ஜெபக்குறிப்பு: 2024 செப்டம்பர் 30 திங்கள்
கர்த்தர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள் (சங்.105:6) இம்மாதம் முழுவதும் நாம் சந்தித்த எவ்வளவோ கஷ்ட, நஷ்ட, வேதனையான சூழ்நிலைகள் மத்தியிலும் கர்த்தர் நமக்கு வாக்குப்பண்ணி அற்புதமாக, குறைவில்லாமல் நடத்தினபடியால் முழுமனதோடு நன்றி செலுத்தி ஜெபிப்போம்.
நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப் போல சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார் (எபிரெயர் 4: 15).
காத்திரு!
தியானம்: 2024 செப்டம்பர் 30 திங்கள் | வேத வாசிப்பு: பிலிப்பியர் 4:4-9
நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம் போல் இருக்கும் (நீதி.13:12).
“நாட்கள் கிழமையாகி, மாதங்களாகி, வருடமும் முடியப்போகிறதே. அப்பா, உனக்கு அனுப்புவதாக வாக்குக்கொடுத்த முத்திரை அல்பத்தை இன்னும் அனுப்பவில்லையே. அது உனக்கு கவலையளிக்கிறதா மகனே? அல்லது அதைக் குறித்து நீ மறந்துவிட்டாயா” என்று மகனைப் பார்த்துக் கேட்டாள் தாய். மகன் சிரித்த முகத்தோடு, “அப்பா வாக்குக் கொடுத்தபடி வருடம் முடியும் முன் அதை நிச்சயமாய் அனுப்பி வைப்பார் என அறிவேன். எனவே நான் துக்கப்படவும் இல்லை, சந்தேகப்படவுமில்லை” என்று கூறினான். அவன் கூறிமுடிப்பதற்கும், வாசலில் தபால்காரனின் சைக்கிள் மணிஓசை கேட்கவும் சரியாக இருந்தது. ஓடிச்சென்று கடிதங்களை வாங்கிய சிறுவனின் கைகளில் தபால்காரன் பார்சல் ஒன்றைக் கொடுத்தான். அது அவனது அப்பா அனுப்பியிருந்த பார்சல். அதற்குள் ஒரு கடிதமும் இருந்தது. அதில், “மகனே, நீ கேட்ட முத்திரை அல்பம் இத்தனை நாட்களாக அனுப்பவில்லையே என்று யோசிப்பாய். நான் எல்லா இடமும் விசாரித்தும் கிடைக்கவில்லை. கடைசியில் வெகு தொலைவுக்குச் சென்று வாங்கி அனுப்புகிறேன்” என எழுதப்பட்டிருந்தது.
“பரம தந்தையிடம் ஒரு குழந்தை பாக்கியத்தைக் கேட்டு எத்தனை வருடங்கள் உருண்டோடிவிட்டது, என் பிள்ளைகளின் திருமணத்திற்காக எத்தனை காலமாய் ஜெபித்துவருகிறேன், என் கணவன் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட வேண்டுமென்று எத்தனை வருடங்களாக ஜெபிக்கிறேன், என் குடும்பத்தில் இன்னும் எத்தனை காலம் இந்த வறுமை நிலை? ஒருவேளை கர்த்தரிடத்தில் ஏறெடுக்கும் சில ஜெபங்களுக்குக் கர்த்தர் பதில் கொடுப்பதில்லையோ?” என தவறாக எண்ணிவிடாதே! நாம் கர்த்தரிடத்தில் ஏறெடுக்கும் சகல விண்ணப்பங்களையும் கர்த்தர் கேட்கிறார். ஆனால், நாம் ஏறெடுக்கும் அனைத்து ஜெபங்களுக்கும் அவர் எப்பொழுதும் உடனடியாக “ஆம்” என பதில் கொடுப்பதில்லை. சில சமயங்களில் “பொறுத்திரு” என்றும், சில சமயங்களில் “இல்லை” என்றும் கூட பதில் வரலாம். ஆனால், அவை அனைத்தும் கர்த்தர் தரும் பதில்கள்தான். கர்த்தரின் வாக்குத்தத்தங்களை நம்பி விசுவாசத்தோடு காத்திருப்பதில் தவறு இல்லை.
ஆனால் தேவபிள்ளையே, நீ விரும்புவது உடனே கிடைக்காதபோதும், கர்த்தர் இல்லை என்று பதில் தரும்போதும் அதனை ஏற்று அதற்குக் கீழ்ப்படிய நீ தயாரா? உண்மையில் நாம் கேட்டதைப் பெற்றுக்கொள்வதைப்பார்க்கிலும், கர்த்தருடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிவதில்தான் உண்மையான மகிழ்ச்சி தங்கியிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்வோமாக. கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு (சங்-27:14).
ஜெபம்: அன்பின் பரம தகப்பனே! நீர் சகலத்தையும் அறிந்தவர், எங்களுக்கு எது தேவை, எது நன்மையானது என்பதையெல்லாம் அறிவீர். இன்று உமது சித்தத்திற்குக் கீழ்ப்படிய எங்களை அர்ப்பணிக்கிறோம். எங்களை ஆசீர்வதியும். ஆமென்.
வாக்குத்தத்தம்: 2024 செப்டம்பர் 29 ஞாயிறு
எங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தினிமித்தம் உனக்கு நன்மையுண்டாகத் தேடுவேன். (சங்.122:9)
வேதவாசிப்பு: காலை: ஏசாயா 30,31 | மாலை: எபேசியர் 1
ஜெபக்குறிப்பு: 2024 செப்டம்பர் 29 ஞாயிறு
கர்த்தரைப்போலப் பரிசுக்தமுள்ளவர் இல்லை … எங்கள் தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை (1சாமு.2:2) இந்தநாளில் சபைகளெங்கும் நடைபெறும் அனைத்து ஆராதனைகளிலும் தூயஆவியானவர் கிரியை செய்யவும், ஆலயத்திலே தங்கி பணி செய்கிற பணிவிடையாளர்களையும், சபை ஊழியங்களிலே முழுவதுமாய் அர்ப்பணத்தோடு பணிசெய்கிறவர்களையும் கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.
கவலைகள் நீங்கட்டும்!
தியானம்: 2024 செப்டம்பர் 29 ஞாயிறு | வேத வாசிப்பு: மத்தேயு 6:25-34
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும் (மத்.6:33).
இரவு நீங்கி, பொழுது விடிந்து, சேவல் கூவும் சத்தத்தோடு கண் விழிக்கும்போது, “இந்நாள் ஏன் தான் விடிகிறதோ? இன்றைய பொழுது விடியாமலே இருந்திருக்கலாமே; இத்தனை மனப்பாரத்தோடு எப்படியாக இந்நாளின் காரியங்களை நான் கவனிப்பேன்” என உள்ளத்தின் பாரத்தினால் ஆத்துமா சோர்ந்துபோன அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டதுண்டா? அப்படியாக உலகத்தின் பாரங்களினால் கவலையடைந்த மனிதனுக்கு ஆண்டவர் இயேசு கொடுக்கும் அழைப்பு என்னவென்றால், “உன்னைச் சுற்றிலும் இருக்கும் இயற்கையை சற்றே கவனித்துப்பார்” என்பதாகும்.
ஆம், ஆகாயத்துப் பறவைகளைக் கவனித்துப் பாருங்கள். அவைகளை ஆண்டவரே போஷிக்கின்றார். காட்டுப் புஷ்பங்களைக் கவனித்துப் பார்ப்போமேயானால் அவைகளை உடுத்துவிக்கிறவரும் அவரே. அவைகள் எப்போதாவது தமது தேவைகளைக் குறித்துக் கவலைப்படுகின்றனவா? படைப்பிலே மிகச் சாதாரணமான இவைகளைப் பராமரிக்கும் நம்முடைய அன்பின் தேவன், தமது சாயலாகவும், படைப்பின் சிகரமாகவும் சிருஷ்டிக்கப்பட்ட உன்னைப் பராமரிக்காமல் விட்டுவிடுவாரோ? ஆண்டவர் நம்மைப் பராமரிப்பேன் என்று வாக்களித்துள்ளார் என்பதற்காக நாம் ஒன்றும் செய்யாமல் சோம்பேறியாக இருந்துவிட முடியாது. அவர் சோம்பேறித்தனத்தை விரும்புகிறவரல்ல. “சோம்பேறியின் கைகள் வேலை செய்யச் சம்மதியாததினால், அவன் ஆசை அவனைக் கொல்லும்” (நீதி.21:25). பறவைகளானாலும் அவை இரைதேடிச் செல்லவேண்டும். புஷ்பங்களானாலும் அதைத் தாங்கிநிற்கும் செடிகள் தமது வேர்களை நீர்க்கால்களை நோக்கி நீட்ட வேண்டும். எனவே நமக்குத் தேவன் தந்த திறமைகள், தாலந்துகள் மற்றும் வளங்களைக்கொண்டு நம்மால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்கவேண்டும். அப்பொழுது கர்த்தர் நமது கரத்தின் கிரியைகளை ஆசீர்வதித்து, வாய்க்கச்செய்வார்.
ஆம் பிரியமானவர்களே, வெறுமனே அமர்ந்திருந்து அந்த நாளைக் குறித்துக் கவலைப்பட்டுக்கொண்டிருப்பதால் நமக்கு ஒரு நன்மையும் ஏற்படப்போவதில்லை. நமது தேவைகளையும் பாரங்களையும் கவலைகளையும் ஜெபத்தின் மூலம் கர்த்தரிடம் சொல்வோம்.செய்யும்படி நம் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை முழுப்பெலத்தோடே செய்வோம். எப்போதும் தேவனுக்கும் அவருடைய நீதிக்கும் முதலிடம் கொடுப்போம். அப்போது அவர் நம் தேவைகளைச் சந்தித்து, நம்மை ஆசீர்வதிப்பார். நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும் (பிலி.4:6,7).
ஜெபம்: அன்பின் தேவா! என் கவலையை யார் அறியாமல் போனாலும் நீர் அறிவீர், ஆன படியால் உம்மைத் துதிக்கிறேன். அதனால் என் கவலை யாவும் நீங்கிற்றே. நன்றி. ஆமென்.