தேவனுடைய மாறாத வார்த்தைகள்!
அதிகாலை வேளையில்… (ஜனவரி-பிப்ரவரி 2015)
– Dr.உட்ரோ குரோல்
வேதபகுதி: லூக்கா 21:1-38
“ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படி அதிகாலமே
தேவாலயத்தில் அவரிடத்திற்கு வருவார்கள்” (லூக்கா 21:38).
இயேசுகிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த நாட்களில் அவருடைய சுகமளிக்கும் வல்லமையைப் பெற்றுக்கொள்ளவும், மரித்தவர்களை அவர் உயிரோடெழுப்புவதைக் காணவும் அவருடைய வார்த்தைகளைக் கேட்பதற்கும், ஆயிரக்கணக்கான மக்கள் அவரைப் பின்பற்றினர். இயேசு கிறிஸ்து ஒரு தீர்க்கதரிசி, ஓர் ஆசாரியர், ஓர் அரசர், மேலும் இவர்கள் அனைவரிலும் மேலானவர். நற்செய்தி ஆசிரியர்கள் அவரை ஒரு பிரசங்கியாராகவும் போதகராகவும் சித்தரிக்கின்றனர். தமது சிலுவைப் பாடுகளின் வாரத்திற்கு முன்னர் இயேசுகிறிஸ்து தேவாலயத்தில் தினந்தோறும் பிரசங்கித்து வந்தார் என லூக்கா தமது நற்செய்தி நூலில் எழுதியுள்ளார்.
“ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படி அதிகாலமே தேவாலயத்தில் அவரிடத்திற்கு வருவார்கள்” (லூக்கா 21:38).
அவரது செய்திகள் புதுமையானது மாத்திரமல்ல; சத்தியமாகவும் இருந்தன.
இயேசுகிறிஸ்து தேவாலயத்தில் பிரசங்கித்தவைகளில் பெரும்பாலானவை தீர்க்கதரிசன உரைகளாகவே இருந்தன. லூக்கா 21ஆம் அதிகாரத்தின் ஆரம்பத்தில் இயேசுகிறிஸ்து எருசலேம் தேவாலயத்தின் பொக்கிஷங்களைக் கடந்துசென்றபொழுது அப்பிரமாண்டமான ஆலயத்தின் மாட்சிமையைப் பற்றிய தமது கருத்தினைத் தெரிவித்தார். அத்தேவாலயம் இடிக்கப்படும் என்று அவர் முன்னுரைத்தார். அது கி.பி.70ஆம் ஆண்டில் நிறைவேறியது. ரோமர்களால் எருசலேம் தேவாலயம் அழிக்கப்பட்டது.
அவ்வதிகாரத்தின் பிற்பகுதி இவ்வுலகத்தின் மகா உபத்திரவ காலத்தில் எருசலேமைப்பற்றிய இயேசு கிறிஸ்துவின் தீர்க்கதரிசன உரைகளாகும். சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும் என வானத்தில் காணப்படும் சில அடையாளங்களை அவர் விவரித்தார். தமது விண்ணரசை ஸ்தாபிக்க மனுஷகுமாரன் வல்லமையோடும் மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருமுன் இப்பாவ உலகை நியாயந்தீர்ப்பார் என அதிகாலையில் தேவாலயத்தில் தம்மைத் தேடிவந்த மக்களுக்கு அவர் போதித்தார் (வெளி.19:11-16).
அனுதினமும் மக்கள் அவருடைய போதனைகளைக் கேட்கும்பொழுது அவர், “வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை” (லூக்கா 21:33) என அவர்களுக்குக் கூறினார். மாறும் இப்பிரபஞ்சத்தில், இயேசுகிறிஸ்துவின் வாய்மொழிகளும், தேவனால் பரிசுத்த வேதாகமத்தில் அருளப்பட்டுள்ள தேவனுடைய வார்த்தைகளும் என்றும் அழியாமல் இருக்கும். வானத்தின் சத்துவங்களை அசைக்க வல்லமையுள்ள தேவன் தமது வார்த்தைகளையோ அசையாமல் நிலைநிறுத்தி வைத்திருக்கும் வல்லமை பெற்றவர். இயேசுகிறிஸ்து தீர்க்கதரிசனமாக உரைத்தபடி வானங்கள் ஒழிந்து போனாலும் அவரது வார்த்தைகள் ஒருபோதும் ஒழிந்து போகாது.
