• Dr.எம்.எஸ்.வசந்தகுமார் •
(நவம்பர் – டிசம்பர் 2023)
நன்மையான ஈவா? அல்லது தீமையான ஈயா?

Dr.எம்.எஸ்.வசந்தகுமார்
(சென்ற இதழின் தொடர்ச்சி)
2. ஏற்ற மனநிலையா? அல்லது ஏமாற்ற மனநிலையா?
தேவனே ஆணையும் பெண்ணையும் சிருஷ்டித்து, அவர்களுக்குத் திருமணவாழ்வை உருவாக்கிக் கொடுத்தாலும், ஆணும் பெண்ணும் வித்தியாசமாக சிந்திப்பவர்களாகவும் உணர்பவர்களாகவும், செயல்படுபவர்களாகவும் இருப்பதுமட்டுமல்ல, ஒருவர் மற்றவரோடு உரையாடும்போதும் உறவாடும்போதும் எல்லா நேரங்களிலும் ஒரே மனநிலையில் செயல்படுகிறவர்களாகவும் இருப்பதில்லை. இதனால்தான், கனிவாகப் பேசியவன் திடீரென்று ஏன் கடுப்பாகிவிட்டான் என்று மனைவியும், சிரித்தமுகத்தோடு இருந்தவள் திடீரென்று ஏன் சினந்துகொள்கிறாள் என்று கணவனும் குழப்பமடைவது திருமணவாழ்வின் அன்றாட அழுகையாகவே உள்ளது.
மேலும், எந்த மனிதனையும் நாம் கவனித்துப் பார்த்தால், அவனுடைய முகபாவம், பேசும் விதம், பேச்சுத்தொனி, சரீரஅசைவுகள், உணர்ச்சி வசப்படுதல், உபயோகிக்கும் சொற்கள் என்பன திடீர் திடீரென்று மாற்றமடைவதைக் காணலாம். உண்மையில், ஒருமனிதனுக்குள் பலமனிதர்கள் இருக்கின்றார்களா என்று நாம் வியப்படைகின்ற விதத்தில் அடிக்கடி மாறுபடுகிறவர்களாகவே மனிதர்கள் இருக்கின்றார்கள். உதாரணத்திற்கு, அப்போஸ்தலனாகிய பவுல்கூட, “நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன்” (ரோ.7:15) என்று கூறிவிட்டு, “ஆதலால் நான் அல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது” (ரோ.7:17) என்றும், “உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் மேல் பிரியமாயிருக்கிறேன்” ரோ.7:22) என்றும் குறிப்பிடுவதனால், அவரில் இரண்டுநபர்கள் இருந்தார்களா? என்றே கேட்கத் தோன்றுகிறது. இதைப்போலவே, “பழைய மனிதனைக் களைந்துபோடும்படி” அவர் அறிவுறுத்தும்போதும் (எபே.4:22-24) “உள்ளான மனுஷன்” (2கொரி.4:16, எபே.3:16) என்னும் சொற்பிரயோகத்தை உபயோகிக்கும்போதும் இத்தகைய எண்ணமே நமக்கு ஏற்படுகின்றது.
ஒருவனுடைய செயல்களையும் அவன் பேசுகின்ற வார்த்தைகளையும் வைத்து, அவனுக்குள் முரண்பாடான அல்லது வித்தியாசமான மனிதர்கள் இருக்கின்றார்கள். அதாவது, நன்மையும் தீமையும் அவனுக்குள் இருக்கின்றது, அல்லது நல்லவனும் கெட்டவனும் அல்லது கோபக்காரனும் அன்பானவனும் அவனுக்குள் இருக்கிறார்கள் என்பது, எல்லா மதங்களிலும் தத்துவங்களிலும் காணப்படும் பொதுவான ஒருகருத்தாக இருந்தாலும், ஒவ்வொரு மனிதனுடைய மனதிலும் “பெற்றோராயிருத்தல்” (Parent Ego) “பேதையாயிருத்தல்” (Child Ego) “பெரியவனாயிருத்தல்” (Adult Ego) என்னும் மூன்று மனநிலைகள் இருப்பதை உளவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால்தான், நேரத்திற்கு நேரம் இம்மூன்று மனநிலைகளில் ஏதாவதொன்றின் செயற்பாடு வெளிப்படுகின்ற விதத்தில் மனிதர்கள் நடந்துகொள்கின்றார்கள். உண்மையில், ஒவ்வொரு மனிதனிலும் இருக்கும் இம் மூன்று மனநிலைகளையும் நாம் அறிந்து கொள்வது, நம்மையும் மற்றவர்களையும் நாம் சரியான விதத்தில் புரிந்துகொண்டு அவர்களோடு சந்தோஷமாக வாழ்வதற்கும், திருமண வாழ்வில் மகிழ்வுடன் இருப்பதற்கும் வழிவகுக்கும்.
தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட மனிதனின் மூளை, சம்பவங்களைப் பதிவுசெய்து பாதுகாப்பாக வைத்திருந்து, காலத்திற்குக் காலம் அவற்றில் சிலவற்றை நினைவுக்குக் கொண்டுவருகிறது என்பதை மருத்துவர்களும் உளவியலாளர்களும் கண்டுபிடித்துள்ளார்கள். மேலும், தாயின் வயிற்றில் இருக்கும்போதும் குழந்தை தன்னுடைய அனுபவங்களை மூளையில் பதிவு செய்துகொள்வதாகவும் உளவியலாளர்கள் கூறுகின்றார்கள். இதனால், மனிதனுடைய சிறுபிராய வாழ்வு அவனுடைய எதிர்கால வாழ்வை, குறிப்பாக அவன் நடந்துகொள்கின்ற, பேசுகின்ற, உணர்கின்ற விதத்தைப் பாதிக்கின்றது. அதாவது, நம்முடைய ஆள்தத்துவத்தின் (Personality) வளர்ச்சியும், வளர்ந்து பெரியவர்களாகிய பின் ஏற்படும் உளவியல் அல்லது மன நிலை பாதிப்புகளும், தற்காலத்தில் நாம் நடந்துகொள்ளும் அல்லது பேசுகின்ற விதங்களும், சிறு பிராயத்தில் நமக்கு ஏற்பட்ட அனுபவங்களின் தாக்கங்களுக்கு உட்பட்டவைகளாகவே உள்ளன. ஏனெனில், சிறுபிராயத்தில் பெற்றோர் நம்மை எப்படி நடத்தினார்களோ, அவ்விதமாகவே நாம் வளர்ந்து பெரியவர்களான பின், மற்றவர்களை நடத்துகிற வர்களாக இருக்கின்றோம் என்பது உளவியலாளர்கள் கண்டுபிடித்த ஒரு உண்மையாக உள்ளது.
இதனால்தான், இவ்வுண்மையை தங்களுடைய அனுபவத்தில் அறிந்திருந்த நம் முன்னோர்கள், “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது” என்றும், “இளமையிற் கல்வி சிலையில் எழுத்து” என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும், வேதாகமமும்கூட, “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” (நீதி.22:6) என்று அறிவுறுத்தியுள்ளது. எனினும், பிள்ளை நடக்க வேண்டிய வழியில் அவனை நடத்துவதற்கு, நாமும் அவ்வழியில் நடக்கவேண்டியது அவசியமாகும். அதாவது பொய் சொல்லக்கூடாது என்று பிள்ளையிடம் கூறிவிட்டு நாம் பொய் சொல்கிறவர்களாக இருக்கக்கூடாது. ஏனெனில், இத்தகைய முரண்பாடான வாழ்வைப் பார்க்கும் பிள்ளைகளின் மூளையில் இவைகள் பதிவு செய்யப்படுவதனால், பிற்காலத்தில் அவர்களும் இவ்விதமாகவே முரண்பாடுடையவர்களாக வாழ்வார்கள். இதனால், “பெற்றோராயிருத்தல்” “பேதையாயிருத்தல்” “பெரியவனாயிருத்தல்” என்னும் மனநிலைகள் எப்படி உருவாகின்றன என்பதை அறிந்துகொள்வது, மற்றவர்களை சரியாகப் புரிந்துகொண்டு அவர்களுடனான உறவுகளை சீர்படுத்திக்கொள்வதற்கும், திருமணவாழ்வில் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கும் பெரிதும் உதவிடும்.
