வாருங்கள் போஜனம் பண்ணுங்கள்

அதிகாலை வேளையில்… (நவம்பர்-டிசம்பர் 2017)
– Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி: யோவான் 21:1-25
விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீஷர்கள் அறியாதிருந்தார்கள் (யோவான் 21:4).

சூழ்நிலைகள் சாதகமாக அமையும் பொழுது தேவனுக்கு ஊழியம் செய்வது எளிதாக இருக்கும் என்பதையும் பாதகமான வேளையிலும் தோல்வியடைந்த வேளையிலும் தேவனுக்கு உழைப்பது மிகக்கடினமாக இருக்கும் என்பதையும் நீங்கள் கவனித்தது உண்டா? ஆம், வாழ்க்கையில் சூறாவளி அடித்து ஆவிக்குரிய வாழ்க்கையில் மனமடிவு உண்டாகும்பொழுது நாம் மனநிறைவைத் தேடுகிறோம். நமது செயல்பாடுகள் அதிகமாகும் பொழுது செயல்பாடு இல்லாமையும் தோன்றுகிறது.

இயேசுகிறிஸ்து இவ்வுலக ஊழியக் காலங்களில் பிரபலமாக இருந்தார். ஆயிரக்கணக்கான மக்கள் அவருடைய அற்புதங்களைக் கண்டும் அவருடைய போதனைகளைக் கேட்டும் கலிலேயா மலைகளில் தேடி வந்தனர். அவருடன் நெருங்கிப் பழகிய சீடர்களையும் மக்கள் அடையாளம் கண்டு கொண்டனர்.

சீடர்களுக்கு ஆண்டவருடனான உறவின் உச்சநிலை அவர் காட்டிக் கொடுக்கப்பட்ட அன்றிரவு நிகழ்ந்தது. பஸ்கா பண்டிகையை ஆசரிக்க அவர் தமது சீடர்களை மேலறையில் ஒன்று கூட்டினார். அவர்கள் அனைவரும் அவருடன் இருந்தனர்; ஜெபித்தனர்; பாடல்களைப் பாடினர்; அவருக்கு உண்மையாயிருக்க வாக்களித்தனர். இறுதி இராப்போஜனம் நிறுவப்பட்ட அன்று இரவு சீடர்கள் அதிக உற்சாகத்திலிருந்தனர். ஆனால், இந்நிலை சீக்கிரத்தில் அழிந்தது. இயேசு கெத்செமனே தோட்டத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். கொடூரமான அநியாயமான விசாரணைக்குட்படுத்தப்பட்டார். அவருடைய சீடர்கள் அவரைவிட்டு ஓடிவிட்டனர். திரும்பத்திரும்ப தான் சிலுவையில் பாடு அனுபவிக்க வேண்டும் என்று இயேசு தமது சீடர்களுக்குச் சொல்லியிருந்தும் அவர்களால் அந்த போதனையை கிரகித்துக்கொள்ள முடியவில்லை. அவருடைய மரணமும் அடக்கமும் சீடர்களின் உற்சாகத்தை அழித்துவிடடன. ஆண்டவரின் உயிர்த்தெழுதலும், சீடர்களுக்கு அவர் காட்சியளித்ததும் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கப் போதுமானதாக இருக்கவில்லை.

ஆண்டவரின் கட்டளையின்படி சீடர்கள் கலிலேயாவுக்குத் திரும்பினர். கலிலேயாவின் மலைகளில் இயேசு தமது சீடர்களைச் சந்தித்ததையே இன்றைய தியானத்தில் நாம் பார்க்க இருக்கிறோம். அப்போஸ்தலர்களில் 7 பேர் தங்களது மீன்பிடிக்கும் பழைய தொழிலுக்குச் சென்றுவிட்டனர். அவர் உயிரோடிருக்கும்பொழுது அவரைப் பின்பற்றுவது எவ்வளவு எளிதாயிருந்ததோ அதேபோன்று அவரில்லாதபொழுதும் தங்களுடைய தொழிலுக்குத் திரும்புவதும் அவர்களுக்கு எளிதாயிருந்தது.

தான் மீன்பிடிக்கச் செல்வதாக பேதுருவே முதலாவது கூறினார். தன்னுடைய மீன்பிடிக்கும் தொழிலுக்குச் செல்வதால் அப்போஸ்தல அழைப்பை நிராகரிப்பதாக ஆகாது. ஆண்டவர் தரும் கட்டளைவரும்வரை அவருக்கு நன்கு தெரிந்ததைச் செய்ய நினைத்தார். எனவே பேதுருவும் மற்றவர்களும் ஒரு படவிலேறி இரவு முழுவதும் மீன் பிடிக்க முயற்சித்தனர். ஆனால் ஒன்றும் அகப்படவில்லை மேசியாவுடன் அவர்கள் வாழ்ந்த ஆண்டுகளில் மீன் பிடிக்கும் நுணுக்கத்தை மறந்துவிட்டார்களா? சீடர்களாகத் தங்களை இயேசு அழைக்கும் முன்னர் வெற்றி பெற்ற தொழிலில் ஏன் அன்று தோல்வியைக் கண்டார்கள்? அவர்களுக்கு தெரியவில்லை.

விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார் (யோவான் 21:4). ஒருசில காரணங்களால் கரையில் நிற்பவர் இயேசு என்பதை சீஷர்கள் அறியாதிருந்தார்கள். அவர்களிடம் விசாரித்தபொழுது தங்களுடைய தோல்வியை அறிக்கையிட்டார்கள். தங்களது வலையை வலதுபக்கம் போடச்சொல்லும் வரையிலும் அவர்கள் உயிர்த்தெழுந்த ஆண்டவர் தங்களைச் சந்திக்க வந்திருக்கிறார் என்பதை உணராதிருந்தார்கள். இது தங்களுடைய அழைப்பின் ஆரம்பத்தில் அவர் கூறிய கட்டளையையும் அதன் விளைவையும் அவர்களுக்கு நினைவூட்டியது (லூக்.5:1-11).

திரளான மீன்களுள்ள வலையை இழுத்துக்கொண்டு கரைக்கு வந்த பொழுது இயேசு அவர்களுக்கு, “வாருங்கள், போஜனம் பண்ணுங்கள்” என்று அழைப்பு கொடுத்தார். கடைசி இராப்போஜனத்துக்குப் பின்னர் தணிந்துவிட்ட அன்பையும் நெருக்கத்தையும் ஆண்டவர் தூண்டி எரியவிட்டது போன்று அது அமைந்தது. ஏனெனில் அதிருப்தி கீழ்ப்படியாமைக்கு வழி நடத்தும்.

நாமும் ஆண்டவருக்கு ஊழியம் செய்து அவருடன் நெருங்கிய வாழ்வு நடத்திய பின்னரும் அதிருப்தியடைந்து அவரை விட்டு பின்வாங்கிச் செல்வது மிகவும் எளிதாகும். ஆனால் ஆண்டவர் ஒவ்வொருவரையும் “வாருங்கள், போஜனம் பண்ணுங்கள்” என்று அழைக்கிறார். நாம் எஜமானருடைய கைகளில் சக்திவாய்ந்த உபயோகமான கருவிகளாக இருக்கவேண்டுமெனில் அவருடைய பந்திக்கு அடிக்கடி வர வேண்டும். அவர் பாதத்தில் அமர்ந்து அனுதினமும் அவருடைய வார்த்தைகளைப் புசிக்கவேண்டும்.


அதிகாலைப்பாடல்

உம் அன்பினால் எம் இதயத்தை நிரப்பி எங்களை உயிர்ப்பியும்;
உன்னத அக்கினியால் எம் ஆவி தூண்டப்படட்டும்,
அல்லேலூயா உமக்கே மகிமை!
அல்லேலூயா ஆமென்!
அல்லேலூயா உமக்கே மகிமை!
எங்களை மீண்டும் உயிர்ப்பியும்.

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

சத்தியவசனம்