Dr.வாரன் வியர்ஸ்பி
(ஜனவரி-பிப்ரவரி 2020)

147 ஆம் சங்கீதம், “கர்த்தரைத் துதியுங்கள்” என்று ஆரம்பித்து “கர்த்தரைத் துதியுங்கள்” (அல்லேலூயா) என்று முடிகிறது. இது நாம் பின்பற்றுவதற்கு ஒரு நல்ல உபதேசமாகும். ஆண்டவருடைய இரக்கங்கள் நமக்கு எப்போதும் நன்மைகளைத் தரும் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் அவரை உண்மையுடன் துதித்துக் கொண்டிருப்போமானால் அவரிடமிருந்து நன்மைகளும் ஆசீர்வாதங்களும் வந்துகொண்டே இருக்கும் என்பதை உணருவதில்லை. ஆண்டவரிடமிருந்து பெறும் நன்மைகளை எதிர்பார்த்து நாம் அவரைத் துதித்தல் நமது கடன். ஒரு கிறிஸ்தவனின் ஆவிக்குரிய கிரியைகளில் மிகவும் சிறந்தவை கர்த்தரைத் துதிப்பதும், அவருக்கு ஆராதனை செய்வதுமே.

உண்மையாய்க் கர்த்தரைத் துதிக்கும் ஒரு கிறிஸ்தவன் வேறு எந்த வழியிலும் அவனுக்குக் கிடைக்காத ஆசீர்வாதங்களைப் பெறுவான். அந்த ஆசீர்வாதங்களை இந்தச் சங்கீதம் நமக்கு விளக்கிக் கூறுகிறது. அதன்மூலம் நம்மை உற்சாகத்தோடு ஆண்டவரைத் துதிக்கும்படி தூண்டுகிறது.

1. துதித்தல் வாழ்க்கையை அழகானதாக ஆக்குகிறது.

கர்த்தரைத் துதியுங்கள்; நம்முடைய தேவனைக் கீர்த்தனம் பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது (147:1).

துதித்தல் ‘நல்லது’, ‘இன்பமானது’, அது அழகானதாகவும் இருக்கிறது. “இது கடவுளைத் துதிக்க ஏற்ற சமயமா?” என்று நாம் ஒரு போதும் கேட்கக்கூடாது. எல்லா நேரமும் கடவுளைத் துதிக்க ஏற்ற நேரமே. எல்லா நேரமும் வாதம் செய்ய ஏற்றதில்லை, எல்லா நேரமும் சிரித்துக் கொண்டிருப்பது பொருத்தமில்லை, எப்போதும் புன்னகை செய்வதும் சரியல்ல. ஆனால் எல்லா நேரமும் கடவுளைத் துதிக்கலாம்.

நம்முடைய வாழக்கையை அழகானதாக ஆக்கக் கூடிய கூடுதலான ஆவிக்குரிய அம்சங்களைத் துதித்தல் தருகிறது. கடவுளைத் துதிக்காத மனிதன் தன்னையே முக்கியப்படுத்துபவன். குறைகூறுபவன், பெருமை உள்ளவன் அப்படிப்பட்டவனுடைய வாழக்கையில் அழகு இருக்காது. “பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுது கொள்ளுங்கள்” (சங்கீதம் 29:2 ).

2. துதித்தல் நம்முடைய வாழ்க்கையைக் கட்டியெழுப்புகிறது.

கர்த்தர் எருசலேமைக் கட்டுகிறார் (147:2).

குறை கூறுவதும், புகார் கூறுவதும் தேவனுடைய வேலையைத் தடைசெய்கின்றன. மற்றவர்கள் பேரிலும் திருச்சபையின் பேரிலும் குற்றம் கண்டுபிடிப்பது மிகவும் சுலபம். நமக்கு நடக்கும் காரியங்கள் நமக்குச் சாதகமாகவோ, நன்மை தருவதாகவோ, பிரியப்படுத்துவதாகவோ இல்லாமலிருந்தால் அந்த வேளையில் கடவுளைத் துதித்தல் மிகவும் சிறப்பானது. நீங்களும், நானும் உண்மையாகத் தேவனைத் துதிப்போமானால் பரிசுத்த ஆவியானவர் நமது வாழ்க்கையைக் கட்டியெழுப்புவார். அவருடைய வேலையை நாம் செய்து முடிக்க உதவுவார்.

சபையில் எழுப்புதல் இருக்கும் போதெல்லாம், அது துதித்தலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது, ஏன்? தேவன் ஆராதனை மூலமாகத் தமது வேலையைக் கட்டியெழுப்புகிறார். நாம் வேதாகமத்தைப் படித்தால் மட்டும் போதாது. ஜெபித்தாலும் போதாது. நமது காலத்தையும், பணத்தையும் ஆண்டவருக்குக் கொடுத்தாலும் போதாது. நாம் நம்மை எப்போதும் துதித்தலின் மூலம் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கவேண்டும். அப்படி நாம் செய்யும்போது, தேவன் நம்முடைய பகுதியான வழிபாடுகள் அனைத்தையும் ஒன்றாக்கி, நம்மை ஆவிக்குரிய நிலையில் கட்டியெழுப்பி, வளர்ச்சியடையச் செய்கிறார்.

3. துதித்தல் தேவனுடைய மக்களை ஒன்றாகக் கூட்டிச்சேர்த்து ஐக்கியமடையச் செய்கிறது.

…..துரத்துண்ட இஸ்ரவேலரைக் கூட்டிச் சேர்க்கிறார் (147.2).

யூதர்களில் ஆண்கள் பஸ்கா பண்டிகை, பெந்தெகோஸ்தே பண்டிகை ஆசரிப்புக் கூடாரப் பண்டிகை இவற்றைக் கொண்டாடுவதற்காக எருசலேமுக்குச் செல்லும்படிக் கட்டாயப்படுத்தப்பட்டனர். இது தேசீய ஒற்றுமையைக் காட்டும் காலமாயிருந்தது. மக்கள் தங்கள் வேறுபாடுகளை மறந்து தேவனை வழிபடுவதற்காக. ஒன்று கூடினார்கள். இதனால் தான் வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தில் துதித்தலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பேசப்பட்டுள்ளதைக் காண்கிறோம். தேவனுக்கு மகிமை உண்டாகும்படி, தேவனுடைய மக்கள் கூடிவரும்போது, நாம் துதித்தலிலும், தொழுதுகொள்ளுதலிலும் ஒன்று படுகிறோம். நம்முடைய ஊழிய முறைகளிலும், நாம் வேதாகமத்துக்கு விளக்கம் கொடுப்பதிலும் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நாம் அனைவரும் ஒருமித்த கருத்துள்ளவர்களாயக் காணப்படுவது கர்த்தரைத் துதித்தலில் ஆகும். ஒரு கிறிஸ்தவப் பாமாலைப் புத்தகத்தை எடுத்து அதில் இருக்கும் பாடல்களைக் கவனித்துப் பாருங்கள். எத்தனை எத்தனை சபைப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இயற்றிப்பாடும் பாடல்கள் அங்கு இருக்கின்றன!

நம்மிடையே எப்போதாவது கருத்து வேறுபாடும், பிரிவினையும் எற்பட்டால் அவற்றை மறக்க நாம் அனைவரும் சேர்ந்து பாமாலை பாடிக் கர்த்தரைத் துதிக்க ஆரம்பித்துவிடுவோம். ஒன்றாகக் கூடி ஜெபிக்கும் மக்கள் ஒன்றாகவே தங்கியிருப்பார்கள். ஒன்றாகச் சேர்ந்து பாடுகிறவர்கள் ஒருவரையொருவர் பற்றிப்பிடித்துக் கொள்ளுவார்கள்.

4. துதித்தல் காயங்களை ஆற்றுகிறது.

இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார் (147:3,4).

இருதயம் நொறுங்குண்டவர்களுக்கும், வாழ்க்கையில் காயம்பட்டவர்களுக்கும் ஊழியம் செய்யவே திருச்சபை இருக்கிறது என்பதை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது. ஆவிக்குரிய குணமாகுதல் அநேகருக்குத் தேவை. அதற்குரிய மருந்தில் ஒரு பகுதிதான் “துதித்தல்” ஆகும். பவுலும், சீலாவும் சிறைச்சாலையில் கட்டுண்டிருந்தபோதிலும் தேவனைப் பாடித் துதித்தார்கள். அது அந்தச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த பிற கைதிகளுக்குச் சாட்சியாக மட்டுமல்ல, அவர்களுடைய காயங்களுக்குக் குணமளிக்கும் இதமான மருந்தாகவும் இருந்தது. நாம் துன்பப்படும்போது, சாத்தான் நம்முடைய காயங்களில் பொறாமை, மனக்கசப்பு போன்ற விஷங்களைச் செலுத்தி, அவற்றைக் குணமாக்க முடியாததாக ஆக்க முயற்சிப்பான். ஆனால், உண்மையுடன் நாம் கர்த்தரைத் துதிக்கும்போது, அந்தத் துதி நம்முடைய காயங்களில் விஷம் எவ்வளவு ஆழத்தில் இருந்தாலும், அவற்றை அழித்து நம்மைக் காப்பாற்றிவிடும். விண்வெளியில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களில் இருக்கும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை அவருக்கு தெரியும் (வச.4). அவரது கரிசனை எல்லாம் நமக்குள் இருக்கும் உடைந்த இருதயமே.

“அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்து விடுங்கள்” (1 பேதுரு 5:7).

5. துதித்தல் ஆண்டவருடைய பலத்தை விடுவிக்கிறது.

நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெல முள்ளவருமாயிருக்கிறார் (147:5) .