பெற்றோராயிருத்தல் என்பது பள்ளிக்கூடத்திற்குச் செல்லும்வரை நாம் வாழ்ந்த வீட்டில் நம்மைச் சுற்றிநடக்கும் காரியங்களை மூளை பதிவுசெய்து வைத்திருந்து, காலத்திற்குக் காலம் அதன்படி செயல்படுவதாகும். உளவியலாளர்கள் இதனைப் பெற்றோர் என்று பெயரிடுவதற்குக் காரணம், பள்ளிக் கூடத்திற்குச் செல்லும்வரை பிள்ளைகள் பெற்றோர் பேசுவதையும், அவர்கள் வீட்டில் நடந்து கொள்வதையுமே பார்ப்பதோடு, இவற்றில் எதையுமே விட்டுவிடாமலும், மாற்றியமைக்காமலும் முழுமையாக உள்வாங்கிக் கொள்கின்றார்கள். ஏனெனில், பெற்றோரின் செயல்களிலும் பேச்சுகளிலும் எது சரி, எதுதவறு என்பதை நிதானித்து அறியமுடியாத நிலையில் சிறுபிள்ளைகள் இருக்கின்றார்கள்.
மேலும், பெற்றோரின் செயல்களைப் பார்க்கும் பிள்ளைக்கு அவர்கள் செய்யும் காரியங்களும் பேசும் வார்த்தைகளும் தெரிகின்றதே தவிர, அவர்கள் ஏன் இவ்வாறு செயல்படுகின்றனர் என்பதை அறிந்துகொள்ளும் ஆற்றல் இருப்பதில்லை. இதனால், பெற்றோர் தன்னோடு பேசுவதையும், பேச்சின் வித்தியாசமான தொனிகளையும், பெற்றோரின் மாறுபடுகின்ற முகபாவங்களையும், அவர்களுடைய கரங்கள் தரும் வித்தியாசமான தொடுதல்களையும் அழுத்தங்களையும், அவர்கள் அடிப்பதையும் அரவணைப்பதையும் பிள்ளையின் மூளை பதிவு செய்துவிடுகிறது. மேலும், ஐந்து அல்லது ஆறு வயது வரை பிள்ளை சந்திக்கும் நபர்களின் செயல்களும் பேச்சுகளும், தொலைக்காட்சிப் பெட்டியிலும் அலைபேசியிலும் அவர்கள் பார்க்கும் காரியங்களும் அவர்களுடைய மூளையில் பதிவு செய்யப்படுகின்றன. இதனால், பிற்காலத்தில் இவற்றின் செல்வாக்கின் அல்லது பாதிப்புக்கு உட்பட்ட நிலையிலேயே மனிதர்கள் மற்றவர்களோடு பேசுகிறவர்களாகவும் செயல்படுகிறவர்களாகவும் இருக்கின்றார்கள். அதாவது, சில நேரங்களில் நாம் நம்முடைய பெற்றோராக, அதாவது, பல வருஷங்களுக்கு முன்பு பெற்றோர் நம்மிடம் எவ்விதமாக நடந்துகொண்டார்களோ அவ்விதமாக அவர்களைப்போலவே மற்றவர்களுடன் நடந்துகொள்கின்றோம்.
பெற்றோராயிருத்தல், சிறுபிராயத்தில் நம்மை மற்றவர்கள் நடத்தியவிதமாக நாம் மற்றவர்களை நடத்துவதாக இருந்தாலும், சிறுபிராயத்திலிருந்து நம்முடைய மூளையில் இன்னுமொரு காரியமும் பதிவு செய்யப்படுவதாக உளவியலாளர்கள் கூறுகின்றார்கள். அதாவது, சிறுபிராயத்தில் நமக்கு வெளியில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்தின்போதும் நம்முடைய மனம் எவ்விதமான உணர்வுகளுக்கு உட்பட்டதோ அவைகளும் மூளையில் பதிவு செய்யப்படுகின்றன. இதுவே “பேதையாயிருத்தல்” ஆகும். ஆனால் இது, பெரும்பாலும் வெறும் உணர்வுகளின் பதிவாகவே இருக்கும். எனினும், சிறுபிராயத்தில் நாம் பெரும்பாலான விஷயங்களை அறியாதவர்களாகவே இருப்பதனால், குழந்தைத்தனமாக நடந்துகொள்கின்றோம். மேலும், இத்தகைய குழந்தைத்தனமான செயல்களும் உணர்வுகளும் நம்முடைய மூளையில் பதிவு செய்யப்பட்டிருப்பதனால், நாம் வளர்ந்து பெரியவர்களான பின்பும் இத்தகைய குழந்தைத்தனம் நம்மில் வெளிப்படுகின்றது. அதாவது, சில சந்தர்ப்பங்களில் நம்முடைய செயல்கள் பேதையான குழந்தையின் செயல்களாகவே உள்ளன. இதனால், உளவியலாளர்கள இதனை “நமக்குள் இருக்கும் குழந்தை” என்று கூறுகின்றார்கள். இதுவே பேதையாயிருத்தலாகும்.
குழந்தை பிறந்து பத்து மாதங்கள்வரை தன் மூளையில் பெற்றோரின் செயல்களும் அவற்றுக்கான குழந்தைகளின் உணர்வுகளும்மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன. ஆனால், பத்து மாதத்தின் பின்னர் ஆச்சரியமான மாற்றங்கள் குழந்தையின் மனதில் ஏற்படுகின்றன. எனினும், அதுவரைகாலமும் தனக்கு செய்யப்படும் காரியங்களையும், தன்னைச் சுற்றி நடப்பவைகளையும் உணருகின்ற தன்மை மட்டுமே குழந்தைக்கு இருக்கும். ஆனால், பத்து மாதங்களின் பின், தனக்குத் தரப்படுகின்ற விளையாட்டுப் பொருட்களை குழந்தை ஆராய்ச்சி செய்ய முற்படுகிறது. மேலும், அதுவரை காலமும் அழுகையையும் சிரிப்பையும் மட்டுமே வெளிப்படுத்திய குழந்தை, தானே அசையவும், எழுந்திருக்கவும், பொருட்களைப் பிடிக்கவும், அவற்றைப் பார்க்கவும் முற்படுகிறது. மேலும், குழந்தை பெண்ணாக இருந்தால் தலையை ஒரு பக்கமாகச் சாய்த்துக்கொண்டு சிரிக்கும்போது வெட்கத்தையும் வெளிப்படுத்துகிறது. எனவே, பத்தாவதுமாதம் குழந்தைகள் தாமாகச் சிந்தித்துச் செயற்படத் தொடங்கும் காலமாக உள்ளது. இதனால், இதுவே “பெரியவனாயிருத்தலின்” ஆரம்பமாகும். எனினும், இது பெற்றோராயிருக்கும் மனநிலையையும், பேதையாயிருக்கும் மனநிலையையும்விட வித்தியாசமான மனநிலையாய் இருக்கும்.
“பெற்றோராயிருத்தல்” என்பது பெற்றோரின் செயல்களையும் பேச்சுகளையும் அறிவுறுத்தல்களையும் உள்ளடக்கிய மூளையின் பதிவாகவும், “பேதையாயிருத்தல்” என்பது பெற்றோரின் நடவடிக்கைகள் குழந்தையில் ஏற்படுத்திய உணர்வுகளின் பதிவாகவும் இருக்கும். ஆனால், “பெரியவனாயிருத்தல்” என்பது, சுயமாக சிந்தித்து, ஆராய்ந்து அறிந்துகொண்ட விஷயங்களினதும், சுயமாகச் செய்கின்ற செயல்களினதும் பதிவாக இருக்கும். ஆனாலும், ஆரம்ப காலத்தில் பிள்ளையின் மனதில் இருக்கும் “பெரியவனாயிருத்தல்” என்னும் நிலை மிகவும் பலவீனமானதாக, குறிப்பாக பெற்றோரின் கண்டிப்பான கட்டளைகளினால் பாதிக்கப்படக் கூடியதாகவே இருக்கும். ஆனால், பிள்ளை வளர்ந்துவரும்போது பெற்றோரின் செயல்களுக்கும், தன்னுடைய குழந்தைத்தனமான உணர்வுகளுக்கும், வாழ்க்கையைப் பற்றி தானே அறிந்துகொள்ளும் விஷயங்களுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தையும் அறிந்துகொள்ளும். மேலும், பெரியவனாயிருக்கும் மனம், பெற்றோராயிருக்கும் மனதில் பதிவு செய்யப்பட்டுள்ள விஷயங்கள் சரியானவையா என்றும், அவைகள் தற்காலத்திற்கு ஏற்றவைகளா என்றும் ஆராய்ந்து பார்த்து, அவற்றை ஏற்றுக்கொள்ளவும் நிராகரிக்கவும் கூடியநிலையில் இருக்கும்.
இதைப்போலவே, பேதையாயிருக்கும் மனதில் உள்ள உணர்வுகள் தற்காலத்திற்கும் பொருத்தமானதா என்றும் ஆராய்ந்து பார்க்கும். இவ்விதமாக, நம்முடைய கல்வி, பொழுதுபோக்கு, மற்றவர்களுடனான உறவு என்பவற்றில் நாம் அன்றாடம் அறிந்துகொள்ளும் விஷயங்கள், நம்முடைய பெற்றோராயிருக்கும் மனதிலும் பேதையாயிருக்கும் மனதிலும் உள்ள தவறுகளைத் திருத்தி வளர்ச்சியடைய வைக்கும். இதனால், கிறிஸ்தவர்களாகிய நாம் வேதாகம சத்தியங்களினால் நம்முடைய “பெரியவனாயிருக்கும் மனதை” சீர்படுத்த வேண்டியவர்களாய் இருக்கின்றோம்.
மனிதர்களாகிய நம் மனதில் “பெற்றோராயிருத்தல்” (Parent Ego) “பேதையாயிருத்தல்” (Child Ego) “பெரியவனாயிருத்தல்” (Adult Ego) என்னும் மூன்று விதமான மனநிலைகள் இருப்பதோடு, நாம் மற்றவருடன் உரையாடும் அல்லது உறவாடும் நேரங்களில் இவற்றில் ஏதாவதொரு மனநிலையில் செயல்படுகிறவர்களாக இருக்கின்றோம். இதனால் கணவன் மனைவி உறவிலும், இத்தகைய மாறுபட்ட மனநிலைகளில் மனிதர் செயல்படுவதனால், ஒருவர் மற்றவரைத் தவறாகப் புரிந்துகொண்டு அவரைப் புண்படுத்தி திருமண வாழ்வில் பிரச்சனைகளை உருவாக்கிவிடுகின்றனர். ஏனெனில், பேதையாயிருக்கும் மனநிலையில் மனைவி குழந்தைத்தனமாக செயல்படும்போது, அவளைக் குற்றப்படுத்தும் விதத்தில் கணவன் திட்டி விடுகின்றான். ஆனால், இவ்வாறு நடந்துகொள்வதை கணவன் தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், கணவனும் சில நேரங்களில் குழந்தைத்தனமாகவே செயல்படுவான்.
இதனால், ஒருவர் குழந்தைத்தனமாக செயற்படும்போது மற்றவர் பெற்றோராயிருக்கும் மன நிலைக்குச் செல்லவேண்டும். ஆனால், அவருடைய சிறு பிராயவாழ்வு மகிழ்ச்சிகரமானது இல்லையென்றால், குழந்தைத்தனமாகச் செயற்படும் மனைவிக்கோ கணவனுக்கோ சரியான விதத்தில் ஆறுதலும் அன்பும் அரவணைப்பும் கொடுக்க முடியாமல் இருக்கும். மேலும், சில நேரங்களில் கணவன் மனைவி இருவருமே ஒரே சமயத்தில் குழந்தைத்தனமான மனநிலையில் அல்லது பெற்றோராயிருக்கும் மனநிலையில் செயல்படுவார்கள். ஆனால், கணவனோ அல்லது மனைவியோ பெற்றோராயிருக்கும் மனநிலையில் செயல்படும்போது, ஒருவருடைய நடத்தையை மற்றவர் விமர்சித்து, அதைத் தற்காலத்திற்கு ஒத்துவராத பழங்கால செயல் என்றோ, அல்லது உன் பெற்றோர் உன்னை ஒழுங்காக வளர்க்கவில்லை என்றோ குற்றம் சாட்டுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
எனவே, ஒருவர் பேதையாயிருக்கும் மனநிலையில் செயல்படும்போது மற்றவர் பெற்றோராயிருக்கும் மனநிலையில் செயல்படவேண்டும். ஆனால், இருவருமே பெரியவராயிருக்கும் மனநிலையில் செயல்படும்போது ஒருவர் மற்றவருக்குத் தேவன் தந்த ஆசீர்வாதமான ஈவாக இருப்பதை அறிந்துகொள்வார்கள்.
(தொடரும்)