நாம் சிலாக்கியம் பெற்றவர்கள்!

சகோதரி சாந்தி பொன்னு
(ஜனவரி-பிப்ரவரி 2016)

“அவரைப் (கிறிஸ்துவை) பற்றும் விசுவாசத்தால் அவருக்குள்
நமக்குத் தைரியமும், திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும்
சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது” (எபேசியர் 3 : 12).

வருடங்கள் நம்மைவிட்டுக் கடந்துபோய் கொண்டிருக்கின்றன. இப்பூமியும் சூரியனைச் சுற்றுகின்ற தனது சுழற்சியில் இன்னுமொரு புதிய ஆரம்பத்தை ஆரம்பித்துவிட்டது. அதற்காக நாமும் பூமியுடன் சுற்றுகிறோம் என்று சொல்லுவது சரியல்ல. ஏனெனில் நாம் சுற்றிச் சுற்றி திரும்பவும் அதே இடத்திற்கு வருகிறவர்கள் அல்ல. நாம் மேல் நோக்கி ஏறிப்போக வேண்டியவர்கள். பூமி இன்னுமொரு சுழற்சியை ஆரம்பிக்கும்போது, நாமோ தேவனை நோக்கி இன்னுமொரு படி மேலே ஏறியிருக்கிறோம் அல்லது ஏறவேண்டும், அவரை இன்னமும் கிட்டிச்சேர வேண்டும், அவருக்கும் நமக்கும் உள்ள தூரம் இன்னும் குறைவடையவேண் டும் என்பதே நம்மைக் குறித்த காரியமாகும்.

ஆனால் நம்மில் அநேகர் வயதில் வளர்ந்தாலும், பல காரியங்களைச் சாதிப்பதில் பெரிய வளர்ச்சி காட்டினாலும் தேவனுக்காக செய்கின்ற பணிகளில் பல முன்னேற்றங்களை வெளிப்படுத்தினாலும், தேவனுடனான உறவிலே இன்னும் சுற்றிக்கொண்டே இருக்கிறோம் என்பதை உணராதிருப்பது எப்படி? நாம் தேவனுக்குள் வளருகிறோம் என்று சொன்னாலும், பழைய வாழ்வு, பழைய கவலைகள், பாரங்கள் மாத்திரமல்ல; பழைய பாவம், பழைய கோபம் என்று இன்னும் பழையவற்றைச் சுமந்து கொண்டு வளர்ச்சியின்றி இருப்பது ஏன்?

நாம் சாதாரணமானவர்கள் அல்ல:

நாம் யார்? நாம் தேவனால் பிறந்தவர்கள்;  தேவனுடைய பிள்ளைகள் என்ற அதிகாரத்தைப் பெற்றவர்கள் (யோவா.1:12,13). கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் (எபே.1:3). பாவத்தின் பிடியில் சிக்கித் தவித்த நாம் சாதாரணமாகவா மீட்கப்பட்டோம்! குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே அல்லவா மீட்கப்பட்டிருக்கிறோம் (1 பேதுரு 1:19). தேவகிருபை நமக்கு அருளப்பட்டுள்ளது. இலவசமாய் அவரது கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டே நாம் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம் (ரோம.3:24). மாத்திரமல்ல; கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நம்மிடத்தில் அன்புகூர்ந்து நித்திய ஆறுதலையும் நல்நம்பிக்கையையும் கிருபையாய் நமக்குத் கொடுத்திருக்கிறார் (2 தெச. 2:16).

மொத்தத்தில் இம்மைக்கும் மறுமைக்கும் உரிய சகலவற்றிலும் நமக்குச் சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது. இன்னமும் தேவனுடைய வார்த்தை நமக்குத் தொகை தொகையாக உறுதி தந்திருக்கிறது. இப்படியிருக்க, இந்த உலக பாடுகளில் நாம் மாண்டுபோய்,  வீண் காரியங்களுக்காக இன்னமும் துக்கித்துக்கொண்டிருப்பது எப்படி?

