ஆசிரியரிடமிருந்து…
(நவம்பர்-டிசம்பர் 2021)
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,
ஜனங்களின் பாவங்களை நீக்கி இரட்சிக்க இவ்வுலகத்திற்கு வந்த ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
இவ்விதழின் வாயிலாக தங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். வருடத்தின் இறுதி மாதங்களுக்குள் பிரவேசிக்க தேவன் கிருபை செய்திருக்கிறார். கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது (சங்.107:29). நமது தேசம் இயல்பு நிலைக்கு திரும்பச்செய்த தேவாதிதேவனை மகிமைப்படுத்துவோம். தடைகளோடு காணப்படும் திருச்சபை பணிகள், மிஷனெரி பணிகள் மீண்டும் புதுப்பொலிவோடு நடைபெறுவதற்கும் கர்த்தர் தொடர்ந்து ஊழியப்பணிகளை ஆசீர்வதிப்பதற்கும் பாரத்தோடு ஜெபிப்போம்.
அன்பு பங்காளர்கள் சத்தியவசன ஊழியத்தை தொடர்ந்து தங்களது மன்றாட்டு ஜெபங்களினாலும் ஆதரவான காணிக்கையாலும் தாங்கினபடியால் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை வருடமுழுவதும் தடைகளின்றி நடத்துவதற்கும் கர்த்தர் கிருபை பாராட்டினார். தொலை காட்சி ஊழியங்களை ஆதரவாளர் காணிக்கையாலே தாங்கின யாவருக்காகவும் ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறோம். அநேகர் அனுதினமும் கிறிஸ்துவுடன் புதிய சந்தாதாரரை அறிமுகப்படுத்தியிருந்தீர்கள். தியானங்கள் வாயிலாக தாங்கள் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதங்களையும் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். உங்களோடு சேர்த்து நாங்களும் தேவனை மகிமைப்படுத்த அது ஏதுவாயிருக்கும்.
இவ்விதழில் நவம்பர் மாதத்தில் 1-26 ஆகிய நாட்களில் வேதாகத்தின் பெண்களை பற்றியும் டிசம்பர் மாதத்தில் 1-21,25,27-31 ஆகிய நாட்களில் கிறிஸ்துமஸ் நாட்களுக்கான சிறப்பு தியானங்களையும் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதியுள்ளார்கள். நவம். 27-30, டிசம்.22-24,26 ஆகிய நாட்களுக்கு வேறு சில தியானங்களையும் தொகுத்து வழங்கியுள்ளோம். உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, சகல பொல்லாத வழிகளுக்கும் என் கால்களை விலக்குகிறேன் (சங்.119:101). வசனங்களை இருதயத்தில் காத்து நடக்க ஆவியானவர் துணை செய்வார். தியானங்களை எழுதிவரும் சகோதர, சகோதரிகளையும் உங்கள் ஜெபங்களில் மறவாதீர்கள். இத்தியானங்கள் உங்களது ஆவிக்குரிய வாழ்வின் வளர்ச்சிக்கு பிரயோஜனமாக இருக்க ஜெபிக்கிறோம்.
கே.ப.ஆபிரகாம்
