• பேராசிரியர் S.C.எடிசன் •
(நவம்பர் – டிசம்பர் 2023)
மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி (யோவான் 1:29).

பேராசிரியர் S.C.எடிசன்
சத்தியவசனம் நேயர்களுக்கு எங்கள் அன்பின் வாழ்த்துக்கள். வேதத்தில் இடம்பெற்றுள்ள இயேசுவின் நாமங்களில் ஒன்றான தேவ ஆட்டுக்குட்டி என்ற நாமத்தைக் குறித்து தியானிப்போம்.
இயேசுவின் நாமங்களில் இருந்து நான் எதை கற்றுக்கொள்ள முடியும்? அது ஒரு பெயர்தானே என்று நாம் நினைக்கலாம். இயேசுவின் நாமம் காரணம் இல்லாத பெயர் கிடையாது. ஒவ்வொரு பெயருக்கும் ஒரு காரணம் இருக்கிறது. அதேவிதமாக இயேசு தேவ ஆட்டுக்குட்டி என்கிற பெயரிலும் அர்த்தம் உண்டு.
ஒரு சகோதரன் என்னிடம், ஏன் ஐயா தேவ ஆட்டுக்குட்டி என்று சொல்லுகிறோம் எனக் கேட்டார். யோவான் 1:29இல் இவ்வாறு வாசிக்கிறோம். மறு நாளிலே யோவான் இயேசுவை தன்னிடத்தில் வரக் கண்டு இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி என்றான். மறுநாளிலே யோவானும் அவனுடைய சீஷரில் இரண்டு பேரும் நிற்கும்போது, இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான் (யோவா.1:35,36).
இயேசுகிறிஸ்துவை அவன் தேவ ஆட்டுக்குட்டி என்றானே; இதன் அர்த்தம் என்ன? இந்தப் பெயர் அவருக்கு பொருந்துமா? இந்தப் பெயரினால் எனக்கு என்ன ஒரு நன்மை? இதைத்தான் நாம் தொடர்ந்து தியானிக்க இருக்கிறோம்.
95ஆம் சங்கீதத்தின் ஏழாம் வசனத்திலே தாவீது: அவர் நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே என்று சொல்லுகிறார். தேவனுடைய பிள்ளைகளை தேவனுடைய ஆடுகளாக இந்த வசனம் சித்தரித்திருக்கிறது.
ஏசாயா 53 ஆம் அதிகாரம் ஆறாம் வசனத்தை பாருங்கள்: நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார். நாம் வழிதப்பிப்போன ஆடுகள்.
119ஆம் சங்கீதம் கடைசி வசனம் இவ்வாறு கூறுகிறது: காணாமற்போன ஆட்டைப்போல வழி தப்பிப்போனேன்; உமது அடியேனைத் தேடுவீராக; உமது கற்பனைகளை நான் மறவேன். தாவீது அங்கேயும் வழிதப்பிப் போன ஆடு என்று சொல்கிறதைப் பார்க்கிறோம். நாம் எல்லாரும் வழியை விட்டு தப்பிப்போன ஆடுகளாக இருக்கிறோம். நாம் பாவத்தில் இருக்கிறோம்.
ஒரு ஆட்டின் தன்மை என்னவென்றால், அதற்கு இது யாருடைய தோட்டம், இதில் நான் சாப்பிடலாமா, இதற்கு எனக்கு அனுமதி உண்டா என்றெல்லாம் அது கேட்பதில்லை. அதற்கு கண்ணில் பச்சையாக ஒன்று தெரிந்தால் அதை எப்படியென்றாலும் தின்றுவிட அது முயற்சிக்கும்.
அதேவிதமாகத்தான் நாமும் எது நமக்கு இன்பத்தைத் தருகிறதோ; அது சரியானதோ, தவறானதோ, எனக்கு சொந்தமானதோ அல்லது அடுத்தவனுக்கு சொந்தமானதோ என்றெல்லாம் பார்ப்பதில்லை. ஆனால், நாம் அதை அனுபவித்தே ஆகவேண்டும் என்று சொல்லி நாம் பாவத்தை செய்கிறதினால் தேவனுடைய வழிகளைவிட்டு விலகித்திரிகிறோம். அதனால்தான் நாம் எல்லோரும் ஆடுகளைப் போல அவனவன் தன்தன் வழியிலே போனோம். தேவனோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார். ஒரு ஆட்டுக்கு போதிக்கவேண்டுமென்றால் நாம் ஆடோடுஆடாக இருந்தால்தான் அதற்கு விளங்கும்.
ஒரு புறாக்களின் கூட்டம் ஒரு இடத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. இந்த இடத்தில் நல்ல மேய்ச்சல் இருக்கிறது என்று ஒருவன் மற்ற புறாக்களுக்கு சொல்ல விரும்பினான். அவன் புறாக்கூட்டத்தின் பக்கத்தில் போனவுடனே அத்தனை புறாக்களும் பறந்து போய்விட்டன. அப்போதுதான் யோசித்தான்; நான் புறாவாய் இராததினால் நான் நல்ல செய்தி சொன்னாலும் இவைகள் பயப்படுகின்றன. நான் ஒரு புறாவாக இருந்தால் அவைகள் என்னை ஏற்றுக்கொள்ளும், நான் சொல்வதைக் கேட்கும் என்று நினைத்தான். இயேசுவும் ஆடுகளை மேய்க்க அவரும் ஒரு ஆட்டுக்குட்டியாக வந்தார். அவர் தேவனிடத்திலிருந்து வந்ததினால் தேவ ஆட்டுக்குட்டி!
1. பலியான தேவ ஆட்டுக்குட்டி
வெளிப்படுத்தின விசேஷம் முழுவதும் பார்ப்பீர்களென்றால் அங்கே தேவ ஆட்டுக்குட்டியாகத்தான் அங்கு இயேசு சித்தரிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு காரணம் என்ன? அவர் ஏன் தேவ ஆட்டுக்குட்டி என அழைக்கப்படுகிறார். சாதாரணமாக ஆட்டுக்குட்டி என்பது ஒரு பலியிடுவதற்கான ஒரு மிருகம். ஆபிரகாம் ஈசாக்கை மோரியா மலைக்கு அழைத்துச் செல்லும்பொழுது ஈசாக்கு கேட்டான்; தகப்பனே கட்டை இருக்கிறது, நெருப்பு இருக்கிறது, பலிக்கான ஆட்டுக்குட்டி எங்கே? ஆட்டுக்குட்டி பலியிடப்படுகிற ஒரு மிருகமானதால் அதினுடைய இரத்தம் பாவங்களை மூடும் என்கிற ஒரு நம்பிக்கையிலே அந்த ஆட்டுக்குட்டி பலியிடபடுகிறது. தேவனால் பூமியிலே பலியிடப்படுவதற்கு அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டியானபடியினால் அவரை தேவ ஆட்டுக்குட்டி என்று சொல்லுகிறோம்.
சகோதரனே, அவர் யாருக்காக அனுப்பப்பட்டார்? உலகத்திற்காக என்றால் அது யாரோ என்று நினைக்கிறீர்களோ இல்லை; நீங்கள் வழி தப்பிப் போனீர்கள், நீங்கள் பாவஉளையில் சிக்கிக்கொண்டீர்கள், விடுவிக்க வழி இல்லாமல் விடுதலை பெற முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிற உங்களைத் தான் அந்த உளையான சேற்றிலிருந்து தூக்கி எடுப்பதற்காக தேவ ஆட்டுக்குட்டியாக வந்து உங்களுக்குப் பதிலாக மரித்து உங்களுக்கு ஜீவனைக் கொடுக்க அவர் வந்தார். அதுதான் தேவ ஆட்டுக்குட்டி. ஏசாயா 53ஆம் அதிகாரத்தில் நாம் அதைத்தான் பார்க்கிறோம். அவர் நெருக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப் போலவும், தன்னை மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாக சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார். அடிக்கப்படுவதற்கு கொண்டுபோகப்படுகிற ஆட்டுக் குட்டியாய் தேவனால் அனுப்பப்பட்டபடியால் அவர் தேவஆட்டுக்குட்டி!
அதைத்தான் இந்த வசனத்தில் நாம் வாசிக்கிறோம். வெளிப்படுத்தல் ஐந்தாம் அதிகாரம் 6, 9, 10ஆம் வசனங்களை வாசித்துப் பார்ப்போம். “அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்க கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம். ஒன்பதாம் வசனம் தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்.” அவர் எனக்காக அடிக்கப்பட்டு, என்னை தேவனுக்கு முன்பாக ராஜாவாயும் ஆசாரியனுமாயும் மாற்றுவதற்காக என் பாவத்திற்காக இயேசு அடிக்கப்பட்டார்.
யோர்தான் நதிக்கரையில் அவர் கடந்து செல்லும்பொழுது யோவான் ஸ்நானன் அவரைக் குறித்து சொன்னது என்ன? இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற ஆட்டுக்குட்டி. அக்காலத்தில் பலியிடும்பொழுது ஒரு ஆட்டுத்தலையின் மேல் தங்கள் கைகளை வைத்து பாவத்தைச் சொல்லி அதைப் போக்காடாக விட்டுவிடுவார்கள். ஆனால், அவர்கள் பாவம் நிவர்த்தியாவதில்லை. பாவம் தீர்க்கப்படவில்லை. ஆனால், இயேசு தன்னைத்தானே பலியாக ஒப்புக்கொடுத்த பொழுது அந்த பாவம் தீர்ந்தது. பாவம் சமுத்திரத்தின் ஆழத்தில் போடப்பட்டது. முதுகுக்கு பின்னாக எறியப்பட்டது. இனி அது நினைக்கப்படாதபடி மறைக்கப்பட்டது, அழிக்கப்பட்டது. அதனால்தான் அவர் எனக்கு வாழ்வைத்தர பலியான தேவ ஆட்டுக்குட்டியாக இருக்கிறார்.
2. பரிசுத்தமாக்குகிற ஆட்டுக்குட்டி
இரண்டாவதாக, அவர் ஏன் தேவ ஆட்டுக்குட்டி என்றால், அவர் என்னை பரிசுத்தமாக்குகிற ஆட்டுக்குட்டி. 1 யோவான்1:7,9 வசனங்களை வாசிக்கலாம். அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மை சுத்திகரிக்கும். பரிசுத்தப்படுத்தும் இரத்தத்தை சிந்தின தேவ ஆட்டுக்குட்டி. நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறார். எதைக்கொண்டு பரிந்து பேசுகிறார்? பிதா என்னை நியாயந்தீர்க்க விரும்பும்பொழுது இயேசுகிறிஸ்து தன்னுடைய இரத்தத்தைக் காட்டி இவனுக்காக நான் இரத்தம் சிந்தி இருக்கிறேன். இவன்மேல் கிருபையாயிரும் என்று சொல்லி எனக்கு வரும் அழிவை இன்றைக்கும் அங்கே தடுத்துக் கொண்டிருக்கிறார். அழிவிலிருந்து தப்பிப்பதற்கு பாதையைக் காட்ட சிலுவையில் மரித்தார். இன்றைக்கும் என்னை அழிவிலிருந்து காப்பாற்ற பரிந்து பேசுகிறார். அவர்தான் தேவ ஆட்டுக்குட்டி. அவர் சமாதானத்தை உலகத்திற்கு தந்த தேவ ஆட்டுக்குட்டி. ஏசாயா பதினோராம் அதிகாரம் ஆறாம் வசனத்தை நாம் வாசிப்போமென்றால் ஆயிரம் வருட அரசாட்சியில் அப்பொழுது ஓனாய் ஆட்டுக்குட்டியோட தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடு படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான். கொடிய மிருகங்கள், மனிதர்கள், பூமி சிருஷ்டிப்பு அனைத்தும் சமாதானமாய் இருக்கும். தேவன் ஆட்டுக்குட்டியாக பலியானதினால் இத்தனை பெரிய ஒரு சமாதானத்தை பூமிக்கு கட்டளையிட்டார்.
சகோதரனே, அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தாலே சமாதானத்தை உண்டு பண்ணினார். இந்த தேவஆட்டுக்குட்டியின் இரத்தம் உங்களுடைய பாவங்களை மட்டுமல்ல; சர்வலோகத்தின் பாவங்களையும் நிவர்த்தி செய்ய வல்லது. உங்களுடைய குடும்பத்தில் இந்த சமாதானம் உண்டா? ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்குகிறதா? பகைகளையும் தந்திரங்களையும் ஒருவருக்கொருவர் விட்டுவிட்டீர்களா? அங்கே சொல்லியிருக்கிறது; புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும். பகை இருக்காது. பகை ஒழியும். இன்னும் குடும்பத்தில் எத்தனை பகைகள்? இன்னும் உங்களால் நேசிக்க முடியாத ஆட்கள் எத்தனை பேர் உண்டு? நீங்கள் இன்னும் எத்தனை பேர் வீட்டிற்குப் போக மறுக்கிறீர்கள்? சகோதரனே, நீங்கள் ஒனாயாக இருக்கலாமா? தேவ ஆட்டுக்குட்டி உங்களுக்காக பலியாகி சிலுவையில் சிந்தின இரத்தத்தால் சமாதானத்தை உண்டாக்கி இருக்கிறார். உங்களுடைய குடும்பத்திற்குள் சமாதானம் வேண்டுமென்றால் நீங்கள் அந்த இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினாலே பாவங்களால் கழுவப்பட்டு பரிசுத்தமாகவேண்டும். இந்த ஆயிரம் வருட அரசாட்சியைவிட நித்தியநித்தியமாய் உள்ள முடிவில்லாத ஒரு ஆட்சிக்குள்ளாக பரலோகத்திலே நீங்கள் வரவேண்டும். உங்களுடைய குடும்பமும் வர வேண்டும். இன்றைக்கு நீங்கள் இயேசுவை தேவ ஆட்டுக்குட்டியாக அடையாளம் கண்டு அவருடைய இரத்தத்தினால் கழுவப்பட்டு, அவருடைய இரத்தத்தினால் பகையைக் கொன்று சிலுவையினால் சமாதானம் பண்ணுவீர்களா?