பவுலடியாரின் வாழ்வு நமக்குப் பெரிய சவால் என்றுதான் சொல்ல வேண்டும். சிறைப்பட்ட ஒருவன் தனது விடுதலையைக் குறித்து அல்லாமல் வேறு எதையாவது சிந்திப்பானா? ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட நிலையிலும், தேவனுடைய பிள்ளைகளுக்கு அருளப்பட்டுள்ள பெரிய பாக்கியத்தைக் குறித்து பவுல் எழுதுவதை வாசிக்கிறோம். பவுலடியார் அதிகமாக நேசித்த சபை எபேசு சபை. பவுல் எருசலேமுக்குத் திரும்புகையில் கி.பி.53ஆம் ஆண்டளவில் எபேசுவிலே சபை ஸ்தாபிக்கப்பட்டாலும், பவுல் தன்னுடைய மூன்றாவது மிஷனரிப் பயணத்திலே மூன்று ஆண்டுகளாக (அப்.20:31) அங்கே தங்கியிருந்து பணி செய்தார். பின்னர் மிலேத்து பட்டணத்திலிருந்து எபேசுவுக்கு ஆள் அனுப்பி சபையின் மூப்பரை வரவழைத்து மனமுருகிப் பேசியதையும் காண்கிறோம் (அப்.20:17-35). கட்டுகளும் உபத்திரவங்களும் எருசலேமில் உண்டு என்பதை உணர்ந்தும், அதிலிருந்து விடுதலைக்காக வேண்டிக்கொள்ளாமல், வேறு திசை நோக்கித் திரும்பாமல், ‘என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்’ என்று சொல்லி, தன் அழைப்பில் கடைசிவரைக்கும் அவர் உறுதி யாக நின்றாரே, எப்படி?

அதன் பின்னர் அவர் சிறைக்கைதியாக ரோமாபுரிக்கு அழைத்துச் செல்லப்பட்டுச் சிறை வைக்கப்பட்ட நிலையிலும், எபேசு சபைக்கு நிருபத்தை எழுதி, சங்கிலியால் கட்டப்பட்ட நிலையிலும், ‘…..நான் தைரியமாய் என் வாயைத் திறந்து சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்குக் கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம் பண்ணுங்கள்’ (எபேசி.6:20) என்று எழுதி தீகிக்கு மூலம் சபைக்கு அனுப்பிய பவுலுக்கு அந்தப் பெலன் எங்கிருந்து வந்தது?

நாம் சிலாக்கியம் பெற்றவர்கள்!

இப்படியாக சிறைவைக்கப்பட்ட நிலையில் எழுதிய நிருபத்திலே தான், ஒரு கிறிஸ்தவனுக்கு அருளப்பட்டிருக்கிற அதி உன்னத சுதந்திரம் அல்லது உரிமை அதை எப்படியும் சொல்லலாம், அதைக் குறித்து உறுதியாய் நிச்சயப்படுத்தியுள்ளார் பவுல். அது என்ன? “தேவனிடத்தில் சேரும் சிலாக்கியம்”. இன்று நமது தேசத்தின் அதிபதியையோ, மேலதிகாரிகளையோ, நமது கிராம நிர்வாக அதிகாரிகளையோக் கூட சந்திப்பதானால் எத்தனை பிரயத்தனங்கள், எத்தனை அறிமுகங்கள், எத்தனை கெஞ்சல்கள்…. இன்னும் சொல்லப்போனால் நமது கிறிஸ்தவ ஊழியர்களைச் சந்திப்பதற்குக்கூட எத்தனை முன்னேற்பாடுகள் செய்தாலும், முடியாத நிலைமை. ஒரு ஜெபக் கூட்டத்தில் ஒரு தேவசெய்தியைப் பகிர்ந்து கொள்ளவே இன்றைய ஊழியருக்கு நேரமில்லை. அத்தனை வேலை.

ஆனால், இந்த அண்டசராசரத்தைப் படைத்து, அரசாளுகின்ற ராஜாதி ராஜா, மகா பரிசுத்தர், ஞானத்தின் ஊற்று; சூரியனைச் சுற்றிப் பூமியைச் சுற்றவிட்டவரும் அவரே. பூமி தனது சுழற்சியை நிறுத்திவிட்டால் என்ன நடக்கும் என்ற ஒரு சிறிய கட்டுரையைச் சமீபத்தில் படித்தேன். என்ன ஆச்சரியம்! ஒரு வருடத்திலே ஒருமுறைதான் வெளிச்சம் வருமாம் என்று என்னென்னவோ பயங்கரமான விஷயங்களையெல்லாம் எழுதியிருந்தார். நமது இருதயத் துடிப்பும், நமது நாசியின் சுவாசமும் தேவனுடைய சுத்தகிருபை! உலகத்து மகான்களையும் தேவ ஊழியரையும் சந்திப்பதே கடினமாக இருக்கும்போது, மகா மேன்மை பொருந்திய, பரிபூரணத்துவமுள்ள தேவனை நாம் கிட்டிச்சேருவது என்பது நம்பக்கூடிய காரியமா? ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும்.

