தேவன் மாத்திரமே!
அதிகாலை வேளையில்… (நவம்பர் – டிசம்பர் 2018)
– Dr.உட்ரோ குரோல்
வேதபகுதி: யோபு 7: 1-21
நான் படுத்துக்கொள்ளுகிறபோது, எப்பொழுது எழுந்திருப்பேன்? இராக்காலம் எப்பொழுது முடியும் என்று சொல்லி, கிழக்கு வெளுக்குமட்டும் அரண்டு புரளுகிறதினால் எனக்குப் போதுமென்று போகிறது (யோபு.7:4).
யோபின் புத்தகமானது “மனித குலத்தில் தோன்றிய மாபெரும் ஓர் இலக்கியச் செய்யுள்” என்று கருதப்படுகிறது. “பழங்கால மற்றும் நவீன காலத்தின் மாபெரும் செய்யுள்” என்று திரு.ஆல்ஃபிரட் டென்னிசன் என்பவர் கூறியுள்ளார்.
தேவனுக்கு முன்பாக உத்தமனாக வாழ்ந்த யோபு என்னும் ஒரு மனிதன் சாத்தானால் கடுமையாக தாக்கப்பட்டும் தனது உத்தமத்தில் உறுதியாக வாழ்ந்து, இழந்த அனைத்தையும் திரும்பப் பெற்றுக்கொண்டான். இவரது வாழ்க்கை நம் அனைவருக்கும் ஆறுதலைத் தருவதாக உள்ளது. இப்புத்தகத்தின் ஏதோவொரு பகுதியில் நம்மை அடையாளம் காண முடியும்.
யோபு சாத்தானால் தாக்கப்பட்டது மாத்திரமல்ல, அவனுக்கு ஆறுதல் கூறவந்த அவனுடைய மூன்று நண்பர்களும் யோபின் பாவங்களைப்பற்றி அனுமானித்து தீய காரியங்களையே கூறினார்கள். இப்புத்தகத்தின் அநேக அதிகாரங்கள் யோபின் நண்பர்களின் உரைகளையும் உத்தமனான யோபின் பதிலுரைகளையும் கொண்டுள்ளன.
முதல் சுற்று எலிப்பாசின் உரையுடன் ஆரம்பிக்கிறது. தான் கண்ட தரிசனத்தில் உன்னத தேவனின் பரிசுத்தத்தையும் மனிதர்களின் பாவத் தன்மைகளையும் அவர் தெளிவான சொற்களால் விவரிக்கிறார். தீயவர்கள் மாத்திரமே அழிவார்கள் என்பதால் தனது தீமையினாலேயே யோபும் தீங்கினை அனுபவிக்கிறார் என்று எலிப்பாஸ் எண்ணினார். உத்தமனான யோபு கசப்புணர்வு கொள்ளாது தேவனிடம் மனந்திரும்ப வேண்டும் என்ற ஆலோசனையைக் கூறினார்.
எலிப்பாசுக்கு மறுமொழி கொடுத்த யோபு மனித வாழ்வை இராணுவ ஊழியத்துக்கும் ஒரு கூலிக்காரனுடைய ஊழியத்துக்கும் ஒப்பிட்டார். தன்னுடைய வாழ்வையும் இவைகளுக்கு ஒப்பிட்ட அவர் தன்னுடைய கட்டுப்பாட்டுக்கு மீறின சூழ்நிலையில் தான் மாட்டிக்கொண்டதாகவும் அறிக்கையிட்டார். கூலிக்கு அமர்த்தப்பட்ட வேலையாள் இந்த உலகில் சில நாட்களே வாழ்வான் என்றும் அந்த வாழ்வும் அர்த்தமில்லாமல் போகும் என்று அறிந்தவராய் தன்னுடைய வாழ்வும் அவ்வாறே உள்ளது என்றும், தன்னுடைய குடும்பம் மற்றும் ஆஸ்திகள் யாவும் அழிந்தன; நண்பர்களும் தனக்கு எதிராக எழும்பியுள்ளனர் என்பதையும் உணர்ந்தார்.
