• Dr.உட்ரோ குரோல்
(நவம்பர் – டிசம்பர் 2023)
3. நிறைவேற்றம்: வெளிப்படுத்தல் நிறைவேறியதா?

Dr.உட்ரோ குரோல்
பரி. யோவானுக்கு வெளிப்படுத்திய விசேஷம் புத்தகத்தை நாம் வாசிக்கும்பொழுது அது நிறைவேறிவிட்டதா அல்லது எதிர்காலத்தில் நிறைவேற உள்ளதா என்பதை நாம் அறிந்திருக்கவேண்டும். வேதாகமத்தின் சில பகுதிகள் இதில் நமக்கு சந்தே கத்தை எழுப்புகின்றன. தானியேல் 9, சகரியா 14, மத்தேயு 24க்கு ஒத்த லூக்கா 21ஆம் அதிகாரம் ஆகியன அவற்றில் சில. ஆனால், வெளிப்படுத்தல் புத்தகம் முழுவதும் நமது கவனத்தை ஈர்க்கிறது. இது கடந்தகால நிகழ்வா அல்லது இனி எதிர்காலத் தில் நடக்கப்போவதா? என்ற வினாவை நமக்கு எழுப்புகிறது.
“நிறைவேறிவிட்டது” என்ற கருத்தையுடைய ஒரு குழுவினர் (Preterist) கி.பி. 70ஆம் ஆண்டில் ரோமர்கள் எருசலேம் நகரத்துக்கு வந்து அதை இடித்துப்போட்டபொழுது வெளிப்படுத்தல் புத்தகத்தில் எழுதியுள்ள அனைத்தும் அப்பொழுது நிறைவேறிவிட்டன என்று வாதிடுகிறார்கள். கி.பி.70 இல் நடந்த எருசலேம் நகரத்தின் அழிவிலிருந்து வெளிப்படுத்தல் புத்தகத்தின் அனைத்து நிகழ்வினையும் நாம் புரிந்துகொள்ளலாம்.
திருவெளிப்பாடு ஏற்கனவே நிறைவேறிவிட்டது என்ற நம்பிக்கையை நான் மதிக்கிறேன்; எனது அநேக நண்பர்களும் இந்த நம்பிக்கையை உடையவர்கள். ஆனால் நான் ஒரு எதிர்காலவாதி (Futerist); வேதாகமத்தில் உள்ள அனைத்து நிகழ்வுகளும் நிறைவேறிவிட்டதை நான் ஒத்துக்கொள்ளவில்லை. எனவே அந்த நம்பிக்கையுடைய வேதாகமக் கல்லூரியில் நான் பயிற்சி பெற்றவனாயிருந்தும், வேதாகமத்தை வாசித்ததினால் என்னுடைய முடிவை நான் மாற்றிக்கொண்டேன்.
2 பேதுரு 3:3-4ஐ நான் ஒரு சரியான எச்சரிப்பாகக் காண்கிறேன். “கடைசி நாட்களில் பரியாசக்காரர் வந்து, …மேசியா வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? என்று சொல்வார்கள்.” என்னுடைய அநேக நண்பர்கள் வெளிப்படுத்தல் புத்தகத்தில் கூறப்பட்ட யாவும் எதிர்காலத்துக்கு உரியது என்றும் பரியாசம் பண்ணுவார்கள். நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். அதுதான் உண்மை எனவும் நான் நம்புகிறேன்.
முதலாம் நூற்றாண்டிலிருந்தே வெளிப்படுத்தலின் நிகழ்வுகள் நிறைவேறிவிட்டன என்ற கருத்து உலாவியது. இந்த கருத்து புதிதல்ல. சில சபைத் தலைவர்களும் இதே கொள்கையைக் கொண்டிருந்தனர். ஆனால், அனைத்தும் நிறைவேறிவிட்ட நிகழ்வுகள் என்ற எண்ணம் 16ஆம் நூற்றாண்டு வரை நிலவிவந்தது.
சீர்திருத்த இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பதிலளிக்கும் வகையில் திரெந்து நகரில் ஒரு கத்தோலிக்க திருச்சபையின் பொதுச்சங்கம் (Council of Trent) கூடியது. அதில் ஸ்பானிய நாட்டு இயேசு சபையைச் சேர்ந்த லூயிஸ் D.அல்கசார் (Alcazar) என்ற துறவி 900 பக்கங்களுள்ள ஒரு புத்தகத்தை வெளியிட் டார். அதில் “வெளிப்படுத்தலின் நிகழ்வுகள் யாவும் வரலாற்று நிகழ்ச்சிகள்” என்ற கருத்தினை வலியுறுத்தியிருந்தார்.
தீர்க்கதரிசனங்களை வரலாற்று நிகழ்வுகளாக நாம் எப்பொழுதும் கருதக்கூடாது. வெளிப்படுத்தல் புத்தகம் வரலாற்று தீர்க்கதரிசனமாக 16ஆம் நூற்றாண்டில்தான் கருதப்பட்டது. தங்களைப் பகுதி அல்லது சம நிறைவேற்றக் கருத்தாளர்களாக (Partial or “moderate” Preterists) அழைத்துக்கொள்பவர்கள் இன்றும் சிலர் உள்ளனர். நீங்கள் நிறைவேறிவிட்டன என்று கருதினாலும், நிறைவேற உள்ளன என கருதினாலும் இறுதிக்கால விளைவியல் நம்பிக்கையில் வேறுபாடுகள் எழுவது இயற்கையே.
நீங்கள் நிறைவுவாதி (Preterists) எனில் வேதத்தை அறிந்துகொள்வதில் உங்களது வழி வித்தியாசமானது. மிதவாதிகள் வரவிருக்கும் இரண்டாம் வருகையை நம்புகிறார்கள். அவர்கள் ஒலிவ மலையில் இயேசுகிறிஸ்துவின் வெளிப்பாட்டை வலியுறுத்துகிறார்கள் (மத்தேயு 24,25). மேலும் இயேசுகிறிஸ்து எங்காவது ஓரிடத்தில் வருவார் என்று நம்புகிறார்கள்.
அதாவது வெளிப்படுத்தல் புத்தகத்தில் எதிர்காலத்திற்குரியவை அல்லது பகுதி நிகழ்ந்தவை என்று நாம் அறிந்த அனைத்தும் ஏற்கனவே நடந்தேறிற்று என்று கூறுகின்றனர். உதாரணமாக ஏழு ஆண்டுகள் உபத்திரவ காலம் கிடையாது. அந்திக்கிறிஸ்து என்பவர் இல்லை; அவரைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். தேவனுடைய எதிர்கால திட்டத்தில் இஸ்ரவேல் தேசம் கிடையாது. அர்மகெதோன் யுத்தம் கிடையாது. ஆயிரமாண்டு ஆட்சி நடக்கப்போவது இல்லை. சாத்தான் கட்டப்படுவது இல்லை. அவன் இன்று கட்டப்பட்டுதான் இருக்கிறான்; இவை யாவும் நிறைவுவாதிகளின் (preterists) நம்பிக்கை. வெளிப்படுத்தல் புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட யாவும் கி.பி.70ம் நூற்றாண்டில் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று நம்புகின்றனர்.
இன்னும் சில பகுதி நிறைவுவாதிகள் (Partial Preterists), “அநேக காரியங்கள் நிறைவேறிவிட் டன என்று நாங்கள் நம்புகிறோம்; ஆயினும் இன்னும் சில காரியங்கள் எதிர்காலத்தில் நிறைவேற உள்ளன” என்று கூறுகின்றனர். இவைகளை முழு நிறைவுவாதிகள் (Full Preterists) மறுக்கின்றனர். அனைத்தும் நிறைவேறிவிட்டன என்கின்றனர். கி.பி.70இல் ரோமானியர்கள் எருசலேம் நகரத்தை அழித்தபோது “வேதத்தின் வாக்குறுதிகள் யாவும் நிறைவேறிவிட்டன” என்று அவர்கள் கருதுகின்றனர். நிறைவுவாதிகளோ “அனைத்தும் கடந்தகாலத்தவை, நாம் இப்பொழுது புதிய வானம் மற்றும் புதிய பூமியில்தான் வாழ்கிறோம்” என்று கூறுகின்றனர்.
இந்தவொரு காரியத்தை ஏற்றுக்கொள்வதில் எனக்கு மறுப்பு உண்டு. வாரத்துக்கு ஒரு முறை என் கழிவுப்பொருட்களை நான் அகற்றியாக வேண்டும். இன்றைய அரசியலின் அநேக காரியங்கள் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை. எனவே இந்த வேதபகுதியை இன்றைய உலகம் துல்லியமாக அறிந்துகொள்ளவில்லை என்றே நான் நம்புகிறேன். எனவே “நிறைவேறிவிட்டன” என்ற கருத்தினை நான் தெரிந்துகொள்ளவில்லை. தெரிந்தெடுப்பு உங்களுடைய விருப்பம்; தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
நம்முடைய ஐக்கியத்தின் அளவீடுகள் எதிர் காலம் என்பது நிறைவேற உள்ளது அல்லது நிறை வேறிவிட்டது என்பதல்ல. ஆனாலும் அவர்கள் நம்பும் சில காரியங்களை நாம் அறிந்துகொள்ளுவது நல்லது.
1. ரோம் எரியும்பொழுது பிடில் வாசித்தான் என்று கூறப்படும் ரோமப்பேரரசர் நீரோவை அந்திக் கிறிஸ்து என்று நம்புகின்றனர். அந்திக்கிறிஸ்து வரப்போகும் ஒரு நபர் அல்ல, நீரோ மன்னர்தான் அவர் என்று கூறுகின்றனர்.
2. உபத்திரவகாலம் என்பது முடிந்துவிட்டது. கி.பி. 66 – 70 இல் ரோமானியப் படையினர் எருசலேமை முற்றுக்கை போட்ட காலமே அது.
3. கி.பி.70இல் எருசலேம் நகரத்தை ரோமானியப் படையினர் அழித்தபொழுது அதனைக் காண இயேசுகிறிஸ்து மேகங்களில் வந்தார் என்று நம்புகின்றனர். இயேசுகிறிஸ்துவின் எதிர்கால வருகை நிகழ்வுகள் யாவும் கி.பி. 70இல் சரித்திரமாக நிறைவேறிவிட்டது என்கின்றனர். ஆனால், வேதாகமத்தில் இதைப்பற்றி எந்தவொரு குறிப்பும் இல்லை. கிறிஸ்துவின் எதிர்கால வருகையைப் பற்றி இத்திட்டத்தில் எந்தவொரு நம்பிக்கையும் இல்லை; அதனை அவர்கள் மறுக்கின்றனர்.
4. பழைய ஏற்பாட்டு இஸ்ரவேல் தேசத்துக்குப் பதிலாக தேவன் புதிய ஏற்பாட்டு சபையை ஏற்படுத்திவிட்டார். இஸ்ரவேல் மக்களுக்கு தேவன் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் சபையாக நீங்களும் நானும் உரிமை கோரமுடியும்.
5. தேவனுடைய எதிர்கால திட்டத்தில் இஸ்ரவேலுக்கு எந்த பங்கும் கிடையாது. அதனுடன் செய்திருந்த அவருடைய உடன்படிக்கையை ரத்து செய்துவிட்டார். ஆனால், அவர் உங்களுடனும் சபையுடனும் ஒரு புதிய உடன்படிக்கையை செய்திருக்கிறார்.
6. நிறைவுவாதிகள் அர்மகெதோன் யுத்தம் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது என்கின்றனர். வெளிப்படுத்தல் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள பாபிலோனின் வீழ்ச்சியானது கி.பி.70இல் ரோமர்களால் அழிக்கப்பட்ட எருசலேம் நகரத்தைக் குறிக்கும் என்கின்றனர்.
7. சாத்தான் பாதாளத்தில் ஏற்கனவே கட்டப்பட்டுவிட்டான். அவனால் நற்செய்திப் பரப்புவதை தடைசெய்ய முடியாது. வெளிப்படுத்தல் 20ஆம் அதிகாரம் முடிந்துவிட்டது. அது வரலாறு. கடந்த காலத்தைக் குறிக்கும் இலத்தீன் சொல்லை அடிப்படையாக வைத்து அவர்களை நிறைவுவாதிகள் (Preterist) என்கிறோம்.
ஒரு காலக்கட்டத்தில், அதாவது அப்புத்தகம் எழுதப்பட்டபொழுது அவை எதிர்காலத்தைக் குறிப்பவையாக இருந்தன. ஆனால், கி.பி.70இல் அவை அனைத்தும் நிறைவேறிவிட்டன என்று அவர்கள் நம்பினர்.
அவர்கள் அவ்வாறு நம்புவதற்கு வேதத்தில் அநேக பகுதிகள் உள்ளன. உதாரணமாக “மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன்” (வெளி. 22:20) என்று இயேசு கூறியதை “இவைகளெல்லாம் சம்பவிக்கு முன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று” என்பதுடன் ஒப்பிடலாம். இதனை கருத்திற்கொண்டு, அவருடைய வருகை நிறைவேறிவிட்டது என்கின்றனர்.
டல்லாஸ் வேதாகமக் கல்லூரிப் பேராசிரியரான டாரில் பாக் (Daryl Bock) என்பவர் நிறைவுவாதியாவார். அவர், “இறுதிக்காலத்தின் ஆரம்பத்தைக் காணும் சந்ததியே அதன் முடிவையும் காணும் (அந்த காலத்தில் வாழும் சந்ததியைக் குறிப்பிடவில்லை; ஆனால், இறுதிக்காலத்தைக் காணும் சந்ததியே அதன் முடிவையும் காணும்). வருகையின் அடையாளங்கள் தோன்றும் பொழுது அவை விரைவாக நிறைவேறும். அவை அநேக சந்ததிகளுக்குத் தொடராது. ஒரே தலைமுறையில் நிகழ்ந்துவிடும்” என்று விளக்கம் அளித்துள்ளார்.
வெளிப்படுத்தல் புத்தகத்துக்கு விளக்கம் அளிக்கும்பொழுதும் மற்றவர்களின் விளக்கத்தைப்பற்றி வினா எழுப்பும்பொழுதும், உங்களது வினாக்களுக்கும் விடை கிடைக்கும். வெளிப்படுத்தலின் நிகழ்வுகள் வரலாற்றில் நிறைவேறியதை நாம் வாசித்தோம். ஆனால் அது எதிர்கால நிகழ்வு என்பதையும் வரும் காலங்களில் நாம் காண இருக்கிறோம். வெளிப்படுத்தல் நிகழ்வுகள் முடிந்துவிட்டன என்று சொல்பவர்களின் கருத்துக்களில் சில எனக்கு சிக்கலைத் தருகின்றன.
தீர்க்கதரிசனங்கள் நிறைவேறிவிட்ட நிகழ்வுகள் என்பதால் நிறைவுவாதிகள் வேதாகமத்துக்கு சான்று அளிக்கின்றனர். ஆனால், அநேக எதிர்காலவாதிகள்; அநேக அறிவீனமான கருத்துக் கணிப்புகளைக் கொண்டுள்ளனர். இதுதான் வேதாகமத்தை அறிந்துகொள்ள சரியான வழி என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், நிறைவுவாதிகளின் வேதாகம அறிவு, தேவனுடைய வார்த்தைக்கு முன் நிற்காது.
நான் ஒரு சில உதாரணங்களை உங்களுக்குத் தருகிறேன்:
பிசாசு கட்டப்பட்டுவிட்டான்; எனவே இன்றைய உலகில் அவனுடைய தாக்கம் இல்லை என்ற கருத்துக்கு, அப்.பேதுருவின் “பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்” (1பேதுரு 5: 8) என்ற வார்த்தைகள் எனக்கு முரண்பாடாகத் தெரிகின்றன. என்னைப் பொறுத்தவரை பிசாசு இன்றளவும் நன்றாக உயிரோடு இருக்கிறான். என்னை தினமும் தொந்தரவு செய்கிறான். சாத்தான் கட்டப்பட்டவனாக இருந்தால், அநேக நாடுகள் இன்றும் ஏன் தவறான மதக்கொள்கைகளாலும், பொய் தெய்வங்களாலும் ஏமாற்றப்பட்டு வருகின்றன?
ஆயிரமாண்டு ஆட்சியில் நாம் இருந்தால் ஏன் யுத்தங்கள் உண்டாகின்றன? ஏனெனில் ஆயிரமாண்டு ஆட்சி சமாதானத்தின் காலமாகும். தங்களுடைய ஆயுதங்களை மண்வெட்டிகளாக அடிப்பார்கள் (ஏசாயா 2:4) என்று வேதம் கூறியதை எந்தெந்த நாடுகள், எப்பொழுது செய்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
வரலாற்றின் ஏடுகளைப் புரட்டிப்பார்க்கும் பொழுது, ஆயுதங்களைக் களைந்து “எங்களுடைய பட்டயங்களை மண்வெட்டிகளாக அடிக்கப்போகிறோம்” என்று அனைவரும் ஒருமிக்கக் கூறிய எந்தவொரு நாட்டையும் நான் அறியவில்லை.
தேவன் இஸ்ரவேல் இனத்தாரை, இஸ்ரவேல் தேசமாக்கியதுடன் நிறைவேற்றிவிட்டார் என்றால் “இப்படியிருக்க, தேவன் தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிட்டாரோ என்று கேட்கிறேன், தள்ளி விடவில்லையே” என்ற பவுல் “தேவன் தாம் முன்னறிந்துகொண்ட தம்முடைய ஜனங்களைத் தள்ளி விடவில்லை” (ரோமர் 11:1) என்று உறுதியாக பதிலளிக்கிறார். “இப்படியிருக்க, விழுந்துபோகும் படிக்கா இடறினார்கள் என்று கேட்கிறேன், அப்படியல்லவே” என்கிறார்.
தேவன் இஸ்ரவேலை தள்ளிவிட்டார் என்று எனக்குத் தோன்றவில்லை. இஸ்ரவேலரின் ஒரு பகுதியினர் புறஜாதியார் முழுமையாக இறைவனிடம் வந்து சேரும் வரையில் மழுங்கிய உள்ளம் கொண்டிருப்பர் என்று பவுல் கூறியுள்ளார் (ரோமர் 11:25). இன்னும் அநேக காரியங்கள் வரலாற்றில் நிறைவேறியது என்பதில் முரண்பாடுகள் உண்டு. நான் அவர்களுக்கு எதிராக வாதிட விரும்பவில்லை. எதிர்காலத்தில் நடக்க இருப்பவை அநேகமுண்டு என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மத்தேயு 24இல் கூறியபடி கிறிஸ்து கி.பி.70 இல் வந்துவிட்டார் என நம்புவர்கள், அவர் வரும் வரை விழித்திருங்கள் என்ற கட்டளையை நிறைவேற்ற இயலாது. ஆனால், நீங்களும் நானும் ஆண்டவராகிய இயேசுவின் வருகைக்காக இன்றும் காத்திருக்கிறோம். என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவெனில் நிறைவேறிவிட்டது என்று கூறுபவர்கள் இறந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் உண்டு என்பதன் எழுத்துப் பூர்வமான கருத்துக்களைக் குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்பதாகும். இவர்கள் பின்பற்றும் பாதை மிகவும் ஆபத்தானது. ஒரு தலைமுறைக்கு முன்னர் தாராளவாதிகள் பின்பற்றிய பாதை இது.
நிறைவுவாதிகள் அனைவரும் தாராளவாதிகள் என்று நான் கூறமாட்டேன். ஆனால், அவர்கள் வேதத்தை விளக்குவதற்கு எடுத்துக்கொள்ளும் முறைகள் தவறு. வெளிப்படுத்தலில் உள்ள அனைத்தையும் அப்படியே எடுத்துக்கொள்ளக் கூடாது; அப்படியே சிருஷ்டிப்பு, ஜலப்பிரளயம், கிறிஸ்துவின் கன்னிப் பிறப்பு ஆகியவற்றையும் எழுத்துப்பூர்வமாகக் கொள்ளக்கூடாது என நிறைவுவாதிகள் கூறுவதில்லை. ஆனால் தாராள வாதிகள் செல்லும் பாதையே இது.
இரண்டாவதாக நிறைவேறிவிட்டது என்ற கொள்கை இயேசுகிறிஸ்துவின் வருகையைப் பற்றிய உறுதியை சிதைக்கிறது.
இயேசு கி.பி.70இல் மேகங்கள்மீது வந்தார் என்பதை ஒருவரும் காணவில்லை; வேதத்தில் அதைப் பற்றி யாரும் குறிப்பிடவுமில்லை. இயேசுவின் வருகையைப் பற்றிய நோக்கம் முழுவதையுமே அது மறுக்கிறது அல்லது சிதைக்கிறது.
இந்த உலகில் ஒரு தெய்வீக தலையீடு உண்டு என்ற ஒரு மெய்யான நம்பிக்கையில்லாதவர்களாய் நாம் காணப்படுவோம். நாம்தான் அனைத்துக்கும் தீர்வுகொள்ள வேண்டும் என்று நிறைவுவாதிகள் கூறுகின்றனர். அது எனது எதிர்கால உயிர்த்தெழுதலின் நம்பிக்கையையும், எதிர்காலத்தில் தேவன் செய்ய இருக்கும் காரியங்களைப் பற்றிய எனது நம்பிக்கையையும் எடுத்துப் போடுகிறது.
நிறைவுவாதிகள், “இப்பொழுது இராஜ்யத்தை வரவைக்கவேண்டும் என்பதே நமது வேலை” என்று என்னிடத்தில் கூறுவார்கள். அரசன் இல்லாமல் எப்படி இராஜ்யத்தை வரவைப்பீர்கள்? அரசர் இல்லாத அந்த இராஜ்யத்தில் நாம் வாழ்வதன் மேன்மை யாது? நிறைவுவாதிகளின் நம்பிக்கை விசுவாசிகளின் நம்பிக்கையை தேவையில்லாமல் குறைக்கிறது. தவறாகக் காணப்படும் காரியங்களை தேவன் சரிபடுத்துவார் என்ற எதிர்கால நிகழ்ச்சிகளின் நம்பிக்கையை அது எடுத்துப்போடுகிறது.
வேதாகமத்தில் “அவர் வரும்வரை” என்ற சொற்றொடர் காணப்படுகிறது. நீங்கள் நிறைவுவாதியாக இருந்தால் அந்த சொற்றொடர் உங்களுக்கு முக்கியமல்ல; ஏனெனில் அவர்தான் ஏற்கனவே வந்துவிட்டாரே.
கர்த்தருடைய பந்தி என்று அழைக்கப்படும் நற்கருணையை அவர் வரும்வரை நாம் கடை பிடிக்கவேண்டும். அவர் ஏற்கனவே வந்து விட்டாரெனில் நற்கருணை எதற்கு? கி.பி 70இல் ஆண்டவர் வந்திருந்தாரெனில் நாம் அதனை நிறுத்தியிருக்கவேண்டும். ஆனால் நிறைவுவாதிகள் இன்றும் அதனை செய்துவருகின்றனர்.
எருசலேம் தேவாலயம் இடிக்கப்பட்டுப் போகும்; என்று இயேசு கூறினபொழுது அவருடைய, சீஷர்கள் அவரிடத்தில் தனித்து வந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? (மத்தேயு 24:2-3) என்று கேட்டனர். இது சரியான கேள்வியே.
இயேசுவின் வருகைக்கு வேதாகமம் பல அடையாளங்களைத் தருகின்றன. இயேசு ஏற்கனவே வந்துவிட்டாரெனில் இந்த அடையாளங்களை நாம் ஏன் பின்னோக்கிப் பார்க்கவேண்டும்? இந்த அடையாளங்கள் யாவும் நிறைவேறிவிட்டன என்பதற்கு வேதாகமத்தில் எந்த ஆதாரமும் இல்லை.
அர்மகெதோன் யுத்தத்துக்கு கிறிஸ்து நேரடியாக வருவாரா என்ற வினாவுக்கு நிறைவுவாதிகள் “இல்லை” என்றும் எதிர்காலவாதிகள் “ஆம்” என்றும் பதிலளிப்பர்.
கிறிஸ்து சாத்தானை அழிப்பாரா? என்ற கேள்விக்கு நிறைவுவாதிகள் அவர் ஏற்கனவே அவனை அழித்துவிட்டாரென்றும், எதிர்காலவாதிகள் “சூழ்நிலைகளைப் பார்க்கும்பொழுது அவர் வந்துவிட்டாரென்ற அறிகுறி எனக்குத் தெரியவில்லை” என்றே கூறுவார்கள்.
வெளிப்படுத்தல் புத்தகத்தை விளக்கும்பொழுது இவ்விரண்டு வழிகளே காணப்படுகின்றன. வேறு பல முறைகளும் உள்ளன.
அடுத்த பாடத்தில் எதிர்காலவாதிகளின் கருத்துக்களை ஆராய்வோம். அதிலும் எனக்கு சில வினாக்கள் உண்டு. தேவஆவியானவர் ஒத்தாசையுடன் அதனை நாம் விளங்கிக் கொள்வோம்.
மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை