• சுவி. சுசி பிரபாகரதாஸ் •
(நவம்பர் – டிசம்பர் 2023)

சுவி. சுசி பிரபாகரதாஸ்

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் சத்தியவசன நேயர்களுக்கு அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில் உங்களோடு சேர்ந்து திருமறை வசனத்தை கற்றுக் கொள்வதிலே நான் மிகுந்த சந்தோஷம் அடை கின்றேன்.

அருமையானவர்களே, நம்முடைய ஆண்டவராகிய இயேசுவானவர் பிறந்த அந்த காலகட்டத்திலே ஆண்டவரால் பயன்படுத்தப்பட்ட சில முக்கியமான மனிதர்களை குறித்து நாம் கற்றுக்கொள்ளப் போகிறோம். மத்தேயு நற்செய்தி நூல் இரண்டாம் அதிகாரம் முதல் வசனத்திலே ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து: என்று நாம் வாசிக்கிறோம். அவர்கள் எத்தனை சாஸ்திரிகள் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் சிலர் சொல்வார்கள், அவர்கள் மூன்று சாஸ்திரிகள் என்று. ஆனால் நமக்குத் திருமறையிலே அதற்கு வசனத்தின் ஆதாரம் இல்லை. வசனத்தின் ஆதாரம் இல்லாதவைகளை ஏற்றுக்கொள்வது நல்லது அல்ல. ஏனென்றால், வெளிப்படுத்தப்பட்டவைகள் நமக்குரியது; மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குரியவைகள். ஆகவே, இந்த சாஸ்திரிகளைக் குறித்தும் அவர்களை வழிநடத்தின நட்சத்திரத்தைக் குறித்தும் நாம் கற்றுக்கொள்ளப் போகிறோம். இந்த சாஸ்திரிகள் கிழக்கிலிருந்து எருசலேமுக்கு வருகிறார்கள். இவர்கள் ஒரு நட்சத்திரத்தை கண்டார்கள். நம்முடைய ஆண்டவராகிய இயேசுவானவர் பிறந்தார் என்பதற்காக அங்கு வானத்திலே ஒரு பெரிய நட்சத்திரம் தோன்றியது. அந்த நட்சத்திரத்தைக் கண்டவர்கள், கணித்தவர்கள், ஆராய்ந்தவர்கள் ஒரு செய்தியை புரிந்து கொண்டனர். அதென்னவென்றால் யூதர்களுக்கு ராஜா பிறந்திருக்கிறார் என்று.

ஆகவே, அந்த நட்சத்திரத்தைக் கண்டதோடு, அறிந்ததோடு அவர்கள் நின்றுவிடவில்லை. அந்த யூதருக்கு ராஜாவாக பிறந்திருக்கிறவரைத் தரிசிக்க வேண்டும் என்பதற்காக பல தடைகளைத் தாண்டி, பல கஷ்டங்களைத் தாண்டி அவர்கள் கடந்துவருகிறார்கள். நான் என்னுடைய தனிப்பட்ட ஆலோசனையாகச் சொல்கிறேன்; இவர்கள் நட்சத்திரத்தை கண்டே பயணம் செய்திருக்கிறார்கள் என்றால் அதனுடைய பொருள் என்ன தெரியுமா? பகலில் அவர்கள் பயணம் செய்வதற்கு வாய்ப்பு இல்லை. இரவில்தான் பயணம் செய்திருப்பார்கள். அப்படியானால் அவர்கள் தங்கள் குடும்பத்தைவிட்டு தன் தொழிலைவிட்டு அல்லது தன் குடும்ப சூழ்நிலைகளைவிட்டு தங்கள் தேசங்களைவிட்டு அந்த நட்சத்திரத்தை இரவில் கண்டு பின்பற்றிக்கொண்டு வருகிறார்கள் என்று சொன்னால் அவர்கள் எவ்வளவு விலைக்கிரயம் கொடுத்திருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நட்சத்திரத்தை அவர்கள் ஆராய்ந்ததோடு அவர்கள் அதைப் பின்பற்றினார்கள். அது மாத்திரமா, இந்த நட்சத்திரத்தைப் பின்பற்றின சாஸ்திரிகள் ஒரு தவறு செய்தனர். என்ன தவறு? யூதருக்கு ராஜா அரமனையில்தான் பிறந்திருப்பார் என்று கருதி அவர்கள் ராஜாவின் அரமனைக்கே வந்துவிட்டனர். இன்றும் அநேக சமயங்களிலே நன்கு படித்தவர்கள், நல்ல புத்திசாலிகள் என்று சொல்லிக்கொள்பவர்களும், நல்ல ஆழமான நிலையில் உள்ளவர்கள்கூட தடுமாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இவர்களுடைய கணிப்பு என்ன? யூதருக்கு ராஜா அரமனையில் பிறந்திருப்பார். ஆகவே அரமனைக்கு சென்றார்கள், செய்தியைச் சொன்னார்கள். அதைக் கேட்ட ராஜா குழப்பம் அடைந்தான்; கலங்கினான். அவன் பிரதான ஆசாரியர் ஜனத்தின் வேதபாரகர் எல்லாரையும் கூடிவரச் செய்து அவர்களிடத்தில் விசாரிக்கிறான்.

அதினிமித்தம் கிறிஸ்துவானவர் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார் என்பதை அறிந்து கொண்டான். ஏரோது அவர்களை அனுப்பின பின்பு உடனே அங்கிருந்து அவர்கள் பயணத்தை மீண்டும் தொடங்குகிறார்கள். இதை மத்தேயு 2:9 ஆம் வசனத்தில் நாம் பார்க்கிறோம்: இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது. அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள் (வசனம் 10). ராஜா அரமனையில் பிறப்பார் என்ற தவறான சிந்தனையோடு தவறான இடத்திற்கு அவர்கள் சென்றபோது மகிழ்ச்சியை இழந்தார்கள். இப்போது நட்சத்திரத்தைக் கண்டபோது மறுபடியும் சந்தோஷமடைந்தனர். அந்த நட்சத்திரமானது பிள்ளை இருந்த இடத்திற்கு வந்து நின்றது. பிற்பாடு அந்த நட்சத்திரத்தைக் குறித்து திருமறையிலே நமக்கு எந்தக் குறிப்பும் இல்லை.

அருமையானவர்களே, அந்த சாஸ்திரிகள் பல விலைக்கிரயங்களைக் கொடுத்துத் தடைகளைத் தாண்டி எருசலேமுக்கு வந்தார்கள். மறுபடியுமாக அந்த நட்சத்திரத்தின் வழிநடத்துதல் மூலமாக கிறிஸ்துவானவர் அங்கே பிறந்திருப்பதை தங்கள் சொந்த கண்ணால் கண்டார்கள். வசனம் 11இல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள். யூதருக்கு ராஜாவாக பிறந்திருக்கிற அந்த இயேசுவை அவர்கள் தொழுதுகொண்டார்கள்.

முதலாவது, இந்த சாஸ்திரங்களிடத்தில் நாம் கற்றுக்கொள்கிற காரியம் என்னவென்றால், ஆண்டவரை அவர்கள் தேடினார்கள், கண்டு கொண்டார்கள், பிறகு தொழுதுகொண்டார்கள். ஆகவே ஆண்டவரை நாம் தொழுதுகொள்ள அழைக்கப்படுகிறோம். ஏதோ பண்டிகையில் மாத்திரமல்ல, அவரை ராஜாவாக தெய்வமாக இரட்சகராக நாம் அவரைத் தொழுதுகொள்ள அழைக்கப்படுகிறோம்.

இரண்டாவது இந்த சாஸ்திரிகளிடத்தில் கற்றுக் கொள்கிற இன்னொரு காரியம் என்ன தெரியுமா? அவர்கள் மூன்று விதமான காணிக்கைகளைக் கொடுத்தனர். பொன் அது ராஜாவுக்குரியது, தூப வர்க்கம் என்பது அது ஆசாரியன் பயன்படுத்துவதாகும். ஆகவே இது ஆசாரிய பணிவிடைக்காரனோடு இணைந்த ஒன்றாகும். வெள்ளைப்போளம் என்பது கசப்பானது. அது மரணத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. இந்த சாஸ்திரிகள் ஆண்ட வரை ராஜாவாக ஏற்றுக்கொண்டனர். அடுத்ததாக, ஆண்டவரை ஆசாரியனாக ஏற்றுக்கொண்டார்கள். அதுமாத்திரமல்ல, ஆண்டவரை அவருடைய மரணத்தின் மூலமாக அவர் கொடுக்கப்போகிற அந்த தியாக பலியை அவர்கள் புரிந்துகொண்டனர். அருமையானவர்களே, ஆண்டவரை தொழுது கொண்டால் போதாது. அவருக்கு நம்மையே நமக் குரியது அனைத்தையும் அர்ப்பணிக்க அழைக்கப் படுகிறோம்.

ஏரோதுவினிடத்தில் திரும்பிப்போக வேண்டாம் என்று மறுபடியும் சொப்பனத்தினாலே அவர்கள் எச்சரிக்கப்பட்டார்கள். வேதவசனம் சொல்கிறது: பின்பு, அவர்கள் ஏரோதுனிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள் (மத்.2:12).

அருமையானவர்களே, நட்சத்திரத்தை ஆராய்ந்தார்கள்; அதற்கு விலைக்கிரயம் கொடுத்து தடைகளைச் சந்தித்து அந்த ஆண்டவரைக் கண்டனர். கண்டதோடு நின்றுவிடாதபடி தொழுதுகொண்டார்கள். தொழுதுகொண்டதோடு நின்றுவிடாதபடி காணிக்கைகளைப் படைத்தார்கள். அதோடு நின்று விடாதபடி தொடர்ந்து ஆண்டவர் அவர்களை வழி நடத்தும்போது அந்த வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிந்து வேறுவழியாய் சென்றனர். அவர்கள் வந்த வழி வேறு; ஆனால், அவர்கள் திரும்பிச்சென்ற வழி வேறு. இதனுடைய பொருள் என்ன தெரியுமா?˜ அதன்பிறகு கர்த்தர் தங்களை நடத்துகிற வழியின் அடிப்படையிலே அவர்கள் தங்கள் வாழ்க்கை பயணத்தை தொடர ஆரம்பிக்கிறார்கள்.

அருமையானவர்களே, இந்த சாஸ்திரிகளின் மூன்று காரியத்தை நான் வலியுறுத்துகிறேன். ஒன்று அவரை பணிந்து கொண்டார்கள்; இரண்டாவது காணிக்கைகளைப் படைத்தார்கள்; மூன்றாவது கர்த்தருடைய நடத்துதலுக்குக் கீழ்ப்படிந்து அவர்கள் தங்கள் பயணத்தை வாழ்வைத் தொடர்கிறார்கள். ஒருவேளை கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுகிற உங்களுடைய வாழ்விலே அவரை நீங்கள் தொழுதுகொள்ளுகிறீர்களா? கர்த்தருக்குக் கொடுக்கவேண்டியதை அவருக்கு கொடுத்திருக்கிறீர்களா? அவராலே நீங்கள் தொடர்ந்து நடத்தப்படுவதற்கு இடம் கொடுத்து இருக்கிறீர்களா? சிந்திப்போம். அவர் தம்முடைய நடத்துதலை வசனத்தின் ஊடாக உங்களுக்கு வெளிப்படுத்தும்போது அதற்குக் கீழ்ப்படிந்து தொடர்ந்து நடக்கிறீர்களா அல்லது எல்லாம் அறிந்துகொண்ட நீங்கள் அந்த நடத்துதலை உதறிவிட்டு உங்கள் மனம் போன போக்கிலே வாழ்வீர்களானால் இந்த பண்டிகை சரியான பண்டிகையாக இருக்காது.

மரணஇருளில் வெளிச்சம்!

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 12 சிறுவர்களும் அவர்களின் கால் பந்து பயிற்சியாளரும், 2018ஆம் ஆண்டு, ஒரு சாகசத்தை விரும்பி, ஒரு குறுகிய குகைக்குள் இறங்கினர். அந்த குகையினுள் ஓடிக்கொண்டிருந்த ஆற்றின் நீரோட்டம் உயர்ந்தபடியால் அவர்கள் குகையிலிருந்து வெளிவர முடியாமல் சிக்கிக்கொண்டனர். இவர்கள் என்னாவாயினர் என்பதை ஒருவரும் அறியாத நிலையில் இரண்டரை வாரங்கள் கழித்தே அவர்கள் உயிருடன் இருப்பதை கண்டுபிடித்தனர். மீட்புப்பணியாளர் குழுவினர் தண்ணீருக்குள் மூழ்கி, அவர்களைத் தேட முயற்சித்தபோது. அவர்கள் அனைவரும் ஒரு பாறையின்மீது அமர்ந்திருப்பதைப் பார்த்து வியந்தனர். பல நாட்கள் இருளில் இருந்த அவர்கள், அந்த இருளைக் கிழித்துக்கொண்டு ஒரு ஒளி வரும் என்ற எதிர்பார்ப்போடும் நம்பிக்கையோடும் காத்திருந்தனர். அவர்கள் நம்பிக்கை வீண்போகவில்லை.

இதைப்போன்றுதான் இயேசுகிறிஸ்து இவ்வுலகில் உதித்தபோது காணப்பட்டது. மல்கியா தீர்க்கதரிசியின் காலத்திற்குப் பின் 400 ஆண்டுகள் இருளாயிருந்தது. தேவனிடமிருந்து எந்த வார்த்தையும் தீர்க்கதரிசனமும் வரவில்லை. ஆனாலும் தேவனுடைய இராஜ்ஜியம் வர ஒரு கூட்ட மக்கள் காத்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்தபடி மரண இருளில் இருந்த ஜனங்களுக்கு நம்பிக்கைத் தரும்படியாக அந்த பெரிய வெளிச்சம் பிரகாசித்தது. ஆம், இயேசுகிறிஸ்து இவ்வுலகில் நம்மை மீட்கும்படியாக பிறந்தார்! இன்றைக்கு அந்த ஜீவ ஓளி உலகமெங்கும் பிரகாசித்து மரண இருளில் இருந்த மக்களை மீட்டுவருகிறது.

இதைக் குறித்து யோவான் அப்போஸ்தலன் கூறும்போது, “அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; … உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி” (யோவான் 1:4-5, 9) என்கிறார்.