பழைய ஏற்பாட்டு வேதபாடம்
Dr.உட்ரோ குரோல்
(செப்டம்பர்-அக்டோபர் 2021)

தானியேல்

2 ஆம் அதிகாரம்

தேவனுடைய சித்தத்துக்கும் விருப்பத்துக்கும் முதலிடம் தந்த அநேக பக்தர்களை நாம் வேத புத்தகத்தில் வாசிக்கிறோம். தேவனை ஏற்றுக்கொள்ளாத, அவரை மதியாத ஒரு சமுதாயத்தில் தன்னுடைய விசுவாசத்தை இழக்காத தானியேலைப்பற்றி நாம் கற்றுக்கொள்ளுவோம். நாமும் இவ்விதமான சமுதாயத்தில்தான் வாழ்கிறோம். நம் வாழ்வுக்கு பயமுறுத்தல்; இல்லையென்றாலும் நமது கலாச்சாரமானது நாம் இயேசுகிறிஸ்துவுக்கு சாட்சியாக வாழ்வதை ஊக்குவிப்பதில்லை.

தன்னுடைய வாழ்விலும் தன் தோழர்களின் வாழ்விலும் ஏற்பட்ட விசுவாச சோதனையில் வெற்றி பெற்ற தானியேல் மற்றொரு சோதனையை எதிர்கொள்ள வேண்டியதாயிருந்தது. நாம் உலகத்துக்கு உப்பாகவும் வெளிச்சமாகவும் இருக்கிறோம். எனவே நம்முடைய போராட்டக் களத்தை நாம் கவனமாகத் தெரிந்தெடுக்கவேண்டும்; இக் காலகட்டத்தில் நாம் அநேக சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. நாம் மனிதர்களை எதிர்க்கவேண்டிய அவசியமில்லை. நாம் வெற்றிகொள்ளும் காரியங்கள் மட்டுமல்ல, வாழ்வின் முக்கியமான பல காரியங்களைத் தெரிந்தெடுக்கவேண்டிய நிலையில் நிற்கின்றோம். அவற்றில் ஒன்று நாம் நல்ல குடிமகனாக வாழவேண்டும் என்பதாகும். தானியேல் நிச்சயமாகவே ஒரு சிறந்த குடிமகனாகத் திகழ்ந்தார். அது மாத்திரமல்ல; அவர் தேவனுக்கென்று ஒரு நல்ல சாட்சியாகவும் வாழ்ந்தார்.

தன்னுடைய கேள்விகளுக்கு விடையை அறிவிக்காவிடில் ஞானிகள் அனைவரையும் சிரச்சேதம் பண்ணுவதாகவும் நேபுகாத்நேச்சார் அரசன் அறிவித்தான். நம்முடைய அனுதின வாழ்வில் இவ்விதமான கொடுங்கோல் ஆட்சியாளர்கள் இல்லையெனிலும், நமக்கு வித்தியாசமான மேலதிகாரிகள் உண்டு. இவ்விதமான வேளைகளில் தானியேல் நமக்கு என்ன ஆலோசனைகளைத் தருகிறார் என்பதை சிந்திப்போம்.

முதலாவது நாம் அதிகாரிகளுக்கும் தேவனுடைய ஆளுகைக்கும் கீழ்ப்படியவேண்டும். தானியேல் அதைத்தான் செய்தார். அரசனல்ல உண்மையான ஆளுநர் தேவனே என்பதை அறிந்திருந்தார். இரண்டாவதாக, நம்மை மதிக்காதவர்களையும் நாம் மதிக்கவேண்டும். வேதத்தின் மற்ற இடங்களைவிட தானியேலின் வாழ்க்கை இந்த பாடத்தை ஆழமாக வலியுறுத்துகிறது. இறுதியாக ஞானத்துக்காக நாம் ஜெபிக்கவேண்டும். தேவன் நம்மை வழிநடத்தி பயன்படுத்த ஜெபிக்கவேண்டும்.

தானியேலின் இரண்டாவது அதிகாரம் நேபுகாத்நேச்சார் அரசரைப்பற்றி விவரிக்கிறது. அரச கிரீடத்தை அணிந்த தலைக்கு அது லேசாக இருக்காது என்பதைப் பற்றி விளக்குகிறது. தலைமைப் பதவியில் இருக்கும் உங்களில் சிலர் இது உண்மை என்று அறிவீர்கள்.

தலைமைத்துவம் இலகுவானதல்ல என்பதை தானியேலின் இரண்டாவது அதிகாரம் விளக்குகிறது. “நேபுகாத்நேச்சார் ராஜ்யபாரம் பண்ணும் இரண்டாம் வருஷத்திலே, நேபுகாத்நேச்சார் சொப்பனங்களைக் கண்டான்; அதினால், அவனுடைய ஆவி கலங்கி, அவனுடைய நித்திரை கலைந்தது” என்று முதல் வசனத்தில் வாசிக்கிறோம். இங்கு சொப்பனம் என்று ஒருமையில் அல்ல, சொப்பனங்கள் என்று பன்மையில் எழுதப்பட்டுள்ளது. தானியேல் ஒரு சொப்பனத்தின் பொருளை மட்டுமே விளக்கினார். அதாவது நேபுகாத்நேச்சாருக்கு இதே சொப்பனம் அநேக இரவுகளில் திரும்பத் திரும்ப வந்திருக்கலாம். இவர் மட்டுமல்ல, பரிசுத்த வேதாகமத்தில் அநேக அரசர்கள் இது போன்று சொப்பனங்களைக் கண்டுள்ளனர். எஸ்தர் புத்தகத்தில் அகாஸ்வேரு என்றும், வரலாற்றில் சைரஸ் என்றும் அழைக்கப்படும் பேரரசரும் கனவுகளைக் கண்டுள்ளனர்.

இந்த கனவு மிகவும் பயங்கரமானதாயிருந்தது. எனவே ராஜா தன் சொப்பனங்களைத் தனக்குத் தெரிவிக்கும்பொருட்டுச் சாஸ்திரிகளையும் ஜோசியரையும் சூனியக்காரரையும் கல்தேயரையும் அழைக்கச்சொன்னான்; அவர்கள் வந்து, ராஜ சமுகத்தில் நின்றார்கள் என்று வசனம் 2இல் வாசிக்கிறோம்.

மந்திரவாதிகள் என்பது மறைவியலான காரியங்களைச் செய்யும் மக்களுக்கான பொதுவான ஒரு பெயர். மந்திரங்களை ஓதுபவர்கள், வசீயம் வைப்பவர்கள் ஆகியவர்களைக் குறிக்கும் சொல். சூனியக்காரர் என்பது பழங்கால பாபிலோனிய மொழியிலிருந்து வந்தது. இது மந்திரம் போடுதல் அல்லது அறிவை மயக்கிவைத்தல் என்ற பொருளைத் தரும். ஆனால் சாஸ்திரிகள் அல்லது கல்தேயர்கள் என்பவர்கள் பாபிலோனிய மக்களின் புரோகிதர்களின் குழுவினர் ஆவார்கள். இம்மக்கள் நட்சத்திரங்களைப் படிப்பவர்கள், உண்மையில் அவைகளை வணங்குபவர்கள். நட்சத்திர ராசிகளை வாசித்து எதிர்காலத்தைக் கணிப்பவர்கள். இவர்கள் பைத்தியக்காரர்களின் ஒரு கூட்டம். அவர்கள் அனைவரும் கூடி அரசரின் சொப்பனத்தை அறிவிக்க அழைக்கப்பட்டிருந்தனர். தீர்க்கதரிசி ஒரு தேவமனிதனாக இல்லையெனில் அவன் கூறுவது நிறைவேறாது. இம்மக்கள் தேவமனிதர்கள் அல்லர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்கள் நம்பிய சில காரியங்களைப் பற்றிய ஒரு அதிகாரப்பூர்வமான ஓர் ஆவணத்தை நான் பார்க்கநேரிட்டது. உதாரணமாக 1840இல் மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் பயணிப்பவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் என்று கூறியிருந்தது. ஆனால், இன்று உங்களுடைய மகன் இதைவிட வேகமாகக் காரை ஓட்டுகிறான் அல்லவா? அந்த காலத்தில் அவ்வாறு நம்பினர். அது ஓர் அலுவலக ஆவணம்.

