ஆசிரியரிடமிருந்து…

(ஜூலை-ஆகஸ்ட் 2020)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

வாதை நம் கூடாரத்தை அணுகாமல் பாதுகாக்கும் அன்பின் தேவன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

இவ்விதழின் வாயிலாக தங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். தற்போது நமது தேசத்திலும் உலகமெங்கும் நடைபெற்று வரும் காரியங்களை பார்க்கும்போது தேவன் ஒருவர்மட்டுமே நமக்கு உயர்ந்த அடைக்கலமாயிருக்க முடியும். அவரது நித்திய புயங்கள் நமக்கு ஆதாரமாயிருக்கிறது. பரவிவரும் கொரனா வைரஸ் தாக்கத்திலிருந்து நமது தேசத்தையும் குடும்பங்களையும் அழிவிலிருந்து பாதுகாக்கவும் சபை கூடிவருவதற்கு தற்போது இருக்கின்ற தடைகள் நீங்கவும் திறப்பின் வாசலில் நின்று மன்றாடுவோம்.

தற்போதுள்ள தடை காலத்தை ஆவிக்குரிய விதத்தில் குடும்பமாய் ஆராதிப்பதிலும் தனி ஜெபத்திலும் வேதத்தை வாசிப்பதிலும் தேசத்திற்காக மன்றாடுவதிலும் செலவழிப்போம். அவருடைய வருகைக்கு ஆயத்தமாவதில் அதிக ஜாக்கிரதையாய் செயல்படுவோம். நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள் (எபே-5:16).

இவ்விதழில் ஜூலை மாதத்தில் முதல் 17 நாட்களுக்குரிய தியானங்களை சகோதரி சாந்திப் பொன்னு அவர்கள் பல தலைப்புகளிலும் மீதமுள்ள நாட்களுக்குரிய தியானங்களை சகோதரர் தர்மகுல சிங்கம் அவர்கள் கிறிஸ்து நமக்காக ஏற்றுக்கொண்ட பாடுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களைக் குறித்தும் எழுதியுள்ளனர். மேலும் ஆகஸ்டு மாத தியானங்களை சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் வெளிப்படுத்தின விசேஷத்திலிருந்து விசேஷித்த தியானங்களை எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் அனைத்தும் வாசிக்கிற அனைவருக்கும் பிரயோஜனமாயிருக்கும்படி வேண்டுதல் செய்கிறோம். இத்தியானங்கள் வாயிலாக தாங்கள் பெறும் ஆசீர்வாத அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

கே.ப.ஆபிரகாம்