர தாமதித்ததும் ஏன்?

உலகத்தோற்றத்திற்கு முன்னர் குறிக்கப்பட்ட வரும் (1 பேதுரு 1:20), தீர்க்கர்களால் அறிவிக்கப் பட்டவருமான மேசியா, மனிதன் பாவத்தில் விழுந்து ஏறத்தாழ இரண்டாயிரம் வருடங்கள் சென்றும் வரத் தாமதித்தது என்ன? அதிலும் வேதத்தில் கடைசி தீர்க்கனான மல்கியாவின் தீர்க்கதரிசன வார்த்தை உரைக்கப்பட்ட பின்னரும் தாமதித்தது என்ன? “இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன்; அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம் பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (மல்கியா 3:1).

இங்கே முதற்பகுதி யோவான் ஸ்நானனைக் குறித்தது, பிற்பகுதி மேசியாவாகிய இயேசுவின் வருகையைக் குறித்தது. மல்கியா இந்தத் தீர்க்க தரிசன வார்த்தையை ஏறத்தாழ கி.மு.430ஆம் ஆண்டளவில் உரைத்திருக்கிறார் என்று நம்பப்படுகிறது. இதற்குப் பின்னர் 400 ஆண்டுகளாக தேவனுடைய சத்தம் ஒலிக்கவே இல்லை. மல்கியா தொடங்கி யோவான்ஸ்நானன் வரையான இந்தக் காலப்பகுதி இஸ்ரவேலுக்கு ஒரு இருண்ட காலமாக இருந்தது. ஆக, இந்த இறுதி தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டும் இயேசு உலகில் உதிப்பதற்கு 400 ஆண்டுகள் எடுத்தது என்ன?

இதற்குப் பவுல் நமக்குப் பதிலளிக்கிறார்: நாம் புத்திர சுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத் தக்கதாக, காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்” (கலா.4:4,5). இங்கே இரண்டு காரியங்களை நாம் கவனிக்கலாம். ஒன்று, “காலம் நிறைவேறினபோது” வந்தார். அடுத்தது, அடிமைப்பட்டிருக்கிறவர்களை மீட்டு புத்திர சுவிகாரத்தை, அதாவது இதுவரை நியாயப்பிரமாணத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்தவர்களை மீட்டு, தமது பிள்ளைகள் என்ற உயரிய அந்தஸ்தை, சுவிகார அதிகாரத்தை அருளும்படிக்கு சுவிகார அதிகாரம் கொடுக்கப்படக்கூடியதாயிருந்த ரோம அரசாட்சியின் காலத்தில் வந்தார்.

யூதருடைய வழமையின்படி குடும்பத்தின் சுதந்தர பிள்ளைகளுக்கே உரிமைகளும் சொத்துக்களும் உரியதாகும். சுவிகாரப் பிள்ளைகளுக்கு இது கிடையாது. ஆனால் ரோமர் அரசாட்சி செய்த காலத்தில் சுவிகாரப் பிள்ளைகளுக்கும் சுதந்திரம் உண்டு என்ற ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தனர். இதனால்தான் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் பவுல், புறவின கிறிஸ்தவர்களுக்கு எழுதியபோது. “…திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத் தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்” என்றும், தொடர்ந்து, “நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே” என்று எழுதுகிறார் (ரோமர் 8:14-17). அந்தப்படி இன்று கிறிஸ்துவுக்குள் நாமும் சுதந்தரராக, அவருடைய சகல பரிபூரணத்திலும் பங்குள் ளவர்களாக இருக்கிறோம் என்பதை வேதவாக்கியம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆக, ரோம அரசாட்சி யில் இயேசு வந்து பிறந்தது எத்தனை மேன்மை!

பிறப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்த மரணம்

அடுத்தது, “காலம் நிறைவேறினபோது” என்பதை, “குறித்த காலம் பூர்த்தியானபோது” என்று இலகு தமிழ் மொழிபெயர்ப்பும், “But when the time had fully come” என்று ஆங்கில மொழி பெயர்ப்பு ஒன்றும் கூறுகிறது. ஆம், இயேசு முந்தியும் அல்ல பிந்தியும் அல்ல, பிதாவினால் அநாதியாய் குறிக்கப்பட்டிருந்த காலம் பூர்த்தியானதும் உலகிற்கு வந்தார். ஆம், “அவர் சகலத்தையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்கின்ற” (பிர.3:11) தேவன் அல்லவா!

ஆம்,மேசியாவாகிய இரட்சகர் உலகிற்கு வந்து, தமது மீட்பின் பணியை நிறைவேற்றுவதற்கு முன்னதாக சிலபல காரியங்கள் உலகில் ஆயத்தமாகவேண்டியிருந்தது. இதற்கு வேதவல் லுநர்கள் பல காரணங்களைக் கற்பிக்கிறார்கள். ஆனால் நமக்கு ஒன்று தெரியும். முன்னுக்குப் பின்னுக்கு பல ராஜ்யங்கள் உலகை ஆளுகை செய்தாலும், ரோம அரசாட்சியின் போதுதான் இயேசு வந்து பிறந்தார் என்றால், அதற்கான முக்கிய காரணம் உண்டு.

1. ரோம ஆளுகையில் கொடூர சிலுவை மரணம்!

இந்த ரோம ஆளுகையிலேதான் மிக இழிவான மிகமிக கொடூரமான, மனிதனுடைய இரத்தத்தை முற்றிலும் உறுஞ்சிப் போடத்தக்கதான தண்டனையாக சிலுவை மரணம் இருந்தது. “இயேசு பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் பண்ணப்பட்டார்” என்று நாம் வெகு சாதாரணமாகவே சொல்லிவிடுகிறோம். ஆனால், சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னர், மரணத் தீர்ப்பளிக்கப்பட்ட மனுஷனை எவ்வளவு கொடூரமாக வதைப்பார்கள், நாற்பதுக்கு ஒன்று குறைய முப்பத்தொன்பது அடிகளை கூர்கள் அடங்கிய குண்டுகள் பொருத்தப்பட்ட வாரினால் எப்படி ஓங்கி அடித்து வாரை இழுப்பார்கள், அந்த சமயத்தில் எப்படி தசைகள் பிய்ந்து தொங்கும், பின்னர் அதே காயத்தின்மீது திரும்ப எப்படி அடிப்பார்கள் என்பதையெல்லாம் நாம் சிந்திப்பதேயில்லை. அந்த அடியிலேயே சிலர் இறந்துவிடுவதுண்டு. ஆனால், ஆண்டவர் அப்போது மரிக்கவில்லை. அவர் நமது பாவத்துக்காகத் தமது பரிசுத்த இரத்தத்தைச் சிந்த வேண்டியிருந்தது. மணிக்கட்டுகளிலும், கால்களை ஒன்றுசேர்த்தும் சிலுவையில் ஆணி அறைந்து தொங்கவிடும்போது, மூச்சு எடுப்பது என்பது சொல்லிமுடியாத வேதனை! கைகளிலும் கால்களிலுமிருந்து இரத்தம் பீறிட்டுப் பாய்ந்தோடும்.

பொதுவாக சிலுவையில் அறையப்படுகிறவர்கள் கொடூர பாடுகள் பட்டு மரிக்க குறைந்தது மூன்று நாட்களாவது செல்லக்கூடும் என்று சொல்லப்படுகிறது. இயேசுவையும் இரண்டு கள்வர்களையும் சிலுவையில் அறைந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு முந்திய ஆயத்தநாளாய் இருந்தபடியினாலும், ஓய்வுநாளில் உடல்கள் சிலுவையில் இருக்கக்கூடாது என்பதனாலும், தூக்கப்பட்டவர்கள் சாகும்படி அவர்களுடைய கால் எலும்புகளை முறித்துப்போட உத்தரவு கேட்டு வந்த போர்ச்சேவகர்கள் கள்வர்களுடைய கால் எலும்புகளை முறித்துப்போட்டார்கள். ஆனால் இயேசுவிடம் வந்தபோது அவர் மரித்துப்போயிருந்தார். ஆனாலும் ஒருவன் அவரது விலாவிலே குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது. அதுவே அவர் உடலில் இருந்த கடைசி சொட்டு இரத்தம்.

2. இரத்தம் சிந்தப்படவேண்டியது பிதாவின் திட்டம்

நடந்த சம்பவம் ஒவ்வொன்றும் பிதாவின் நியமப்படி அநாதி திட்டப்படியே நடந்தது என்பதை நாம் சிந்திக்கவேண்டும். ஒன்று, எந்தவொரு இழிவான மனிதனும் இரட்சிப்புக்கு விலக்கப்படக்கூடாது என்றே இயேசு, இழிவான சிலுவை மரணத் தண்டனை நிறைவேற்றப்படுகின்ற காலத்தில் வந்து பிறந்தார். அடுத்தது, உலக இரட் சகரான அவர் மனுக்குலத்தின் பாவத்தைத் தம் மேல் சுமந்து தீர்க்கவேண்டுமானால் அதன் கிரயமாக மரணத்தை ஏற்கவேண்டும், தமது கடைசி சொட்டு இரத்தத்தையும் சிந்தவேண்டும். வேறு அரசாட்சி காலத்தில் பிறந்து, அக்காலத்து கொடூர தண்டனையாக கல்லெறிந்து கொல்லப்பட்டிருந்தாலோ தூக்கிலிடப்பட்டிருந்தாலோ, இயேசுவின் முழு இரத்தமும் சிந்தப்பட்டிருக்காது. அடுத்தது, போர்ச்சேவகர்கள் கால் எலும்புகளை முறிக்க வருவதற்கு முன்பதாகவே இயேசு மரித்தாரே, ஆம், “நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன். அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்” (யோவான் 10:17,18). இதன்படி, தாங்களே தான் இயேசுவைக் கொன்றுபோட்டதாக ரோம அரசாட்சி உரிமைபாராட்டாதபடிக்கு, இயேசுதாமே தமது ஜீவனைக் கொடுத்தார். போர் வீரன் விலாவிலே குத்தியதால் கடைசி சொட்டு இரத்தமும் வெளிவந்தது.

3. இரத்தஞ்சிந்துதலில்லாமல் பாவமன்னிப்பு இல்லை

ஆக, இயேசுவின் ஒப்பற்ற மரணமே அவருடைய பிறப்புக்கு இத்தனை முக்கியத்துவத்தையும் மேன்மையையும் கொடுத்தது. ஆனால் மரணத்துடன் யாவும் முடிந்திருந்தால் இயேசு தாம் வந்த பணியைப் பூர்த்தி செய்தார் என்று சொல்லியிருக்க முடியாது. சிலுவையிலே “முடிந்தது” என்று அவர் சொன்னபோது, பாவத்திற்கான கிரயத்தைச் செலுத்தி முடித்துவிட்டதையே அது பிரதிபலித்தது. பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பாவம் செய்தவன் அதற்கான ஒரு பலியை செலுத்தி மன்னிப்பைப் பெற்றுக்கொள்வான். ஆனால் அவன் தன் பாவ சுபாவத்திலிருந்து மீட்படைவதில்லை. மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருப்பதால், ஒரு ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே. இரத்தம் ஜீவனுக்குச் சமானம் (லேவி.17:11,14). “இரத்தஞ் சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது” (எபி. 9:22). அந்தப்படியே, “இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது” (எபே.1:7). இங்கே பாவமன்னிப்பாகிய மீட்பு என்பதைக் கவனிக்க வேண்டும். மன்னிப்பு, மீட்பு, இப்படியாக மீட்கப்பட்டவனுக்கு நித்தியத்தின் நிச்சயம் கிடைக்க வேண்டுமே. “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்று சொன்ன இயேசுவை மரித்தோரிடத்திலிருந்து தேவன் எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது (அப்.2:24). அவர் உயிர்த்தெழுந்ததாலே நாம் அவருக்குள் மன்னிக்கப்பட்டவர்களாக மாத்திரமல்ல, மீட்கப்பட்டவர்களாகவும் அவருக்குள் பிழைத்திருக்கின்ற ஒரு புதிய வாழ்வையும் நாம் பெற்றுக்கொண்டுள்ளோம். கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் இருந்திராவிட்டால் நாம் இன்னமும் நமது பாவங்களிலேயே இருந்திருப்போம் (1கொரி. 15:17). “கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா” “கிறிஸ்து எழுந்திராவிட்டால், … நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்” (1கொரி.15:14,17) என்று பவுல் எழுதுகிறார்.

ராஜாதி ராஜாவாக, நியாயந்தீர்க்கும் நீதிபதியாக மீண்டும் வருவார்

இத்தனையும் நேர்த்தியாய் நிறைவேறியிருக்க, அவர் மீண்டும் வருவார் என்ற முன்னுரை வீணாய்ப்போகுமா? காலம் நிறைவேறும்போது அதுவும் நடக்கும். இயேசுவின் மரணத்தினாலே நமது பாவம் மன்னிக்கப்பட்டு, அவருடைய உயிர்த்தெழுதலிலே நமக்கு மீட்பின் நிச்சயமும் நித்திய வாழ்வின் நிச்சயமும் உண்டாயிருப்பதால். இனி பாவத்தினிமித்தம் பலி இராது (எபி.10:26). இப்படியே நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்காக இயேசுவானவர் தமது மாம்சத்தின் திரையின் வழியாய் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணியிருப்பதால் நாம் தைரியமாய் கிருபாசனத்தண்டையில் சேரும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். இன்று இயேசுவானவர் பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார் (எபே.1:21). “நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன்” என்றவர்,”நான் போவேன் என்றும் திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும்” சொன்னவர், நிச்சயமாகவே வருவார்.

மாத்திரமல்ல, “உலகத்தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறித் தீருங்காலங்கள் வருமளவும் பரலோகம் அவரை ஏற்றுக்கொள்ளவேண்டும்” (அப்.3:21). இது ஆண்டவருடைய இரண்டாம் வருகையைக் குறிக்கிறது. தம்மைப் பலியாக்கி நம்மை மீட்பதற்காக வந்து பிறந்து, பிதாவின் சித்தத்தை நிறைவேற்றி முடித்த ஆண்டவர், இனி ராஜாதி ராஜாவாக, நியாயந்தீர்க்கும் நீதிபதியாக வருவது வேத சத்தியம். அதற்காகவே அவர் காத்திருக்கிறார்.

எப்படி இயேசுவின் பிறப்பின் முன்னறிவித்தல், காலம் முற்றிலும் நிறைவேறியபோது நிகழ்ந்ததோ அப்படியே அவருடைய இரண்டாவது வருகையும் நிச்சயம் நடக்கும். அவர் தம்முடையவர்களைச் சேர்த்துக்கொள்ளும் காலத்துக்கும், தமது மகிமையிலே வந்து அரசாளும் காலத்துக்கும், சகலமும் புதிதாக்கப்படும் காலத்துக்கும், நித்தியரோடு சேர்ந்து நித்தியமாய் அவர் பிள்ளைகள் அவரோட வாழும் காலத்திற்குமான வேதம் கூறுகின்ற சகல அடையாளங்களும் மிகவும் துல்லியமாகவே நிறைவேறிக்கொண்டிருக்கின்றன. விநாடிக்கு விநாடி நம்மைச் சுற்றிலும் நடக்கின்ற சம்பவங்கள், வேதசத்தியங்கள் தீர்க்கத ரிசனங்கள் நிறைவேறிக்கொண்டிருப்பதைச் சாட்சி பகருகின்றன. இன்னும் நமக்கு என்னதான் அடையாளம் வேண்டும்? “இனிக் காலம் செல்லாது” என்ற வார்த்தை சத்தியம்.

வேதவாக்கியம் தரும் நான்கு நல்லாலோசனைகள்

ஆகவே, ஒன்று, தேவனுடைய கட்டளைகளை எப்போதும் நினைவுகூருவோம். அதாவது எதையும் அலட்சியம் பண்ணாதிருப்போம்.

இரண்டாவது, சத்தியத்தை அறியாதிருக்க வேண்டாம்; அதாவது, ஒருவரும் கெட்டுப்போகக் கூடாது என்பதனாலேயே அவருடைய வருகை தாமதிக்கிறது என்பதையும், இது அவருடைய நீடிய பொறுமை என்பதையும், மணவாளன் தமது மணவாட்டி சபையைச் சேர்த்துக்கொள்ள நிச்சயம் வருவார் என்பதையும், கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும் என்பதையும், எல்லாம் புதுப்பிக்கப்படும் என்றும் எதனையும் அறியாதிருக்கவேண்டாம்.

மூன்றாவது, ஆகையால், கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்.

நான்காவதாக, இவை யாவையும் முன்னமே அறிந்திருக்கிறபடியால் நமது உறுதியிலிருந்து விலகி விழுந்து போகாதபடிக்கு நாம் எச்சரிக்கையாயிருப்போம் (2பேதுரு 3ஆம் அதிகாரம்). பேதுரு எழுதிய இறுதி வார்த்தைகள் என்று நம்பப்படுகிற இந்த அதிகாரம் நம்மை அன்போடு எச்சரிக்கிறது.

நாம் அவரைச் சந்திக்க ஆயத்தமா!

பிரியமானவர்களே, இயேசு பிறப்பு என்பது கட்டுக்கதையோ புராணக்கதையோ அல்ல. இன்று அநேக புதுமைகளும், அதிலும் இன்று நடைபெறுகின்ற யுத்தத்தை வைத்து அநேக தாறுமாறான கருத்துக்களும் இணையத்தளத்தில் தாராளமாகவே பரப்பப்பட்டு வருகின்றன. இவற்றால் இழுப்புண்டு போகக்கூடாது. பெத்லகேமின் மாட்டுத்தொழுவம் இழந்துபோன உலகத்தை அன்பின் தேவனுடன் இணைத்த பாலமாக இருக்கிறது. அந்தத் தொழுவத்திலிருந்துதான் தேவனுடனான ஒரு புதிய உறவை நாம் பெற்றிருக்கிறோம். காலம் பூரணமாக நிறைவேறியபோது இரட்சகர் வந்துதித்தார் என்பது சத்தியம்; அதுபோலவே, நிறைவேறிக்கொண்டிருக்கின்ற கர்த்தருடைய நாளுக்கான சங்கதிகள் பூரணமடையும்போது, நியாயாதிபதியாகிய ஆண்டவருடைய இரண்டாம் வருகையும் இருக்கும். நமது சரீரமரணமோ, ஆண்டவரின் வருகையோ எது முந்தினாலும் நாம் அவரைச் சந்திக்க ஆயத்தமா!