1878ஆம் ஆண்டு மற்றொரு அரசு ஆவணம் “மின்சார விளக்குகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க அவசியமில்லை” என்று கூறியிருந்தது. ஆனால், இன்று நாம் உறங்கச்செல்லுமுன் மின்சார விளக்கை அணைத்துவிட்டுச் செல்லுகிறோம். 1901ஆம் ஆண்டு “மனிதன் பறக்க உதவும் இயந்திரத்தை உருவாக்குவது சாத்தியமில்லை” என்று ஓர் ஆவணம் கூறியது. ஆனால் 1903ஆம் ஆண்டு வட கலிபோர்னியா கடற்கரையருகில் ரைட் சகோதரர்கள் முதல் முறையாகப் பறந்து காட்டினர்.

மனிதர்கள் “நடக்கும்” என்று கூறியதால் அது கட்டாயம் நடந்தே தீரும் என்ற அவசியம் இல்லை. அநேக வேளைகளில் தீர்க்கதரிசிகளும் காரியத்தைக் குழப்பிவிடுகிறார்கள். மனித அறிவு இந்த மக்களின் ஞானத்தை ஒத்தது. அவர்களுக்கு கடவுளிடம் தொடர்பு கிடையாது. தங்களுடைய அறிவைச் சார்ந்தே அதை அறிவிக்கிறார்கள். சில வேளைகளில் அது புலன்களின் உணர்வைச் சார்ந்தும் அமையும். அது கொடுமையானதாயும் பிசாசுடன் தொடர்புடையதாயும், குழப்பம் தருவதாயும் அமையும். இந்த மக்கள் அரசருக்கு கூற இருப்பதும் இதைப்போன்றே இருந்திருக்கும்.

மீட் அண்ட் போல்ட்ரி (MEAT AND POULTRY) என்ற பத்திரிக்கை ஒன்றில் ஒரு சம்பவம் தரப்பட்டிருந்தது. மனிதனுடைய ஞானம் எவ்வளவு மோசமானது என்பதை அது சிறப்பாக வெளிப்படுத்தியது. அமெரிக்க மத்திய கூட்டுறவு விமான போக்குவரத்து நிர்வாகத்தில் (F.A.A) விமான காற்றுத் தடுப்பானை சோதிக்க ஒரு கருவி இருந்தது. இது காற்றுத்தடுப்பானை நோக்கி ஒரு கோழிக் குஞ்சினை எறியும். அதன் வேகம் ஒரு விமானம் ஒரு பறவையை நோக்கிப் பறக்கும் வேகத்துக்கு ஒப்பாயிருக்கும். காற்றுத் தடுப்பான் சரியாக உள்ளதா என்பதை இது நிர்ணயிக்கும். இதை அறிந்த ஆங்கிலேய இரயில் கம்பெனியும் “நம்முடைய ரயில்களின் இயந்திரங்களையும் இவ்வாறே சோதிக்கவேண்டும்” என்று எண்ணி அந்த கோழிக் குஞ்சு எறியும் கருவியை வாங்கி ஒரு இரயிலை சோதித்தனர். ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த கோழிக்குஞ்சு காற்றுத்தடுப்பானை சுக்குநூறாக்கி விட்டது. மட்டுமல்ல; அது பொறியாளர் நாற்காலியை உருவக்கடந்து, அவருக்குப் பின்னாக வைக்கப்பட்டிருந்த இயந்திரத் தொகுப்புகளை உடைத்தெறிந்து என்ஜினின் பின்பகுதிக்குச் சென்று பதிந்துவிட்டது. எனவே இரயில்வே கம்பெனியானது அந்த விமான நிர்வாகத்தினர் வந்து இந்த தோல்விக்கான காரணத்தைத் தரும்படி ஆலோசனை கேட்டனர். F.A.A. வந்து பிரச்சனையை ஆராய்ந்து இறுதியில் “அடுத்தமுறை நீங்கள் உறைந்த கோழிக்குஞ்சை உபயோகப்படுத்தாதீர்கள்” என்று அறிவித்தது.

இதுபோலவே அரசரும் தன்னுடைய ஆலோசனைக் குழுவை அழைத்தார். அவர்களுக்கு ஓர் அதிர்ச்சியை அளித்தார். அவர் கூறியதை அந்த அதிகாரம் 3ஆம் வசனத்தில் நீங்கள் வாசிக்கலாம். “நான் ஒரு கனவு கண்டேன். நீங்கள் இரு காரியங்களைச் செய்யவேண்டும். இரண்டாவது காரியம்: அந்த கனவின் பொருளைக் கூறவேண்டும்; முதலாவதாக அந்த கனவையும் நீங்கள் எனக்குச் சொல்லவேண்டும்”. ஒருவேளை அவர் இந்த மக்களின் மனித ஞானத்தைக் குறித்து சந்தேகித்திருக்கலாம். அவர்கள் ஒன்று கூடி ஆலோசித்தனர்; வசனம் 10இல் அவர்களது பதிலை நாம் காணலாம்.

“ராஜா கேட்கும் காரியத்தை அறிவிக்கத்தக்க மனுஷன் பூமியில் ஒருவனும் இல்லை; ஆகையால் மகத்துவமும் வல்லமையுமான எந்த ராஜாவும் இப்படிப்பட்ட காரியத்தை ஒரு சாஸ்திரியினிடத்திலாவது ஜோசியனிடத்திலாவது கல்தேயனிடத்திலாவது கேட்டதில்லை” என்றனர். எனவே ராஜாவுக்கு கோபம் மூண்டது. “நீங்கள் காரியத்துக்கு உதவாதவர்கள்; உங்கள் அனைவரையும் கொலை செய்யப்போகிறேன்” என்றார். அதன்படி பாபிலோனில் இருக்கிற எல்லா ஞானிகளையும் கொலை செய்யும்படி கட்டளையிட்டான்.

ஞானிகளைக் கொலை செய்ய வேண்டுமென்கிற கட்டளை வெளிப்பட்டதும் தேவ ஞானத்தையுடைய தானியேலையும் கொலை செய்ய வகை தேடினர். இதை தானியேல் கேள்விப்பட்டான். வசனம் 14 முதல் 23 வரை தானியேல் தேவ ஞானத்துக்காக ஜெபித்தான் என்று வாசிக்கிறோம்.

வசனம் 17: தானியேல் தன் வீட்டுக்குப் போய், தன் தோழர்களான அனனியா மீஷாவேல் மற்றும் அசரியா ஆகியோர்களுக்கும் அறிவித்தான். முதலாவது தானியேல் இந்த காரியத்தைக் குறித்து ஜெபிக்கவேண்டுமென்று அறிந்திருந்தான். எவ்வாறு ஜெபிக்கவேண்டும் என்பதை அறிந்திருந்ததால் தன் நண்பர்களையும் அழைத்தான். கனவையும் அதன் பொருளையும் சொல்லவேண்டும் என்று அறிவித்த அரசரது மீளமுடியாத பிரச்சனைக்கு தேவனிடமே செல்லவேண்டும். ஜெபிக்கத் தெரிந்த சில நண்பர்களுடன் கூடி ஜெபிக்கவேண்டும்.

இந்த மறைபொருளை அறிந்துகொள்ள பரலோக தேவனிடம் இரக்கத்தைக் கேட்கிறதற்காக தன் நண்பர்களையும் சேர்த்துக்கொண்டான். தானியேல் இங்கு ஞானத்தைக் கேட்கவில்லை; மாறாக தேவனுடைய இரக்கத்தைக் கேட்டான். இதற்குக் காரணம், நமது மனித தேவைகளுக்கு தேவனுடைய பதில் அவரது கிருபையே! இங்கு ஒரு முக்கியமான தேவை இருந்தது; தானியேலும் அந்த தேவையை அறிந்துகொண்டார். எனவே தேவனுடைய இரக்கத்துக்காக வேண்டினார். வசனம் 19இல் இராக்காலத்திலே தானியேலுக்கு மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது என்று வாசிக்கிறோம். வச.20-23இல் தேவனை நோக்கி அவர் ஏறெடுத்த ஜெபத்தைக் காண்கிறோம்.

வசனம் 20இல் அவர் தேவனுடைய நாமத்தைத் துதிக்கிறார்; பின்னர் தேவனுடைய தன்மையைப் பற்றியும் அவரது கிரியைகளையும் போற்றுகின்றார். தேவனுக்கு நன்றி தெரிவித்து அவரைப் போற்றுவதில் அவர் தாமதிக்கவில்லை. இதுவே உண்மையான ஜெபத்தின் தன்மைகளாகும். வசனம் 24 முதல் 35 முடிய தானியேல் அரசரின் கனவை விளக்குகிறான். அரசருக்குத் தேவையான அவருடைய கனவையும் அதன் பொருளையும் விளக்கிச்சொல்ல தானியேலால் முடிந்தது.

வசனம் 27இல் ராஜா கேட்கிற மறைபொருளை ராஜாவுக்குத் தெரிவிக்க ஞானிகளாலும், ஜோசியராலும், சாஸ்திரிகளாலும், குறிசொல்லுகிறவர்களாலும் இயலாது என்று பதிலுரைத்தார். மனித ஞானத்தின் இயலாமையை தானியேல் தெளிவாக எடுத்துரைத்தார். சில காரியங்களை நம்மால் விளங்கிக்கொள்ள முடியாது. நீங்கள் தேவனிடம் ஏன்? என்று உங்களுடைய சக்தி எல்லாவற்றையும் செலவழித்தாலும் தேவன் அதன் காரியத்தை உங்களுக்கு வெளிப்படுத்தப்போவதில்லை. மனித ஞானத்தினால் அறிந்துகொள்ள முடியாத சில காரியங்கள் உண்டு. அதனை நாம் பயன்படுத்தும் பொழுது தோல்வியைச் சந்திக்கிறோம் என்று தானியேல் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறார்.

இரண்டாவதாக, பரலோகத்தில் ஒரு தேவன் உண்டு; தமக்குச் சித்தமானவர்களுக்கு அதனை வெளிப்படுத்துவார் என்றும் தெளிவுபடுத்துகிறார்.

தன்னுடைய ஜெபத்தில் தானியேல் பாபிலோனின் ராஜாவையல்ல, ராஜாதிராஜாவைப் புகழ்ந்தார். பரலோகத்தின் தேவன் தானியேலுக்கு மறை பொருளை வெளிப்படுத்தினார். இனி அந்த கனவினை தானியேல் அரசருக்கு விளக்கினார்.

வசனம் 31-35: ராஜாவே, நீர் ஒரு பெரிய சிலையைக் கண்டீர்; அந்தப் பெரிய சிலை மிகுந்த பிரகாசமுள்ளதாயிருந்தது; அது உமக்கு எதிரே நின்றது; அதின் ரூபம் பயங்கரமாயிருந்தது. அந்தச் சிலையின் தலை பசும்பொன்னும், அதின் மார்பும் அதின் புயங்களும் வெள்ளியும், அதின் வயிறும் அதின் தொடையும் வெண்கலமும், அதின் கால்கள் இரும்பும், அதின் பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது. நீர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டு வந்தது; அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதின் பாதங்களில் மோதி, அவைகளை நொறுக்கிப்போட்டது. அப்பொழுது அந்த இரும்பும் களிமண்ணும் வெண்கலமும் வெள்ளியும் பொன்னும் ஏகமாய் நொறுங்குண்டு, கோடைகாலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று; அவைகளுக்கு ஒரு இடமும் கிடையாதபடி காற்று அவைகளை அடித்துக்கொண்டு போயிற்று; சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய பர்வதமாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று.

நேபுகாத்நேச்சாரின் பிரமிப்பை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். தான் ஒருவரிடமும் அறிவியாத கனவை தத்ரூபமாக தானியேல் விளக்கியதும் அவரது ஆச்சரியம் பன்மடங்காகியது. அக்கனவையும் அதன் பொருளையும் அரசருக்கு தானியேல் விளக்கினார்.

தானியேல் கூறியது தான் கண்ட கனவே என்று அரசர் ஒத்துக்கொண்டார். அதன் பொருளையும் தன்னால் விளக்கமுடியும் என்று தானியேல் கூறியவுடன் அவர் மிகவும் மகிழ்ச்சியுற்றார்.

வசனம் 36: சொப்பனம் இதுதான்; அதின் அர்த்தத்தையும் ராஜசமுகத்தில் தெரிவிப்போம். ராஜாவே, நீர் ராஜாதி ராஜாவாயிருக்கிறீர்; பரலோகத்தின் தேவன் உமக்கு ராஜரீகத்தையும் பராக்கிரமத்தையும் வல்லமையையும் மகிமையையும் அருளினார். சகல இடங்களிலுமுள்ள மனுபுத்திரரையும் வெளியின் மிருகங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும் அவர் உமது கையில் ஒப்புக்கொடுத்து, உம்மை அவைகளையெல்லாம் ஆளும்படி செய்தார். பொன்னான அந்தத் தலை நீரே என்றார்.

உங்களை நேபுகாத்நேச்சாராக கற்பனை செய்துகொள்ளுங்கள். நீங்கள் கண்ட இந்த விநோதமான கனவினை தானியேல் உங்களுக்குக் கூறினார் என்று வைத்துக்கொள்ளுவோம். அந்த பெரிய சிலையின் தலை நீரே என்றால் மகிழ்ச்சியடைவீர்கள். “நல்லது; நான் காலாகவோ அல்லது முழங்காலாகவோ இல்லை. நான் தலை; மிக்க மகிழ்ச்சி, தானியேலே மேலும் கூறுங்கள் என்பீர்கள். மேலும் “பொன்னான அந்த தலை நீரே” என்றவுடன் வெள்ளியைவிட பொன் உயர்ந்தது. தகரத்தைவிட பொன் விலையுயர்ந்தது. அதையும் நான் ஏற்றுக் கொள்ளுகிறேன்” என்பீர்கள் அல்லவா? நேபுகாத் நேச்சார் கண்ட சிலையிலிருந்த பொன்னாலான தலை தான் என்பதை அறிந்தவுடன் அரசரும் அகமகிழ்ந்திருப்பார். தானியேல் தொடர்ந்து வசனம் 32இல் அதின் மார்பும் அதின் புயங்களும் வெள்ளியும், அதின் வயிறும் அதின் தொடையும் வெண்கலமுமாயிருந்தது என்றார். அது அவருக்குப் பின்வரும் ராஜ்யத்தைக் குறிக்கும். அதாவது பாபிலோனிய சாம்ராஜ்யத்திற்குப் பின் மேதிய மற்றும் பெர்சிய சாம்ராஜ்யங்கள் எழும்பும். அவைகள் வெள்ளியிலான மார்பு மற்றும் புயங்களைக் குறிக்கும்.