இன்றைய திருச்சபை இப்பொழுது தான் துதித்தலின் வல்லமையை அறிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறது. ஆனால் பழைய ஏற்பாட்டு யூதர்கள் அந்த வல்லமையை ஆரம்பத்திலேயே அறிந்திருந்தார்கள். இஸ்ரவேலர் வனாந்தரத்தின் வழியாகப் பயணம் செய்தபோது, அவர்கள் தேவனைத் துதித்துக்கொண்டு சென்றார்கள். உடன்படிக்கைப் பெட்டி அவர்களுக்கு முன்னாகக் கொண்டு செல்லப்பட்டது (எண்.10:33-36).

இஸ்ரவேலருக்கு தேவன்மேல் இருந்த விசுவாசத்தைச் சங்கீதங்கள் பிரதிபலிக்கின்றன. தாவீது மனச்சோர்வுடன் இருக்கும்போது, அவன் தன் சுரமண்டலத்தை எடுத்து, வாசித்துக் கடவுளைத் துதுதித்துப் பாடுவான். உடனே அவனுடைய சோர்வுகள் நீங்கிப்போகும். தேவனிடத்திலிருந்து புது வல்லமை பெற்று உற்சாகமாகத் தன் காரியங்களைச் செய்யத் தொடங்குவான்.

ஆம், துதித்தலில் வல்லமை இருக்கிறது. இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து, நேசிக்கும் ஒரு இருதயத்திலிருந்து இந்தத் துதி எழும்புமானால், அதில் வல்லமை இருக்கிறது. முறையிடுவதிலும், முறுமுறுக்கிறதிலும்கூட வல்லமை உண்டு. ஆனால் அவை கிழித்து, உடைத்துத் தகர்த்தெறிவதற்காகவே அன்றி, கட்டியெழுப்புவதற்காக அல்ல.

6. துதி நம்மைக் கற்கக்கூடியவர்களாக ஆக்குகிறது.

…. அவருடைய அறிவு அளவில்லாதது (147:5).

தேவன் எப்படி இருக்கிறார்? தேவன் என்ன செய்கிறார்? தேவன் என்ன சொல்லுகிறார்? என்று நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஆனால், நாம் கர்த்தரைத் துதிக்கும் வேளையில் நம்முடைய இருதயமும், உள்ளமும் அவரைப் புரிந்துகொள்ள ஆயத்தநிலையில் இருக்கின்றன.

ஆலய ஆராதனையில் பிரசங்கத்துக்கு முன் தேவனைத் துதித்துப் பாடும்போது, நாம் அவரைத் துதிப்பது மட்டுமல்ல, அவருடைய செய்தியைக் கேட்டுப் புரிந்துகொள்ளும்படி நம் இருதயங்களை ஆயத்தப்படுத்துகிறோம். நாம் உண்மையாக ஆண்டவரை ஆராதிப்பதினால், நாம் அவருடைய சத்தியத்தையும் நமது வாழ்வுக்கு அவருடைய சித்தத்தையும் புரிந்துகொள்ள முடியும்.

7. துதி நம்மை உயர்த்துகிறது. நாம் செய்யும் யுத்தங்களை ஜெயங்கொள்ள உதவுகிறது

கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; துன்மார்க்கரைத் தரைமட்டும் தாழ்த்துகிறார் (147:6).

அந்தகார சக்திகளுக்கெதிராகத் துதித்தல் ஒரு வல்லமையான ஆயுதமாகும். குற்றஞ்சாட்டுகிறவன் சாத்தான் (வெளி 12:10).

தேவனுடைய மக்கள் பிதாவாகிய தேவனை தொழுதுகொள்ளுவதைச் சாத்தான் வெறுக்கிறான். நாம் எல்லாவற்றைப் பற்றியும் குற்றம் குறை கூறிக்கொண்டும், புகார் பண்ணிக்கொண்டும் இருந்தால் அதுவே சாத்தானுக்குப் பிரியமானது.

துதித்தல் நம்மை உயர்த்தி, உற்சாகப்படுத்தி, ஊக்குவிக்கிறது என்பது உளவியல் சம்பந்தமான ஒரு தந்திரம் அல்ல, இது பரிசுத்த ஆவியானவரின் வேலை! அவரே துதித்தலின் ஆவியாயிருக்கிறார் (எபே 5:18).

நாம் உண்மையில் தேவனைத் துதிக்கும்போது, நாம் அவரது கிருபையின் சிங்காசனத்தின் வல்லமையைப் பற்றிப்பிடித்துக் கொள்ளுகிறோம். அவர் நமக்குள் கிரியை செய்கிறார். நம் மூலமாகவும் கிரியை செய்கிறார். இவற்றின் மூலம் அவருடைய நோக்கங்கள் நிறைவேற்றப்படும்.

“கர்த்தரைத் துதியுங்கள். நம்முடைய தேவனைக் கீர்த்தனம் பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது”.

மொழியாக்கம்: G.வில்சன்