வாக்குத்தத்தம்: 2024 நவம்பர் 1 வெள்ளி

ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, … வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்; உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை (எரேமி.32:17).

கர்த்தர் சகல நோய்களையும் உன்னைவிட்டு விலக்குவார். (உபா.7:15)
வேதவாசிப்பு: காலை: எரேமியா 51,52 | மாலை: தீத்து 2

ஜெபக்குறிப்பு: 2024 நவம்பர் 1 வெள்ளி

கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது (1பேது.3:12).

உமது கிருபையும் உமது உண்மையும் எப்பொழுதும் என்னைக் காக்கக்கடவது (சங்.40:11) என்ற வாக்குப்படி இந்த பதினொராவது மாதத்தில் தேவனுடைய நன்மையும் கிருபையும் நம்மைத் தொடர்ந்து வரவும், அவர் தமது கிருபையின்படியும், வார்த்தையின்படியும் நம்மை உயிர்ப்பிக்க, வழிநடத்த அர்ப்பணித்து ஜெபிப்போம்.

உண்மையான வெற்றி!

தியானம்: 2024 நவம்பர் 1 வெள்ளி | வேத வாசிப்பு: வெளி.5:1-10; 7:14

YouTube video

இதோ, அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒருஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக் கண்டேன் (வெளி. 5:6).

நம்மை ஒவ்வொரு நாளும் ஆதரித்து வழிநடத்துகிற தேவன் ஒரு புதிய மாதத்திற்குள்ளாக பிரவேசிக்க கிருபை செய்தபடியால் நாம் அவரை ஸ்தோத்தரிப்போம். இம்மாதத்தில் தேவன் நம்மோடுகூட இருந்து நமது தேவைகளை சந்தித்து வழிநடத்துவார். நமது காரியங்கள் அனைத்தையும் பொறுப்பேற்று அவைகளை நிறைவேற்றித் தருவார். இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ? என்கிறார் (எரே.32:27). எனவே நாம் நம்பிக்கையோடு முன்செல்வோம்.

வெற்றி என்ற சொல்லைக் குறித்து உங்கள் கருத்து என்ன? ஓட்டப் பந்தயத்தில் இன்று வெற்றி பெற்றவன் அடுத்த போட்டியில் தோற்கிறான். வியாபாரத்தில் வெற்றி பெற்றவன் மறுஆண்டில் நஷ்டப்படுகிறான். நினைத்தபடி விரும்பியவளை மணமுடித்து வெற்றி பெற்றவன், இரண்டு ஆண்டுகளில் விவாகரத்து வழக்கில் நிற்கிறான். ஏழையாயிருந்து பாடுபட்டு பணத்தை சம்பாதித்து வெற்றி பெற்றவன் சிலநாட்களில் வியாதியில் விழுகிறான். அப்படியானால் எது வெற்றி? வேதாகமம் நமக்குக் கற்றுத்தருகின்ற வெற்றியோ வித்தியாசமானது; ஆனால், மாறாதது; நிரந்தரமானது. வெற்றி என்ற வார்த்தைக்கு கிறிஸ்து கற்றுத்தந்த ஒரே பாடம், “சிலுவை” என்பதாகும். அது முதலில் தோற்றுப்போனதுபோல இருக்கும்; ஆனால், முடிவோ நித்திய வெற்றியாகும்! ஏனெனில் உயிர்த்தெழுதலுக்கான அழைப்பு என்பது சிலுவையில் அறையப்படுவதற்கு வருகின்ற அழைப்பாகும். ஆண்டவர் அந்த வெற்றியை நமக்குத் தந்திருக்கிறார். செலுத்தவேண்டிய கிரயம் எதுவாயினும் சிலுவையை எடுப்பது ஒன்றுதான் தேவசித்தத்துக்குக் கீழ்ப்படிதலாகும். அப்படிப்பட்டவனே தனது வாழ்வில் வெற்றி சிறந்தவனாவான்.

