சத்திய வசனம் பங்காளர் மடல்

(நவம்பர் – டிசம்பர் 2023)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

நம்மை மீட்கும்படியாக இவ்வுலகில் மானிடனாய் அவதரித்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

இவ்வருடத்தின் கடைசி மாதம் வரையிலும் நம்மை பாதுகாத்து நடத்தி வந்த தேவனைத் துதிப்போம். இயேசுகிறிஸ்து இவ்வுலகில் வந்துதித்த நோக்கம் நம் ஒவ்வொருடைய வாழ்விலும், நமது குடும்பங்களிலும் நிறைவேற வேண்டுதல் செய்கிறோம். இந்த கிறிஸ்துமஸ் நாட்களில் நம்முடைய தேசத்தில் ஆண்டவராகிய இயேசுவை அறியாத மக்களுக்கு ஆண்டவருடைய அன்பின் நற்செய்தியை அறிவிக்க நாம் முற்படுவோம்.

விசுவாச பங்காளர்களுக்கு அறிவித்திருந்தபடி மதுரையில் சத்தியவசன கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நவம்பர் 26ஆம் தேதி ஆசீர்வாதமாக நடைபெற்றது. இக்கீத ஆராதனையில் பங்குபெற்ற பங்காளர் குடும்பங்களுக்கு எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். சத்தியவசன 2024 ஆம் வருட காலண்டர் வெளிவந்துள்ளது. வழக்கம்போல் அதை பங்காளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். கூடுதலான காலண்டர் தேவைப்படுவோர் 27ஆம் பக்கத்தில் உள்ள விளம்பரத்தைக் கவனிக்கவும்.

முன்னமே அறிவித்திருந்தபடி சகோ.சுசி பிரபாகரதாஸ் அவர்கள் தொகுத்து வழங்கிய இயேசு கிறிஸ்து அருளிய உவமைகள் என்ற புத்தகத்தை இவ்வூழியத்தைத் தாங்கும் பங்காளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். இப்புத்தகத்தின் வாயிலாக கர்த்தருடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள நாங்களும் ஜெபிக்கிறோம். இப்புத்தகத்தின் வாயிலாக தாங்கள் அடையும் நன்மைகளை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். மேலும் இவ்வூழியத்தின் வாயிலாக தாங்கள் அடையும் ஆசீர்வாத அனுபவங்களையும் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நாம் இணைந்து தேவனை மகிமைப்படுத்துவதற்கு அது ஏதுவாயிருக்கும்.

இவ்விதழில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் காலம் நிறைவேறினபோது … என்ற தலைப்பில் எழுதியுள்ள கிறிஸ்துபிறப்பின் நற்செய்தியும், மேய்ப்பர்களுக்கு அறிவிக்கப்பட்ட செய்தி என்ற தலைப்பில் சகோ.உதயகுமார் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையும், தேவ ஆட்டுக் குட்டி என்ற தலைப்பில் பேராசிரியர் S.C.எடிசன் அவர்கள் வழங்கிய சிறப்புச் செய்தியும் இடம் பெற்றுள்ளது. மேலும் நட்சத்திரமும் சாஸ்திரிகளும் என்ற தலைப்பில் சகோ.S.சுசி பிரபாகரதாஸ் அவர்கள் வழங்கிய சிறப்புச்செய்தியும், ஆசீர்வாதமான கிறிஸ்தவ குடும்பம் என்ற தலைப்பில் Dr.எம்.எஸ்.வசந்த குமார் அவர்கள் எழுதிய குடும்பத்தைக் குறித்த செய்தியின் தொடர்ச்சியும், வெளிப்படுத்தின விசேஷத்திலிருந்து Dr.உட்ரோ குரோல் அவர்கள் வழங்கிய வேதபாடமும் இடம் பெற்றுள்ளது. இச்செய்திகள் தங்களுக்கு ஆசீர்வாதமாக அமைய வேண்டுதல் செய்கிறோம்.

உங்கள் அனைவருக்கும் சத்தியவசன ஊழியத்தின் சார்பாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்