ஜெபக்குறிப்பு: 2024 செப்டம்பர் 4 புதன்

சகல பிணியாளிகளையும் … இயேசுவினிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர்களை சொஸ்தமாக்கினார் (மத்.4:24) கேன்சர், இருதயநோய், சிறுநீரக பிரச்சனை, சுவாசபிரச்சனை, தொற்றுபிரச்சனை இதுபோன்று பல்வேறு பெலவீனங்களால் தொடர் சிகிச்சை பெற்றுவரும் கர்த்தருடைய பிள்ளைகள் எல்லோரையும் கர்த்தர் கரம்தொட்டு சுகமாக்க பாரத்தோடு ஜெபிப்போம்.

சர்வ வல்லமையுள்ளவர்!

தியானம்: 2024 செப்டம்பர் 4 புதன் | வேத வாசிப்பு: யாத்திராகமம் 6:1-8

YouTube video

நான் யேகோவா, சர்வ வல்லமையுள்ள தேவன்…. (யாத்திராகமம் 6:2,3).

“நாங்கள் ஜெபத்தை முடித்து எழுந்தபோது, இடம்பெயர்ந்து போய்விட வேண்டும் என்ற உத்தரவு வந்தது. எங்கே போவது என்று தெரியாமல் நாங்கள் பயந்து விழித்தோம். ஆனால், நானும் என் குடும்பத்தாரும் என்னைச் சேர்ந்த சிறுகூட்டத்தாரும் ஒரே மனமாக தீர்மானம் பண்ணி புறப்பட்டோம். முட்செடிகள் காடுகள், விழுந்து வெடிக்கும் ஷெல்குண்டுகள் எல்லாவற்றின் மத்தியிலும் புறப்பட்டு வந்தோம். தேவனுக்கு நன்றி சொல்ல எங்களிடம் வார்த்தையே இல்லை. எங்கள் கண்களின் முன்னே எத்தனையோ பேர் விழுந்து செத்துப்போன வேளையிலும், எங்களோடு வந்த எவர்மீதும் ஒரு கீறல்காயம்கூட விழாதபடி கர்த்தர் காத்துக்கொண்டார். அவர் இனியும் நம்மை கைவிடவேமாட்டார். அவருக்கே துதியுண்டாவதாக.” இலங்கையில் யுத்த சூழலில் அகப்பட்டு, தப்பிப்பிழைத்த ஒரு தேவ பிள்ளை எழுதிய கடிதத்தின் சில வரிகள்தான் இவை.

ஏறத்தாழ கி.மு.605இல் நேபுகாத்நேச்சார் முதலாம் தடவையாக யூதரை சிறை பிடித்து சென்றபோது, அந்தக் கூட்டத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட தானியேலும் மனங் கலங்கித்தான் இருந்திருப்பார். இது இயல்பு. ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கைது, ஒருநாளும் காணாத அந்நிய தேசம், பிறதெய்வ வணக்கமுள்ள ஜனங்கள், இவையாவும் எந்தவொரு மனுஷனுடைய மனதையும் தாக்கும்; அவனில் வெறுப்புண்டாக்கும். மேலும், யூதராஜாக்களும் மக்களும் தேவனுக்கு விரோதமாக வாழ்ந்தபோதும், வாலிபனாகிய தானியேல் அப்படி வாழ்ந்திருக்கமாட்டார் என்பது அவருடைய வாழ்விலிருந்து நமக்கு விளங்குகிறது. ஆக, தன் விசுவாசத்தில் தளராத தானியேலும் சிறைபிடிக்கப்பட்டது நியாயமா? ஆனாலும், தானியேலோ தன் விசுவாசத்தில் தொடர்ந்தும் நிலைத்திருந்தார் என்பதுதான் உண்மை. எல்லாமே மாறுபாடாய் போனாலும் தமது பிள்ளைகள் விஷயத்தில் தேவன் தமது திட்டத்தின்படியே கிரியை செய்கிறவர் என்பதில் தானியேல் உறுதியாயிருந்தார்.

பிரியமானவர்களே, இந்நாளில் இரண்டு விஷயங்களை நம் மனதில் நிறுத்திக்கொள்வோமாக. ஒன்று, சமுதாயமாக அல்லது இனமாக ஒரு பிரச்சனை வரும்போது அதில் தேவபிள்ளைகளாகிய நாமும் தாக்கப்படுவதை தடுக்க முடியாது. அடுத்தது, தீமை நம்மை மேற்கொண்டாலும் இன்னமும் கர்த்தரே சகல கட்டுப்பாட்டையும் தமக்குள்ளாக வைத்திருக்கிறார். இந்த உண்மையை வேதாகமம் முழுவதிலும் நாம் காணலாம். ஆகவே, தேவபிள்ளைகளாகிய நாம் எந்த சூழ்நிலைக்குள் அகப்பட்டாலும், கர்த்தர் கூடவருவார் என்ற உறுதி நமக்கு வேண்டும். அத்தோடு, அந்த சூழ்நிலையிலும் தேவன் நம்மீது வைத்திருக்கும் நோக்கம் என்ன என்பதிலும் நமக்கு கவனம் வேண்டும். அந்த சித்தத்தில் நாம் இருப்போமானால், தீமையை நாம் மேற்கொள்வது உறுதி.

ஜெபம்: அன்பின் தேவனே என் தனிப்பட்ட வாழ்வில் நீர் வைத்திருக்கும் உன்னத நோக்கம் என்னவென்பதில் நான் தெளிவாக இருக்க எனக்கு கிருபை தாரும். என் வாழ்வின் கட்டுப்பாட்டை நீர் வைத்திருக்கிறபடியால் உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்.