கிறிஸ்தவ புனித வாழ்க்கை என்ற புத்தகத்தை எழுதியவரும் 1970களில் இரத்த சாட்சியாக மரித்தவரும் சீனப் போதகருமான வாட்ச்மன் நீ அவர்களுடைய உடன்ஊழியர் ஒருவர் இப்படிச் சொன்னார்: “நாம் நம்மைக் கிறிஸ்தவர்கள் என்று அழைப்போமாயின் சிலுவை வழி சென்ற கிறிஸ்துவின் பாதையிலே செல்ல நாமும் தயாராகவேண்டும்” என்று கூறினார்.

பிரியமானவர்களே, இன்று இரத்தம் சிந்தத்தக்க அளவுக்கு நமக்கு சோதனைகள் எதுவும் வருவது இல்லை. ஆனால், காலாட்களோடு ஓடும்போதே இளைத்துப் போகும் நாம் குதிரைகளோடு எப்படி ஓடுவோம்? அனுதின வாழ்விலே நமக்கு அனுமதிக்கப்படும் சின்னஞ்சிறிய சிலுவைகளையாவது நாம் உண்மையோடு சுமக்கலாமே. ஆண்டவர் யூதராஜ சிங்கமாக எழும்புமுன் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாக தம்மைத் தாழ்த்தினார். கிறிஸ்துவுக்காக வாழ்வது என்பது நாம் அனுதினமும் வாழவேண்டிய வாழ்வு. நாம் சிலுவை சுமந்து வெற்றி சிறக்கவேண்டியவர்கள் என்பதை மனதில் நிறுத்துவோம். மேன்மைக்கு முன்னானது தாழ்மை!

ஜெபம்: அன்பின் கர்த்தாவே, இந்த புதிய மாதத்தை எங்களுக்கு ஆசீர்வதித்தருளும். எங்கள் வாழ்வில் என்றும் சிலுவையை மறவாமல் வாழ கிருபை தாரும். உமது வெற்றிப் பாதையில் நாங்களும் நடக்க எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.

ஆசிரியரிடமிருந்து… (நவம்பர் – டிசம்பர் 2024)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

இவ்வுலகத்தில் மெய்யான ஒளியாக உதித்த ஆண்டவரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இவ்வருடத்தின் இறுதிவரைக்கும் நடத்தி வந்த அன்பின் தேவனைத் துதிக்கிறோம். இவ்விதழின் வாயிலாக தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். இத்தியானங்கள் யாவும் உங்கள் ஆவிக்குரிய வாழ்விற்கு மிகவும் பிரயோஜனமாக இருக்க வேண்டுதல் செய்கிறோம். இத்தியானங்கள் இணையதளம், வாட்ஸ் அப், YouTube ஆகிய ஊடகங்கள் வாயிலாகவும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதன்வாயிலாக தேவன் பெரிய காரியங்களை செய்ய எங்களோடு இணைந்து ஜெபிக்க அன்பாய் கேட்கிறோம். தங்கள் ஆவிக்குரிய நண்பர்கள் விசுவாசிகளுக்கும் தியான நூலை அறிமுகம் செய்துவையுங்கள்.

சத்தியவசன ஊழியத்தை இணைக்கரம் கொடுத்து தாங்கிவரும் பங்காளர்கள் அனைவருக்காகவும் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம். பங்காளர்கள் அனுப்பும் அன்புகாணிக்கையினாலே தேவன் இவ்வூழியத்தின் தேவைகள் அனைத்தையும் சந்தித்து வருகிறார். இதுவரை விசுவாச பங்காளர் சந்தாவைப் புதுப்பிக்காதவர்கள் தயவுகூர்ந்து புதுப்பித்து தொடர்ந்து ஆதரிக்க அன்பாய் வேண்டுகிறோம்.

இத்தியானபுத்தகத்தில் வெளியாகிவரும் வேதவாசிப்பு அட்டவணைப்படி பரிசுத்த வேதாகமத்தை தவறாது வாசித்துமுடிக்கிறவர்கள் வழக்கம் போல் பெயர்களை ஜனவரி 31ஆம் தேதிக்குள் எங்களுக்கு எழுதித் தெரிவியுங்கள். அவர்கள் பெயர்களை அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழில் பிரசுரிப்போம்.

இவ்விதழில் நவம்பர் மாதத்தில் இஸ்ரவேல் ராஜாக்களின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய காரியங்களைக் குறித்து சகோதரி சாந்தி பொன்னு அவர்களும், டிசம்பர் மாதத்தில் கிறிஸ்து பிறப்பின் சிறப்புதியானங்களை சகோதரி தர்ஷினி சேவியர் அவர்களும் எழுதியுள்ளார்கள். தியானங்களை எழுதும் சகோதர சகோதரிகளை உங்கள் ஜெபங்களில் தாங்க அன்பாய் கேட்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

எழுந்து கட்டுவோம் வாருங்கள்!

அதிகாலை வேளையில்… (நவம்பர் – டிசம்பர் 2024)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: எஸ்றா 4 :1-3

சிறையிருப்பிலிருந்து வந்த ஜனங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுகிறார்கள் என்று யூதாவுக்கும் பென்யமீனுக்கும் இருந்த சத்துருக்கள் கேள்விப்பபட்டபோது, அவர்கள் செருபாபேலிடத்துக்கும், தலைவரான பிதாக்களிடத்துக்கும் வந்து: உங்களோடேகூட நாங்களும் கட்டுவோம் (எஸ்றா4:1-2).

இலக்கை அடைய ஒரு நோக்கம்

பாபிலோனிய சிறையிருப்பிலிருந்த யூதர்கள் தங்களது தேசத்துக்குத் திரும்புவதற்கு ஆண்டவரே வழிதிறந்தார் (2 நாளாகமம் 36:22-23). இவ்வுலகின் மீட்பின் திட்டத்துக்கு யூத நாடு மீண்டும் எழும்பவேண்டும், யூத தலைநகர் மக்களால் நிரப்பப்படவேண்டும், யூத ஆலயம் மீண்டுமாகக் கட்டப்படவேண்டும். பூமியின் எந்த ஒரு தேசத்துடனும் செய்யாத உடன்படிக்கையை தேவன் இஸ்ரவேலுடன் செய்தார்; அவர் அவ்வுடன்படிக்கையைக் காத்துக்கொள்வார் (ஆதி.12:1-3; 13:14-17; 17; 22:15-19). தேவகுமாரன் பெத்லெகேமிலே பிறந்து, நாசரேத்தில் வளர்ந்து, பரிசுத்த பூமியெங்கும் ஊழியம் செய்து இறுதியில் எருசலேமுக்கு வெளியே சிலுவையில் அறையப்பட்டு கல்லறையில் வைக்கப்படும் ஒருநாள் வரும். மரித்த அவர் மீண்டுமாக உயிரோடு எழுந்து தம்மைப் பின்பற்றியவர்களுக்குக் காட்சியளிப்பார். பின்னர் மீண்டுமாக பரலோகம் சென்று பிதாவுடன் சிம்மாசனம் அமருவார். “பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம்” (1 யோவான் 4:14).

