ஜெபக்குறிப்பு: 2024 டிசம்பர் 31 செவ்வாய்

நான் கர்த்தர், நான் மாறாதவர் (மல்கி. 3:6) வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ள ஆண்டவர் மனம் மாறாதவராய் ஒவ்வொரு மணித்துளிகளிலும் தீங்கு நம்மை சேதப்படுத்தாதபடி அற்புதமாய் பாதுகாத்தார். துதிகளைச் செலுத்துவோம். நம்மை முழுவதுமாக அவர் சித்தம் செய்ய அர்ப்பணித்து ஜெபிப்போம்.

கர்த்தரில் நம்பிக்கையாயிரு!

தியானம்: 2024 டிசம்பர் 31 செவ்வாய் | வேத வாசிப்பு: நீதிமொழிகள் 3:1-12

YouTube video

உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள் (நீதி.3:5).

இவ்வருடத்தின் கடைசி நாளில் வந்து நிற்கும் அருமையான தேவபிள்ளைகளே, கர்த்தரில் நம்பிக்கையாய் இருக்கிற நீங்கள் பாக்கியவான்கள். நமது சுயபுத்தியில் சாய்ந்து காரியங்களைச் செய்து நாம் கடத்திய காலங்கள் மறையட்டும். இனி புதிய வருடத்தில் புதிய தீர்மானங்களோடு பிரவேசிப்போம்.

தேவனுடைய கட்டளைகளுக்குச் செவிகொடுத்து வாழுவோம். சத்தியத்தின் படி நடக்கத் தீர்மானம் பண்ணிக்கொள்ளுவோம். அப்படி நடக்கும்போது தேவனுடைய பார்வையிலும், மனுஷருடைய பார்வையிலும் தயையும், நற்புத்தியும் பெறுவோம். எப்போதும் தேவனுக்குப் பயந்து, தீமையைவிட்டு விலகிநடப்போம். மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை விளைவிக்கும். ஆனால், தேவனுக்குப் பயப்படுகிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும்!

நமது பொருளாலும், விளைவின் முதற்பலனாலும் தேவனைக் கனம்பண்ணினால், அப்பொழுது அவரது ஆசீர்வாதம் நமது வாழ்வில் பூரணமாய் விளங்கும். கர்த்தர் தாம் நேசிக்கிறவர்களை சிட்சித்து நல்வழிப்படுத்துகிறார். எனவே அவரது சிட்சையை அற்பமாக எண்ணாதே. அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்து போகாதே. இவ்வருடத்தின் ஒவ்வொரு நாளிலும் கிருபையாக உன்னைச் சுமந்து வந்த தேவனுக்கு நன்றி கூறு. அவரைவிட்டு நீ தூர விலகிப்போகும் நேரமெல்லாம் கிருபையாக உன்னைப் பிடித்து தன்பக்கம் இழுத்து தனது பாதையில் நடப்பிக்கும் தேவன் அன்புள்ளவர் அல்லவா!

கடந்த காலங்களில் நீ செய்த தீமைகள், நீ செய்யாமல் விட்ட நன்மைகள், நன்மை செய்யத் திராணி இருந்தும் அதைச் செய்யத் தவறிய தருணங்கள் இவற்றை தேவபாதத்தில் வைத்து உன்னை ஆராய்ந்து பார். திருத்திக்கொள்ள வேண்டியவற்றை சீர்செய்துகொள். தேவன் நம்முடைய வாழ்வில் உணர்த்திய காரியங்களுக்கு நாம் கீழ்ப்படிய மறுத்த காலங்கள், அவரது வார்த்தைக்குச் செவிகொடாமல் நம் இஷ்டம்போல் வாழ்ந்த காலங்கள், எல்லாவற்றையும் தேவனுடைய பாதத்தில் அறிக்கை பண்ணுவோம். புதிய தீர்மானங்களோடு நம் வாழ்வைத் தேவனுடைய கரத்தில் ஒப்படைத்தவர்களாய் புதிய வருடத்துக்குள் காலடியெடுத்து வைப்போமாக. உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர் மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார் (சங்.37:5).

தேவபிள்ளையே, இம்மட்டும் காத்த இம்மானுவேலன் இனியும் காத்து நம்மை நடத்துவார். கலங்காதே மனமே, திகையாதே! தினமும் கர்த்தர் உன்னை நடத்துவார். எல்லா ஸ்தோத்திரங்களும், கனமும் மகிமையும் அவர் ஒருவருக்கே உண்டாகட்டும்!

ஜெபம்: அன்பின் தேவனே, என் கரம் உம் கையைப் பிடித்துச்சென்றால் தவறிவிடுவேனே; ஆனால் உம் கரம் என் கையைப் பிடித்துச்சென்றால் ஒருக்காலும் தவறிடேனே. இதயக் கதவைத் திறந்தேனே, என் உள்ளத்தில் வாரும் இயேசு சுவாமி, ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2024 டிசம்பர் 30 திங்கள்

தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர் (புலம்.3:25) கடந்தநாளெல்லாம் ஜெபித்தும் ஏற்ற பதில் கிடைக்காததினால் சோர்ந்துபோனவர்களை கர்த்தர் பெலப்படுத்தவும், தேவன் அவர்களுக்கு ஏற்ற நேரத்தில் பதில் தரவும் தங்களுக்கு அன்புக்குரியவர்களை இழந்துபோன குடும்பங்களை கர்த்தர் தம்முடைய சமாதானத்தால் நிரப்பவும் மன்றாடுவோம்.

ஈவுகளை எண்ணு!

தியானம்: 2024 டிசம்பர் 30 திங்கள் | வேத வாசிப்பு: சங்கீதம் 106:1-22

YouTube video

ஆனாலும் சீக்கிரமாய் அவருடைய கிரியைகளை மறந்தார்கள் (சங்கீதம் 106:13).

நம் எல்லோருக்குமே நன்மைகளை, ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள விருப்பம் அதிகம். தீமைகளையும், சாபங்களையும் நாம் வெறுத்து ஒதுக்குவோம். தேவனிடமிருந்து நன்மைகள் வரும்போது இருகரம் நீட்டி பெற்றுக்கொள்ளும் நாம், தற்செயலாக ஏதாவது ஒரு தீமை நடந்துவிட்டாலும் தேவன் எங்கே? அவர் இதைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார்? என்று கேள்விகளைக் கேட்டு சலித்துக்கொள்ளுகிறோம்.

மிகவும் ஐசுவரியவானாய், உத்தமனும் சன்மார்க்கனுமாய் இருந்த யோபுவின் வாழ்வில் ஒரேநாளில் அத்தனையும் அழிந்துபோனது. அப்போதும், “தேவனுடைய கையில் நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ” என்றே யோபு சொன்னார் (யோபு 2:10). இத்தனையாய் துன்பங்களை அனுபவித்தபோதும் யோபு பாவஞ்செய்யவுமில்லை, தேவனைப் பற்றிக் குறை சொல்லவுமில்லை என்று வாசிக்கிறோம் (யோபு 1:22).

இதேபோல் இஸ்ரவேலரை நோக்கினால், தேவன் அவர்கள் மத்தியில் எத்தனையோ அதிசயங்களைச் செய்து, அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கி, அவர்களை அதிசயமாய் வெளியே கொண்டுவந்தார். அவர்களோ அவை அனைத்தையும் மறந்து சிறிது கஷ்டம் வந்தவுடனேயே, முறுமுறுத்து தேவனுக்கு எரிச்சல் வரத்தக்க விதமாக நடந்துகொண்டார்கள். யோபு துன்பங்களை எதிர்நோக்கிய விதத்திற்கும், இஸ்ரவேலர் துன்பங்களை எதிர்நோக்கிய விதத்திற்கும் நிறையவே வித்தியாசமுண்டு. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானவை.

தேவபிள்ளையே, வருடஇறுதிக்குள் வந்திருக்கும் நமது நிலைதான் என்ன? இவ்வருடத்தில் ஏற்பட்ட இழப்புக்கள், சோதனைகள், வேதனைகள், வியாதிகள் இவற்றைக் கண்டு சோர்ந்துபோய் இருக்கிறீர்களா? தேவன் தந்த ஈவுகளை நினைத்துப்பாருங்கள். அவரது ஆசீர்வாதங்களையும் அவரது வழிநடத்துதலையும் ஒருகணம் சிந்தித்துப் பாருங்கள். எண்ணுக்கடங்காத கிருபைகளால் நம்மை அனுதினமும் தாங்கி நடத்திவரும் அவரது அளவிடமுடியாத அன்பை, கிருபையை, வழிநடத்துதலை ஒருமுறை நினைத்துப் பாருங்கள். எல்லாவற் றிற்கும் மேலாக நம்மை மீட்கும்பொருட்டு பரலோக மேன்மைகளை எல்லாம் துறந்து பாலகனாக இந்தப் பாவ உலகில் வந்துதித்த அவரது தியாக அன்பை எண்ணிப்பாருங்கள். இப்படிப்பட்ட ஒரு ஆண்டவர் நம்மோடுகூட இருக்கிறார் என்று எண்ணும்போது நம்முடைய கஷ்டம் ஒரு பொருட்டாக நமக்குத் தோன்றாது. கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன் (சங்-116:12).

ஜெபம்: அன்பின் தேவனே, நீர் தந்த ஈவுகளுக்காக என் முழுஇருதயத்தோடு நான் உம்மைத் துதிக்கிறேன். எனது குடும்பத்திற்கு நீர் செய்த சகல உபகாரங்களுக்காகவும் உம்மை நன்றியுள்ள இருதயத்தோடு தொழுதுகொள்கிறேன். ஆமென்.