ஆசிரியரிடமிருந்து…
(ஜனவரி-பிப்ரவரி 2022)
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிற ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

வருடத்தின் துவக்கத்தில் அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழின் வாயிலாக தங்களைச் சந்திக்க உதவி செய்த தேவாதிதேவனைத் துதிக்கிறோம். கடந்த வருடத்தில் எத்தனையோ நெருக்கங்களை கடந்து வந்திருக்கிறோம். இப்போதும் தேசத்தில் பல்வேறு அச்சுறுத்தல்களைக் கேள்விப்படுகிறோம். இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார் (சங்.48:14) என்ற வாக்கை நாம் பற்றிக்கொள்வோம். வருங்காலங்கள் ஆசீர்வாதமானதாக இருக்க தேவன் அருள் புரிவார்.
கொரோனா தொற்றின் நிமித்தம் நடத்த இயலாமற் இருந்த அலுவலக ஜெபக்கூட்டம் 2021 நவம்பர் மாதத்திலிருந்து மீண்டும் துவங்க கர்த்தர் செய்தார். 2022ஆம் வருட சத்திய வசன காலண்டரை பங்காளர்களுக்கு அனுப்பிவைக்கிறோம். கடந்த ஆண்டு முழுவதும் சத்தியவசன ஊழியத்தை ஜெபத்தோடும் மனப்பூர்வமான காணிக்கையாலும் தாங்கி வந்த அன்பு பங்காளர்கள் ஆதரவாளர்கள் யாவருக்கும் நன்றி கூறுகிறோம். இப்புதிய ஆண்டிலும் தொடர்ந்து தங்களது மேலான ஆதரவைத் தர அன்பாய் கேட்கிறோம்.
தியான புத்தகத்தின் வேதவாசிப்பு அட்டவணையைப் பயன்படுத்தி 2021ஆம் ஆண்டில் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்தவர்கள் ஜனவரி 31ஆம் தேதிக்குள் எங்களுக்கு தெரியப்படுத்த அன்பாய் கேட்டுக்கொள்கிறோம். அடுத்த இதழில் உங்களது பெயர்கள் பிரசுரிக்கப்படும். இந்த ஆண்டிலும் அநேகர் வேதாகமத்தை ஒரு வருடத்திற்குள் வாசித்து முடிப்பதற்கு உற்சாகப்படுத்துகிறோம்.
இவ்விதழில் ஜனவரி மாதத்தில் 1-8 ஆகிய நாட்களில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதிய தியானங்களும், 9-31 வரை சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் எழுதிய தியானங்களும் இடம்பெற்றுள்ளன. பிப்ரவரி மாதத்தில் ஆபிரகாமின் வாழ்வி லிருந்து Dr.உட்ரோல் குரோல் அவர்கள் எழுதிய தியானங்கள் பிரசுரித்துள்ளோம். இந்த தியானங்கள் மறைந்த சகோதரர் வில்சன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டவை யாகும். இத்தியானங்களை எழுதிவருகிற சகோதர, சகோதரிகளைத் தொடர்ந்து உங்கள் ஜெபங்களில் தாங்க அன்பாய் கேட்கிறோம்.
கே.ப.ஆபிரகாம்