தவிர்க்கவேண்டிய ஆபத்து

தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் தேசம் இஸ்ரவேல் என்பதால், அது தேவனுடைய வார்த்தையையும் தேவனுடைய குமாரனையும் அலட்சியம் செய்யும் மனிதர்களின் இலக்காகவும் அமைந்துள்ளன. மோசே தேவனிடம் “நானும் உம் மக்களும் மண்ணுலகில் உள்ள அனைத்து மக்களினங்களினின்றும் வேறுபட்டு நிற்கிறோம்” (யாத் 33:16) என்றார். இஸ்ரவேல் மக்கள், தனியாக வாழ்கின்றதொரு மக்கள் கூட்டம். இது வேற்றினத்தாரோடு தன்னையும் ஓர் இனமாய் இணைத்துக் கொள்ளவில்லை (எண்.23:9). மற்ற இனங்களிலிருந்து இஸ்ரவேலரைப் பிரித்தெடுத்தது தேவனே (லேவி.20:26). எனவே மற்ற இன மக்களின் வழிகளையும் பழக்கங்களையும் பின்பற்றாதிருப்பீர்களாக என்று தேவன் கட்டளையிட்டிருந்தார். யூதர்கள் இந்த பிறவின மக்களின் உதவியை ஏற்றுக்கொண்டிருந்தால் அவர்கள் தங்களுடைய எதிரிகளோடு வேலை செய்தனர் என்ற பொருளாகும். எனவே தேவன் அவர்களை ஆசீர்வதிக்க இயலாது. யூதர்கள் தங்களது புறமத பெண்களை மணப்பதன் மூலம் அவர்களோடு ஐக்கியமாகி விட்டனர் (எஸறா 10:2). இதே கொள்கை தற்கால சபைகளுக்கும் பொருந்தும்.

“அவிசுவாசிகளோடு இணைக்கப்படாதிருப்பீர்களாக” என்று அப்.பவுல் எச்சரித் தார் (2 கொரி. 6:14-7:1). தேவனுடைய மக்கள் பிரித்தெடுக்கப்படவேண்டும். ஆனால் தனிமைப்படுத்தப்படக்கூடாது (எபே.5:8-14). ஆனால் ஆபிரகாம் மூலமாக தேவன் இஸ்ரவேலருக்கு, “நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்” (ஆதி.12:2) என்று மாறாத வாக்குறுதியைக் கொடுத்தார். ஆனால் அந்த தேசம் தேவனுடைய சித்தத்துக்கு விலகி, அவரையும் அயல் தேசத்து கடவுள்களை வணங்கியபொழுது. அத்தேசத்து மக்கள் பஞ்சம், வறட்சி, கொள்ளைநோய் மற்றும் அடிமைத்தனத்துக்குள்ளாக நேரிட்டது. ஆனால் தேவனுடைய உடன்படிக்கையின் விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிந்தபொழுதோ அவர்களது குடும்பங்களிலும், வயல்களிலும், ஆடுகளிலும் மந்தைகளிலும் ஆசீர்வதிக்கப்பட்டு, தேசத்தில் சமாதானத்தை அனுபவித்தனர்.

சிறையிருப்பிலிருந்து திரும்பிய யூத மக்களின் வரலாறு மகிழ்ச்சியாக அமையவில்லை. அநேக ஆண்கள் புறஜாதி பெண்களை மணந்தனர். இதில் சில ஆசாரியர்களும் அடங்குவர் (எஸ்றா 9-10). யூதமக்கள் தங்களுடைய பரம்பரையை மாசில்லாமல் காத்துக்கொள்ளவேண்டும்; ஏனெனில் மேசியா யூத கன்னியிடமே பிறப்பார் (ஏசாயா 7:14). “என் சபையைக் கட்டுவேன்” (மத்.16:18) என்று இயேசு சொன்னார். பிரித்தெடுக்கப்பட்ட, தேவ ஆவியால் நிரம்பிய மக்கள் அவருக்குத் தேவை. உலகத்தோடு ஒத்துப்போகும் கிறிஸ்தவர்கள் அவருடன் அல்ல, அவருக்கு எதிராக செயல்படுகிறார்கள். எனவேதான், “நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (2 கொரி.6:17). பிரிவினை என்பது தனிமையல்ல; ஏனெனில் விசுவாசிகள் உலகத்துக்கு உப்பாகவும் வெளிச்சமாகவும் இருந்து, அழிவையும் இருளையும் மேற்கொள்பவர்கள் (மத்.5:13-16). இத்தகைய மக்களையே தேவன் தமது சபையைக் கட்ட பயன்படுத்தமுடியும்.

ஆகையால் பிரியமானவர்களே, இந்த வாக்குறுதியைப் பெற்றுள்ள நாம், மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான சகல அசுத்தங்களிலிருந்தும் நீங்க நம்மை சுத்திகரித்துக்கொண்டு பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம் (2 கொரி 7:1).

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

2.வேதாகமம் தேவஆவியினால் தூண்டப்பட்டு எழுதப்பட்டது!

வேதாகமத்தின் தனிச்சிறப்பு (நவம்பர் – டிசம்பர் 2024)
Dr.உட்ரோ குரோல்

3. அகத்தூண்டல் பற்றிய கருத்துக் கொள்கை

இந்தக் கொள்கைக்காரர்கள் வேத வசனங்களை அகத்தூண்டல் பெற்று எழுதப்பட்டவை அல்ல. எழுதப்பட்டிருப்பவைகளின் பொதுக்கருத்து மட்டுமே அகத்தூண்டல் பெற்றவை. வேதாகம நூல்களை எழுதியவர்கள் தேவனுடைய கருத்துத் தொகுதிகளைத் தெரிந்துகொண்டு வந்து அந்த மூலக் கருத்துக்களை விளக்கித் தங்களாகவே தங்கள் சொந்த வார்த்தைகளில், மொழிநடையில் எழுதினர். அவர்கள் தேவனுடைய கருத்துக்களை எப்படிப்புரிந்து கொண்டிருந்தார்களோ, நினைவில் வைத்திருந்தார்களோ, அவற்றின் அடிப்படையில் எழுதினார்கள். இப்படி மனிதர்கள் வேதாகமத்தை எழுதியிருந்தார்களானால், அது தெய்வீகமாய் இருக்க முடியாது. மனுஷீகமாகத்தான் இருக்கும். இந்தக் கருத்து வேதாகமத்தில் உள்ள பல வசனங்களுக்கு முரணாய் இருக்கிறது (2 பேதுரு 1:20; கலா.3:16 1 கொரி.2:12,13 மத்.5:18).

4. அகத்தூண்டுதல் மாறுபடும் கொள்கை

இந்தக்கொள்கை வேதாகமத்தில் சில பகுதிகள் தேவஆவியினால் அகத்தூண்டுதல் பெற்று எழுதப்பட்டவை. மற்றவை அப்படி அல்ல என்பது.

முற்போக்குக் கொள்கையுள்ள பல சபைப் பிரிவுகளும், இறையியற் கல்லூரிகளும் இறையியலாளர்களும் வேதாகமத்தில் சிலபகுதிகள் மட்டும் தேவஆவியினால் தூண்டப்பட்டு எழுதப்பட்டவை என்று போதிக்கிறார்கள். அவர்களுக்குச் சம்மதம் இல்லாத மீதிப்பகுதிகள் தேவனால் தூண்டப்பட்டு எழுதப்பட்டவைகள் அல்ல என்கிறார்கள். அவர்கள் பாவம், இரத்தத்தின் மூலம் பிராயச்சித்தம் செய்தல், எதிர்கால நியாயத்தீர்ப்பு இவைக் குறித்த வேதப்பகுதிகள் அவர்களுக்குப் பிரியம் இல்லாதவை. எனவே இப்பகுதிகளைப் புறக்கணித்துத் தள்ளிவிடுகின்றனர். இவை தேவஆவியினால் தூண்டப்பட்டு எழுதப்பட்டவை அல்ல என்று கூறுகிறார்கள். எனவே வேதாகமம் அரைகுறையாக அகத்தூண்டுதல் பெற்று எழுதப்பட்டது என்று வாதிடுகிறார்கள். அவர்கள் தாங்களே வேதாகமத்தில் இன்னின்ன பகுதிகள் எல்லாம் அகத் தூண்டுதல் பெற்று எழுதப்பட்டவை; இந்த இந்தப் பகுதிகள் எல்லாம் தேவனுடைய தூண்டுதல் பெற்று எழுதப்பட்டவை அல்ல என்று தீர்ப்பு கூறுகிறார்கள். இது எவ்வளவு முடடாள்தனம்!

5. அகத்தூண்டுதல் பற்றிய R E M S கொள்கை

REMS என்பது ஒரு சுருக்க வார்த்தை. நான்கு ஆங்கில வார்த்தைகளின் முதல் எழுத்துக்கள் சேர்ந்து உருவானது.

R – Religious – சமய சம்பந்தமான

E – Ethical – நீதி ஒழுக்கம் சார்ந்த

M – Moral – அறநெறி சார்ந்த

S – Spiritual – ஆவிக்குரிய

இந்தக் கொள்கைக்காரர்கள் இந்தக் குறிப்பிட்ட நான்கு தலைப்புகளிலும் உள்ள வேதப்பகுதிகள்மட்டும் தேவனால் அகத்தூண்டல் பெற்று எழுதப்பட்டவை. மற்றப்படி, வரலாறு சம்பந்தப்பட்டவைகளையும் அறிவியல் விஞ்ஞானம் சம்பந்தப்பட்டவைகளையும் கல்வி அறிவூட்டுதல் சம்பந்தப்பட்டவைகளையும் உலகப் பொருட்கள் சம்பந்தப்பட்டவைகளையும் பற்றிக் கூறும் வேதப்பகுதிகள் தேவஆவியினால் தூண்டப்பட்டு எழுதப்பட்டவை அல்ல. இந்தக் கொள்கைக்காரர்கள் கூறுவதுயென்னவென்றால் வேதாகமம் ஒரு புவியியல் பாடப்புத்தகமாகவோ, அறிவியல் பாடப்புத்தகமாகவோ இருக்கப் போவதில்லை. எனவே அப்பகுதிகளில் எல்லாம் விளக்கக் குறிப்புகள் சரியாக இருக்காது. ஆனால் இயேசு கூறுகிறார்: பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்? (யோவான் 3:12).

இந்தப் பூமிக்கடுத்த காரியங்களில் நாம் தேவனையும், அவருடைய வார்த்தையையும் விசுவாசிக்கவில்லையானால், நித்திய காரியங்களைக் குறித்து அவர் கூறும்போது எப்படி விசுவாசிப்போம்?

இல்லை, வேதாகமம் சிலபகுதிகளில் மட்டும், அல்லது ஆவிக்குரிய காரியங்களைப் போதிக்கும் இடங்களில் மட்டும் தேவஆவியினால் அகத்தூண்டுதல் பெற்று எழுதப்பட்டதல்ல. “அகத்தூண்டல்” என்பது இருந்தால் முழுவதிலும் இருக்கும், இல்லையேல் ஒன்றிலும் இருக்காது என்பது அவர்களின் வாதம்.

தேவன் கூறுகிறார்: வேதாகமம் முழுவதும் தேவஆவியினால் தூண்டப்பட்டு எழுதப்பட்டது. நூறுசதவீதம் ஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்டதுதான். தேவனுடைய ஆவியானவர் சில மானிட எழுத்தாளர்களை தேவனுடைய சிறப்பான வெளிப்பாடுகளை அறிந்துகொள்ள உதவினார். இப்படி தேவவெளிப்பாடு பெற்று, தேவஆவியானவரின் அகத்தூண்டுதலுடன் எந்தத் தவறும் இல்லாமல், எதுவும் விடுபடாமல் வேத நூல்களை எழுதினார்கள்.

அகத்தூண்டுதல் பற்றிக் குறிப்பிடும் போது, இரண்டு சொற்கள் பயன்படுத்தப்படுவதுண்டு அவை:

1. Plenaryமுழுமையான, குறைவற்ற என்று பொருள்.

2. Verbalஒவ்வொரு வார்த்தையும் பொருத்தமாகச் சரியாக அமைதல்.

இவற்றில் முழுமையான அகத் தூண்டுதல் என்பது வேதாகமத்தில் உள்ள 66 புத்தகங்களும் தேவஆவியினால் தூண்டுதல் பெற்று எழுதப்பட்டது என்பதைக் குறிக்கும்.

வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது (1 தீமோ.3:16). வார்த்தைகளின் அகத்தூண்டுதல் என்பது, வேதநூல் எழுத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடத்திலும்-புவியில் சம்பந்தப்பட்டவைகள், அறிவியல் சம்பந்தப்பட்டவைகள், வானவியல் சம்பந்தப்பட்டவைகள் போன்ற வார்த்தைகளைச் சரியானதாகவும், பொருத்தமானதாகவும், இலக்கண முறைப்படி சரியான அமைப்பிலும் வரும்படியாக எழுதும்படி தேவன் தமது ஆவியானவர் மூலம் உதவி செய்வார்.

தேவன் எல்லா வேதநூல் எழுத்தாளர்களையும் சமமான அளவில் அகத்தூண்டுதல் கொடுத்து எழுத உதவினார். தேவன் வேதாகமத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் சரியாக அமையும் படி உதவினார். அவர் வேதாகமத்தில் உள்ள ஒவ்வொரு பகுதியும் சரியாக அமையும்படி உதவினார்.

பவுல், பேதுரு, மோசே மற்றும் எல்லா வேதாகமப்புத்தக எழுத்தாளர்களும் எழுத வேண்டிய காரியங்களை தேவ ஆவியினால் அருளிச்செய்தார். இந்த அகத்தூண்டுதல் வேதாகமத்தை மற்ற எல்லாப் புத்தகங்களையும்விட வித்தியாசமானதாகக் காட்டுகிறதா? ஆம்!

வில்லியம் ஷேக்ஸ்பியர் வரம் பெற்ற நாடகாசிரியராய் இருக்கலாம். அவர் சரியான வார்த்தைகளைத் தெரிந்தெடுக்கவும். தான் வெளிப்படுத்த விரும்பியதைச் சரியாக வெளிப்படுத்தவும் தேவஆவி யானவர் அவருக்கு உதவி செய்யவில்லை.

பரதேசியின் மோட்ச பிரயாணம் என்னும் அற்புதமான நூலை ஜாண் பனியன் எழுதினார். அவருக்கும் எசேக்கியேல், தாவீது, மோசே, மத்தேயு போன்றவர்களுக்கு தேவஆவியானவரின் தூண்டுதல் கிடைத்ததுபோல அகத்தூண்டுதல் கிடைக்கவில்லை.

வேதாகமம் தேவனால் தூண்டப்பட்டு எழுதப்பட்டிருக்கிறபடியால், தேவனுடைய வாயினால் பேசப்பட்டவைகளாய் இருக்கிறபடியால் இது உலகில் வெளியிடப்பட்ட மற்ற எல்லாப் புத்தகங்களிலிருந்தும் தனியாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாகப் புத்தகங்களிலெல்லாம் உலகெங்கும் அதிகம் விற்பனையாகும் புத்தகமாக வேதாகமம் காணப்படுகிறது. வாழ்க்கையை மாற்றும் ஒரே புத்தகம் இதுவே. இதைப் போன்று வேறு புத்தகம் எதுவும் இல்லை.

வேதாகமத்தை இன்றே வாசித்து, அதைப்பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ளுங்கள். அப்பொழுது வேதாகமத்தை எழுதிய ஆக்கியோன் தேவனையும் கண்டுகொள்வீர்கள். அவரைப்பற்றித் தெரிந்துகொள்ளுவீர்கள்.

(தொடரும்)

மொழியாக்கம்: ஜி.வில்சன்

page 1 of 2