ஆசிரியரிடமிருந்து…

(செப்டம்பர் – அக்டோபர் 2018)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

திரியேக தேவனாம் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

இவ்விதழின் வாயிலாக தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். இவ்வாண்டின் இந்நாள் வரையிலும் அறிவுக்கெட்டாத பெரிய காரியங்களை நமக்குச் செய்து நடத்தி வந்த எல்லா பாதைகளுக்காகவும் ஆண்டவரை ஸ்தோத்திரிப்போம்.

நமது தேசத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ள நிலைவரமற்ற சூழ்நிலைகளுக்காகவும் 2019ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்காகவும் தேசத்தின் நன்மைக்காகவும் ஆண்டவருடைய சமுகத்தில் மன்றாடுவோம். ஒழுக்கச் சீர்கேடுகள் நீங்க, நல்லாட்சி அமைய சுவிசேஷத்திற்கு அனுகூலமான ஆட்சி ஏற்படுத்தப்பட ஜெபிப்போம். நம்முடைய தேசத்தில் விவசாயம் அதிகம் நடைபெறக்கூடிய எல்லா இடங்களிலும் கர்த்தர் நல்ல மழையைக் கட்டளையிட்டு. வறட்சி நீங்கி செழிப்புண்டாவதற்கும், அதிகபட்ச மழையினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்காகவும் வேண்டுதல் செய்வோம்.

சத்தியவசன வானொலி, தொலைகாட்சி மற்றும் இலக்கியங்கள் வாயிலாக தாங்கள் பெற்றுக்கொண்ட ஆவிக்குரிய நன்மைகளை எங்களுக்குத் தெரிவியுங்கள். இது அநேகருடைய விசுவாசத்தைப் பெலப்படுத்துகிறதற்கு ஏதுவாயிருக்கும். தங்கள் நண்பர்கள் விசுவாசிகளுக்கு இவ்வூழியங்களை அறிமுகப்படுத்துங்கள். விசுவாசப் பங்காளர் காணிக்கையைப் புதுப்பிக்காத பங்காளர்கள் இவ்வருடத்தில் சந்தாவைப் புதுப்பிக்க நினைவூட்டுகிறோம். சத்தியவசன வானொலி தொலைகாட்சி நிகழ்ச்சிகளுக்கு ஆதரவாளர் திட்டத்திலும் இணைந்து தாங்க அன்பாய் அழைக்கிறோம்.

இவ்விதழின் செப்டம்பர் மாதத்தில் நமது கிறிஸ்தவாழ்க்கையில் நமக்கு நேரிடும் பாடுகள், சோதனைகள், பயங்களில் நமது விசுவாசம் காணப்பட வேண்டிய அவசியத்தை சகோதரி ஜெபி பீடில் அவர்கள் தியானங்களாக எழுதியுள்ளார்கள். அக்டோபர் மாதத்தில் கிறிஸ்து இயேசுவையே முழுவதும் சார்ந்து வாழ்கிற வாழ்வை பல்வேறு தலைப்புகளிலே சகோ. தர்மகுலசிங்கம் அவர்கள் தியானித்து எழுதியுள்ளார்கள்.

தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்காக ஜெபியுங்கள். இத்தியானங்கள் உங்களுக்கு ஆசீர்வாதமாய் இருப்பதாக!

கே.ப.ஆபிரகாம்

சத்தியவசனம்