பூரண அழகுள்ள ஆத்தும நேசர்
அதிகாலை வேளையில்…
(நவம்பர்-டிசம்பர் 2021)
Dr.உட்ரோ குரோல்
வேதபகுதி: வெளிப்படுத்தல் 22:1-21
சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார் (வெளி. 22:16).
பரிசுத்த வேதாகமத்தின் முதல் புத்தகமான ஆதியாகமம் அநேக ஆரம்பங்களை அறிவிப்பது போலவே, கடைசி புத்தகமான வெளிப்படுத்தல் விசேஷ நூலும் சில ஆரம்பங்களைத் தெரிவிக்கிறது. பல புதிய ஆரம்பங்களுக்கு முன்னர் முடிவடைய வேண்டிய சில காரியங்களும் இருந்தன. எனவே வெளிப்படுத்தின விசேஷமானது அநேக இறுதியானவைகளை தேவனுடைய வார்த்தை மூலமாக நமக்குக் கூறுகிறது.
ஆதியாகமம் 3:9 இல் தேவன் மனிதனுக்குக் கொடுத்த முதல் அழைப்பினை நாம் வாசிக்கிறோம். “அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய்?” என்றார். வெளிப்படுத்தல் 22:17இல் தேவன் மனிதனுக்குக் கொடுத்த இறுதி அழைப்பினைக் காண்கிறோம். “ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக் கடவன்”. கிறிஸ்துவுடன் நித்தியத்தில் வாழ விரும்பும் ஒவ்வொருவரும் இவ் விரு வசனங்களிலுள்ள அழைப்புகளில் ஒன்றினுக்கு செவிகொடுத்திருக்க வேண்டும்.
ஒருவேளை மத்தேயு 11:28இல் கிறிஸ்துவின் “வருத்தப்பட்டுப் பாரஞ் சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்ற கூப்பிடுதலுக்கோ “நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்” (யோவான் 4:14) என்ற அழைப்புக்கோ ஒருவர் செவிசாய்த்திருக்கலாம். இவ்விரண்டுக்கும் நீங்கள் கீழ்ப்படியவில்லை என்றாலோ, இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலோ, நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள இயலாது; இப்பொழுதே அவரது அன்பின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.
இரட்சிப்பின் அழைப்புக்கு நீங்கள் இணங்கிவிட்டீர்கள் எனில் உங்களது எதிர்காலத்தைப் பற்றிய புதிய கண்ணோட்டம் உங்களுக்கு உண்டாயிருக்கும். உங்களது எதிர்கால இலக்கு பிரகாசமாயிருக்கும்; ஆகாயத்துப் பறவைகளின் பாடல்கள் மிக இனிமையாயிருக்கும்; ஒவ்வொரு நாளும் இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்ய ஆர்வமாயிருப்போம். அவருடன் மகிமையில் நாம் வாழ இருப்பதை எதிர்நோக்கியிருப்போம். வெளி.22:17இல் தேவனுடைய இறுதி அழைப்புக்கு முன்னர் இயேசுகிறிஸ்துவே நம்மை இரட்சிப்புக்கு அழைத்தவர் என்பதை அவர் உறுதி செய்கிறார். “நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் (வெளி.22:16) என்று இயேசு கூறுகிறார். இந்த விருதுகள் வேதாகமத்தில் அநேக இடங்களில் இயேசுவைக் குறிப்பதாகக் காணப்படுகின்றன (ஏசா. 11:1; எண்.24:17), ஆனால் இந்த இறுதி அழைப்புக்கு முன்னர் அது தரும் தாக்கத்தைப்போல வேறு எங்கும் காணப்படவில்லை.
நாம் இரட்சிப்பில் தேவனிடத்துக்கு வரும்பொழுது தாவீதின் சந்ததியில் சேருகிறோம். பாவத்தின் இருளிலிருந்து வெளிவரும் பொழுது பிரகாசமுள்ள விடி வெள்ளி நட்சத்திரத்தின் ஒளிக்குள் பிரவேசிக்கிறோம். நமக்காக மரித்த இயேசுவின் முகப்பிரகாசமே அது. பரலோகத்தின் வெளிச்சத்துக்குள் நாம் பிரவேசிக்கும் பொழுது அவரைத்தான் நாம் முதன் முதலாக தரிசிப்போம். நம்முடைய இரட்சகரின் பிரசன்னமே பரலோகத்தை ஒளியூட்டுகிறது.
பிறந்த ஆறே வாரத்தில் பார்வையை இழந்த ஃபானி கிராஸ்பி என்ற அமெரிக்க இசைஞானி எட்டாயிரத்துக்கும் மேலான கிறிஸ்தவப் பாடல்களை இயற்றி இசையமைத்துள்ளார். ஒரு முறை ஒரு நண்பர் அவர் பார்வையில்லாதவராக இருப்பதைக் குறித்து, தனது துயரத்தை வெளிப்படுத்த முற்பட்டபோது, கிராஸ்பி அவரைத் தடுத்து, “எனது பிறப்பின்போது எனது வேண்டுகோள் எது என்று என்னைக் கேட்டிருந்தால் நான் குருடாக இருப்பதையே விரும்பியிருப்பேன்.” என்றார். அதிர்ச்சியடைந்த அவர் அதற்கு விளக்கம் கேட்டபொழுது, “ஏனெனில் நான் பரலோகத்திற்குப் போகும் பொழுது நான் காணும் முதல் முதல் முகம் எனக்காகத் தன் ஜீவனையே கொடுத்த என் நேசர் இயேசுவாகத்தான் இருக்கும்” என்று நெகிழ்ச்சியோடு கூறினார்.
பாரசீகப் பேரரசின் நிறுவனரான சைரஸ் மாமன்னரைப்பற்றிய ஒரு கதை உண்டு ; அவர் ஒருமுறை ஓர் இளவரசரையும் அவரது குடும்பத்தினரையும் சிறைபிடித்தார். அவர்கள் அனைவரும் பேரரசருக்கு முன் நிறுத்தப்பட்ட பொழுது சைரஸ் மன்னர் அக்கைதியைப் பார்த்து, “நான் உன்னை விடுதலை செய்தால் நீ எனக்கு என்ன தருவாய்?” என்று வினவினார். அதற்கு அந்த இளவரசர் என்னுடைய ஆஸ்திகளில் பாதியைத் தருவேன்” என்றார். “உன்னுடைய பிள்ளைகளை விடுவித்தால்?” என்ற கேள்விக்கு “எனக்குரிய எல்லாவற்றையும் தந்துவிடுவேன்” என்று இளவரசர் பதிலுரைத்தார். இறுதியாக சைரஸ் மன்னர் “உன் மனைவியை விடுதலை செய்தால் எனக்கு என்ன தருவாய்?” என்று கேட்டார். அதற்கு அந்த இளவரசன் “மாட்சிமையுடைய மன்னரே, நான் என்னையே தந்துவிடுவேன்” என்றார். இந்த பதிலால் நெகிழ்ச்சியுற்ற பேரரசர் அவனையும் அவனுடைய குடும்பத்தையும் விடுதலை செய்தார். இளவரசன் அவனுடைய மனைவி மற்றும் பிள்ளைகள் யாவரும் தங்களுடைய வீட்டுக்குத் திரும்பினர். இளவரசன் தனது மனைவியிடம் “சைரஸ் மன்னர் மிக அழகானவர் அல்லவா?” என்று கேட்டான். “நான் அவரைக் கவனிக்கவில்லை; எனக்காகத் தன்னையே கொடுக்க ஆயத்தமாயிருந்த உம்மீதே என் கண்கள் இருந்தன” என்று அன்பொழுகக் கூறினாள்.
காலைதோறும் நம்மை இரட்சித்தவரை நாம் துதிக்க வேண்டும். நாள்தோறும் நம்மை இரட்சித்தவருக்கு சேவை செய்ய வேண்டும். மாலை தோறும் நம்மை இரட்சித்தவரில் களிகூரவேண்டும். நம்மில் அன்புகூர்ந்து நமக்காக தன் ஜீவனைக் கொடுத்த ஆண்டவராகிய இயேசுவுக்கு முதலிடம் கொடுத்து அவரை முழுவதுமாய் நேசிக்க இன்றே தீர்மானம் எடுப்போம்.
மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை