ஆசிரியரிடமிருந்து…
(மே-ஜுன் 2020)
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,
இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
கொரோனா வைரஸ் தாக்குதலினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அனுதினமும் மரித்துவருவதை காண்கிறோம். மேலும் தற்போது உலக நாடுகளில் அனைத்திலும் மக்களுடைய இயல்பு வாழ்வு பாதிப்புக்குள்ளாயிருக்கிறது.. ஊரடங்கு அமுலில் இருப்பதால் நம் தேசத்தில் அநேக மக்கள் வருமானமின்றி பசியினாலும் வறுமையாயினாலும் வாடிவருகின்றனர். இந்த வாதை நிறுத்தப்படவும் தேவன் மனுக்குலத்தின் மேல் இரக்கம் பாராட்டவும் நாம் திறப்பின் வாசலில் நின்று மன்றாடுவோம்.
அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான நூல் வாயிலாக அநேகர் தங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் பெற்றுவரும் நன்மைகளுக்காக ஆண்டவரை ஸ்தோத்திரிக்கிறோம். அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழிலுள்ள வேதாகம வாசிப்பு அட்டவணையைப் பயன்படுத்தி 2020ஆம் ஆண்டு முழுவதும் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்தவர்களுடைய பெயர்களின் தொடர்ச்சியை இவ்விதழில் பிரசுரித்துள்ளோம். சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை ஜெபத்தாலும் ஆதரவான காணிக்கையாலும் தாங்குகிற ஆதரவாளர்களுக்காக, பங்காளர்களுக்காக ஆண்டவருக்கு நன்றி கூறுகிறோம். கர்த்தர் இன்னும் அநேக ஆதரவாளர்களைத் தந்தருளவும் வேண்டுதல் செய்கிறோம்.
இவ்விதழில் மே மாதத்தில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் நமது அன்றாடக வாழ்க்கைப்பயணத்தில் கற்றுக்கொள்ள வேண்டிய அநேக காரியங்களை தியானங்களாக தொகுத்துத் தந்துள்ளார்கள். ஜூன் மாதத்தில் சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் கலாத்தியர் நிருபத்திலிருந்தும் மேலும் பல தலைப்புகளிலும் எழுதிய தியானங்களையும் பிரசுரித்துள்ளோம். இத்தியானங்கள் யாவும் தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் அதிக ஆசீர்வாதமாக இருக்க ஜெபிக்கிறோம். கர்த்தர்தாமே இத்தியானங் களின் வாயிலாக தங்களை ஆசீர்வதித்து பெலப்படுத்துவாராக!
கே.ப.ஆபிரகாம்