அன்று எருசலேம் தேவாலயத்தில் இயேசுகிறிஸ்து அனுதினமும் மக்களுக்கு போதித்தார். இன்றைய இருபதாம் நூற்றாண்டில் அவர் அவ்வாறு செய்யாவிட்டாலும், தேவனுடைய வார்த்தையான பரிசுத்த வேதாகமம் மூலமாக நம்முடன் அவர் பேசுகிறார். அதிகாலையில் அவரைத் தேடி தேவாலயத்தில் வந்த மக்களிடம் பேசியது போல இன்று நமக்கும் அவருடைய சத்தத்தைக் கேட்கும் பாக்கியம் கிடைத்துள்ளது.
ஒரு கொடிய நோயிலிருந்து மீண்டு, ஓய்வெடுப்பதற்காக கலிபோர்னியாவின் தென்பகுதிக்கு வந்த ஆன்ட்ரூ பிரேசர் என்ற தேவ மனிதரைப் பற்றி திரு.ஐயர்ன்சைடு என்பவர் பின்வருமாறு கூறியுள்ளார்.
அப்பக்திமான் மிகவும் களைப்புற்றிருந்தாலும் தம்முடைய பழைய வேதாகமத்தைத் திறந்து, ஐயர்ன் சைடு இதுவரை கேட்டிராத சத்தியங்களை தேவ வார்த்தையிலிருந்து விளக்கினார். அவரது வார்த்தைகளால் அசைக்கப்பட்ட திரு.ஐயர்ன் சைடு, அவரை நோக்கி, “இக்காரியங்களை எங்கிருந்து கற்றுக்கொண்டீர்கள்? ஏதேனும் வேதாகமக் கல்லூரியில் பயின்றீர்களா?” என்று ஆர்வத்துடன் வினவினார். அதற்கு பிரேசர் பதிலாக, “என் அன்பு இளைஞனே, என்னுடைய அயர்லாந்து நாட்டின் வடபகுதியிலுள்ள என்னுடைய சிறு குடிசையின் தரையில் முழங்காலில் நின்று நான் இவைகளைக் கற்றுக்கொண்டேன். அங்கே மணிக்கணக்கில் நான் முழங்காலில் நின்று, தேவ ஆவியானவர் எனக்கு இவ்வார்த்தையை விவரித்துச் சொல்லி கிறிஸ்துவை என் ஆத்துமாவில் வெளிப்படுத்த வேண்டுமென்று வேண்டிக்கொள்வேன். உலகின் வேறு எந்த பல்கலைக் கழகத்திலும், வேதாகமக் கல்லூரியிலும் கற்றுக்கொள்ள முடியாத சத்தியங்களை அந்த மண் தரையிலே முழங்காலில் நின்று நான் கற்றுக் கொண்டேன்” என்று உரைத்தார்.
வேதாந்தங்களின் ஆழ்ந்த சத்தியங்களை ஒரு வகுப்பறையில் கற்றுக்கொள்வதைவிட, தேவனுடைய வார்த்தையிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடியும். இறையியல் மற்றும் வேதபாட வகுப்புகளில் முறையான கல்வி கல்லாதவர்களும், இயேசுவின் பாதத்தில் அமர்ந்து கற்றுக்கொள்ள வெட்கப்படக்கூடாது.
வேத அறிஞர்கள் அனைவரும், முழங்காலில் நின்று அதிகாலை துவங்கி அந்த நாள் முழுவதும் மாலை வரை தேவனுடைய புத்தகத்தில் தங்கள் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். நமக்கும் அத்தகைய அரிய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வாய்ப்பை நாம் நழுவ விடாது இன்றே பயன்படுத்துவோமாக.
அதிகாலைப் பாடல்:
உம் ஜீவ வார்த்தை அழகிய மலர்ச்சோலையாகும் – அதை
நாடிவருவோர் அழகிய மலர்க்கொத்தைப் பறிக்கலாம்;
உம் வார்த்தை ஓர் ஆழமான ஆபரணச் சுரங்கமாகும் – அதைத்
தேடிவருவோர் அரிய வளங்களைப் பெறலாம்.
மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை