அதிகாலை நேரம்

அதிகாலை வேளையில்… (செப்டம்பர்-அக்டோபர் 2017)
– Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி: சங்கீதம் 119: 129-152
அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்; உம்முடைய வசனத்துக்குக்  காத்திருக்கிறேன். (சங்கீதம் 119: 147).

இவ்விதழின் தியானப்பகுதியில் நாம் சங்கீதம் 119ஐ ஆராய்வோம். வேதத்தின் மகத்துவத்தை அழகாக விவரிக்கும் இச்சங்கீதம் மிகவும் நீண்டதும் ஆழமுள்ளதுமான அகர வரிசையிலுள்ள ஒன்றாகும். சங்கீதங்கள் 9, 10, 25, 34, 37, 111, 112 முதலியனவும் இதைப் போன்றதாகும். இவை எல்லாவற்றையும் இச்சங்கீதம் மிஞ்சி நிற்கிறது. 22 எபிரெய எழுத்துக்களைத் தலைப்பாகக் கொண்டு 22 பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியின் முதல் எழுத்தும் அத்தலைப்பின் எபிரெய எழுத்தில் ஆரம்பமாகிறது. இவ்வழக்கை நமது மொழியில் தரமுடியாவிட்டாலும் அதன் தலைப்பில் அந்த எபிரெய எழுத்தின் பெயர் தரப்பட்டுள்ளது.

இச்சங்கீதத்தின் ஆசிரியர் யார் என கூறப்படவில்லை. ஆனாலும் அதன் மொழிநடையும் உணர்ச்சிகளும் அநேக வசனங்களில் தாவீதையே சுட்டிக்காட்டுகின்றன என்பது பலரது கருத்து. இச்சங்கீதத்தைப் பற்றிய இக் குறிப்புகள் ஆர்வமூட்டுவதாக இருப்பினும் இதைவிட முக்கியமானவைகள் சில உண்டு.  எபிரெய  மொழியில் எழுதப்பட்டிருந்த பழைய ஏற்பாட்டை நகல் எடுத்த வேத எழுத்தாளர்கள் ”உமது அடியேனுக்கு நன்மையாகத் துணை நில்லும்; அகங்காரிகள் என்னையொடுக்க வொட்டாதேயும்” என்ற 122ம் வசனத்தைத்தவிர ஒவ்வொரு வசனத்திலும் தேவனுடைய வார்த்தையைப்பற்றிய பத்து சொற்களுள் ஒன்றினைக் கண்டார்கள். ஒரு சிலர் இதனை மறுத்தாலும் இந்த நீண்ட சங்கீதமானது தேவனுடைய வார்த்தையை விளக்குகிறது. என்றும் அச்சங்கீதக்காரன் அதனைப் போற்றிப் பாடுவதாகவும் அமைந்துள்ளதை அவர்களால் மறுக்க முடியாது.

இச்சங்கீதத்தில் தேவனுடைய வார்த்தையைப் புகழும் அநேக பாராட்டுச் சொற்கள் நிரம்பியுள்ளதை நாமும் காணலாம். ”வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுவதினால்தானே”(வச.9). ”திரளான செல்வத்தில் களிகூருவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் களிகூருகிறேன்” (வச.14). ”நான் உம்முடைய சாட்சிகளைத் குறித்து, ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன்” (வச.46). ”கர்த்தாவே உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது” (வச.89). ”உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது”(வச.105). இவ்விதமாய் அன்பும் பக்தியும் நிறைந்த அறிக்கைகள் நிச்சயமாகவே தேவனுடைய செவிகளுக்கு இன்பமாய் இருக்கும் அல்லவா? தேவனுடைய கட்டளைகளை அறிந்து கொள்வதற்கு தனக்குள்ள ஆர்வத்தை இச்சங்கீதக்காரன் எவ்விதமாய் வெளிப்படுத்த முடிந்தது?

இதற்குரிய பதிலை 149ம் வசனம் உரைக்கிறது:”உமது வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த ஜாமங்களுக்கு முன்னே என் கண்கள் விழித்துக்கொள்ளும்”. இருள் அகன்று வெளிச்சம் தோன்று முன்னரே சங்கீதக்காரன் தேவனைத் தேட எழுந்துகொள்ளுகிறார். தனது சக மனிதர்களுடன் பேசுவதற்கு முன்னரே தேவனை நோக்கிக் கூப்பிடுகிறார். வைகறை நேரமே தேவவார்த்தையைத் தேடுவதற்கு மிகச்சிறந்த நேரம் என்பதை அவர் கண்டுகொள்ளுகிறார்.

“உதயசூரியனின் கதிர்கள் உன்னை சோம்பேறியாக படுக்கையில் காணும்பொழுது அது வெட்கத்துக்குரிய காரியமாகும். மேலும் கண்களைக் கூசச் செய்யும் சூரியனின் கதிர்கள் வந்த பின்னரும் நீ எழும்பவில்லையெனில் அது மிகவும் வருத்தப்பட வேண்டிய காரியமாகும்” என்று போதகர் அம்புரோஸ் கண்டிக்கிறார். தேவனுடைய பிரமாணங்களில் மகிழ்ச்சியாயிருப்பதும் அவரது வார்த்தையைப் புகழ்வதும் அவருடைய சாட்சிகளை வாசித்து தியானிப்பதும் தேவனுக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வரும். ஆனால் இவை எல்லாவற்றையும் நாம் அதிகாலையில் செய்வதே அவருக்கு அதிக மகிழ்ச்சியைத் தரும். எல்லாவற்றுக்கும் மேலாக அவருடைய வார்த்தையையும் அவருடைய ஊக்கத்தையும் அவருடைய சத்தியத்தையும் நாம் தேடும்பொழுது அவரைப் பிரியப்படுத்துகிறவர்களாய் காணப்படுவோம்.

அதிகாலையில் வேதத்தை வாசித்து ஜெபிக்கும்பொழுது அந்த நாளில் அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வது மாத்திரமல்ல; நாள் முழுவதும் அவரது வார்த்தை நம்மை நடத்திச்செல்லும். தேவனுடைய வார்த்தையை நம்பிய அச்சங்கீதக்காரன் அவ்வார்த்தையைத் தியானிக்கும்படி குறித்த ஜாமத்துக்கு முன்னரே விழித்துக்கொள்ளுகிறார் (வச.148). ஒருநாளின் அதிகாலையை ஜெபத்திலும் வேதவாசிப்பிலும் ஆரம்பித்து அதனை நாள் முழுவதும் செயல்படுத்தி இரவில் அவருடைய பாதத்தில் வரும்பொழுது அவருடைய பிரசன்னத்தை உணர்ந்த மகிழ்ச்சி நம்மை நிரப்பும். தேவவார்த்தையை நாள் முழுவதும் நாம் தியானித்து அதில் மகிழுவோமாக.


அதிகாலைப்பாடல்

சத்தியவேதம் பக்தரின் கீதம்
சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்
உத்தம மார்க்கம் காட்டும்
எத்தனை துன்பம் துயரம் வந்தும்
பக்தனைத் தேற்றிடும் ஒளஷதம்
பேதைகளிடம் ஞானம் அருளும்
வேதபுத்தகம் மேன்மை தரும்
இரவும் பகலும் இதனின் தியானம்
இனிமை தங்கும் தனிமையிலும்

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

சத்தியவசனம்