இன்னொரு ஆமணக்கு முளைக்காது!
தியானம்: ஆகஸ்டு 30 சனி; வாசிப்பு: யோனா 4:10,11
“…ஆமணக்குக்காகப் பரிதபிக்கிறாயே.
…மகா நகரமாகிய நினிவேக்காக நான்
பரிதபியாமலிருப்பேனோ…” (யோனா 4:10,11).
தேவனுடைய மன உருக்கமும் இரக்கமும், மனிதனுடைய ஆத்திர அவசரமும், எப்போதும் எதிர்மாறாகவே செயற்படுகிறது. தேசத்திலும், நம்மைச் சுற்றிலும் பொல்லாப்பு செய்கிறவர்களின் செயல்களைக் கண்டு, இவர்களுக்கு அழிவு வராதா என்று நாமும் சொல்லுவதுண்டு. ஆனால் தேவ இரக்கம் நமது கற்பனைக்கும் மேலானது, உறுதியானது. மனிதனை அழிவினின்று காப்பதற்காக அவர் போடும் திட்டங்களும் நமது அறிவுக்கு அப்பாற்பட்டது. இல்லாவிட்டால் கிறிஸ்து நம்மைத் தேடி வந்திருப்பாரா? ஆமணக்குச் செடிக்காக வருந்திய யோனாவுக்கோ அந்த நினிவே மனிதர் பெரிதாகத் தெரியவில்லை.
இயேசு சொன்ன உவமையிலே, தன்னை உதாசீனம் செய்து, வீட்டை விட்டுப்போன மகனைக்குறித்த தகப்பனுடைய மனநிலையை சிந்தித்து பார்ப்பது நல்லது. மகன் வெளியேறியதும் அவனை வெறுத்து ஒதுக்கினாரா? இல்லை. அந்த தகப்பன் தன் மகனை இன்னும் நேசித்தான். இல்லையானால் தூரத்திலே வந்த மகனை அவன் கண்டிருக்கமுடியாது; அவன் வந்து மன்னிப்புக் கேட்கும் வரையிலும் பார்த்திராமல் ஓடிச்சென்று கழுத்தைக் கட்டியணைத்து முத்தஞ்செய்திருக்கவும் முடியாது. அந்தத் தகப்பனின் வீட்டுவாசல் தன் மகனுக்காக திறந்தே கிடந்தது. நமது பெற்றோரை நினைத்துப் பாருங்கள். நாம் எத்தனை தவறு செய்தபோதும் அவர்கள் நம்மை வெறுத்து ஒதுக்கினார்களா? இவர்களே இப்படியென்றால் ஆண்டவர் எப்படிப்பட்டவராக இருக்கவேண்டும்!
இங்கே தேவனுடைய வார்த்தையை உரைக்கிறவன், தேவனுடைய குணாதிசயத்தை வெளிப்படுத்த தவறிவிட்டான். பெருங்காற்றும், பெரிய மீனும் படிப்பித்த பாடத்தையும் மறந்துவிட்டான். தன் உயிரைத் தேவன் அற்புதமாக மீட்டுக் கொடுத்ததையும் மறந்துவிட்டான். இப்போது ஒரு ஆமணக்குச் செடி; அத்துடன் ஒரு பூச்சி, உஷ்ணமான கீழ்க்காற்று எல்லாமே தேவனுக்குக் கீழ்ப்படிந்தன. இவற்றைக்கொண்டு ஒரு மனிதனுக்குக் கர்த்தர் கற்றுக்கொடுக்க நேரிட்டது என்ன பரிதாபம்! ஆனாலும் அவனால் ஏற்கமுடியவில்லை, ஆம், நினிவே மக்களைவிட தானே கர்த்தரைவிட்டு தூரம் போய்விட்டதை அவன் உணரவில்லை. என்றாலும் கர்த்தர் இன்னமும் யோனாவை நேசித்தார். தேவ பிள்ளையே, இன்னுமொரு ஆமணக்குச்செடி இனி நமக்காக முளைக்காது. தமது குமாரனையே தந்து, நம்மேல் கொண்டுள்ள மனதுருக்கத்தை தேவன் வெளிப்படுத்திவிட்டார். அப்படியிருக்க, நம்மை சூழ்ந்துள்ள வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத ஏராளமான மக்களைக் குறித்த பொறுப்பை நாம் மறக்கலாமா! ஆண்டவருடைய குணாதிசயங்களை வெளிப் படுத்த நம்மை ஒப்புவிப்போமாக!
ஜெபம்: “பிதாவே, என் கடின நெஞ்சை மாற்றி, உமது மனதுருக்கத்தை வெளிப்படுத்தி மக்களுக்காகப் பரிதபிக்கின்றவனாக என்னை மாற்றும். ஆமென்.”