ஜெபக்குறிப்பு: 2024 நவம்பர் 9 சனி

இலங்கை தேசத்தை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், அங்கு நடைபெறும் சத்திய வசன இலக்கியபணிகள், பத்திரிகை ஊழியங்கள், ஊடகங்கள் வாயிலாக செய்யப்படும் திருமறை பாட நிகழ்ச்சிகள் அனைத்தும் பலதேசங்களிலுள்ள மக்கள் கிறிஸ்துவுக்குள் வளருவதற்கும், கிறிஸ்துவுக்குள் நிலைத்திருப்பதற்கு ஏதுவாயிருப்பதற்கும் இவ்வூழியங்களை கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.

தேவனையன்றி …

தியானம்: 2024 நவம்பர் 9 சனி | வேத வாசிப்பு: 1இராஜாக்கள் 16:30-34

YouTube video

ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம் (யாத்.20:4,5).

“நான் எரிச்சலுள்ள தேவனாயிருக்கிறேன்” என்று கர்த்தர்தாமே தம்மைக் குறித்து தமது மக்களுக்கு வெளிப்படுத்தியதை யாத்திராகமம் 20:5ம் வசனத்தில் வாசிக்கிறோம். சாதாரணமாக நாம் “எரிச்சல்” என்ற சொல்லை தீமையாகவே பார்ப்போம். ஆனால், தேவனுடைய எரிச்சலின் தன்மை வித்தியாசமானது; அது சரியானது, நல்லது! அவர் நம்மீது முழுமையான பலமான உரிமை கொண்டுள்ளார். அவரையன்றி வேறு வழிகளை நாடும்போது நாம் அழிந்துபோவோம் என்று அறிந்திருக்கிற நமது ஆண்டவர், நாம் தம்மையே சேவிக்கவேண்டும் என்று உரிமையுடன் கட்டளையிடுகிறார். இது அவருடைய அன்பின் இன்னுமொரு சாயல்!

இப்படியிருக்க, ஆகாப் ராஜா முதலாவதாக, தனது சுயதெரிந்தெடுப்பிலேயே பிடிபட்டான். ஒரு ராஜாவாக தேவனுக்கும், தேவனுடைய தீர்க்கதரிசிக்கும் பொறுப்புக்கூற வேண்டியவன், தன் முதல் தெரிந்தெடுப்பிலேயே தவறிவிட்டான். இவன் சீதோனியரின் ராஜாவின் குமாரத்தியை விவாகம் பண்ணினான். அது போதாதென்று அவளுக்கு அடங்கி, அவளது தெய்வங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தான். பாகாலுக்குக் கோவில் கட்டி, பலிபீடத்தையும் எடுப்பித்தான். இதன் பலனாக, இஸ்ரவேலுக்குள், தேவன் மறக்கப்பட்டு, பாகால் வணக்கம் தலைதூக்கியது. தனக்கு நல்ல செய்தி கொடுக்கிற தீர்க்கர்களுக்கே ஆகாப் செவிகொடுத்தான். தான் செய்யவிரும்பியதை ஊக்குவித்தவர்களையே தன்னைச் சுற்றிலும் வைத்துக்கொண்டான். இதன் பலனால் மூன்று ஆண்டுகள் தேசத்தில் கடும் பஞ்சம் உண்டானது.

“நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்” (ஏசா.42:8) என்கிறார் கர்த்தர். அந்நிய ஜனத்துடன் சம்மந்தம் கலக்கவேண்டாம் என்றும், அதற்குக் காரணம் அவர்கள் தம்மைப் பின்பற்றாமல் அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி அவர்கள் இவர்களை விலகப்பண்ணுவார்கள் என்றும் (உபாகமம் 7:1-4) சொல்லப்பட்டுள்ளது. அந்நிய பலிபீடங்களை இடித்து, சிலைகளைத் தகர்த்தெறியும்படியும் கூறப்பட்டது. இப்படியிருக்க, இன்று நமது வாழ்வில் தேவனைத்தவிர வேறு என்னென்ன விஷயங்களுக்கு அல்லது யார் யாருக்கு முதலிடம் கொடுத்திருக்கிறோம்? தேவனையே ஆராதித்தாலும், இருதயத்தில் தேவன் அற்றவர்களாக ஜீவிக்கிறோமா? ஆகாப்பின் விழுகைக்கு முதற்காரணமே அந்நிய பெண்ணை விவாகம் செய்ததுதான். அடுத்தது, தேவனைத் தவிர்த்து மனைவியைத் திருப்திப்படுத்தி அவள் சொல் கேட்டது. இந்த ஆகாபின் வாழ்வு இன்று நம்மை எச்சரிக்கட்டும்.

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத்தவிர எனக்கு வேறே விருப்பமில்லை. என் வாழ்வில் உமக்கே முதலிடம் தருவேன். இந்த தீர்மானத்தில் நான் நிலைத்திருக்க கிருபை தாரும். ஆமென்.