ஆசிரியரிடமிருந்து…

சத்தியவசனம் பங்காளர் மடல்

செப்டம்பர்-அக்டோபர் 2013

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள பங்காளர்களுக்கு,

பிதாவின் வலதுபாரிசத்தில் நமக்காக பரிந்துபேசும் மீட்பர் இயேசுவின் இனியநாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

யாவரும் சத்தியத்தை அறியும் அறிவை அடையும்படியாக வானொலி, தொலைகாட்சி, இணையதளம், இலக்கியம் ஆகியவற்றின் வழியாக நற்செய்தியைப் போதிக்க தேவன் தந்து வருகிற வாய்ப்புகளுக்காக அவரைத் துதிக்கிறோம். இவ்வுன்னதப் பணியிலே இவ்வூழியத்திற்கு இணைக்கரம் தந்து காணிக்கையாலும் ஜெபத்தாலும் தாங்கி வருகிற அன்பு பங்காளர்களுக்காக தேவனுக்கு நன்றி கூறுகிறோம். இவ்வூழியத்தின் வாயிலாக தாங்கள் பெற்ற ஆசீர்வாத அனுபவங்களை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். தங்களது நண்பர்களுக்கும் விசுவாசிகளுக்கும் இவ்வூழியத்தை அறிமுகப்படுத்துங்கள். அவர்களது விலாசங்களை எங்களுக்குத் தெரியப்படுத்துவீர்களானால் எங்களது மாதிரி பிரதிகளை அவர்களுக்கு அனுப்பி வைப்போம்.

சென்னையிலுள்ள பங்காளர்களுக்கு நாங்கள் அறிவித்திருந்தபடி, விசுவாசப்பங்காளர் கூடுகை செப்டம்பர் 7ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. அநேக பங்காளர்கள் குடும்பமாய் இக்கூட்டங்களில் பங்கெடுத்து சிறப்பித்தனர். இக்கூட்டத்தில் பங்குபெற்ற அனைத்துப் பங்காளர்களுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்விதழில் கர்த்தரை ருசிக்கும் அனுபவத்தைக் குறித்து டாக்டர் உட்ரோ குரோல் அவர்கள் ‘தித்திக்கும் அமிழ்தம்’ என்ற தலைப்பில் எழுதியுள்ள செய்தி தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பையும் அவர் நமக்கு செய்திருக்கிற நன்மைகளையும் சிந்திக்க வைக்கிறது. வாலிபனே! உன்னுடைய சிலுவை எங்கே? என்ற தலைப்பில் சகோதரி சாந்திபொன்னு அவர்கள் தீமோத் தேயுவின் வாழ்க்கையை மையமாக வைத்து எழுதியுள்ள செய்தி வாலிபர்களை தட்டி எழுப்புவதாய் அமைந்துள்ளது. நீ விரும்பாத இடம் என்ற தலைப்பில் டாக்டர் புஷ்பராஜ் அவர்களுடைய செய்தி பலவித கேள்விகளோடு உள்ள நமக்கு ஆறுதலைத் தருகிறதாயிருக்கிறது. கிருபாசனத்தண்டையில் நாம் பெற்றுள்ள ஆசீர்வாதங்களை டாக்டர் தியோடர் எச்.எப் அவர்கள் தனது செய்தியில் விளக்கியுள்ள சத்தியங்கள் நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டியதாகும். வழக்கம்போல் வெளிவரும் தொடர் செய்திகளான புதிய ஏற்பாட்டு வேதாகமம், யோசுவா மற்றும் நிலத்தினில் விழுந்த கோதுமை மணிகள் ஆகிய செய்திகளும் இடம் பெற்றுள்ளன. இச்செய்திகள் அனைத்தும் உங்கள் அனைவருக்கும் பிரயோஜனமாயிருக்க ஜெபிக்கும்,

கே.ப.ஆபிரகாம்
சத்தியவசனம்