ஜெபக்குறிப்பு: 2024 நவம்பர் 30 சனி

கர்த்தர் ஜீவனுள்ளவர்; என் கன்மலையானவர் துதிக்கப்படுவாராக; என் இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக (சங்.18:46) கர்த்தர் கன்மலை நிழலாயிருந்து இம்மாதம் முழுவதும் நம்மை நடத்தினார். சோர்வுகள், பயங்கள், கலக்கங்கள் வந்தபோதும் அவற்றில் அமிழ்ந்துவிடாமல் ஜெயகிறிஸ்து நமக்கு முன்பாக சென்று வெற்றி சிறக்கச் செய்த கிருபைகளுக்காய் துதிசெலுத்தி ஜெபிப்போம்.

குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய்சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை (ஆபகூக் 2: 3).

தேவதிட்டத்தை நிறைவேற்றுவதே!

தியானம்: 2024 நவம்பர் 30 சனி | வேத வாசிப்பு: யோவான் 4:28-38

YouTube video

நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது (யோவான் 4:34).

நேற்றைய தியானத்தைக் கவனமாகப் புரிந்திருப்போமானால், “நீங்கள் … என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னோடேகூட இருக்கிறார்” (யோவான் 16:32) என்று எப்படி ஆண்டவர் திட்டவட்டமாகக் கூறினார் என்பது புரியும். கடினமான வழியில் சென்ற ஆண்டவர் ஒருபோதும் தனிமையை உணரவில்லை. ஏனெனில் பிதாவின் சித்தத்தைச் செய்வது ஒன்றே அவரது மூச்சாக இருந்தது. அதனால் எல்லா நேரத்திலும் பிதா தம்மோடு இருப்பதை உணர்ந்தார். நமக்குத் தேவன் வைத்திருக்கும் வழியில் நடப்பதையே நமது வாழ்வின் மூச்சாகக் கொண்டால் நமக்கும் தனிமை இராது. பின்னர் எவ்வித சூழ்நிலைக்கும் சாவுக்குரிய எவ்வித பயமுறுத்தலுக்கும் நாம் பயப்படமாட்டோம்.

சீனா தேசத்தைச் சேர்ந்த நோபி என்ற ஒரு இளம் பெண்ணைப்பற்றி இவ்விதமாகக் கூறப்படுகிறது. அவள் ஜெபிப்பதற்காக ஒரு குன்றிற்குச் சென்றாளாம். அப்போது அவளது விருப்பம் தேவனுடைய விருப்பத்தோடு இணையவில்லை என்பதை உணர்ந்தாளாம். அவளோ, “பிதாவே, எப்போதும் உம் வழிதானா? இம்முறையாவது என் வழி செல்ல அனுமதியும்” என்று ஜெபித்தாளாம். ஆனால், “மகளே, உன் வழி நல்லது; ஆனால் என் வழி சிறந்தது!” என்ற சத்தத்தை மனதிலே உணர்ந்தவளாக, உடனேயே அவள் தன்னை ஒப்புக்கொடுத்தாள். அப்போது, “இரயில் பாதையின் வளைவில் தற்கொலை செய்ய வரும் உள்ளமுடைந்த நம்பிக்கையிழந்த மக்களுக்கு நீ சொந்தம்” என்ற சத்தம் அவள் காதிலே ஒலிக்கத் தொடங்கியது. எழுந்த அவள் அப்படிப்பட்ட ஒரு இரயில் பாதை வளைவையும், அதில் விழுந்து தற்கொலை செய்ய வருகிறவர்கள் அருகிலிருந்த குன்றில் ஏறி குதிப்பதாகவும் அறிந்தாள். அந்தத் தற்கொலை இடத்திற்கு அருகில் ஒரு செய்திப் பலகையை நாட்டினாள். அதிலே, “செய்யாதே, முதலில் திரும்பி நோபியைப் பார். தேவன் உன்னை நேசிக்கிறார்” என்று எழுதி, தன் விலாசத்தையும் போட்டாளாம். முதல் நாளிலேயே அநேகர் அவளை நாடி வந்தார்களாம். இந்த அம்மையார் தனது 92வது வயதிலே மரிக்கும் முன்னர் ஏறத்தாழ 5000 பேரை தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றினாராம்.

தேவபிள்ளையே, தன் சொந்த விருப்பத்துக்கு மரித்து தேவனுடைய வழியை ஏற்றுக்கொண்டு நூறு மடங்கு பலன்கொடுத்த கோதுமை மணியான நோபியைப்போல ஏன் நாமும் இருக்கக்கூடாது? நமது திட்டங்களில் மூழ்கித்தவித்தது போதும். என் சித்தமல்ல, உம் சித்தமே என் வாழ்வில் ஆகட்டும் என்று கோதுமை மணியாக தேவகரத்தில் நம்மைக் கொடுப்போமா!

ஜெபம்: அன்பின் பிதாவே, நீர் என்னில் விரும்புவதை நான் செய்ய, உம் திட்டம் என்னில் நிறைவேற என்னை உம்மிடத்தில் ஒப்புவிக்கிறேன். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2024 நவம்பர் 29 வெள்ளி

நமது தேசத்தில் பெருகிவரும் கலாச்சார சீரழிவுகளினாலே பாதிக்கப்படும் குடும்பங்கள், கஞ்சா, மதுபானம் மற்றும் போதைபொருட்களாலே அதிகமாக தாக்கப்படும் பள்ளி மாணவர்கள், வேலை செய்யும் இளவயதுள்ள பெண்கள் ஆண்கள் ஆகியோரும் கெட்டுப்போகிற சூழ்நிலையிலிருந்து பாதுகாக்கப்படவும், இவற்றை கள்ளசந்தையில் விற்கிறவர்கள் மனந்திரும்பவும் ஜெபிப்போம்.

கொடுமையான தனிமை!

தியானம்: 2024 நவம்பர் 29 வெள்ளி | வேத வாசிப்பு: யோவான் 12:23-28

YouTube video

… கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும் (யோவான் 12:24).

சமீபத்தில் நான் கற்றுக்கொண்டதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். வாழ விரும்புகிறவன்தான் சாகவேண்டும்; அவனது சுயம் மாளவேண்டும். இதற்கு தயங்குகிறவன் சந்திக்கும் ஒரு பெரிய அனுபவம் ஒன்று உண்டு. அதுதான் “தனிமை”. நம்மில் பலர் தனிமையின் வேதனையை அனுபவிக்கலாம். அல்லது எல்லாமும், எல்லோரும் இருந்தும்கூட தனிமை உணர்வுக்குள் தள்ளப்பட்டுத் தவிக்கலாம். ஆனால் ஆண்டவர், நமக்கு எல்லாவற்றுக்கும் மேலான பயங்கரமான ஒரு தனிமையைப் பற்றிக் கூறினார். கோதுமை மணி நிலத்தில் விழுந்து சாகாமல் தனித்திருப்பதைப் போன்ற தனிமை. இதுவே எல்லாத் தனிமைகளை விடவும் பயங்கரமானது.

பலவருடங்களுக்கு முன்னர் தனிமையில் தவித்தவள் நான். எனக்கு எல்லோரும், எல்லாமும் இருந்தும், உள்ளத்தின் ஆழத்தில் ஊடுருவிவிட்ட தனிமையை எதுவும் ஈடுசெய்ய முடியவில்லை. இத்தனிமை என்னை சுய பரிதாபம் என்ற உளையில் தள்ளிவிட்டது. என் சுய விருப்பத்தை சாகடிக்க முடியாததால் என் தனிமை பன்மடங்காகியது. ஆனால், ஆண்டவர் என்னோடு இடைபட்டபோது, என் சுயம் அதாவது சுயவிருப்பம் மரித்தது. என் யாவையும் தேவனிடம் ஒப்புவித்தேன். அதன்பின்னர் தனிமையிலும் தேவன் என்னோடு இருக்கும் அந்த உறுதி உண்டானது. அது என் சுயபரிதாபத்தைச் சுத்தமாக அழித்துவிட்டது. தேவனுடைய கரத்தில் அவர் சித்தத்தின்படி பத்திரமாக இருக்கின்ற நிச்சயமும் கிடைத்தது. அதன் பின்னர் ஏது தனிமை!

சாகப் பயந்து தனித்து நிற்கும் கோதுமை மணி, அதாவது சொந்த விருப்பு வெறுப்புகளை அகற்றாமல், தேவனுக்கு அடிபணியாமல் சுயத்துடன் தனித்து நின்று, கனியற்று பயனற்று தனித்து நிற்கும் கொடுமையானது மிக பயங்கரமானது. அங்கே சுயபரிதாபம், தாழ்வு மனப்பான்மை, பொறாமை யாவும் சேர்ந்து நமது தனிமையை பன்மடங்காக்கிவிடும். மாறாக, “ஆவிக்குரிய கனி கொடுக்கும் வாழ்வு வாழ, தேவனது வழியில் செல்வதே எப்போதும் சிறந்த வழியாகும். சாகப் பயப்படும் சுயத்தைவிட மிகப்பெரிய தனிமை வேறேதுவும் கிடையாது” என்று ஒரு பக்தன் எழுதுகிறார்.

தேவபிள்ளையே, உனது சுயத்தைச் சாகடித்து உன்னை தேவனிடம் ஒப்படைக்கப் பயப்படுகின்றாயா? தேவனுக்கு உன்னை முற்றிலுமாக அர்ப்பணிக்கத் தயங்காதே. அவர் அனுமதிக்கும் எதுவும் உன் நன்மைக்கே என்பதை நம்பு. அப்போது நீ எதையும் எதிர்கொள்ளும் பெலத்தைப் பெற்றுக்கொள்வாய். வாழ்வில் எந்த நிலையிலும் எந்தத் தனிமையும் உன்னை அசைக்கமுடியாது.

ஜெபம்: அன்பின் கர்த்தாவே, தனிமையில் நின்று உழன்ற என் தவறை உணர்ந்தேன். இப்போதே என்னை உமது சித்தத்திற்கு ஒப்புவிக்கிறேன். ஆமென்.