யோபு 7:4 நமது நிலைமையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. யோபு இரவில் தனது படுக்கையில் படுத்திருக்கும்பொழுது ‘எப்பொழுது எழுந்திருப்பேன்? இராக்காலம் எப்பொழுது முடியும்?’ என்ற எண்ணமே அவருக்குள் மேலோங்கியிருந்தது. பொருளாதார நஷ்டங்கள், தனிப்பட்ட இழப்புகள், நண்பர்களின் வஞ்சகம் போன்ற காரியங்கள் நமக்கும் ஒரு இரவை நீண்ட இரவாகக் காட்டும். யோபைப் போல நாமும் நித்திரை வராமல் நமது படுக்கையில் காலை வரை புரண்டு படுத்திருப்போம்.
யோபு என்ன செய்தார்? யாரை நாடினார்? அவருடைய காரியங்களைக் கேட்டு புரிந்துகொள்ள யார் உள்ளார்? மாறும் உலகில் மாறாமல் நிலைத்திருப்பவர் யார்? இக்கேள்விகளுக்கு விடையை யோபு அறிந்திருந்தார். தேவனிடம் தனது விண்ணப்பங்களை ஏறெடுத்து நம்பிக்கையைப் பெற்றுக்கொண்டார்.
வான் ஹாவ்னர் என்பவர் பலவித துன்பங்களால் பாதிக்கப்பட்ட ஒரு வயதான பெண்மணியைப் பற்றிக் கூறினார். அவரது சில துன்பங்கள் உண்மையானவை; வேறு சில கற்பனையானவை. அவருடைய நண்பர்களும் குடும்பத்தினரும் அவர்களுடன் ஜெபித்து அவரை ஆறுதல்படுத்தினர். அவருக்கு உதவும் பொருட்டாக “நாங்கள் எங்களால் இயன்ற அளவு உங்களுக்கு யாவையும் செய்துவிட்டோம். இனி நீங்கள் தேவனை நம்புங்கள்” என்ற கூறியவுடன், அவர் அதிர்ச்சிக்குள்ளாகி, “அப்படியா? என் முடிவு வந்துவிட்டதா? ” என்று புலம்பினார். ஹாவ்னர், “அப்படியாயின் நாம் மீண்டும் ஆரம்பிக்கவேண்டிய நிலை வந்துவிட்டது” என்று குறிப்பிடுகிறார்.
யோபு இந்த பாடத்தைதான் கற்றுக் கொண்டார். நமது குடும்பத்தினரும் நண்பர்களும் நம்மை ஆறுதல்படுத்துவதாக எண்ணிச் செய்யும் காரியங்கள், நம்மை சோர்வடையச் செய்வனவாக அமைந்துவிடும். நல்ல எண்ணத்துடன் நாம் செய்யும் சில நல்ல காரியங்களும் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதுமுண்டு.
ஆனால் தேவன் எப்பொழுதும் நம்மை சரியாகப் புரிந்துகொள்ளுவார். தேவனை நோக்கிக் காத்திருக்கும் வேளை உண்டு. நம்முடைய நலத்துக்கும் பெலத்துக்கும் அவரையே நாம் சார்ந்திருக்க வேண்டும். தவறான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும்பொழுதும் தனிமையில் துணை தேடிச்செல்லும் வேளையிலும் அவருடைய உதவியும் ஆறுதலும் நமக்குத் தேவை. அவற்றை தேவன் மாத்திரமே தரமுடியும்.
அதிகாலைப் பாடல்:
என் வாழ்வில் சமாதானம் நீரோட்டம் போல் வந்தாலும்,
துன்பங்கள் அலையலையாய் ஆர்ப்பரித்து வந்தாலும்,
என்ன வந்தாலும் எது நடந்தாலும் அவை நன்மைக்கே
என்று கூறி உம்மைத் துதிக்க எனக்குப் போதியும்.
மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை