அற்ப காரியங்கள்!

அதிகாலை வேளையில்… (ஜனவரி-பிப்ரவரி 2018)
– Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி : 1 சாமுவேல் 17: 1-27
தாவீது அதிகாலையில் எழுந்து, ஆடுகளை காவலாளி வசமாய் விட்டு,  ஈசாய் தனக்குக் கற்பித்தபடியே எடுத்துக்கொண்டுபோய், இரதங்கள்  இருக்கிற இடத்திலே வந்தான் (1 சாமு. 17:20).

வாழ்வில் நாம் அடையும் பெரிய வெற்றிகளுக்கு சிறிய காரியங்கள் அடிப்படையாக அமையும் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். சில நேரங்களில் சிறியவர்கள், சிறிய வேலைகள் மற்றும் சிறிய பொறுப்புகள் போன்றவை தேவனுடைய பார்வையில் பெரிய காரியங்கள் சாதிக்க வைக்கும்.

பெலிஸ்தர்கள் அடிக்கடி இஸ்ரவேலுக்கு விரோதமாகப் படையெடுத்து வந்தனர். பெலிஸ்தரின் தலைவனான கோலியாத் என்பவன் மாபெரும் உருவமுடைய அரக்கனாக இருந்தான். அவன் ஒருவேளை ஏனாக்கியரின் ஒரு குமாரனாக இருந்திருக்கலாம் (எண்.13:33, யோசுவா 11:22). எப்ரோனிலிருந்து யோசுவா விரட்டியிருந்த இராட்சதர்களான இவர்கள் பெலிஸ்தியரின் நடுவே அடைக்கலம் புகுந்திருக்கலாம். கோலியாத்துக்கு ஒப்பானவர் இஸ்ரவேலரில் ஒருவரும் இல்லை. எலியாப், அபினதாப், சம்மா என்னும் தன்னுடைய மூத்த சகோதரர்களின் நலம் விசாரிக்க யுத்தகளத்துக்கு வந்த தாவீதும் அவனுக்கு அற்பமானவன். தாவீதுக்குத் தரப்பட்ட பொறுப்பு மிகச்சிறியதே; தனது சகோதரர்களுக்கு ஒரு மரக்கால் வறுத்த பயற்றையும், பத்து அப்பங்களையும், ஆயிரம் பேருக்கு அதிபதியானவனுக்குப் பத்துப் பால்கட்டிகளையும் எடுத்துக் கொண்டு யுத்தகளத்துக்குச் சென்றுவர வேண்டும். அந்த நாள் அவனுக்கு மிகச் சிறியதொரு வேலையில் ஆரம்பித்தது. ஆனால் அது இஸ்ரவேலரின் வரலாற்றில் ஒரு சிறந்த வெற்றியின் நாளாக அமைந்தது.

தனது தகப்பன் தனக்குக் கொடுத்த கட்டளையின்படியே “தாவீது அதி காலையில் எழுந்து, ஆடுகளைக் காவலாளி வசமாய் விட்டான்” (1சாமு.17:20). யுத்தகளத்துக்குச் சென்று தனது சகோதரர்களிடம் அவன் பேசிக்கொண்டிருக்கையில் இதோ பெலிஸ்திய வீரன் இஸ்ரவேலருக்கு எதிராக சவால்விட வந்துநின்றான். அவனுக்கு எதிராக நின்றிருந்த இஸ்ரவேலரின் சேனைகள் பயந்து நடுங்கினர். இஸ்ரவேலின் வீரர்களை ஸ்தம்பிக்கச் செய்த அச்சத்தைக் கண்ட தாவீது திகைத்து ஆச்சரியப்பட்டான். தனது நாடும் தேவனும் அவமானப்படுவதைக் காண விரும்பாத அவன், ஏன் கோலியாத்தை யாரும் எதிர்க்கவில்லை என்று விசாரித்தான். “ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்த சேதனம் இல்லாத இந்தப் பெலிஸ்தன் எம்மாத்திரம் என்றான்”. அதைக் கேட்ட அவனுடைய மூத்த சகோதரன் அவனை அமைதிப்படுத்த அங்கிருந்து அவனை அகற்றிவிட்டான். தங்களுக்கு அப்பங்களையும் பால்கட்டியையும் கொண்டுவந்தவன் இஸ்ரவேலின் கோழைத்தனத்தைப்பற்றி பேசக்கூ டாது என்று அவன் நினைத்தான்.

சிங்கத்தையும் கரடியையும் தாவீது கொன்றது அற்பமான காரியம் என்று அவனைச் சுற்றி நின்றவர்கள் அவனை அசட்டை செய்தனர். கோலியாத்தை எதிர்ப்பது மிகப் பெரிய ஒரு காரியம். தாவீது அவனை எதிர்க்க ஒத்துக்கொண்டாலும் அதற்குத் தேவையான யுத்த உடைகளை அணிந்துகொள்ள முடியாத சிறுவனாய் இருந்தான். அவன் எடுத்துக் கொண்ட ஆயுதமான கவணும் ஓர் அற்பமான கருவியே ஆகும். தாவீதைப் பொறுத்தவரை அனைத்தும், கோலியாத்தை வெல்லும் வாய்ப்பும் அற்பமானதே. ஆனால் நாம் யாவரும் அறிந்தபடி தாவீதின் தேவன் வெற்றி தருபவர். இஸ்ரவேலின் அற்பமான மேய்ப்பன் இராட்சதனான கோலியாத்தைக் கொன்றான். தேவன் பெரிய காரியங்களை நடப்பிக்க சிறிய காரியங்களை உபயோகிக்கிறார் என்று ஹோரஷியஸ் பனால் என்பவர் குறிப்பிடுகிறார்.

“பரிசுத்த வாழ்வு என்பது அநேக சிறிய காரியங்களால் உருவாகும். அப்.பவுல் அல்லது பரி.யோவான், டேவிட் பிரெய்னாட், ஹென்றி மார்டின் போன்றவர்களைப் போல பல வருடங்களில் சாதித்த காரியங்களை ஒரு மணித்துளியின் அற்பமான காரியங்களால் சாதிக்க முடியும். உண்மையான கிறிஸ்தவ வாழ்வுக்கு நீண்ட பிரசங்கங்களோ, சிறந்த உரைகளோ அற்புதங்களோ யுத்தங்களோ சாதனைகளோ இரத்த சாட்சிகளோ தேவையில்லை; சொற்ப வார்த்தைகள் போதுமானது. மின்னல்கள் அல்ல. தொடர்ச்சியான சூரியக் கதிர்களும், பெரிய ஓசையுடனும் வேகமாகப் பாய்ந்து ஓடும் நதிகளின் நீர் அல்ல; அமைதியான புத்துணர்ச்சியைத் தரும் சீலோவாம் குளத்தின் தண்ணீர் செய்யும் அருட்பணியே பரிசுத்த வாழ்வின் அடையாளம்” என்று அவர் எழுதியுள்ளார்.

தேவனுடைய ஊழியத்தில் அற்பமான மனிதர்கள், அற்பமான காரியங்கள், அற்பமான பொறுப்புகள் என்று எதுவும் கிடையாது. அப்பத்தையும் பால்கட்டியையும் எடுத்துச் செல்ல தேவன் கட்டளையிட்டதை நீங்கள் செய்யாவிடில் நிச்சயமாகத் தோற்றுவிடுவீர்கள். தாவீது மட்டும் அன்றையதினம் தனது வீட்டிலேயே இருந்திருந்தால் கோலியாத் எவ்வளவு மகிழ்ச்சியடைந்திருப்பார்!


அதிகாலைப்பாடல்

தேவன் இருக்கும்போது குறைவும் நிறைவாகும்!
செல்வத்தையோ புகழையோ அடைய முயற்சிக்காதீர்;
ஜெயகிறிஸ்துவின் நாமத்தில் செல்லும்பொழுது;
ஜெயக்கிரீடத்தை நீங்கள் பெறுவது நிச்சயம்.

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

சத்தியவசனம்