ஜெபக்குறிப்பு: 2024 அக்டோபர் 31 வியாழன்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமி. 31:14) நன்மைகளின் தேவன் இம்மாதம் முழுவதிலும் நமக்குச் செய்த நன்மைகளுக்காகவும் காட்டின மனதுருக்கத்திற்காகவும் தந்த ஆதரவிற்காகவும் அடைக்கலத்திற்காகவும் முழுப்பெலத்தோடு ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.

கடினமாயினும் கர்த்தர் நடத்துவார்!

தியானம்: 2024 அக்டோபர் 31 வியாழன் | வேத வாசிப்பு: உபா.10:12-15; ஏசா.33:14-16

YouTube video

கர்த்தருடைய கற்பனைகளை … கைக்கொள்ளவேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார் (உபா.10:13).

எந்த வகையில் சிந்தித்தாலும் நமது தெரிந்தெடுப்புகளுக்கு தேவனுடைய வார்த்தை அஸ்திபாரமாக வழிகாட்டியாக இல்லாவிட்டால் நமக்குத் தோல்வி நிச்சயமே. தோல்வியைக் குறித்த உலகக் கண்ணோட்டத்தினின்று வேதாகமக் கண்ணோட்டம் வித்தியாசமானது. உலகம் நம்மைத் தோற்றுப்போனவர்களாகக் காணக்கூடாதே என்பதற்காக நாம் தேவனுக்கு முன்பதாகத் தோற்றுப்போகக் கூடிய தெரிந்தெடுப்புகளைச் செய்யலாமா? உலகத்தின்முன் தோற்றுப்போனவர்களாக காணப்பட்டவர்கள் யாரும் உண்மையாகவே வாழ்வில் தோற்றுவிடவில்லை. அன்று பவுல் சிறையில் அடைக்கப்பட்டிராவிட்டால் அற்புதமான நிருபங்கள் வெளிவந்திருக்குமா? யோவான் பத்முதீவில் கைவிடப்பட்டிராவிட்டால் வெளிப் படுத்தல் விசேஷம் கிடைத்திருக்குமா? மிஷனரிகளும் இரத்த சாட்சிகளும் தம்மை அர்ப்பணித்திராவிட்டால் நாம் சுவிசேஷத்தைப் பெற்றிருப்போமா? தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவரை சேவிப்பதையே தெரிந்துகொண்டவர்களின் வாழ்வில் தோல்வி என்பதே கிடையாது. வாழ்வின் வெளிப்படையான உயர்வுகளையே உலகம் வெற்றியாகக் காண்கிறது. ஆனால், தேவபிள்ளைகளின் வெற்றியோ தேவவார்த்தைக்குக் கீழ்ப்படிந்து வாழ்வின் தெரிந்தெடுப்புகளைச் செய்வதிலேயே தங்கியுள்ளது.

நமக்கோ ஆண்டவரும் வேண்டும்; உலகமும் நம்மைக் குறைவாகப் பார்க்கக்கூடாது. இது கூடுமான விஷயமா? மாதத்தின் முடிவுக்கு நெருங்கிவிட்ட நாம் இன்றே முடிவுக்கு வருவோம். நாம் தேவனைத் தெரிந்தெடுப்போமாகில், இவ்வுலக வாழ்விற்குரிய சகல தெரிந்தெடுப்புகளிலும் தேவனுடைய வார்த்தையையே நாம் சார்ந்திருக்கவேண்டும். அவருக்குப் பயந்து, அவருடன் நடந்து, அவரையே நேசித்து, அவரையே சேவித்து அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். இதைத்தானே தேவன் நம்மிடம் கேட்கிறார். இவற்றையும் அவர் தமக்காகக் கேட்கவில்லை. நமக்காகவே கேட்கிறார். நாம் அந்த வழிநடந்து ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்பது தேவசித்தம். இல்லாவிட்டால் வாக்குகளைத் தருவாரா? “நீதியாய் நடந்து, செம்மையானவைகளைப் பேசி, இடுக்கண் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து, பரிதானங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி, பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடு கிறவனெவனோ, அவன் உயர்ந்த இடங்களில் வாசம் பண்ணுவான். அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்” (ஏசாயா 33:15,16).

தேவபிள்ளையே, உன் பாதை கடினமாயினும் கலங்காதே. நாம் முகம் கொடுக்கும் தோல்விகள்தான் நமது வெற்றிக்கு நாட்டப்படும் படிக்கற்கள்!

ஜெபம்: “அன்பின் கர்த்தாவே, கடினபாதையாயினும் உம்மை விட்டுவிடாமல், என்றும் உமக்கே கீழ்ப்படிந்து எனது தெரிந்தெடுப்புகளைச் செய்ய கிருபை தாரும். ஆமென்.”

ஜெபக்குறிப்பு: 2024 அக்டோபர் 30 புதன்

நான் நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர் (ஏசாயா 51:12) இந்த மாதத்திலும் தங்களுக்கு அருமையானவர்களை இழக்கக்கொடுத்த குடும்பத்தின் ஆறுதலுக்காகவும், பலவித தோல்விகள், ஏமாற்றங்கள், நஷ்டங்களோடு உள்ள ஒவ்வொருவருடைய காயங்கள் ஆற்றப்படவும், குறிப்பிட்ட காரியத்திற்காக பலநாட்களாக ஜெபத்தில் காத்திருக்கிறக்கூடியவர்களுக்கு கர்த்தரின் சகாயத்திற்காகவும் ஜெபிப்போம்.

கண்ணோட்டம் மாறட்டும்!

தியானம்: 2024 அக்டோபர் 30 புதன் | வேத வாசிப்பு: ஆதியாகமம் 32:13-32

YouTube video

யாக்கோபு பிந்தித் தனித்திருந்தான்; அப்பொழுது ஒரு புருஷன் பொழுது விடியுமளவும் அவனுடனே போராடி, …. (ஆதியாகமம் 32:24).

யாக்கோபு ஆசீர்வதிக்கப்படுவதே தேவசித்தமாயிருந்தது. ஆனால், அவனோ தனக்குரிய மதிப்பீட்டை உணராதவனாக, தேவனுடைய வழிகளைவிட்டு, தன்னிலும் தன் தாயின் புத்தியிலும் சாய்ந்து, தவறான தெரிந்தெடுப்பைச் செய்ததால் வீட்டை, நாட்டை, எல்லாவற்றையும்விட்டு ஓடவேண்டியதிருந்தது. அவன் தமையனின் பகையையும் சம்பாதித்துக்கொண்டான். ஆனால் பின்பு, 20 வருடங்களுக்குப் பின் திரும்பவும் கானானுக்கு வர ஆயத்தமானான். அப்போது ஏசாவோடு போராட நேரிடுமே என்ற பயத்தினால் யாக்கோபு செய்த ஆயத்தங்களைப் பாருங்கள். ஒரு பயங்கரமான போராட்டத்திற்கு யாக்கோபு ஆயத்தமானார். ஆனால், நடந்தது வேறு; அவர் போராடியது ஏசாவோடு அல்ல, தேவனுடைய தூதனானவரோடு போராட நேர்ந்தது. இந்தப் பகுதி ஒரு மல்யுத்த போரை நமக்கு நினைவுபடுத்தவில்லை; மாறாக, நமக்கொரு பாடத்தைக் கற்றுத் தருகிறது. நமது வாழ்வின் முடிவுகளைச் சந்திக்கும் முன்னதாக நாம் தேவனைச் சந்திக்கவேண்டியது அவசியம் என்பதே அந்தப் பாடம்.

பயத்தினால் நிறைந்த யாக்கோபு, தன்னையும் தன் குடும்பத்தையும் ஏசாவிடமிருந்து பாதுகாக்க ஒரு நீண்ட ஊர்வலத்தையே ஆயத்தம் செய்தான். ஆனால் தேவன், அவன் கண்ணோட்டத்தை மாற்றிவிட்டார். வாழ்வின் காரியங்களைச் சரிப்படுத்துவதற்குமுன் அவன் கண்ணோட்டம் தேவனோடு இணைய வேண்டும் என்ற உண்மையைத் தேவன் யாக்கோபுக்குக் கற்றுக்கொடுத்தார். அதற்கு முழுஇரவும் தேவைப்பட்டது. தொடைச்சந்து சுளுக்கியபோதே, தேவனே முழுஆளுகையையும் வைத்திருக்கிறார் என்ற உண்மையை யாக்கோபு கண்டு கொண்டான். அப்போது அவனது கண்ணோட்டம், வாழ்வைக் குறித்த மதிப்பீடு, சிந்தனை யாவும் தெளிவடைந்தது. அவருடைய நினைவுகள் தெரிவுகள் யாவும் மாறின. தேவஆசீர்வாதம் இல்லாமல் தான் இல்லை என்ற உறுதிக்கு வந்தார் யாக்கோபு. தேவனால் ஏசாவைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும்.

பிரியமானவர்களே, இதைப்போலவே நமது பிரச்சனைகளையும் தேவனால் முடித்துவைக்க முடியும். ஆனால், அதுவல்ல காரியம். வாழ்வின் எந்தவித அழுத்தத்தின் மத்தியிலும் முதலாவது நாம் தேவனையும் அவரது ஆசியையும் விடாமல் தேடவேண்டும். அப்போது ஏசா அமைதியாக யாக்கோபை ஏற்றுக்கொண்டதுபோல, நம்மீது இருக்கும் உலக அழுத்தங்களையும் தேவன் நீக்கிப்போடுவார். அதன்பின் நமது தெரிந்தெடுப்புகள் ஏன் தவறாகும்? நமது வாழ்வில் ஏன் தோல்விகள் வரும்? நாம் தேவனை நம்பியிருந்தால் இனி பயப்பட வேண்டியதில்லை. எனவே நாமும் தேவ சமுகத்தில் காத்திருந்து நமது கண்ணோட்டம் தெளிவடைய வேண்டுதல் செய்வோம்.

ஜெபம்: அன்பின் கர்த்தாவே, என் வாழ்வின் கண்ணோட்டத்தை மாற்றிப்போடும். எந்த நிலையிலும் நான் முதலாவது உம் பாதம் விழ என்னை வழிநடத்தும். ஆமென்.