வசனம் 39இல் பூமியையெல்லாம் ஆண்டுகொள்ளும் வயிறும் தொடையுமான வெண்கலமான மூன்றாம் ராஜ்யம் எழும்பும். அது சந்தேகத்துக்கிடமின்றி கிரேக்க சாம்ராஜ்யத்தைச் சுட்டிக் காட்டுகிறது. நான்காவது ராஜ்யத்தைப்பற்றி வசனம் 40 விளக்குகிறது. அது மற்ற ராஜ்யங்களை நொறுக்கி உடைத்துப்போடும் ரோம ராஜ்யத்தைக் குறிக்கும். உருண்டு வந்த கல் யாரைக் குறிக்கும்? கையால் பெயர்க்கப்படாத ஒரு கல் மலையிலிருந்து உருண்டுவந்து அனைத்து ராஜ்யங்களையும் நொறுக்கி, நிர்மூலமாக்கி பெரிய பர்வதமாகி பூமியையெல்லாம் நிரப்பும். இது யார்? நேபுகாத் நேச்சாருக்கு அந்தக்கல் யாரென்று புரியவில்லை. ஆனால், தானியேலுக்குத் தெரிந்திருக்கும்: மூலைக்குத் தலைக்கல்லாகவும், நமக்குப் புகலிடமாகப் பிளக்கப்பட்ட மலையாகவும் இருக்கும் அந்தக் கல் இயேசுகிறிஸ்துவே என்று. இந்தக் கல்லைப் பற்றி நாம் பின்வரும் அதிகாரங்களில் அறிந்துகொள்வோம். இவ்வதிகாரத்தின் இறுதியில் தானியேல் பாபிலோன் மாகாணம் முழுமைக்கும் அதிகாரியாக உயர்த்தப்பட்டார் என அறிகிறோம்.

வசனம் 47இல் ராஜா தானியேலை நோக்கி: நீ இந்த மறைபொருளை வெளிப்படுத்தின படியினால், மெய்யாய் உங்கள் தேவனே தேவர்களுக்குத் தேவனும், ராஜாக்களுக்கு ஆண்ட வரும், மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவருமாயிருக்கிறார் என்றான். அரசர் இப்பதிலால் அதிகம் ஈர்க்கப்பட்டார்.

பின்பு ராஜா தானியேலைப் பெரியவனாக்கி, அவனுக்கு அநேகம் சிறந்த வெகுமதிகளைக் கொடுத்து, அவனைப் பாபிலோன் மாகாணம் முழுவதுக்கும் அதிபதியாகவும், மதக்காரியங்களில் ஓர் ஒப்பற்ற நிலையையும் கொடுத்து உயர்த்தினார். வசனம் 49இல் தானியேல் தனது ஜெப நண்பர்களை மறக்கவில்லை. தனது உயர்வுக்கு தன்னுடன் சேர்ந்து பரலோகத்தை அசைத்த தன் நண்பர்களே என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்.

நற்செய்தியை பிரசங்கம் பண்ணுபவர்கள் மாத்திரம் வெகுமதிகளைப் பெறுவார்கள் என்பதில்லை. அவர்களுக்காக ஜெபிப்பவர்களும் வெகுமதிகளைப் பெறுவார்கள் என நான் அறிந்துகொண்டேன். ஒருவேளை உங்களை மேடையில் திரு வசனத்தைப் போதிக்கவோ நற்செய்தியைப் பிரசங்கிக்கவோ தேவன் அழைக்கவில்லை என்று வருத்தப்படாதீர்கள். ஜெப ஊழியத்தில் அவர்களைத் தாங்குபவர்களும் தேவனுடைய பார்வையில் முக்கியமானவர்களே.

அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு நாம் உதவுபவர்களாக அழைக்கப்பட்டிருப்போமானால், அவ்வதிகாரிகளுக்காக ஜெபிப்பதே நாம் செய்யக்கூடிய மிகச்சிறந்த செயல். ஒரு விசுவாசியின் வாழ்வில் முதன்மையான செயல் ஜெபிப்பதேயாகும். இந்த நண்பர்கள் தானியேலுக்காக ஜெபித்தனர். தங்களுடைய அரசனுக்காகவும் நால்வரும் ஜெபித்தனர். எனவே தேவன் தானியேலுக்கு அச்சொப்பனத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் அனைவருக்கும் அரசர் பதவி உயர்வு கொடுத்தார்.

நமது மேலதிகாரிகளுக்காக எப்படி ஜெபிப்பது என்பதை தானியேல் 2ஆம் அதிகாரம் நமக்கு கற்றுக்கொடுக்கிறது, ரோமர் 13ஆம் அதிகாரமும் கூடுதலாக விளக்குகிறது. தான் விசுவாசித்ததை உண்மை என்று நம்பி அதில் உறுதியாயிருந்தவர் தானியேல். அதனால் தேவனால் அருளப்பட்ட விசேஷித்த ஆவியால் அரசாங்கத்தில் உயர்வு பெற்றார். நம்முடைய வாழ்விலும் இவ்விதமாய் நாம் ஜெபிக்க இரு காரியங்கள் முக்கியம். ஒன்று: சூழ்நிலைகள் எதுவாயிருந்தாலும் செம்மையானதைச் செய்ய நமக்கு உறுதி வேண்டும்.

இரண்டாவது நிலைத்தன்மை: அனைத்து வேளையிலும் அனைத்து நிகழ்விலும் செம்மையானதைச் செய்யும் உறுதி தேவை. ஒவ்வொரு தனிப்பட்ட சவால்களிலும் நாம் ஒரே மாதிரி உண் மையாய் நடந்துகொள்ள வேண்டும்.

நேபுகாத்நேச்சார் தன்னுடைய கனவுக்கு மந்திரவாதிகள், சாஸ்திரிகள் மற்றும் சூனியக்காரர்களின் ஆலோசனையை நாடினார். அவை தோல்வியில் முடிந்ததை அறிந்த தானியேல் மகிழ்ச்சிகொள்ளவில்லை. நம்முடைய சமுதாயத்திலும் இவ்வித மக்களிடம் ஆலோசனை கேட்பவர்களை அறிந்திருக்கிறோம். அவர்களுக்கு நாம் சரியான பாதையை வழிகாட்டவேண்டும். தானியேலைப் போல தேவனுடைய பாதத்தில் அமர்ந்து ஆலோசனைக் கேட்கவேண்டும். நம் நண்பர்களையும் அயலகத்தாரையும் அவ்விதமாய் பழக்கவேண்டும். தேவன்தாமே நமக்கு தம்முடைய ஞானம் தந்து வழிநடத்துவாராக.

பின்பு ராஜா தானியேலைப் பெரியவனாக்கி, அவனுக்கு அநேகம் சிறந்த வெகுமதிகளைக் கொடுத்து, அவனைப் பாபிலோன் மாகாணம் முழுதுக்கும் அதிபதியாகவும், பாபிலோனிலுள்ள சகல ஞானிகளின் மேலும் பிரதான அதிகாரியாகவும் நியமித்தான். தானியேல் ராஜாவை வேண்டிக்கொண்டதின்பேரில் அவன் சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத் நேகோவையும் பாபிலோன் மாகாணத்துக் காரியங்களை விசாரிக்கும்படி வைத்தான்; தானியேலோவென்றால் ராஜாவின் கொலுமண்டபத்தில் இருந்தான் (தானி.2:48,49).

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை