கழுதையா? குதிரையா?

தியானம்: ஜுன் 18 புதன்; வாசிப்பு: சங்கீதம் 32:1-11

“…புத்தியில்லாக் குதிரையைப்போலவும் கோவேறு
கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம்.”
(சங்கீதம் 32:9)

தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு நடுவீதியில் அசையாமல் நிற்கிற கோவேறு கழுதையைக் கண்டிருக்கிறீர்களா? அதை நடத்துவது என்பது மிகக் கடினம். அது சரியான பிடிவாதமுள்ளது; எளிதில் கையாளமுடியாதது. அதனுடைய சோம்பலும் சொல்லி முடியாதது. அமைதியாய் நின்றுவிட்டு பின்னங் காலால் உதைக்குமானால்….! ஆனால், குதிரை இதற்கு எதிர்மாறானது. இது வேகமாக முன்செல்ல தீவிரிக்கிறது. சிலசமயம் கட்டுக்கடங்காமல் மூர்க்கத்தனமாய் துணிச்சலோடு பாய்ந்துசெல்லும் தன்மையுடையது. குதிரை தன் முன்னங் கால்கள் இரண்டையும் தூக்கி நிமிருமானால் யார் அதன் முன் நிற்கமுடியும்? மொத்தத்தில் இரண்டு மிருகங்களும் ஒன்றுக்கொன்று எதிர்மாறானவை; ஒன்று, அதி சோம்பலானது, பின்நிற்கும் தன்மையுடையது. மற்றது, அதி வேகமானது; கட்டுக்கடங்காமல் பாய்ந்து செல்லக்கூடியது. ஆக, இரண்டின் வேகமும் நமக்கு சரிவராது. அவற்றுக்குப் புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லை. இரண்டையும் அடக்குவதற்கு வாரும் கடிவாளமும் அவசியம்.

ஒருவகையில் தேவனுடைய வழிநடத்துதலை நாடுகின்ற நாமும் அப்படித்தான். நமது எஜமானாகிய ஆண்டவருக்கு நாம் எவ்வளவுதூரம் அடங்கியிருக்கிறோம் என்பது ஒரு பெரிய கேள்வி. தேவ வழிநடத்துதலை நாம் நாடுகிறோம் என்பது உண்மை. ஆனால், அதை உணர்ந்து இணங்கி நடக்கிறோமா? ஒன்றில், நமது வேளைகளில் எதுவும் நடக்கவில்லையெனில் நமது சுயஞானத்தைச் சார்ந்து வேகமாக முன்னே பாய்ந்து செல்லத் தீவிரிக்கிறோம். மறுபக்கத்தில், வேதவாக்கியத்தில் வெளிப்படுத்தப்பட்டுவிட்ட தேவசித்தத்தின்படி நடக்கவோ தயங்கிப் பின்தங்கி நிற்கிறோம். இந்த இரண்டுமே ஆபத்தானது. தேவனுடைய வார்த்தை நமக்கு தேவவழிநடத்துதலை உறுதிப்படுத்துகின்ற பெரிய சாட்சி. அத்துடன், தெளிவான தேவசமாதானம் நம்மை நிறைக்கும். அதேசமயம் தெளிவான வழிநடத்துதல் கிடைக்கவில்லையென்றால் அமைதியாகக் காத்திருப்பதுதான் நல்லது. அன்று மேகஸ்தம்பம் மேலே எழும்பும்வரை இஸ்ரவேல் பயணத்தை ஆரம்பிக்க முடியாது. அதேசமயம் மேகஸ்தம்பம் எழுந்தவுடன் தாமதிக்கவும் முடியாது.

நமது வேகத்தை கட்டுப்படுத்துவோமாக. இந்த கடிவாளமும் வாரும் கடினமாக இருக்கும். நமது எஜமானனை நம்பலாம். அவர் போ என்றால் போகவும், நில் என்றால் நிற்கவும் கற்றுக்கொள்வதுதான் வாழ்வில் மிகப் பெரிய வெற்றி. இல்லையானால் அது நம்மைக் கீழ்ப்படியாமைக்குள் விற்றுப்போடும். கர்த்தருக்குள் அமர்ந்திருப்போம். அவர் நம்மை செம்மையான வழிகளில் வழிநடத்துவார்

ஜெபம்: பிதாவே, நான் கழுதையுமல்ல; குதிரையுமல்ல. நான் உமது பிள்ளை. உமது வேளையில் உமது சித்தப்படி நடக்க என்னைத் தருகிறேன். ஆமென்.