ஆசிரியரிடமிருந்து…

(நவம்பர் – டிசம்பர் 2018)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

நமக்காக அடிமையின் ரூபமெடுத்து மனுஷசாயலான இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

இவ்விதழின் வாயிலாக தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள் (1சாமு.12:24). இவ்வருடத்தில் இந்நாள்வரை கர்த்தர் நம்மை எவ்வளவு அற்புதமாய் நடத்தி வந்திருக்கிறார். அவருக்கே சகல மகிமையும் உண்டாகட்டும்.

அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் தங்களுக்கு ஆசீர்வாதமாகவும் பிரயோஜனமாகவும் இருந்தது என்பதை தங்கள் கடிதங்கள் வாயிலாக அறிந்து கர்த்தரைத் துதிக்கிறோம். தொடர்ந்து இவ்வூழியத்தை தாங்கள் இணைக்கரம் கொடுத்து ஆதரிக்கவும் ஊழியங்களுக்காக ஜெபிக்கவும் அன்புடன் வேண்டுகிறோம்.

இவ்வருடத்தில் தியானபுத்தகத்தின் அட்டவணையைப் பயன்படுத்தி பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்தவர்கள் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அவர்களது பெயரை எதிர்வரும் இதழில் பிரசுரிப்போம். புதிய வருடத்திலும் மேலும் அநேகர் தீர்மானம் எடுத்து வேதாகமத்தை தொடர்ச்சியாக வாசித்து முடிப்பதற்கும் உற்சாகப்படுத்துகிறோம்.

இவ்விதழின் நவம்பர் மாதத்தில் 1 சாமுவேல் புத்தகத்திலிருந்து அன்றாட கிறிஸ்தவ வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படையான சத்தியங்களை சகோதரி தர்ஷினி சேவியர் எழுதியுள்ளார்கள். இருள் போன்ற சூழ்நிலைகளில் எல்லாம் ஆண்டவருடைய வழிநடத்துதல்களையும், வாக்குப்பண்ணப்பட்டபடி பாலகனாக இவ்வுலகுக்கு வந்த ஆண்டவராகிய இயேசு தாம் வாக்குரைத்தபடியே மீண்டும் வரப்போவதை நாம் மற்றவர்களுக்கு அறிவிக்கிறவர்களாக வாழ வேண்டுமென்பதையே சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் டிசம்பர் மாதத்தில் திட்டமும் தெளிவுமாக எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதமாக இருக்கவேண்டுமென்றே ஜெபிக்கிறோம்.

சத்தியவசன விசுவாசபங்காளர்கள், ஆதரவாளர்கள், சந்தாதாரர்கள் யாவருக்கும் சத்திய வசனம் ஊழியத்தின் சார்பாகவும் ஊழியர்களின் சார்பாகவும் எங்களது இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்