ஏனெனில், தமது பிள்ளைகள் தம்முடன் வாழவேண்டும் என்பதற்காகவே, தாமே மனுஷனாய் உலகிற்கு வந்து, தமது பரிசுத்த இரத்தத்தைச் சிந்தி பிசாசின் பிடியிலிருந்த நம்மை அவர் மீட்டெடுத்தார். அதை விசுவாசிக்கின்ற சகலரும், கிறிஸ்து மூலமாய் பிதாவைக் கிட்டிச் சேருகின்ற சிலாக்கியத்தை அவர் அருளியிருக்கிறார். இது சத்தியம்! ஆனால் இது நமக்குப் புதிய பாடமே அல்ல. நம்மில் அநேகருக்கு இது பழசாய்ப்போன விஷயம்.அதை மிக இலகுவாக நினைத்து விடுகிறோம். அதுதான் நமது பிரச்சனை.

சுதந்திரமாகவும், உறுதியான நம்பிக்கையுடனும் பிதாவாகிய தேவனைக் கிட்டிச்சேருவது என்பது கற்பனைபண்ணிப் பார்க்க முடியாத அதி உன்னதமான சுதந்திரம். கிறிஸ்துவுக்கே நன்றிகள்! அவர்மூலமாக, விசுவாச ஜெபத்திலே நாம் பிதாவாகிய தேவனுடைய பிரசன்னத்தை, அவருடைய கிருபாசனத்தைக் கிட்டிச்சேரலாம். கிறிஸ்துவிலே நாம் இணைக்கப்பட்டிருப்பதால், பிதா நம்மை இரு கரம் நீட்டி வரவேற்று அரவணைப்பார் என்ற நம்பிக்கை நமக்கு அருளப்பட்டுள்ளது. நாம் பயப்படத் தேவையில்லை. நாம் எந்நேரமும் அவரை அணுகலாம். நேரம் குறிக்கத் தேவையில்லை. எங்கிருந்து பேசினாலும் அவர் நம்மைக் கேட்கிறார் என்ற நிச்சயம் நமக்குண்டு. நமது மனதிலுள்ள சகலத்தையும் அவரிடம் நாம் கொட்டிவிடலாம். அவர் நம்மைக் குறைவாக எண்ணவும் மாட்டார்; நம்மைத் தூற்றவும் மாட்டார். எவ்வளவு பெரிய சிலாக்கியம் நமக்கு!

பழையதைக் களைந்துவிட்டு எழுந்திரு!

ஆகவே, இன்னமும் பழைய வாழ்விலே சிக்கிச் சுழன்று கொண்டிராமல் இப்புதிய ஆண்டிலே புத்துணர்வுடன் நமது விசுவாசத்தைப் புதுப்பித்துக்கொள்வோமாக. பவுல் எபேசு சபைக்காகவும், நம் எல்லோருக்காகவும் ஜெபித்த ஜெபம் மிக ஆழமானது. அந்த ஜெபம் இன்று நமதாகட்டும். சிறுபிள்ளை ஜெபங்களை விடுத்து, மேன்மையானவற்றை நமது பரமபிதாவிடம் கேட்போமாக! (எபே.3:16-19).

1. தேவ ஆவியினாலே நாம் உள்ளான மனுஷனிலே பலப்படவேண்டும் என்று ஜெபிப்போம். இதுவரை நம்மில் காணப்பட்ட போலித்தனங்களை அழித்துவிடுவோமாக. உள்ளான மனுஷன் தேவனுக்குள்ளாக சுத்திகரிக்கப்பட்டுப் பெலப்படும்போது என்ன பாடுகள் வந்தாலும் நாம் பின்வாங்கிப் போகமாட்டோம்.

2. கிறிஸ்து நமக்குள்ளே வாசம்பண்ணுகிறார் என்பதை நாம் விசுவாசிப்பது மெய்யானால், அதற்கேற்றபடி நமது வாழ்வு அமைய வேண்டுமே! கிறிஸ்து வாசம்பண்ணும் நபராக நாம் மென்மேலும் மாற்றமடைய ஜெபிப்போமாக.

3. அறிவுக்கெட்டாத தேவ அன்பை அறிந்து கொள்ளவும், அதிலே வேருன்றி நிலை வரப்படவும் வேண்டுமாய் ஜெபிப்போமாக.  கிறிஸ்துவின் அன்பு முழுமையானது. நமது வாழ்வின் சகல அனுபவங்கள் வரைக்கும், முழு உலகத்தின் சகல காரியங்கள் வரைக்கும் அதன் அகலம் அகன்றுகொண்டே செல்லுகிறது. நமது வாழ்நாள் உள்ளளவும் அது நீடித்திருக்குமளவுக்கு அதன் நீளம் நீண்டு கொண்டே இருக்கும். நமது துதிகளும் ஸ்தோத்திரங்களும் மேலெழும்பும் அளவுக்கு அந்த அன்பின் உயரமும் உயர்ந்துகொண்டே இருக்கும். இவ்வுலக வேதனை துன்பம் எவ்வளவு ஆழத்துக்கு நம்மை ஆழ்த்தினாலும் அந்த ஆழத்திலும் நம்மைத் தேற்றுமளவுக்கு அதன் ஆழம் ஆழமாகச் செல்லுகிறது. ஆக, நாம் இவ்வுலக வாழ்விலே தனித்துவிடப்பட்டு, பயங்கரமான துன்பத்தில் அமிழ்த்தப்பட்டாலும் நம்மை நேசிக்கிற ஒரு அன்பு நமக்கு உண்டு என்ற திடநம்பிக்கை நமக்குண்டு. இதைத் தவிர நமக்கு வேறென்ன வேண்டும். அந்த அன்பிலே நாம் வேரூன்ற ஜெபிப்போம்.

4. இறுதியாக, தேவனுடைய சகல பரி பூரணத்தாலும் நிறையப்படவேண்டும் என்று ஜெபிப்போமாக. “தேவத்துவத்தின் பரிபூரண மெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது. மேலும், சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்” (கொலோ.2 :9,10).

இப்போ சொல்லுங்கள்! நாம் இன்னமும் இவ்வுலக வாழ்வின் பிரச்சனைகளுக்குள் சிக்கித்தவிப்பது  நியாயமா?

இன்றைய சவால்:

ஆயிரமாயிரமான பாடல்கள் தினமும் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. அழகான பாடல் வரிகள், கவர்ச்சியான ராகம்.  உயிரோட்டத்துடன் கலக்கத்தக்க இசை; ஆனால் சற்று ஆழமாகக் கவனித்தால், இன்னமும் நாம் பழைய ஏற்பட்டுப் பக்தர்களைப்போல ‘என்னைத் தேற்றும், என்னை விசாலத்திலே வையும்’ என்று, ‘என்னை என்னை’ என்று ஆறுதலையும் தேறுதலையும் நாடிப் பாடிக்கொண்டே இருக்கப்போகிறோமா என்று சற்று சிந்திக்க உங்களை அழைக்கிறேன்.

‘பிதாவே என் சித்தமல்ல; உம் சித்தமே ஆகட்டும்’ என்ற இயேசுவின் ஜெபமும், எனக்கானவைகளை அல்ல, பிறருக்கானவைகளையும் சிந்திக்கின்ற இயேசுவின் சிந்தையும், உன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா என்ற இயேசுவின் அழைப்பும், சுவிசேஷம் என்ற பிரகாசமான வெளிச்சத்தை எடுத்துக்கொண்டு மக்களுக்குள் கடந்துசெல்ல வேண்டுமென்ற வைராக்கியமும், கிறிஸ்துவைப் பிரசித்தப்படுத்துவதில் உபத்திரவம் நேர்ந்தாலும் முன்செல்வேன் என்ற உறுதியும், நெருக்கப்பட்டாலும் ஒடுக்கப்படுவதில்லை என்ற பவுலின் முழக்கம் நம்முடையதாகவும், நன்மை செய்து பாடனுபவித்தாலும் என் சிலுவையை எடுத்துக்கொண்டு என் இயேசுவையே பின் பற்றுவேன் என்ற அர்ப்பணமும் ஏன் நமக்குள் எழக்கூடாது!!!

அன்று கர்த்தரே எரேமியாவை அழைத்தார்; ஊழியத்தின் கடினப்பாதையையும் உரைத்தார். அவனும் முன்சென்றான். ஆனால், எரேமியா 21ம் அதிகாரம் வரைக்கும் நெருக்கங்கள் வந்தபோது, எரேமியா தடுமாறினார். ‘நான் பிறந்தநாள் சபிக்கப்படுவதாக’ (எரே.20 : 14) என்று புலம்பினார். ஆனால் பவுலடியாரோ, “கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்திலே சுமந்துதிரிகிறோம்” (2 கொரி.4:10) என்று எழுதுவதை வாசிக்கிறோம். பாடுகளில் பவுல் புலம்பவில்லை. ரோமாபுரி சிறைச்சாலையிலே சிரைச்சேதத்திற்காகக் குறிக்கப்பட்டு, தனிச் சிறையிலே வைக்கப்பட்டிருந்த வேளையிலும், ‘நீயும் இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கனுபவி’ (2தீமோ.2:3) என்று தீமோத்தேயுவைத் திடப்படுத்தினாரே தவிர, எப்பொழுதாவது ‘எனக்கு விடுதலைவேண்டி ஜெபியுங்கள்; சிரைச்சேதம் மாற்றப்பட ஜெபியுங்கள்’ என்று கேட்டாரா? ஆம், பவுல் தன் இரட்சகரைத் தன் சரீரத்தில் சுமந்து கொண்டு அவருடைய நல்ல சுவிசேஷத்தைத் தன் மூச்சாகக் கொண்டிருந்தார்.

நமக்களிக்கப்பட்டுள்ள பெரிய பொறுப்பு!

தேவனிடம் சேருகின்ற சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிற நம்மிடத்தில் பெரிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த சிலாக்கியத்தைக் குறித்த அறிவோ, நிச்சயமோ இல்லாத மக்களுக்காக நாம் புறப்படவேண்டும். அவர்களும் அந்த சிலாக்கியத்தில் பங்கடையும்படி நாமேதான் அவர்களை வழிநடத்தவேண்டும். இப் புதிய ஆண்டிலே கிறிஸ்துவுக்காக வைராக்கியமான தீர்மானங்களை எடுக்க தேவ ஆவியானவர் நமக்கு உதவுவாராக. நமது ஜெபங்கள் மேலானவைகளை நாடட்டும். மேலானவைகளை தேடட்டும். மாறிப்போகின்ற இந்த உலக பாரங்களை தேவனிடம் விட்டுவிடுவோம். தம்முடைய சொந்தக் குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காவும் அவரை ஒப்புக் கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? (ரோமர் 8 : 32).

ஆகையால், இந்தப் புதிய ஆண்டில் புறப்பட்டுச் செல்லுவோமாக! தேவனண்டை சுதந்திரமாகச் சேர்ந்து புதுப்பெலனடைந்து, இம்மையிலும் மறுமையிலும் நமக்கு நம்பிக்கை அளித்த தேவகிருபையை அடையாத மக்களண்டைக்குச் செல்லுவோமாக. கண்ணீர், வேதனை, துன்பம், பசி, பட்டினி, குடும்பக் குழப்பங்கள், பாவத்தில் மாண்டுபோய் வெளி வரத்தெரியாமல் உள்ளத்திலே போராடிக் கொண்டிருக்கும் மக்கள் என்று ஏராளமானவர்கள் நம்மைச் சூழ இருக்கிறார்கள். எங்கே பார்த்தாலும் பயங்கரங்கள்; பயங்கர வியாதிகள். இன்னமும் நாம் சுயநலத்துடன் வாழலாமா? நமது ஜெபங்கள் மாற்றமடையட்டும். நமது சிந்தனைகளில் புதுப்பொலிவு உண்டாகட்டும். நமது பேச்சுக்களில் ஆறுதல் வெளிப்படட்டும். வீண்காரியங்கள் ஒழியட்டும். வாழ்வை வீணடிக்கும் மக்களண்டையில் புறப்பட்டுச் சென்று அவர்களுடைய பெறுமதிப்பை அவர்களுக்கு உணர்த்துவோம். அவர்களும் கிறிஸ்துவுக்கூடாக தேவனண்டைக்கு சுதந்திரமாகச் செல்லும் சிலாக்கியத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற நல்ல செய்தியைப் பிரகடனப்படுத்துவோமாக.

தேவன் தாமே இப்புதிய ஆண்டிலே புதிய பெலன் கிருபை வழிநடத்துதல் தந்து நம் எல்லோரையும் தமது பாதையிலே நடத்துவாராக! ஆமென்.

சத்தியவசனம்